Last Updated : 20 Dec, 2023 06:13 AM

 

Published : 20 Dec 2023 06:13 AM
Last Updated : 20 Dec 2023 06:13 AM

2023 கற்றதும் பெற்றதும்: பெருகும் செயற்கை நுண்ணறிவும் அருகும் மானுடப் பொது நன்மைச் சிந்தனையும்

மானுடம் முன்னேறுகிறது என்ற எண்ணம், பதினெட்டு (1700-1799), பத்தொன்பதாம் (1800-1899) நூற்றாண்டுகளில் வலுவாக இருந்தது. அச்சு ஊடகத்தின் பெருக்கம், இயந்திரங்களின் பெருக்கம், தொழிற்புரட்சி, போக்குவரத்துச் சாதனங்களின் வளர்ச்சி ஆகியவற்றுடன் இணைந்த குடியரசு-மக்களாட்சித் தத்துவங்களின் வளர்ச்சி, நிச்சயமாக மானுடப் பொது நன்மை குறித்த சிந்தனைகளை வலுப்பெறச் செய்தது; உலகக் குடிநபர் என்கிற கருத்தாக்கத்தைச் சிந்திக்க முடிந்தது. இயற்கையிலிருந்து அந்நியப்படுதல், வாழ்க்கை வணிகமயமாதல், நுகர்வுப் பெருக்கம் குறித்த கவலைகளும் தோன்றத்தான் செய்தன.

ஆனாலும் தேசிய அரசுகளின் உருவாக்கம், புதிய சுதந்திரவாதச் சிந்தனைகள், தொழிலாளர் இயக்கங்கள் எனப் புத்துலகம் குறித்த, மானுடப் பொது நன்மை குறித்த நம்பிக்கைகளும் பெருகவே செய்தன. இருபதாம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களும், ஹிட்லரின் யூதப் படுகொலையும், அணு ஆயுதத்தின் தோற்றமும் மானுட எதிர்காலம் குறித்த பெருத்த அவநம்பிக்கையை உருவாக்கின. சுதந்திரவாத, பொது உடைமை லட்சியங்களால் பனிப்போர் கால ஆயுத, அதிகாரப் போட்டி உருவாக்கிய கசப்புகளை, சமரசங்களைக் கடக்க முடியவில்லை.

இருப்பினும், தொடர்ந்த அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும், மக்களாட்சி நடைமுறைகளும் மானுடப் பொது நன்மை குறித்த சிந்தனைகளைத் தக்கவைக்க முயன்றன. இந்தப் பின்னணியில், நிறைவு பெறும் 2023ஆம் ஆண்டை மதிப்பிட்டுப் பார்த்தால் இரண்டு அம்சங்கள் முக்கியமானவையாகத் தோன்றுகின்றன: ஒன்று, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு பெருகுவது; மற்றொன்று, மானுடப் பொது நன்மைச் சிந்தனைகளின் மிகப்பெரிய தேக்கம், பயனின்மை.

பெருகும் செயற்கை நுண்ணறிவு: ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜன்ஸ் என்றும் சுருக்கமாக ஏ.ஐ. (AI) என்றும் அழைக்கப்படும் கணினி நுண்ணறிவுச் செயலிகளில் பெரும் பாய்ச்சல்கள் எட்டப்பட்டுள்ளன. சாட்ஜிபிடி என்கிற செயலி மூலம், ஏ.ஐ. பரவலான பொதுப் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தனிநபர்கள் பொழுதுபோக்காக அதைப் பயன்படுத்தி மகிழ, பல்வேறு வர்த்தக, தொழில் நிறுவனங்கள் அவற்றைத் தங்கள் பணிநிமித்தமாகவே பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இந்தப் பயன்பாட்டின் மூலம் போலி செய்தல் என்பது சுலபமாகி உள்ளது. ஆழ்நிலைப் போலிகள் (deep fake) என்னும் வகையிலான பிம்பங்கள் உலா வரத் தொடங்கியுள்ளன. இவற்றைத் தயாரிப்பது செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களால் சுலபமாகி உள்ளது.

உதாரணமாக, யார் வேண்டுமானாலும் எந்தக் காணொளிகளையும் பயன்படுத்தி முற்றிலும் வேறு மாதிரியான காணொளியை உருவாக்கலாம். ரஷ்ய அதிபர் புடின், உக்ரைனுடன் போர் நிறுத்தத்தை அறிவிப்பதாகப் பரவிய காணொளி ஓர் உதாரணம். உண்மையில், புடின் அப்படி எதையும் செய்யாத நிலையில், போலியான காணொளியைச் சிலர் பரப்பினார்கள். தங்கள் செல்பேசியில் இப்படியான காணொளிகளைப் பார்ப்பவர்கள் உண்மைக்கும் பொய்க்கும் வேறுபாடு காண இயலாமல் திணறுகின்றனர்.

இந்தப் போலி செய்தல் பிரச்சினை தவிர, மனித அறிவாற்றல் செய்யும் பணிகளைச் செயற்கை நுண்ணறிவு செய்யத் தொடங்கினால் மேலும் பல தளங்களில் வேலையிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகளுக்கான நெறிமுறைகளை வகுக்க ஐ.நா. அவை ஒரு சர்வதேசக் குழுவை உருவாக்கியுள்ளது. இனிவரும் ஆண்டுகளில் மிக முக்கியமான சவால்களைச் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு உருவாக்கும் சாத்தியம் உள்ளது. அறிவியல் புனைகதைகளின் அச்சங்கள் உண்மையாகிவிடுமோ என்று தோன்றுகிறது.

அருகும் பொது நன்மைச் சிந்தனை: 2022இல், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் முடிவுக்கு வரவில்லை. உலக நாடுகளால் ரஷ்யாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை; தனிமைப்படுத்தவும் முடியவில்லை. இந்தியா உள்பட அந்தந்த நாடுகளின் பொருளாதார நலனைக் கருதி, அவை ரஷ்யாவுடன் வர்த்தக உறவுகளை மேற்கொள்கின்றன. அணு ஆயுத நாடொன்றைத் தாக்குவது என்பது சாத்தியமுமில்லை. அதேவேளை, ரஷ்யா உக்ரைனைத் தாக்குமளவுக்குச் சென்றது, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பின் அதிகாரக் குவிப்பு முனைப்புதான் என்பதையும் புறக்கணிக்க முடியாது. உலகில் 192 நாடுகள் ஐ.நா. அவையில் உறுப்பினர்களாக இருந்தாலும், 20 நாடுகள்தான் மக்கள்தொகையிலும் பொருளாதார ஆற்றலிலும் குறிப்பிடத் தக்கவையாக இருக்கின்றன.

இவை ஜி20 என்ற பெயரில் ஒவ்வோர் ஆண்டும் சந்திக்கின்றன. இந்த ஆண்டு இந்தியாவின் தலைமையில் சந்திப்பு இந்தியாவில் நிகழ்ந்தாலும், இந்தச் சந்திப்புகளால் உலகப் பொது நன்மைக்கான எந்த உருப்படியான முன்முயற்சியையும் மேற்கொள்ள முடிவதில்லை. வாய் உபசாரமாகப் பேசுவதைத் தவிர பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. உக்ரைன் போர் தொடரும் நிலையில், ஐம்பதாண்டுகளாக உலக நாடுகளால் தீர்க்க முடியாத இஸ்ரேலின் பாலஸ்தீனியர்கள் மீதான மேலாதிக்கப் போக்கு, மீண்டும் பெரும் வன்முறைக்கு வழிவகுத்துள்ளது. காசா பகுதியைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பு, அரசியல் தீர்வு எட்டப்படாததால் விரக்தியடைந்து அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் புகுந்து தீவிரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தியது; ஆட்களைக் கடத்தியது.

இதனால் வெகுண்டெழுந்த இஸ்ரேல், அமெரிக்காவின் ஆதரவுடன் காசாவின் பொதுமக்கள் மீது ஈவிரக்கமற்ற கொலைவெறித் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. உலகெங்கும் சிந்தனையாளர்களும், பொதுமக்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தும் எந்தப் பயனும் இல்லை. ஐ.நா. அவை போர்நிறுத்தம் கோரி இயற்றிய தீர்மானத்தின் பயன் என்ன? பொது நன்மை குறித்த சிந்தனைகளாலோ, இயக்கங்களாலோ அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவதைத் தடுக்க முடிந்ததா? ‘உலகின் கருத்து’ என்ற உருவகத்தின் மதிப்புதான் என்ன? உலக நாடுகள் மீண்டும் இரு அணிகளாகப் பிரிவது தெளிவாகத் தெரிகிறது. சீனா, ரஷ்யா, வட கொரியா, ஈரான் என்று ஒரு வலிமையான அணு ஆயுத, பொருளாதாரக் கூட்டணி அமெரிக்கா தலைமையிலான நாடுகளுக்கு எதிராக உருவாகியுள்ளதை யாரும் மறுக்க முடியாது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது, ஹமாஸின் இஸ்ரேல் மீதான தாக்குதல், ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதல் ஆகிய நிகழ்வுகளின் பின்னால் இந்தக் கூட்டணியின் கரம் செயல்படுகிறது.

விசித்திரமான சித்திரம்: இந்த அணிச் சேர்க்கைகள் மீண்டும் பனிப்போர் காலம், உலகப் போர் போன்றவற்றுக்கு இட்டுச்செல்லுமா என்ற கேள்வி எழாமல் இல்லை. அணு ஆயுதங்களால் உலகப் போரைத் தடுக்க முடியும் என்ற அசட்டு நம்பிக்கை இன்றைய அணு ஆயுதப் பெருக்கத்துக்குப் பிறகு தகர்ந்துவிட்டது. அணு ஆயுத நாடுகள் அணிகளாகச் சேர்ந்து போரில் ஈடுபட்டாலோ, போர்களைத் தூண்டிவிட்டாலோ அதனை ராணுவத் தலையீட்டின் மூலம் தடுக்க முடியாது என்ற நிலையில் போர் நடவடிக்கைகள் பெருகவே வாய்ப்பு அதிகம் இருப்பது தெரிகிறது; இது மாபெரும் பின்னடைவு. இதையெல்லாம் கடந்து, மிக வேகமாகச் சீர்கெட்டுவரும் உலகின் இயற்கைச் சூழல் குறித்து உலக நாடுகளின் அரசுகளால் எதுவும் செய்ய முடிவதில்லை.

புவி வெப்பமாதலைத் தடுக்க, வளிமண்டலத்தில் கார்பன் அளவைக் குறைக்க முடியவில்லை. அறிவியல் ஏதேனும் அதிசயத் தீர்வை தருமா என்று பார்க்கிறார்களே தவிர, முதலீட்டிய வளர்ச்சி, உற்பத்தி-நுகர்வுப் பெருக்கம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது குறித்தோ, உலகப் பொது நன்மையை முன்னிறுத்துவது குறித்தோ சிந்திக்க முடியவில்லை. இயற்கைப் பேரிடர்களின் பெருக்கம், உலக நாடுகள் பலவற்றையும் தாக்கி வருவதைச் செயலற்றுப் பார்க்கிறோம். அதனால்தான் பெருகும் செயற்கை நுண்ணறிவும், அருகும் பொது நன்மைச் சிந்தனையும், இந்த ஆண்டு நமக்களித்த வரலாற்றுச் சித்திரமாக உள்ளது.

- தொடர்புக்கு: rajankurai@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x