Published : 30 Nov 2023 06:12 AM
Last Updated : 30 Nov 2023 06:12 AM
ஐ.நா. அவையின் சுற்றுச்சூழல் திட்டஅமைப்பானது பசுங்குடில் வாயுக்களின்உமிழ்வு பற்றிய ஒரு விரிவான அறிக்கையை நவம்பர் 20 அன்று வெளியிட்டுள்ளது. உமிழ்வுகளைக் குறைப்பது பற்றி நாடுகள் தந்தஉறுதிமொழிக்கும், நடைமுறையில் வெளியிடப்படும் உமிழ்வுகளின் அளவுக்கும் இருக்கும் இடைவெளியை ஆராயும் இந்த அறிக்கையை, ‘உமிழ்வு இடைவெளி அறிக்கை’ (Emissions Gap Report) என்று பொதுவாகக் குறிப்பிடுவார்கள்.
இந்த ஆண்டுக்கான அறிக்கைக்கு ‘Broken Records’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. தலைப்பை இரண்டு விதங்களில் நாம் புரிந்துகொள்ளலாம். முந்தைய சாதனைகளை / உச்சவரம்புகளை முறியடிக்கும் வண்ணம் அதிக வெப்பநிலைகள் எட்டப்பட்டுள்ளன என்பது ஒரு பொருள். இந்தத் தலைப்பை உருவகமாகவும் அணுகலாம். “உமிழ்வுகள் - காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான செயல்பாடுகள் மிகவும் மந்தநிலையில் இருக்கின்றன. இந்தப் போக்கை உலகம் மாற்றிக்கொள்ளாவிட்டால், ஒவ்வொரு வருடமும் கீறல் விழுந்த இசைத்தட்டைப் போல நாங்களும் இதையே திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கும்” என்று அறிக்கையை வெளியிட்ட சுற்றுச்சூழல் அமைப்பினர் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
உச்சவரம்பும் நிலவரமும்: உமிழ்வுகள் - காலநிலை பற்றிய பல தரவுகள் அறிக்கையில் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானது உலகளாவிய சராசரி வெப்பநிலை பற்றிய எதிர்காலக் கணிப்பு. தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, உலகளாவிய சராசரி வெப்பநிலை மிக அதிகமாக உயர்ந்துவிடக் கூடாது என்பதே காலநிலைச் செயல்பாடுகளின் முதன்மை இலக்கு. 2015இல் பாரிஸில் நடைபெற்ற காலநிலை உச்சிமாநாட்டில், உலகளாவிய சராசரி வெப்பநிலை அதிகரிப்பு 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் போகாமல் இருக்க முயற்சிகள் எடுப்போம் என்று உலக நாடுகளிடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது; இது ‘பாரிஸ் ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டி அதிகரித்தால் மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதால், அந்த உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதையொட்டியே ஒவ்வொரு காலநிலை உச்சி மாநாட்டிலும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
ஆனால், இப்போது வெளிவந்திருக்கும் உமிழ்வு சார்ந்த அறிக்கையில், தற்போதைய செயல்பாடுகளை உலக நாடுகள் அப்படியே தொடரும்பட்சத்தில், இந்த நூற்றாண்டுக்குள் சராசரி வெப்பநிலை அதிகரிப்பு இரண்டு டிகிரி செல்சியஸைத் தொட்டுவிடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, உச்சவரம்பையும் மீறி அரை டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயரும் என்பது தெரியவந்திருக்கிறது. 2023இல் இதுவரை 86 நாட்களில், உலகின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்திருக்கிறது. வருடாந்திர சராசரி வெப்பநிலை உயர்வுதான் கணக்கில் கொள்ளப்படும் என்றாலும்,ஓர் ஆண்டில் கிட்டத்தட்ட கால்வாசி நாட்களில் உச்சவரம்பு தாண்டப்பட்டிருக்கிறது என்பது நிச்சயமாக ஒரு எச்சரிக்கைதான். “நாம் உச்சவரம்பை நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதையே இது காட்டுகிறது’’ என்கிறார்கள் காலநிலை ஆராய்ச்சி யாளர்கள். அதிலும் குறிப்பாக செப்டம்பர் மாதத்தின் சில நாட்களில், உலகளாவிய சராசரி வெப்பநிலை 1.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
உமிழ்வுகள் நிறைந்த பாதை: 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது உலகளாவிய பசுங்குடில் வாயுக்களின்உமிழ்வு 1.2% அதிகரித்திருக்கிறது. இவற்றில் மூன்றில்ஒருபங்கு உமிழ்வுகள், புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாட்டால் ஏற்படுகின்றன. ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டர்ஸ், ‘காலநிலை மாற்றத்தின் நச்சு வேர்’ என்று புதைபடிவ எரிபொருள்களை வர்ணிக்கிறார். ஒவ்வோர் ஆண்டும் புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாடும் அவற்றிலிருந்து வெளிவரும் பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வும் அதிகரித்தபடியே இருக்கின்றன. கரோனா கொள்ளைநோய் காலகட்டத்தில், உலகளாவிய உமிழ்வுகளின் அளவு வெகுவாகக் குறைந்தது. உலகம் இயல்புவாழ்க்கைக்குத் திரும்பிய பின்னரும், இதே நிலை தொடர வேண்டும் என்று காலநிலைச் செயல்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்தார்கள். ஆனால், தற்போதைய தரவுகளைப் பார்க்கும்போது, கரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தின் உமிழ்வுகளை நாம் மீண்டும் எட்டிவிட்டோம் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு உலகம் வழக்கமான, உமிழ்வு நிறைந்த பாதைக்குத் திரும்பிவிட்டது.
உமிழ்வுகளில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் இந்த அறிக்கை விரிவாகப் பேசுகிறது. உலகிலேயே அதிக வருமானம் கொண்ட 10% மக்கள், உலகளாவிய உமிழ்வுகளில் கிட்டத்தட்ட 48%க்குக் காரணமாக இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் வளர்ச்சியடைந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களது உமிழ்வுகளால் ஏற்படும் பாதிப்புகள், வறியவர்களையும் மூன்றாம் உலக நாடுகளையுமே அதிகமாகத்தாக்கும் என்பதைத் தனியாகச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தச் ‘சூழலியல் அநீதி’யைக் காலநிலை மாற்றத்தின் மிக மோசமான பின்விளைவு என்றே சொல்ல வேண்டும்.
உறுதிமொழியும் நிதர்சனமும்: பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 97 நாடுகள், நிகர பூஜ்ய உமிழ்வுகளை நோக்கிச் செயல்படுவதாக உறுதியளித்திருக்கின்றன. அதாவது, வெளியிடப்படும் பசுங்குடில் வாயுக்களுக்குச் சமமான அளவில் வளிமண்டலத்தில் இருக்கும் பசுங்குடில் வாயுக்கள் நீக்கப்படும்போது மட்டுமே நிகர உமிழ்வு பூஜ்யமாக இருக்கும். இதைநடத்திக்காட்டுவதாகப் பல நாடுகள் உறுதிமொழி அளித்திருந்தாலும் அது இன்னும் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இன்னும் வேதனையான ஒரு தகவல் என்னவென்றால், ஒருவேளை இந்த 97 நாடுகளும் நிகர பூஜ்ய உமிழ்வுக்கு வந்தால்கூட, உலகளாவிய சராசரி வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர்வதற்குச் சாத்தியம் இருக்கிறது என்பதுதான். காலநிலை மாற்றம்ஒரு நேர்க்கோட்டில் இயங்கவில்லை, ஒவ்வொரு கூடுதல் டன் பசுங்குடில் வாயுவுக்கும் மாற்றத்தின் விகிதம் அதிகரிக்கிறது என்ற முக்கியமான அறிவியல் கோட்பாட்டுக்கு இந்தக் கணிப்பு ஒரு சான்று.
2018 நிலவரப்படி, உலகில் இயங்கிவரும் ஒட்டுமொத்த நிலக்கரிச் சுரங்கங்கள், எண்ணெய்க் கிணறுகள் ஆகியவற்றின் உற்பத்தியை இந்த அறிக்கை ஆராய்ந்திருக்கிறது. இவற்றில் இருந்து வெளிவரப்போகும் நிலக்கரி, எண்ணெய், எரிவாயுவை நாம் முழுமையாகப் பயன்படுத்தினால், நிச்சயமாக 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பை எட்டிவிடுவோம் என்றும், இவற்றின் தொடர் பயன்பாட்டின்போது 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கவும் சாத்தியம் இருக்கிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்கள்.
மனிதகுலத்தின் எதிர்காலம்: 2022இல் இதுவரைஇல்லாத அளவுக்கு 57.4 கிகா டன் (giga tonne) உமிழ்வுகளை உலகம் வெளியிட்டிருக்கிறது. உலகெங்கும் நிலக்கரிச் சுரங்கங்களும் எண்ணெய்க்கிணறுகளும் புதிதாகத் திறக்கப்பட்டபடியே இருக்கின்றன. புதைபடிவ எரிபொருள்களால் இயங்கும் தற்போதைய தொழிற்சாலைகளைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வகைமைக்குள் கொண்டுவருவதற்குத் தீவிரமான முயற்சிகள் அவ்வளவாக எடுக்கப்படவில்லை. மாறாக, வெளியிடப்பட்ட உமிழ்வுகளைத் திரும்பப்பெறுவதற்கு உதவும் கரிமச் சந்தையானது லாபம் கொழிக்கும் ஒரு தொழிலாக மாறியுள்ளது, பசுமைக் கண்துடைப்பும் அதிகரித்திருக்கிறது.
“உலக நாடுகள் பல இலக்குகளை நிர்ணயித்திருக்கின்றன. ஆனால், அவற்றிடம் இருக்கும் தற்போதைய சட்டங்கள் - கொள்கைகளை வைத்துக்கொண்டு இந்த இலக்குகளை எட்ட முடியாது” என்று இந்த அறிக்கை தெள்ளத்தெளிவாகத் தரவுகளுடன் உறுதிப்படுத்துகிறது. இனிவரும் ஆண்டுகளில், ஒவ்வோர் ஆண்டும் 4% உமிழ்வுகளைக் குறைத்தால் மட்டுமே, உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த முடியும் என்று இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது. காலநிலை பற்றிய முக்கிய முடிவுகளுக்கான தளமான காலநிலை உச்சி மாநாடு 28 (UN Conference of Parties 28 - COP 28), நவம்பர் 30 (இன்று) முதல் டிசம்பர் 12 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. மாநாட்டுக்கான ஒரு வழிகாட்டியாகவும் இந்த அறிக்கை விளங்குகிறது. அறிக்கையில் இருக்கும் எச்சரிக்கைகளை மனதில்கொண்டு, பரிந்துரைகளை ஏற்று, உலக நாடுகள் செயல்படுத்துமா என்பதில்தான் மனித இனத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது!
கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் எழுத்தாளர்
தொடர்புக்கு: nans.mythila@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT