Published : 20 Nov 2023 06:31 AM
Last Updated : 20 Nov 2023 06:31 AM
பாலஸ்தீனத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் செய்யும் உதவிகள், ஆதரவு நிலைபாடுகள் அனைத்தும் வரை யறைக்குட்பட்டவை. பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் தரப்படுபவை. இஸ்ரேல் விவகாரங்களில் தலையிடாத வரை மட்டுமேநடைமுறையில் இருக்கும். இஸ்ரேலுக்கு எதிராக ஒரே ஒரு ஃபத்தா வீரர் துப்பாக்கி ஏந்திவிட்டால் கூட அனைத்துக் கதவுகளும் இழுத்து மூடப்படும். அவ்வளவு கூட வேண்டாம். நாடாளுமன்றத்தில் யாராவது ஒருவர் வாய் தவறி எதையாவது சொல்லி வைத்தால் கூட முடிந்தது கதை. பிரிட்டிஷார் ஆட்சியின் பொது இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்த சமஸ்தானாதிபதிகள் எப்படிக் கையைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தார்களோ அப்படி வாழும் வாழ்க்கை அது.
மேற்குலகின் பிரச்சினை இதுதான்.ஹமாஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அமெரிக்கா அப்படி உடனடியாகக் கொண்டாடி களித்ததன் காரணமும் அதுதான். அவர்களுடைய கணக்கு எளிமையானது. ஹமாஸ் பதவி நீக்கப்படுகிறது. உடனடியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிதி திறந்து விடப்படுகிறது. மக்கள் நிம்மதியாகிவிடுவார்கள். அடிப்படை வாழ்வாதாரம் சிக்கல் இல்லாமல் போய்விடும் பட்சத்தில் ஹமாஸுக்காகக் கொதித்து எழ மாட்டார்கள். போட்ட ஓட்டு வீணானது குறித்தெல்லாம் பொருட்படுத்த மாட்டார்கள்.
மேற்குக் கரையில் இந்தக் கணக்குஓரளவு வெற்றி பெற்றது என்றே சொல்ல வேண்டும். தமக்கு ஓட்டளித்த மக்கள் நிச்சயமாக இந்த துரோகத்தைச் சகித்துக் கொள்ள மாட்டார்கள்; மம்மூத் அப்பாஸைக் கேள்வி கேட்பார்கள் என்று ஹமாஸ் நினைத்தது. ஆனால் அது நடக்கவில்லை. இது அவர்களது கோபத்தை மேலும் அதிகரித்தது.
அந்த வருடம் நவம்பரில் ஃபத்தா ஒரு மாபெரும் பேரணி - ஊர்வலம், பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. யாசிர் அர்ஃபாத்தை நினைவுகூர ஒரு திருவிழா என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனை அவர்கள்மேற்குக் கரையிலேயே செய்திருக்கலாம். வம்படியாக காஸாவில் நிகழ்ச்சி நடக்கும் என்று அறிவித்தார்கள்.
இரண்டு லட்சம் பேர் பங்கேற்ற, வரலாறு காணாத பெருங்கூட்டம் அது.அர்ஃபாத்தின் பெயரை முன்வைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால் முதலில் ஹமாஸ் அமைதி காத்தது. ஆனால் அது வெறும் பேரணியாக இல்லாமல் ஆர்ப்பாட்டமாக உருவெடுக்கவே, நிலைமை சிக்கலாகிப் போனது.
மேற்குக் கரையில் இருந்து வந்திருந்த மக்கள் ஒரு புறம். ஃபத்தா கட்சியினர், ஆயுதப் பிரிவினர் ஒரு புறம். பாலஸ்தீனத்தின் இதர போராளிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் இன்னொரு புறம். இவர்கள் போககாஸா நகரத்து மக்களும் கூட்டத்தோடு கலந்திருக்க, ஆர்ப்பாட்டத்தை அடக்கி, அமைதி ஊர்வலமாக்க என்ன செய்யலாம் என்று ஹமாஸ் யோசித்தது.
ஒரு வழியும் இல்லை என்பதால் அவர்கள் அறிந்த துப்பாக்கி மொழியில் பேசத் தொடங்கினார்கள்.
ஹமாஸ் வீரர்கள் சுடத் தொடங்கிவிட்டார்கள் என்பது தெரிந்ததுமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஃபத்தாவினர் பதில் தாக்குதலுக்குத் தயாரானார்கள். இனியும் பொதுவெளியில் இருப்பது ஆபத்து என்பது மக்களுக்குப் புரிந்ததால் அவர்கள் கிடைத்த சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து தப்பித்து ஓட முயற்சி செய்தார்கள்.
இரு தரப்பும் கண்மண் தெரியாமல் சுட்டுக்கொள்ளத் தொடங்கினார்கள். ஆனால் இறந்தது நடுவில் மாட்டிக் கொண்ட பொதுமக்களில் 6 பேர். தவிர நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம்அடைந்தார்கள். இது போக தப்பிஓடியவர்களில் மிதிபட்டு விழுந்தவர்களுக்குக் கணக்கே இல்லை. எங்கெங்கும் அலறல். எல்லா புறமும் ஓலம். யாசிர் அர்ஃபாத்தின் பெயரால் காஸாவில் நடைபெற்ற அந்த வன்முறைச் சம்பவத்தைக் கண்டு இஸ்ரேல் அரசு பெரு மகிழ்ச்சியடைந்தது. இனி ஹமாஸ் - ஃபத்தா அடித்துக் கொண்டு மொத்தமாகச் சாகும் வரை தனக்கு இரு தரப்பினராலும் சிக்கல் இராது என்று அவர்கள் நினைத்தார்கள்.
கடந்த 1948 முதல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் தொடர்ந்து யுத்தம் நடந்து வருகிறது. ஆனால் ஓஸ்லோ ஒப்பந்தத்துக்குப் பிறகு மேற்குக் கரை பாலஸ்தீனர்கள் ‘யுத்தம்’ என்று நேரடியாக ஒன்றைத் தொடங்கவேயில்லை என்பதைப் பார்க்க வேண்டும். அவர்கள் இண்டிஃபாதா நடத்துவார்கள், கலவரங்கள் நிகழும், உயிர்ப்பலி நேரும், எல்லாம் உண்டு. ஆனால் யுத்தமாக ஏதும் வளர்ச்சியடையாது. இஸ்ரேல் என்ற தேசத்தின் இருப்பை அவர்கள் அங்கீகரித்துவிட்டார்கள். முரண்டு பிடிப்பது ஹமாஸ் மட்டும்தான்.
1948 யுத்தத்தின் விளைவாக 7 லட்சம் பாலஸ்தீனர்கள் நாடு இழந்து எங்கெங்கோ சிதறிப் போனதை இன்று வரை ஹமாஸ் நினைவுகூர்கிறது. இஸ்ரேலை அங்கீகரித்தால் அது அந்த 7 லட்சம் பாலஸ்தீனர்களுக்குச் செய்யும் துரோகமாகாதா என்பது அவர்களது வாதம்.
(தொடரும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT