Published : 16 Jan 2018 08:49 AM
Last Updated : 16 Jan 2018 08:49 AM

இலக்கிய உலகத்துடன் ஒரு பாலம்!

த்திரிகையாளர், எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், ஆவணப்பட இயக்குநர், பத்திரிகை ஆசிரியர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர் ஞாநி. மாணவப் பத்திரிகையாளராக விகடனில் தேர்வுசெய்யப்பட்ட நாட்களில் முதல் முறையாக ஞாநியைச் சந்தித்தேன். அன்றிலிருந்து நட்பு நீண்டு தொடர்ந்தது. இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும் நேசித்தவர் ஞாநி. தன்னுடைய நேசத்தை இதழியலுக்கும் கடத்தியவர்.

தமிழில் வெகுஜனப் பத்திரிகை உலகத்துக்கும் இலக்கிய உலகத்துக்கும் இணக்கம் இல்லாத காலகட்டம் ஒன்றும் இருந்தது. சொல்லப்போனால், தமிழ் வெகுஜன இதழியலின் சிக்குப்பிடித்த சில மதிப்பீடுகளை உடைப்பதில் நவீன இலக்கியம் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. விளைவாக, இருதரப்புகளுக்கு இடையிலும் ஒரு பனிப் போர் நிலவிய காலமும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் இலக்கியவாதிகளின் தரப்பு நியாயத்தையும் அவர்கள் முன்வைத்த விமர்சனங்களையும் வெகுஜன இதழியலில் ஆக்கபூர்வமாக அணுகியவர்களில் முக்கியமானவர் ஞாநி.

இலக்கிய உலகோடு அவருக்கிருந்த உறவின் குறியீடாக அசோகமித்திரனுடனான அவருடைய உறவைக் குறிப்பிடலாம். அசோகமித்திரன் மீது ஞாநிக்குத் தனிப் பிரியம் உண்டு. இருவர் இடையே ஆழமான நட்பு உண்டு. ஞாநியின் நாடகக் குழுவில் அசோகமித்திரன் இணைந்து நடித்திருக்கிறார். அசோகமித்திரனின் மறைவுக்குப் பின் அவர் பெயரில் சிறுகதைப் போட்டி நடத்தி விருதுகள் வழங்கினார்.

தமிழ் இலக்கியத்தின் முக்கியமான படைப்பாளிகள் பலருடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார் ஞாநி. தன்னுடைய வீட்டில் ‘கேணி’ என்ற இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியைத் தொடங்கியவர், அதன் முதல் நிகழ்வில் உரையாற்ற என்னை அழைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தினார். எப்போதும் தன்னைச் சுற்றிலும் இளைஞர்களைக் கொண்டிருக்கும் ஞாநி, அவர்களிடத்தில் சமூகப் பிரச்சினைகள், அரசியலைக் கடத்துவதில் கொண்டிருந்த அக்கறையை இலக்கியத்தைக் கடத்துவதிலும் கொண்டிருந்தார். ஒருவிதத்தில் தமிழ் இலக்கியத்துக்கும் இதழியலுக்கும் இடையில் ஒரு பாலமாகச் செயல்பட்டார்!

- எஸ்.ராமகிருஷ்ணன்,

தொடர்புக்கு: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x