Published : 03 Jan 2018 09:36 AM
Last Updated : 03 Jan 2018 09:36 AM
நூ
று ஆண்டுகளுக்கு முன்னால், 1918 ஜனவரி முதல் நாள் அகமதாபாதில் இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, அந்த நகரவாசிகளிடம் முக்கியமான விஷயங்கள் குறித்துப் பேசினார்; முதலாவது உலகப் போர் முடிவுக்கு வருவது குறித்தோ, தனது தலைமையில் நடைபெறவிருக்கும் சுதந்திர விடுதலைப் போர் குறித்தோதான் பேசியிருப்பார் என்று நாம் கருதலாம். ஆனால் அவர், இவ்விரண்டுக்கும் முற்றிலும் மாறாக மக்கள் வாழ்வதற்கு அத்தியாவசியமான மூன்று இயற்கை வளங்கள் குறித்தே பேசினார். அவை காற்று, தண்ணீர், உணவு தானியங்கள்.
“சுயராஜ்யம் என்பது சுய ஆட்சி என்றால், இந்த மூன்றையும் தொடர்ந்து தடையின்றிப் பெறுவதை உறுதிசெய்வதே அந்த சுய ராஜ்யம்” என்றார். காற்று இயற்கையிலிருந்து இலவசமாகக் கிடைக்கிறது, ஆனால், அந்தக் காற்றே நஞ்சாகிப்போனால் நம்முடைய உடல் நலம் கெட்டுவிடும். அடுத்து வருவது தண்ணீர். தண்ணீர் தடையின்றியும் தூய்மையாகவும் அனைவருக்கும் கிடைப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும்.
கவுன்சிலர்கள் மக்களுக்குச் சேவை செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நாம் அவர்களை இவை தொடர்பாகக் கேள்வி கேட்கும் உரிமை படைத்தவர்கள் என்றார். உணவு தானியங்கள் பற்றி அவர் வாயால் அல்ல, செயலால் பேசினார். கேடா மாவட்டத்தில் வறட்சி காரணமாகப் பயிர் விளைச்சல் பொய்த்திருப்பதால் நிலத்தீர்வை வசூலிலிருந்து சில பகுதிகளுக்கு விலக்கும் சில பகுதிகளுக்குத் தள்ளிவைப்பும் மேற்கொள்ள வேண்டும் என்று பம்பாய் மாகாண அரசுக்கு உடனே கடிதம் எழுதுமாறு ‘குஜராத் சபா’ நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டார்.
விழிப்புணர்வின் உண்மைத் தன்மை
டெல்லியிலும் வட இந்திய நகரங்களிலும் நச்சுக் காற்றுதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இந்தியாதான், பருவநிலை மாறுதல்களால் தண்ணீர், உணவு நெருக்கடியில் ஆழ்ந்துகொண்டிருக்கிறது. பருவநிலை மாறுதல் தொடர்பான (எவரையும் கட்டுப்படுத்தாத) பாரிஸ் நகர ஒப்பந்தப்படி 2005-ல் இருந்த கரிப்புகை வெளியீட்டு அளவை, 2030-க்குள் 33% முதல் 35% வரையில் இந்தியா குறைத்தாக வேண்டும். இதற்கு நிலக்கரியைக் கொண்டு அனல் மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிப்பதைக் குறைத்துக்கொண்டு, காற்று-சூரிய ஒளி போன்றவற்றிலிருந்து தயாரிக்கக்கூடிய புதுப்பிக்கத்தக்க இயற்கை ஆற்றல் மூலமான மின்உற்பத்திக்கு மாற வேண்டும். வன நிலப் பரப்பை ஆண்டுதோறும் அதிகரித்து வர வேண்டும்.
இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக்கொண்டுவிட்டது. எனவே, வளரும் நாடுகளுக்கு இவற்றுக்காக நிதியுதவி கிடைப்பது சீர்குலைந்துவிட்டது. எனவே, எதிர்காலத்தில் இது தொடர்பாக ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை எட்ட முடியாத நிலையும், இலக்குகளை அடைவதில் பற்றாக்குறையும் நிச்சயம் ஏற்படும். பாரிஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்ற நாம் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறோம், நம் விழிப்புணர்வு எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறது என்று 2018-ல் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.
அடுத்து, தண்ணீரின் நிலையோ காற்றின் மாசைவிட மோசமாக இருக்கிறது. வட கிழக்கு அல்லது தென் மேற்குப் பருவமழையைப் பார்த்தே காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. வீட்டில் புழங்க, விவசாயம் செய்ய, தொழில்துறையில் பயன்படுத்த, கட்டுமானத் தொழில்களுக்கு என்று நிலத்தடி நீரையும் ஆற்று நீரையும் அளவுக்கு அதிகமாகச் செலவழித்து இப்போது நம்முடைய நிலமே நீர் தங்காத சல்லடையைப் போல மாறிவிட்டது. மழை நீர் சேகரிப்பு மூலம் புதுப்பிக்கக்கூடிய நிலத்தடி நீர்மட்டம்கூட, வரம்பற்ற பயன்படுத்தல் காரணமாக இனி மேலேற்றவே முடியாது என்ற அளவுக்கு வற்றிவிட்டது.
நீர் குறித்த அக்கறையற்றவர்கள்
இந்நாட்டின் நீராதாரத்தில் பங்குதாரர்களான நம்மால் இந்த யதார்த்தம் உணரப்பட்டிருக்கிறதா? நிச்சயம் இல்லை. ஒரு சிலரால் தண்ணீர் வீணடிக்கப்படுகிறது, பெரும்பாலானவர்களுக்கு நல்ல தண்ணீரே கிடைக்காமலிருக்கிறது. தண்ணீரைச் சேமிப்பதிலும் பெறுவதிலும் நாம் அக்கறையற்றவர்களாகவே இருக்கிறோம். அப்படியே கிடைக்கும் தண்ணீரும் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் ஏற்றதாக இல்லை. இந்தியாவில் தொற்றும் நோய்களில் 21% அசுத்தமான, அல்லது சுத்திகரிக்கப்படாத குடிநீரால்தான் ஏற்படுகின்றன. நகர்ப்புறங்களிலும் தொழிற்சாலைகளிலுமிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமலேயே ஏரிகளிலும் ஆறுகளிலும் கடலிலும் கலக்குமாறு விடப்படுகிறது. இந்த 2018-லாவது ஆட்சியாளர்கள் இதன் ஆபத்தை உணர்ந்து மாற்று நடவடிக்கை எடுப்பார்களா? நிச்சயம் கிடையாது.
காந்தி மூன்றாவதாக வலியுறுத்திய அம்சமான உணவு தானியங்களின் விளைச்சலும் இன்று படுமோசமாக இருக்கிறது. வீடு-மனை விற்பனைத் தொழிலில் இருக்கும் பெருங்கொள்ளை கும்பல்களும், பகாசுர தொழில்நிறுவனங்களும் விளைநிலங்களை வாங்கிவிடுவதால், சாகுபடிக்கேற்ற நிலங்களுக்குப் பெரிய பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. பணப் பயிர் சாகுபடியாலும், பயிர்க்கடன் உரிய நேரத்தில் கிடைக்காமல்போவதாலும் உணவு தானிய விளைச்சலுக்கான நிலப்பரப்பு சுருங்கிக்கொண்டே வருகிறது. சாகுபடிச் செலவுகள் பல மடங்கு உயர்வதாலும், குறைந்தபட்சக் கொள்முதல் விலை போதுமானதாக இல்லாததாலும் நெருக்கடி ஏற்படுகிறது. விவசாயிகளின் தற்கொலைகள் இதற்குச் சாட்சி.
விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக நியமிக்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய ஆணையம் அளித்த ஐந்து அறிக்கைகள், பல எச்சரிக்கைகளையும் பரிந்துரைகளையும் கொண்டது. குறைந்தபட்சக் கொள்முதல் விலை என்பது சாகுபடிச் செலவுடன் 50% லாபம் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்த அவர், அதை விரைவாக அரசு அமல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். உலகின் எதிர்காலம் என்பது உணவு தானியங்களை அதிகம் வைத்திருக்கும் நாடுகளுக்குத்தான், ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளுக்கு அல்ல என்று காந்தியைப் போலவே அவரும் எச்சரித்திருக்கிறார்.
பிரச்சினைகளின் திசை திருப்பல்கள்
அடிப்படையான காற்று, நீர், உணவு தானியம் போன்றவற்றில் பற்றாக்குறையைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நாம், வேறு எதற்கு முக்கியத்துவம் தந்து கொண்டிருக்கிறோம்? மத சகிப்பின்மை, மத அடிப்படையில் மக்களைத் திரட்டுவது, ‘ஒரே நாடு-ஒரே கலாச்சாரம்-ஒரே மொழி’ என்ற ஒற்றைத்தன்மை ஆகியவற்றை வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். ஏன்? இதுதான் மக்களின் கவனத்தை அன்றாடப் பிரச்சினைகளிலிருந்து, நெருக்கடிகளிலிருந்து திசை திருப்புகிறது. 2014-ல் வீசத் தொடங்கிய சகிப்புத்தன்மையற்ற காற்று 2018-ல் மேலும் பலங்கொண்டு வீசும். 2014-ல் சோதிக்கப்பட்ட மதரீதியிலான அணி சேர்க்கை, உத்தர பிரதேசம், குஜராத்தில் பெரும் பலனைத் தந்திருப்பதால் மேலும் தீவிரமாக 2018-ல் வலுப்பெறும். சட்டப் பேரவை பொதுத் தேர்தல்களிலும் பயன்படுத்தப்படும்.
ஈத் பண்டிகையின்போது, நாம் யார் என்ற நினைப்பை இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது அச்ச உணர்வை கிறிஸ்தவர்களுக்கும் ஊட்டுவதுதான் இனி தேசப்பற்றாக கருதப்படப்போகிறது. வரலாறு உணர்த்தும் பாடங்கள் ஒருபுறமிருக்க, இஸ்ரேலியப் பிரதமரை இந்தியாவுக்கு வரவழைத்துக் கெளரவிப்பது தேசப்பற்றைவிட உயர்வான, வலுவான செயலாகக் கருதப்படப்போகிறது.
கேள்வி கேட்கும் உரிமை
சுயராஜ்யம் கவனத்தில் வைக்க வேண்டிய மூன்று அத்தியாவசியங்களைக் குறிப்பிட்ட காந்தி, நாலாவதாக, ‘கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு’ என்றார். இது அரசியல் உரிமைகள், சமூக - பொருளாதார உரிமைகள் என்று விரிவானது. 1918-ல் அது கேடா பகுதி விவசாயிகளின் சத்தியாகிரகத்துக்கு வழிவகுத்தது. 2014-க்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு கேள்வி கேட்கும் உரிமை இந்தியாவில் புத்துயிர் பெற்றிருக்கிறது. அச்ச உணர்வை உதறிவிட்டு, கேள்வி கேட்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்துள்ள அதிக இடங்கள் அதற்கான அறிகுறி. நம்முடைய ஜனநாயகத்தில் சுயராஜ்ய காற்று மீண்டும் வீசும். பேரினவாதம் வெற்றிகரமாக எதிர்க்கப்பட்டிருக்கிறது.
பொதுநலன் கோரும் மனுக்களும், தகவல் அறியும் உரிமையும், தேர்தல் முடிவுகளில் மாற்றமும் 2019-ஐ (மக்களவைக்கு அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறும் ஆண்டு) 1919 ஆக மாற்றிவிடும். அந்த ஆண்டில்தான் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து பிரிட்டிஷ் அரசுக்கு சுயராஜ்யக் கிளர்ச்சி என்றால் என்ன என்று அடையாளம் காட்டினர்.
கோபாலகிருஷ்ணகாந்தி முன்னாள் நிர்வாகி,
ராஜீயத் தூதர், ஆளுநர்
சுருக்கமாகத் தமிழில்: சாரி, ©: ‘தி இந்து’ ஆங்கிலம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT