Published : 14 Jul 2014 10:00 AM
Last Updated : 14 Jul 2014 10:00 AM
உலகின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றான அந்துவான் து செந்த் எக்சுபரியின் ‘குட்டி இளவரசன்' நாவலில், ஒரு சிறுவனுக்கும் நரிக்கும் இடையே நடக்கும் உரையாடலின் ஒரு பகுதி இது:
“....நான் நண்பர்களைத் தேடுகிறேன். ‘பழக்கப்படுத்துவது' என்றால் என்ன?” என்றான் குட்டி இளவரசன்.
“அது மறந்துபோன ஒன்று. ‘பழக்கப்படுத்துவது என்றால், உறவை ஏற்படுத்திக்கொள்வது என்று பொருள்’’ என்றது நரி.
“உறவை ஏற்படுத்திக்கொள்வதா?”
“ஆமாம். என்னைப் பொறுத்தவரை நீ இன்னும் சின்னப் பையன்தான். உன்னைப் போன்ற லட்சக்கணக்கான பையன்களைப் போல. எனக்கு நீ தேவையில்லை. உனக்கும் நான் தேவையில்லை. உன்னைப் பொறுத்தவரை என்னைப் போன்ற லட்சக் கணக்கான நரிகளில் நானும் ஒரு நரி. ஆனால், என்னை நீ பழக்கப்படுத்திக்கொண்டால் நாம் ஒருவருக்கொருவர் தேவைப்படுவோம். உலகத்தில் நான் உனக்கே என்று ஆகிவிடுவேன்… உலகத்தில் நீ எனக்கே என்று ஆகிவிடுவாய்…”
……
“பழக்கப்படுத்திக்கொண்ட பொருட்களைத்தான் தெரிந்து கொள்ள முடியும்... மனிதர்களுக்கு இப்போதெல்லாம் எதையும் தெரிந்துகொள்ள நேரம் இருப்பதில்லை.”
ஏன்… ஏன்… ஏன்?
கடல் பழங்குடிகளான கடலோடிகளிடத்தில் மட்டும் அல்ல; நிலப் பழங்குடிகளான விவசாயிகளிடத்திலும், வனப் பழங்குடிகளான வனவாசிகளிடத்திலும் நடக்கும் எந்த விஷயமும், நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்தாததற்கான காரணத்தை ஒரு வார்த்தைக்குள் உள்ளடக்கிவிடலாம்: அறியாமை.
எப்போதுமே, தெரியாத ஒரு விஷயத்தை யாராலும் நேசிக்க முடியாது. அக்கறை காட்ட முடியாது. ஆகையால், நம்முடைய கடல் பயணத்தை முழுவீச்சில் தொடர்வதற்கு முன், அடிப்படையான சில விஷயங்களை - கடல்புறத்தில் புழங்கும் சில சொற்களை - நாம் தெரிந்துகொள்வது அவசியம் என்று நினைக்கிறேன்.
கடலில் எத்தனை கடல்?
பண்டைய காலத்திலேயே கடலியலின் நுட்பத்தைப் புரிந்துகொண்டு, கப்பல் படை நடத்திய முன்னோடிச் சமூகங்களில் ஒன்று தமிழ்ச் சமூகம். கடலோடிச் சமூகத்தினுள் நுழைந்தால் ஆயிரமாயிரம் சொற்கள் புதிதுபுதிதாக நம்மைச் சூழ்கின்றன. ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னணியில் எத்தனை புதுப்புது விஷயங்கள்? எவ்வளவு பரந்து விரிந்த வரலாறு? இன்றைக்கெல்லாம் நிலத்தைச் சூழ்ந்திருக்கும் நீல நீர்ப்பரப்பு எதுவென்றாலும் கடல் என்கிற ஒரு சொல்லில் உள்ளடக்கிவிடுகிறோம். ஆனால், கடலுக்குள் சென்றால், உள்ளே எத்தனை எத்தனை கடல்கள்?
கடலுக்கு மட்டுமே தமிழில் 200-க்கும் மேற்பட்ட சொற்கள் இருப்பதாகச் சொல்கிறார் புத்தன்துறையைச் சேர்ந்த தாமஸ். அவற்றில் சில சொற்களை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்: அரலை, அரி, அலை, அழுவம், அளக்கர், அளம், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம், சலதரம், சலதி, சலநிதி, சலராசி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீந்து, நீரகம், நிரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை...
இவற்றையெல்லாம்விட முக்கியமானவை சமகாலத்தில் கடலைக் குறிப்பிட அறிவியல் சமூகமும் மீனவச் சமூகமும் குறிப்பிடும் சொற்கள்.
கடல் - பெருங்கடல்
உலக மாக்கடலை ஐந்து பெருங்கடல்களாக வகைப்படுத்துகிறது அறிவியல் சமூகம்.
1. பசிபிக் பெருங்கடல், 2. அட்லாண்டிக் பெருங்கடல், 3. இந்தியப் பெருங்கடல், 4. அண்டார்க்டிக் பெருங்கடல், 5. ஆர்க்டிக் பெருங்கடல். பொதுவாக, தனித்தனிப் பெயர் களில் இவை பார்க்கப்பட்டாலும், ஒன்றோடு ஒன்று தொடர்புடைய, பரிமாற்றமுடைய உலகப் பெருங்கடலின் ஐந்து பகுதிகளே இவை.
கடல்கள் என்பவை பெருங்கடல்களின் பகுதிகள். குட்டிக் கடல்கள். பெருங்கடல்களின் எண்ணிக்கை ஐந்து என்றால், கடல்களின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் மேல்.
கரைக்கடல், அண்மைக்கடல், ஆழ்கடல்
மீனவச் சமூகம் கடலை வகைப்படுத்தும் மூன்று சொற்கள் இவை. கரைக்கடல் என்பது கரையை ஒட்டியுள்ள கடல். அண்மைக்கடல் என்பது கரைக்கடலுக்கு அப்பால். ஆழ்கடல் என்பது அண்மைக்கடலுக்கும் அப்பால். உத்தேச
மாக, கரையிலிருந்து முதல் ஆறு நாட்டிக்கல் மைல் தொலைவைக் கரைக்கடல் என்றும், அடுத்த ஆறு நாட்டிக் கல் மைல் தொலைவை அண்மைக்கடல் என்றும், அதற்கு அப்பாற்பட்ட தொலைவை ஆழ்கடல் என்றும் சொல்லலாம்.
நாட்டிக்கல் மைல், பாகம்
கடலிலும் வானிலும் தொலைவை அளக்கப் பயன்படுத்தப் படும் அளவு நாட்டிக்கல் மைல். ஒரு நாட்டிக்கல் மைல் என்பது 1.852 கி.மீ. இதைத் தவிர, நம்முடைய மீனவர்கள் பாகம் என்ற சொல்லையும் பயன்படுத்துகிறார்கள். ஒரு பாகம் என்பது தோராயமாக ஆறு அடி நீளம்.
மீன்பிடிக் கலங்கள்
கடலில் மீனவர்கள் செல்லும் கலங்கள் எல்லாவற்றையுமே படகுகள் என்று குறிப்பிடுவது நம் இயல்பு. அப்படி அல்ல. எண்ணற்ற கலங்கள் அந்தந்தப் பகுதிக்கேற்ப, பயன்பாட்டில் உள்ளன. தமிழக மீனவர்கள் பயன்படுத்தும் கலங்களைப் பெருவாரியாக ஐந்து வகைகளில் பிரிக்கலாம்: 1. கட்டுமரங்கள், 2. படகுகள் அல்லது வள்ளங்கள் 3. இயந்திரப் படகுகள், 4. விசைப் படகுகள், 5. பெரும் மீன்பிடிப் படகுகள் (ட்ராலர்கள்).
வலைகள்
வலைகளில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட வலைகள் மீனவர்கள் மத்தியில் புழங்குகின்றன. விரல் நீளம் உள்ள நெத்திலி மீன்களுக்கு ஒரு வலை என்றால், அதைவிடக் கொஞ்சம் பெரிய சாளை மீன்களுக்கு ஒரு வலை; வஞ்சிரம் மீன்களுக்கு ஒரு வலை என்றால், இறால்களுக்கு ஒரு வலை என்று மீன்களுக்கு ஏற்ப, மீன்பிடி முறைகளுக்கு ஏற்ப, படகுகளுக்கு ஏற்ப ஏராளமான வலைகள் உள்ளன.
இந்தச் சொற்களிலெல்லாம் நிறைய சுவாரசியங்கள் உண்டு. உதாரணமாக, கரை வலை என்பது சுமார் இரண்டு கி.மீ. நீளமும் 200 மீட்டர் அகலமும் ஐந்து மீட்டர் உயரமும் கொண்டது. கரையிலிருந்து வெவ்வேறு படகுகளில் புறப்படும் மீனவர்கள், கடலில் சுற்றி நின்று கரை வலையை விரித்து, மீன்களை வலையை நோக்கி விரட்டிப் பிடிக்கப் பயன்படுத்துவது. கிட்டத்தட்ட இது ஒரு பொறி மாதிரி. நண்டு வலை என்பது ஐந்து அடி நீளமும் முப்பது அடி அகலமும் கொண்டது. பல துண்டு வலைகள் இணைக்கப்பட்ட வலை.
கொண்டு வலை என்பது சுமார் ஐந்து அடி முதல் பத்து அடி வரை நீளம் கொண்டது. மீனவச் சிறுவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான வலை. கள்ள வலை என்பது வேறு ஒருவர் வலையில் விழுந்த மீன்களை அள்ளித் தன் வலையில் போட்டுக்கொண்டு தன்னுடைய மீன்கள் என்று உரிமை கொண்டாடுபவர்களின் வலைகளைச் சொல்வது. வலைகளிலேயே இவ்வளவு சுவாரசியம் என்றால், மீன்கள் பற்றிய சுவாரசியங்களைக் கேட்கவா வேண்டும்?
(அலைகள் தழுவும்…)
தொடர்புக்கு: samas@thehindutmail.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT