Published : 08 Dec 2023 11:07 AM
Last Updated : 08 Dec 2023 11:07 AM

‘என்றும் தமிழர் தலைவர்’

தந்தை பெரியார் என்கிற ஈ.வெ.ராமசாமி என்னும் நிகழ்வு நிறைந்து இன்றுடன் ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. நவீனத் தமிழ்நாட்டின் வரலாறு, பெரியாரின் மறைவுக்கு முன் பின்னான 50 ஆண்டுகளில் உருவாகி நிலைப்பெற்றது; அந்த வகையில், நவீனத் தமிழ்நாட்டின் வரலாற்றைத் தீர்மானித்தவர்களில் முதன்மையானவர் பெரியார்.

தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பு, தமிழர்களின் சுயமரியாதையைத் தட்டி எழுப்பியது; அவரது மனக்குகையில் எழுந்த சிறுத்தை, சாதி-மத மூடநம்பிக்கைகளைக் களைந்தெறிந்து தமிழர்களை முன்னேற்றப் பாதையில் செலுத்தியது.

தந்தை பெரியாரின் மறைவுக்குப் பிந்தைய இந்த ஐம்பது ஆண்டுகளில், தமிழ்ச் சமூகம் வந்தடைந்திருக்கும் இடம் என்ன என்பது ஆழமான ஆய்வுக்குரியது. அந்த வகையில், கடந்த ஒரு நூற்றாண்டு காலத் தமிழ்நாட்டு வரலாற்றைப் பெரியாரின் வாழ்வு-பணிகளின் பின்னணியில் பரிசீலிப்பது, நம்முடைய இன்றைய நிலையைத் துலக்கப்படுத்தி, எதிர்காலத்துக்கான பாதையைச் சீரமைக்க உதவும். அதன் விளைவாக உருவானதுதான், ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் வெளியிட்டிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூல் ‘என்றும் தமிழர் தலைவர்’.

நூற்றுக்கும் மேற்பட்டோரின் பங்களிப்பு: பெரியார் தொண்டர்களில் கடைசித் தொண்ட ராகத் தன்னைக் கருதும் திராவிடர் கழகத் தலைவர் ‘ஆசிரியர்’ கி.வீரமணி, இந்நூலுக்காக அளித்த சிறப்புப் பேட்டியில் பகிர்ந்துகொண்டிருக்கும் கருத்துகள், 21ஆம் நூற்றாண்டுக் கான பெரியாரை அறிமுகப்படுத்துகின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் சிறப்புப் பேட்டி, இளையோர் தொடங்கி அனைத்து தரப்பினருக்குமான ஒரு வாசிப்புக் கையேடாக அமைந் திருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கட்டுரை, தந்தை பெரியாருக்கும் கலைஞர் மு.கருணாநிதிக்குமான ஆழமான உறவை உணர்வுபூர்வமாகப் பேசுகிறது; மேலும், பெரியாரிடம் கருணாநிதி பெற்ற பாடம், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எப்படிப் பாதை அமைத்தது என்பதையும் பதிவுசெய்திருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா, எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் பதிவுகளும் நூலில் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் திராவிடர் கழகம் தொடங்கி இன்று இயங்கிக்கொண்டிருக்கும் பெரியாரிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எழுதியுள்ள பல கட்டுரைகள், பெரியாரியம் சார்ந்த சமகால உரையாடலுக்கு உரம் சேர்க்கின்றன.

15 பெரும் பிரிவுகளால் அமைந்துள்ள இந்த நூலுக்குப் பங்களித்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல். எஸ்.வி.ராஜதுரை, ஆ.சிவசுப்ரமணியன், அ.மார்க்ஸ், க.திருநாவுக்கரசு, வீ.அரசு, செந்தலை ந.கவுதமன், ஏ.எஸ்.பன்னீர்செல்வன், ஆ.இரா.வேங்கடாசலபதி, ராஜன் குறை, வீ.மா.ச.சுபகுணராஜன், ப.திருமாவேலன், கலி.பூங்குன்றன், ஓவியா, பா.ஜீவசுந்தரி, எஸ்.ஆனந்தி, அருணன், பழ.அதியமான், புனித பாண்டியன், விடுதலை ராசேந்திரன், சுப.வீரபாண்டியன், வாலாசா வல்லவன், கு.ராமகிருட்டிணன், சுகுணா திவாகர் உள்ளிட்டோரின் பங்களிப்பு பெரியார் பற்றிய நம்முடைய புரிதலின் விரிவையும் ஆழத்தையும் கூட்டும்.

அத்துடன் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் பெரியார் குறித்த கட்டுரைகள், பெரியாரியம் சார்ந்த ஆய்வுகளுக்கு ஒரு முக்கியப் பங்களிப்பாக அமையும். டிராட்ஸ்கி மருது, புகழேந்தி, எம்.சுந்தரன், ஜீவா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட ஓவியர்களின் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன.

ஏன் தலைவர்? தமிழ்நாட்டின் கடந்த நூற்றாண்டு வரலாற்றை திசைதிருப்பியது திராவிட அரசியல். அதற்குத் தலைமகனாக விளங்கியவர் பெரியார். அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட அண்ணா, மு.கருணாநிதி ஆகியோரும் இவர்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி செய்தோரும், இந்தக் கொள்கைப் பின்னணியில் தோன்றியவர்களே. மொழிவாரி மாகாணப் பிரிவினைக்கு முன்பே ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்றும், மொழிவாரி மாகாணப் பிரிவுக்குப் பிறகு மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்திவந்தவர் பெரியார். தான் வாழ்ந்த காலம் முழுதும் இந்த மண்ணுக்கும், இங்கு வாழ்ந்த மக்களுக்காகவுமே தன் செயல்பாடுகளையும் போராட்டத்தையும் அமைத்துக்கொண்டவர். அவரைக் குறித்த நூலுக்கு ‘என்றும் தமிழர் தலைவர்’ என்பதைவிட சிறந்த தலைப்பு வேறு இருக்க முடியாது என்று கருதுகிறோம்.

இந்த நூலின் வழியாகப் பெரியாரின் பல்வேறு பரிமாணங்களைப் பதிவுசெய்ய முயன்றுள்ளோம். அதே நேரம், அனைத்தையும் இதற்குள் அடக்கிவிட்டோம் என்று சொல்ல முடியாத அளவுக்கு, அவருடைய செயல்பாடுகளும் எழுத்துகளும் குவிந்துகிடக்கின்றன. பெருங்கடல் அளவு உள்ள அவரது பேச்சு, எழுத்து, செயல்பாடுகளை ஒரு சிப்பிக்குள் அடைத்துத் தர முயன்றிருக்கிறோம். பெரியாரைப் பற்றிய அறிமுகத்தைப் பெறவும், ஆழமாக வாசித்தறியவும் இந்த நூல் சில சாளரங்களை நிச்சயம் திறந்துவைக்கும் என நம்புகிறோம். புத்தகத்தைக் கையில் ஏந்தும்போது அந்த நம்பிக்கையின் கனத்தை நீங்களும் உணர்வீர்கள். தமிழர் தலைவரான பெரியார், ஓர் உலகத் தலைவரும்கூட என்பதை நூலை வாசித்து முடிக்கும்போது கண்டடைவீர்கள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x