Published : 12 Dec 2023 06:13 AM
Last Updated : 12 Dec 2023 06:13 AM
சோலைக் காடுகள் பாதுகாப்பு மையம் (Shola Conservation Centre) அமைக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு அறிவித்தபோது, இயற்கை ஆர்வலர்கள் பெருமகிழ்ச்சியோடு வரவேற்றனர். சோலைக்காடுகள் - மேற்குத் தொடர்ச்சி மலையில்உள்ள தனித்துவமான இயற்கை அமைப்பு. இக்காடுகளும் அதனை ஒட்டியுள்ள புல்வெளிகளும் இங்கு சில நாட்களே பெய்யும் மழை நீரைத் தேக்கிவைத்து ஆண்டு முழுவதும் உயிர்ப்புடன் இருக்கும் சுனைகளையும் ஓடைகளையும் உருவாக்குகின்றன. அவையே தென்னிந்திய ஆறுகளின் பிறப்பிடம். மலைவாழ் மக்களுக்கும் காட்டுயிர்களுக்கும் அவைதான் ஆதாரம்.
துண்டாடப்பட்ட சோலைகள்: மேற்குத் தொடர்ச்சி மலையில், 1,400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பகுதி முழுவதும் சோலைக் காடுகளாலும் புல்வெளிகளாலும் சூழப்பட்டிருந்தது. காலம் காலமாய் மலை மக்களால் பாதுகாக்கப்பட்டுவந்த அந்தக் குறிஞ்சி நிலம், வெள்ளையர்கள் வருகைக்குப் பின் அழிவுக்குள்ளானது. சோலைகள் துண்டாடப்பட்டன. தேயிலை, காப்பி போன்ற பயிர்களும் யூகலிப்டஸ், சீகை போன்ற அந்நிய மரங்களும் வளர்க்கப்பட்டன. ஆங்கிலேயர் சென்ற பின்பும் சோலைகளின் அழிவு தொடரத்தான் செய்தது. 1980இல் கொண்டுவரப்பட்ட இந்திய வனப் பாதுகாப்புச் சட்டம் காடுகளின் அழிவை ஓரளவு கட்டுப்படுத்தியது. சோலைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் தேவை உணரப்பட்டது. சோலைக்காடுகள் அழிந்தால், தென்னிந்தியா பாலைவனமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT