Published : 30 Jan 2018 03:37 PM
Last Updated : 30 Jan 2018 03:37 PM

காந்தி இறக்கவில்லை, கொல்லப்பட்டார்!

ஜனவரி 30ம் நாளை காந்தியின் நினைவு தினம் என்று சொல்லிக் கடந்து போவதில் எனக்கு உடன்பாடு இல்லை. காந்தி கொல்லப்பட்ட தினம் என்றே அதை நாம் வலியுறுத்தி சொல்லவேண்டும்.

வேறுபட்ட அடையாளங்களும் முக்கியத்துவங்களும் முன்னே துருத்திக்கொண்டு மோதல் களமாகி பிணக்காடு ஆகியிருக்க வேண்டிய ஒரு மிகப்பெரும் நிலப்பரப்பு இது. அதில் உயிர்பிழைத்தவர்களின் வாரிசுகள் காந்தியைக் கண்டடைவது மிகவும் முக்கியம். அவர்களிடம் நாம் காந்தி இறக்கவில்லை, சுடப்பட்டார், கொலை செய்யப்பட்டார் என்று மீண்டும் மீண்டும் நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. முக்கியமாக மதவாதம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தலைதூக்கியிருக்கும் இந்தக் காலகட்டத்தில்.

அதென்ன எதற்கெடுத்தாலும் மதவாதம் என்கிறீர்கள், என்ற குரல்கள் இன்றும் உண்டு. மதவாதம் எங்கே இல்லை? என்னைச் சுற்றியுள்ள சமூகத்தில் என் மதத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்படுகிறார் என்பதற்காக எனக்கு நண்பராக இருக்கும் மாற்று மதத்தவரோடு என்னால் பகையுணர்ச்சியை வளர்த்துக்கொள்ள முடியும் என்ற நிலையை ஒரு இயக்கம் தன் மத அரசியலுக்காகவும் அதிகாரத்திற்காகவும் ஏற்படுத்துகிறது என்றால், அதன் பெயர் மதவாதம் இல்லாமல் வேறு என்ன? மதவாதம் இருக்கிறது என்று அதை ஒரு பிரச்னையாக முதலில் ஏற்றுக்கொண்டால்தால் அதற்கான தீர்வு குறித்து விவாதிக்க முடியும். மதவாதம் இருக்கிறது என்பதை உணர மறுப்பவர்களோடு மதவாதத்திற்கெதிரான தீர்வுகளை விவாதிக்க முடியாது. அதற்காக அவர்களை விவாதத் தளத்தில் நிராகரித்துவிட்டு அரசியல் பேசுவதென்பதும் ஒரு உள்ளடக்கிய அரசியலாக இருக்காது. அது காந்தியத்திற்கும் எதிரானது. இந்தியா அடிமைப்பட்டிருக்கிறது என்ற பிரச்னையை ஏற்க மறுத்த ஆங்கிலேயர்களிடம்தான் காந்தி உரையாடினார். பிரச்னை இருக்கிறது என்பதை மாற்றுத்தரப்பினரை அங்கீகரிக்க வைப்பதே தீர்விற்கான முதல்படி. அதன் விவாதங்களில் ஏன் என் தரப்பு நியாயமானது என்பது முன்னே நிற்கக்கூடாது. மாறாக உன் தரப்பு ஏன் நியாயமற்றது என்று புரிய வைக்க முயலவேண்டும். ஏன் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவிற்குத் தேவையில்லை என்ற திசையிலேயே காந்தியின் உரையாடல் சென்றது. இந்துத்துவ அணுகுமுறை இதில் வேறுபடுகிறது. ஏன் இந்து தேசம் அமைய வேண்டும் என்ற லட்சியவாத நோக்குடனே அதன் குறிப்புகள் செல்லுமே தவிர, மாற்றுத் தரப்பினரின் குரல்களுக்கு அது செவிமடுக்காது. அது தன்னை மட்டுமே பாதிக்கப்பட்ட தரப்பாகக் கருதிக்கொள்ளும். எதிர்கருத்துகளை எதிர்கொள்ள அச்சப்படும், அதனால் முடிந்தவரை அக்குரல்களை அமைதிப்படுத்தவே முயலும்.

அனைத்து கருத்தியல்களும் அவரவருக்கான ஏதோவொரு தேவையின் பொருட்டே எழுகின்றன, அது அறத்தின் எந்தப் பக்கத்தில் இருந்தாலும் சரி. இன்று காந்தியைத் துணைக்கழைப்பது என்பது அவர் எழுத்துகளின் லட்சியவாதக் கூறுகளைப் பரப்புவது மட்டுமல்ல. இந்த சமூகம் இன்று மதவாத நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறது. அதன் தீர்வாக காந்தியை முன்னிறுத்துவது என்பது மருந்தின் மகிமையைச் சொல்வது மட்டுமல்ல. அதோடு நிறுத்திவிட்டால் நோய் நீங்கியதும் மருந்து மறக்கப்பட்டுவிடும். மாறாக, காந்தியைத் துணைக்கழைப்பது என்பது, காந்தியத்தின் எதிர்ப்புறத்தில் இருக்கும் மதவாதத்தின் ஆபத்துகளை உணர்த்துவதும்தான். அகிம்சையை போதிப்பது மட்டும் காந்தியம் அல்ல, இப்புறத்திலிருந்து மதவாதத்தையும் அதன் வன்முறையையும் தொடர்ந்து எதிர்த்துக்கொண்டே இருப்பதும்தான்.

ஏன் காந்தி கொல்லப்பட்டார்? காந்தியின் இந்தியாவிற்கும் இந்து தேசத்திற்கும் இடையேயான ஒரு முக்கியமான வேறுபாடு, இந்து தேசியம் அடிப்படையிலேயே ஒரு இறுக்கமான லட்சியவாதம். ஐரோப்பிய தேசியவாதங்களிலிருந்து நேரடியாக ஈர்க்கப்பட்டு மதம் சார்ந்த தேசியத்தை அது முன்வைத்தது. ஐரோப்பிய தேசங்கள் போன்று ஒற்றை அடையாளத்தை இந்தியாவிற்கு எளிதாக ஏற்படுத்த முடியாது. விளைவு, தத்துவத்தின் இறுக்கத்தினால் ‘மத எதிரிகள்’ உருவாக்கப்பட்டார்கள். இந்த மத எதிரிகளால் இந்து மதம் ‘திட்டமிட்டு அழிக்கப்பட்டது’ என்ற வரலாற்றுப் புனைவு கட்டப்பட்டது. இந்திய நிலப்பரப்பில் நூற்றாண்டு காலமாக ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்களை ஒரு பரிணாமமாக இந்துத்துவம் பார்க்க மறுத்தது. மாறாக, பண்டைய நூற்றாண்டுகளை ஒற்றைப் பண்பாட்டுத் தொடர்ச்சியாகக் கட்டமைத்து, அதில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை இந்து தர்மத்தின் அப்போதைய உச்சமாக வரையறுத்து, அதன் பிறகு நடந்தவைகளைப் பண்பாட்டு சீரழிவாக முன்மொழிந்தது. அந்த நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கி செல்ல வேண்டும் என்பதைத் தீர்வாக முன்வைத்தது.

எந்த ஒரு தேசியத்திற்கும் வரலாற்று அங்கீகாரம் வேண்டுமே? இந்து தேசியம் சிவாஜிக்கும் அவுரங்கசீப்பிற்கும் இடையே நிகழ்ந்த அதிகார மோதலை மதச்சண்டையாக மாற்றியது. அக்பருக்கும் ராணா பிரதாப்புக்கும் இடையே நடந்த சண்டையில் ராணா பிரதாப்பைத் ‘தியாகி’ ஆக்கியது. அனைத்து மன்னர்களுக்கும் எதேச்சதிகாரம் என்பது பொதுப்பண்பு. அதில் திப்பு சுல்தானும் விதிவிலக்கல்ல, ஆனால் அவர் இந்துக்களைத் திட்டமிட்டுக் கொன்றார் என்ற பிம்பத்தை இந்துத்துவம் ஏற்படுத்தியது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்திய நிலப்பரப்பின் வரலாற்றை இந்து மதம் எதிர்கொண்ட சவால்கள் என்று ஒற்றைப்படையாக சுருக்கியது.

காந்தியின் இந்தியம் அடிப்படையில் லட்சியவாதமல்ல. காந்தியின் உள்ளடக்கிய தேசியவாதம் ஏதோ இந்திய தத்துவ ஞான மரபில் ஊறியவருக்குத்தான் தோன்றும் என்றும், உலகில் வேறெங்குமே அது சாத்தியமல்ல என்றுமெல்லாம் இல்லை. ஒரு தேசம் எவ்வாறு உருவாகும் என்று காந்தி சிந்தித்தார். ஐந்திற்கும் மேற்பட்ட மதங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள், என்ன இனம் என்றே கண்டுபிடிக்க முடியாதபடி பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்டக் கலப்புகளினால் உருவான பல்வேறு கலப்பினங்கள், இவற்றை வைத்து என்ன நாட்டை உருவாக்குவது? மொழி சார்ந்தும் மதம் சார்ந்தும் இங்கு தேசியவாதம் கட்டமைக்கப்பட்டால் அது நிச்சயமாக ஏதேனும் ஒரு சாராரை விலக்கிய தேசியவாதமாகவே அமையும். இங்குள்ள அனைவருக்கும் இங்கு வாழ சம உரிமை உள்ளது, ஒரு சாராரை விட மற்றொருவர் எந்த விதத்திலும் உரிமைக்குப் பாத்தியதையற்று இருக்க முடியாது என்று காந்தி புரிந்துவைத்திருந்தார். விடுதலைப் போராட்டத்தில் அனைவரும் ஒன்றாக ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்தனர், எனவே சுதந்திர இந்தியா அனைவருக்குமானது என்ற முடிவுக்கு வந்தார். இல்லாத இந்தியா எதையும் காந்தி உருவாக்கவில்லை. இந்த நிலப்பரப்பு என்றுமே கலவையான பண்பாடுகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது, எனவே அதில் வசிக்கும் அனைத்து பண்பாட்டினருக்கும் அது உரிமையானது என்று நிலம் சார்ந்த, நெகிழ்வுத்தன்மையுள்ள தேசியவாதத்தை அவர் முன்வைத்தார், அவ்வளவே.

ஆனால் காந்தியின் இந்த உள்ளடக்கிய தேசியம் இரண்டு முக்கிய கட்டங்களில் ஒரு உயரிய லட்சியமாக மாறுகிறது. ஒன்று நமக்கான பொறுப்பு, மற்றொன்று இந்த உலகத்திற்கான செய்தி. பிரிவினை காலத்தில் பாகிஸ்தானில் இந்துக்கள் விரட்டப்பட்டபோது இங்கு இஸ்லாமியரை விரட்டவேண்டும் என்று குரல்கள் வலுத்தன. இந்தியா ஒரு இந்து பாகிஸ்தானாக மாறக்கூடாது என்று காந்தியும் நேருவும் உறுதியாக நின்றனர். நவகாளியிலும் தில்லியிலும் காந்தி ஒற்றை ஆளாக மனிதம் போதித்து, அடையாளங்களைக் கடந்த அரவணைப்பே இந்தியா என்ற கருத்தை ஒரு உயரிய பண்பாக மக்களிடம் முன்வைத்தார். ‘இங்கு அனைவரும் வாழ்கிறார்கள், எனவே இந்நாடு அனைவருக்கும் சொந்தம்’ என்று காந்தி யதார்த்தத்துடன் முன்வைத்த தேசியம், இவ்வாறு பிரிவினை காலத்தில் மனிதத்தை வலியுறுத்தும் லட்சியமாக மாறியது. காந்தியின் மரணத்தால் மனசாட்சிகள் உலுக்கப்பட்டு, பன்முகத்தன்மையும் சிறுபான்மை நலனும் பெரும்பான்மையின் அடிப்படைப் பொறுப்பானது.

இரண்டாவது முக்கியக் கட்டம், இரண்டாம் உலகப்போர். ஃபிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக அரசியல்மயமான தேசியவாதம், சிறிது சிறிதாக ஐரோப்பா முழுவதும் பரவியது. மன்னரின் குடிகள் என்பதிலிருந்து விடுபட்டு, பொது அடையாளங்களை மக்கள் தேட ஆரம்பித்தனர். அது மொழி சார்ந்தும், மதம் சார்ந்தும், இனம் சார்ந்தும் நாட்டுக்கு நாடு கட்டமைக்கப்பட்டு, இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் எல்லைக்கோடுகளின் அரசியலாக வந்து நின்றது. தேசியவாதம் மக்களை ஒருபுறம் ஒன்றிணைத்தது என்றால் மறுபுறம் அது சக மக்கள் மீது வெறுப்புணர்வையும் கொள்ளச் செய்தது. போட்டிகள் சூழ் உலகில் அந்தக் கண்ணுக்குத் தெரியாத எல்லைக்கோட்டைப் புனிதப்படுத்தி ‘தன்னுடைய நாட்டுக்காக’ சக மனிதனைக் கொல்வது நடந்தது. இரண்டாம் உலகப்போர் மனித நாகரிகத்தின் இருண்ட அத்தியாயம். இந்த உலகத்திற்கு விடிவே கிடையாதா, அமைதியே வராதா, ஒற்றுமையாக விட்டுக்கொடுத்து வாழவே முடியாதா என்று கேள்விகள் அலைக்கழிக்க, மொத்த உலகமும் விக்கித்துப்போய் நின்ற காலகட்டம் அது. அப்பொழுது அகிம்சை வழியில் அனைவரையும் உள்ளடக்கி அடைந்த இந்திய சுதந்திரம் மானுடவியலாளர்களுக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது என்கிறார் வரலாற்றாசிரியர் மனு பகவான். உலகம் புத்தருக்கும் இயேசுவுக்கும் அடுத்தபடியாக காந்தியை வைப்பது அதனால்தான்.

மனித நாகரிகம் சண்டைச் சுழலில் சிக்கி அதிலிருந்து மீள வழி தெரியாமல் தவித்து நிற்கும்போது, இதோ ஒரு வழி இருக்கிறது என்று கைப்பிடித்து காந்தி அழைத்துச் செல்ல முற்பட்ட அந்த கணம் இருக்கிறதே, அந்தக் கணத்தில் இந்திய தேசியம் ஒரு உயர்ந்த லட்சியமாக மாறியது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா சுக்குநூறாக நொறுங்கிவிடும் என்று அனைவரும் உறுதியாக நம்பினர். அத்தனை பேரின் கணிப்புகளையும் பொய்யாக்கி இன்றுவரை உடையாமல், பன்முகத்தன்மையைப் பெரும்பாலும் அனுமதிக்கும் தேசமாகவே இந்தியா உயிர்த்திருக்கிறது. ஒன்றுபட்ட உலகின் மாதிரி வடிவமாக இன்று இருக்கும் இந்தியா, ஒரு மகத்தான மானுடவியல் பரிசோதனை. வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமை ஏற்படுத்த முனைந்த தேசங்களுக்கு மத்தியில், இந்தியா வேற்றுமைகளை அங்கீகரித்தது. ஒருமித்த கருத்தில் எதிர்காலம் தேடிய தேசங்களின் ரத்தம் தோய்ந்த வரலாற்றை இந்தியா தொடராமல், வேறுபட்ட கருத்துகள் இணையும் புள்ளிகளில் தன் எதிர்காலத்தைத் தேடியது. புண்ணிய பூமிக்காகப் போரிடாமல், புண்ணிய மனிதர்களை உருவாக்க முனையும் பெருந்தவத்தை காந்தி சுமந்து சாதித்தார். வெவ்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், பண்பாடுகள், உடைகள், உணவுகள், அடையாளங்கள், இவையனைத்தும் ஒரு இடத்தில் ஒன்றாக இருக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டுவது எளிதான காரியமல்ல. ஆனால் அதன் செய்தி, பல்வேறு அடையாளங்களைக் கொண்ட 120 கோடி மக்கள் ‘இந்தியர்’ என்ற அடையாளத்தின் கீழ் ஒன்றிணையும்போது, உலக மக்களாலும் ஒருவரோடு ஒருவர் போரிடாமல் ஒற்றுமையாக வாழ முடியும், என்பதே.

