Published : 13 Jul 2014 03:40 PM
Last Updated : 13 Jul 2014 03:40 PM
நடப்பு ஆண்டுக்கான பொது பட்ஜெட் வாசிக்கப்பட்டாகிவிட்டது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. இதற்கு முன்னரும் ப.சி, ம.சி, ய.சி, வி.பி.சி, எனப் பல நிதியமைச்சர்களையும் பிரதமராகவும் ஆன நிதியமைச்சர்களையும் சந்தித்திருக்கிறோம். யஷ்வந்த் சின்ஹா, விசுவநாத பிரதாப் சிங் ஆகியோரது பெயர்களையும் இப்படி இனிஷியலாக அழைத்தது 'சிக்கன நடவடிக்கை'யின் ஒரு பகுதியேயாகும்.
எனக்கு ஆச்சரியம் காத்திருப்பது நாடாளுமன்றத்தில் திறக்கப்படும் சூட்கேஸில் அல்ல (பட்ஜெட் காகிதங்களை எடுத்துச் செல்லும் ஃப்ரீப்கேஸைக் குறிப்பிடுகிறேன்). பெட்டிக் கடைகளில்தான். வழக்கமாக சிகரெட்டும் டீயும் குடித்து முடித்துக் காசு கொடுத்துவிட்டு ஈவு போக மீதம் வரும் எனப் பழக்க தோஷத்தில் காத்திருக்கும்போது ''சரியாப் போச்சு. போயிட்டு வாங்க" என்று சொல்லும் கடைக்காரர்களில் இருந்து ஆச்சரியம் தொடங்குகிறது. அதைவிடவும் எனக்கு ஆச்சரியமளிப்பது, பட்ஜெட் - இடைக்கால பட்ஜெட் எனப் பேச்சுத் தொடங்கப்பட்டு, டெல்லியில் அவை கூடுவதற்கு ஆறேழு நாட்களுக்கு முன்னரே இவர்கள் அமல்படுத்துகிற சூட்சுமம்தான் என்ன? - எனது கடைக்காரர்கள் அமைச்சர்களுக்கு உறவினர்களும் அல்லர்.
டெல்லியில் இருக்கிறவர் நமக்கு நேரடி நிதியமைச்சர் என்றாலும், வீட்டில் காசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை வைத்திருகிற குடும்பத் தலைவர் / தலைவி மற்றும் வீதியில் கடை வைத்திருப்பவர் கள்தான் நமக்கு நேரடி நிதியமைச்சர்கள்.
வைகாசிக் கொடைக்கு சொந்த ஊருக்குப் போனபோதே இல்லத்தரசி அஞ்சு கிலோ சின்ன வெங்காயத்தை வாங்கி வந்து, சமையல் மேடைக்குக் கீழே பரத்திவைத்துவிட்டார். ஏறப் போகும் விலையை அனுசரித்து 'தாளிப்பு'க்கான வெங்காய எண்ணிக்கையை அவர் குறைத்துக்கொள்வார். வெங்காய விலை ஐம்பது அறுபது என்று எகிறினால், வெங்காயம் இல்லாத ரெசிபிகளைச் செய்துகாட்டுவார். குளிர்சாதனப் பெட்டியை சின்ன பீரோவாக மாற்றிக் காட்டிய செயல் திறன் இன்னும் வற்றிப் போய்விடவில்லை.
பட்டென்று விலை ஜெட்போல உயருவதால் பட்ஜெட் என்று யாரோ சொன்னதை வாழ்நாளெல்லாம் மறக்க முடியாதுதான் போலிருக்கிறது. பட்ஜெட் நேரங்களில் எல்லாம் காய்கறிகளின் விலைக் குறியீடாக வெங்காயம் பற்றியும் பேசப்படுவது நடந்துவிடுகிறது. யூனியன் ஈஸ் ஆனியன் என்பதனாலா, உரித்தால் ஒன்றுமில்லை - விண்டவர் கண்டிலர் - என்னும் பரம்பொருட் தத்துவத்தாலா, உரிக்கையில் உகுக்கும் கண்ணீராலா என்பதெல்லாம் தெரியவில்லை.
இந்த பட்ஜெட் அறிக்கை தெளிவாக இரண்டு விஷயங்களைப் புலப்படுத்திவிட்டது. முதலாவது, தேர்தல் கால வியூகத்தில் செலவழித்த ஊக்கத்தையும் ஈடுபாட்டையும் பாஜக இதில் காட்டவில்லை. (நேரப் பற்றாக்குறை!) இரண்டாவது, அரசாங்க இயந்திரத்தின் காலகால நுண்மைச் செயல்பாடு.
மதரசா வளர்ச்சிக்கு நூறு கோடி, மண் பரிசோதனைக்கு நூறு கோடி என யாதொன்றும் விடுபட்டுப் போகாதபடி உரை வாசிக்கப்பட்டது. பல விஷயங்களில் இத்தொகை காய சண்டிகைப் பசிக்குக் கறிவேப்பிலைக் கொத்து. நூறு கோடி என்பது எவ்வளவு சிறிய தொகை என்பதை மக்களுக்கு காங்கிரஸ்காரர்கள் புரியவைத்துப் புண்ணியம் தேடிக்கொண்டார்கள்.
ஒதுக்கீடுகளைக் கண்டு சிரிக்கும் திராணியை ஏழைகள் இழந்துவிட்டார்கள். ஏழையின் சிரிப்பில் இறைவன் தெரிய வேண்டாம். இறைவன் இப்போதுள்ளபடியே மர்மமாக இருந்தால் சரி. இந்த பட்ஜெட்டின் விளைவுகளுக்குக் காலம் பதில் சொல்லும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT