Last Updated : 30 Jan, 2018 11:01 AM

 

Published : 30 Jan 2018 11:01 AM
Last Updated : 30 Jan 2018 11:01 AM

கருகி மடிகிறது விவசாயிகளின் வாழ்வு!

மிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை என்ற பெருமை பொய்யாய், பழங்கதையாய் ஆகிக்கொண்டிருக்கிறது. மழையை மட்டுமே நம்பி பயிர்செய்யும் மானாவாரி விவசாயி நிலை காவிரி டெல்டா விவசாயிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. காவிரி நீர்ப் பங்கீடு குறித்து தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு கிடைக்கவில்லை என்றுதான் நடுவர் மன்றம் கோரினார்கள். நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை 5.2.2007 அன்று வழங்கியது. பிறகு, அது அரசிதழில் வெளியாகாததால்தான் நடைமுறைக்கு வரவில்லை என்றார்கள். அது 19.2.2013 அன்று அரசிதழில் வெளியானது. அதன் பிறகும், நடைமுறைக்கு வரவில்லை. நடுவர் மன்றத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானது என்று உச்ச நீதிமன்றமே கூறியது. இருந்தாலும், தமிழகத்துக்குத் தண்ணீர் மட்டும் வரவில்லை.

காவிரி இரு மாநிலத்துக்கும் உரிமையானது என்பதை கர்நாடக அரசு, எப்போதுமே ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, எப்போதெல்லாம் கர்நாடக மாநிலத்தில் அணைகள் நிரம்பி, இனிமேல் நீரைத் தேக்க முடியாது என்ற நிலை ஏற்படுகிறதோ அப்போது நீரைத் திறந்துவிட்டு தமிழகத்தை வடிகாலாக மட்டுமே பயன்படுத்திவருகிறது.

நீர்ப் பற்றாக்குறைதான் காரணமா?

நடுவர் மன்றம் தனது தீர்வறிக்கையில், தமிழகத்துக்கு மாதவாரியாக எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. பற்றாக்குறை காலத்திலும் இதே சதவீத அடிப்படையில் நீரைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால், எதையுமே கர்நாடக மாநில அரசு மதித்து நடக்கவில்லை. மாறாக, பாசன நீர்ப் பற்றாக்குறை என்ற பல்லவியைத் தொடர்ந்து பாடுகிறது. பற்றாக்குறைக்கு அடிப்படையான காரணம், கர்நாடக மாநிலம் பாசனப் பரப்பை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே செல்வதுதான்.

1971-ல் கர்நாடகப் பாசன பகுதி 4.42 லட்சம் ஏக்கராகும். அப்போது அம்மாநிலம் பாசனத்துக்குப் பயன்படுத்திய தண்ணீரின் அளவு 110.2 டி.எம்.சி. மட்டுமே. ஆனால், 1990-க்குப் பின்னர் கர்நாடகப் பாசனப் பரப்பு 21.38 லட்சம் ஏக்கராக விரிவுபடுத்தப்பட்டுவிட்டது. பாசனத்துக்குப் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு 322.8 டி.எம்.சி. என்ற அளவுக்கு உயர்ந்துவிட்டது. ஆனால், இதே காலத்தில் தமிழ்நாட்டின் பாசனப் பரப்பு 25.30 லட்சம் ஏக்கர்தான். 1990-க்குப் பின்னரும் 25.80 லட்சம் ஏக்கர் என்ற அளவிலேயே இருந்தது. தண்ணீரின் பயன்பாடும் 500 டி.எம்.சி. என்ற அளவிலேயே இருந்தது. பாசனப் பரப்பை அதிகரித்து, தமிழகத்துக்குரிய பங்கை அபகரிப்பது மோசமானது.

ஜூன் முதல் பிப்ரவரி வரை 192 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். மீதி மூன்று மாத காலம் தண்ணீரைச் சேமித்துவைப்பதன் மூலம்தான் ஜூன் மாதம் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட முடியும். ஆனால், கர்நாடக அரசு கோடைக் காலத்திலும் அணைகளிலிருந்து தண்ணீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்துவதால்தான் ஜூன் மாதம் தமிழகத்துக்குத் தண்ணீர் தர முடியாத நிலை ஏற்படுகிறது. இரு மாநிலம் சம்பந்தப்பட்ட நதியில் தன் மாநிலத்தில் அந்நதி உற்பத்தியாகிறது என்ற காரணத்தினாலேயே தாங்கள் பயன்படுத்தியது போக மிச்ச நீரைத்தான் வழங்குவோம் என்பது இயற்கை நியதிகளுக்குப் புறம்பானது.

காவிரி டெல்டாவில் வழக்கமாக 16 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெறும். கடந்த ஆண்டு அக்டோபர் 2-ல்தான் பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைவாக இருந்ததால் கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் போய்ச் சேரவில்லை. இதனால் சுமார் 13 லட்சம் ஏக்கரில்தான் சாகுபடியே நடைபெற்றுள்ளது. மீதி நிலம் தரிசாகப் போடப்பட்டுள்ளது. இந்த 13 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சுமார் 60% நெற்பயிர் இப்போதுதான் பால்பிடிக்கத் தொடங்கியுள்ளது. குறைந்தபட்சம் இன்னும் இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சினால்தான் அப்பயிர்கள் அறுவடைக்குத் தயாராகும். இல்லையென்றால், மொத்தமும் பதராகப் போய்விடும் ஆபத்து உள்ளது.

இன்னும் தொடர வேண்டுமா தற்கொலைகள்?

கடன் வாங்கியும் கை முதல் வைத்தும் செலவுசெய்த விவசாயிகள், செய்வதறியாது திகைத்து தூக்கமின்றித் தவிக்கிறார்கள். 2016-ல் வறட்சியின் காரணமாக 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதையும், அதிர்ச்சியால் மாண்டதையும் உலகறியும். இந்நிலையில், இந்த ஆண்டு பயிர்செய்தும் கடைசி நேரத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறையால் பயிர்கள் கருகிவிடும் என்றால், அந்த இழப்புகளை விவசாயிகளால் தாங்கவே முடியாது. எனவே, கருகும் பயிரைக் காப்பாற்ற தண்ணீர் பெற்றுத்தந்து விவசாயிகளையும், விவசாயத்தையும் காக்க வேண்டியது மத்திய - மாநில அரசுகளின் கடமை.

தமிழக அரசு, தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, தண்ணீர் கோரி போடப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடிசெய்துவிட்டது. பிறகு, தமிழக முதலமைச்சர், நடுவர் மன்றத் தீர்ப்புப்படி 80 டி.எம்.சி. தண்ணீர் பாக்கி தர வேண்டியிருந்தாலும், இப்போது 15 டி.எம்.சி., தண்ணீர் தேவைப்படுகிறது. உடனடியாக 7 டி.எம்.சி. தண்ணீராவது திறந்துவிடுங்கள் என்று கர்நாடக முதல்வருக்குக் கடிதம் எழுதினார் தமிழக முதல்வர். ஒரு சொட்டு தண்ணீர்கூடத் தர முடியாது என்று மறுத்துவிட்டது கர்நாடகம். அடுத்து, பிரதமருக்குக் கடிதம் எழுதினார் தமிழக முதல்வர். அதற்கு எந்தப் பதிலும் வந்ததாக இதுவரை அரசு தெரிவிக்கவில்லை. எது எப்படி இருந்தாலும், தண்ணீர் வரவில்லை என்பது மட்டும் உறுதி!

பிரதமர் தலையிட வேண்டும்

அரசுமுறைக் கடிதங்களால் எந்த உருப்படியான நடவடிக்கையும் இதுவரை இல்லாத நிலையில், தமிழக முதல்வர் பிரதமரை நேரடியாகச் சந்தித்து உரிய தண்ணீரைப் பெற்றுத்தர வேண்டும் என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். பல லட்சம் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் என்ற முறையில், பிரதமர் இத்தனை நாட்கள் மௌனமாக இருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, காவிரி டெல்டா பகுதியை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்திருப்பது பெரும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. காவிரி பிரச்சினையைத் தீர்க்காமல் நீட்டித்துக்கொண்டிருப்பதே இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகத்தானோ என்ற சந்தேகமும் அப்பகுதி மக்களிடம் உள்ளது. இந்நிலையில், கருகும் பயிரைக் காப்பதற்குத் தண்ணீர் பெற்றுத்தர எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பது அதை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

கர்நாடகத்தில் சாகுபடிப் பணிகள் முடிந்துவிட்டன. தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்கும் அணைகளில் 40 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருப்பு உள்ளதாகக் கர்நாடக அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, பிரதமர் தலையிட்டு தமிழக அரசு கோரியுள்ள 15 டி.எம்.சி., தண்ணீரைப் பெற்றுத்தர வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 50 உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது அதிமுக. மத்திய அரசுடன் இணக்கமாகவும் நெருக்கமாகவும் இருப்பதே தமிழக நலனுக்காகத்தான் என்று முதல்வரும் அமைச்சர்களும் விளக்கமளிக்கிறார்கள். எனவே, அதைப் பயன்படுத்தி உரிய அழுத்தத்தை மத்திய அரசுக்குத் தர வேண்டும். விவசாயிகளின் வாழ்வு கருகிவிடாமல் பாதுகாக்க மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டும்!

- பெ.சண்முகம், பொதுச்செயலாளர்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,

தொடர்புக்கு: pstribal@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x