ஒரு புதிய நாட்டின் உருவாக்கத்தில் இருப்பதிலேயே வன்முறை குறைவாக நிகழ்ந்து உருவான நாடு இந்தியா. பிரிவினையில் இறந்து போன பஞ்சாபி மற்றும் வங்காளக் குடும்பங்களின் முகத்தைப் பார்த்து மனிதாபிமானம் இல்லாமல் சொல்வதற்காக அல்ல இந்தக் கருத்து. மாறாக மானுட வரலாற்றின் கோரங்களை நாம் மீண்டும் மீண்டும் நினைவில் நிறுத்திக்கொண்டு, சகோதரத்துவத்தின் மீது இந்தியாவின் உருவாக்கம் எத்தகைய நம்பிக்கையை விதைக்க முயல்கிறது என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வதற்காகவே இது.

இவையாவும் இந்து தேசியத்திற்கு முரணானவை. காந்தி தொடர்ந்து தன் அற விழுமியங்களை சுயபரிசோதனை செய்துகொண்டே இருந்தார். அமைப்பிற்குள் இருந்துகொண்டே சாதி குறித்து சங்கடமான கேள்விகளை எழுப்பினார். சிறுபான்மையினரின் பக்கம் நின்றார். விளைவு, காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஏனோ தெரியவில்லை, தன் தரப்பு நியாயத்தை நிரூபிக்கக் கொலை செய்பவர்கள் நல்ல பேச்சாளர்களாகவும் இருக்கிறார்கள். கோட்சேவும் அப்படித்தான்.

இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜெர்மனி தோற்றபோது கார்ல் பாப்பர் என்னும் தத்துவ அறிஞர் ‘சகிப்புத்தன்மையின் முரண்பாடு’ என்றொரு கருத்தை முன்வைத்தார். அதாவது, சகிப்பின்மையோடு இருப்பவர்களிடம் சகிப்புத்தன்மையோடு இருக்கக்கூடாது என்றார். சகிப்பின்மையை சகித்துக்கொண்டால் அது சகிப்புத்தன்மையை அழித்துவிடும். எனவே சகிப்புத்தன்மைக்குக் குரல் கொடுப்போர் சகிப்பின்மையை சகித்துக்கொள்ளக்கூடாது என்றார். இந்திய சமூகம் அத்தகையதொரு கட்டத்தை இன்று அடைந்திருக்கிறது. வளர்ந்துவரும் மதவாதத்திற்கு எதிராக நாம் காந்தியை வலுவாகப் பிடித்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் கோட்சேக்கள் மிக எளிதாக உருவாகிவிடுவார்கள். காந்தியின் கொலை நமது மனசாட்சியைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கவேண்டும். அதை இயல்பானது என்று கடந்து போகும் கணத்தில் காந்தியம் தோற்றுப்போகும். கோட்சேக்களிடம் தோற்பதில் காந்திக்கு சிக்கலே இல்ல. நாம் அவரைக் கைவிடுவதைத்தான் அவரால் தாங்கிக்கொள்ள முடியாது. மீண்டும் மீண்டும் சொல்லுங்கள். காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாள் இன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x