Last Updated : 31 Oct, 2023 06:16 AM

 

Published : 31 Oct 2023 06:16 AM
Last Updated : 31 Oct 2023 06:16 AM

சாதிவாரிக் கணக்கெடுப்பும் காலத்துக்கேற்ற சமூகநீதியும்

சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என அரசியல் மட்டத்தில் குரல்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில், இத்தகைய குரல்கள் தவிர்க்க முடியாதவையாக மாறியிருக்கின்றன. இந்தப் பின்னணியில் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் முக்கியம் என்பதைச் சமூக, அரசியல், பொருளாதாரப் பின்னணியில் புரிந்துகொள்வது அவசியம்.

பிரிட்டிஷார் கணக்கெடுப்பின் தாக்கம்: சமூகத்தின் ‘ஒருமித்த வளர்ச்சி’ என்னும் இலக்கைஅடைவதற்கான தடையற்ற சூழல் வரலாற்றில் ஒருபோதும் இருந்ததில்லை. தடைகளை நீக்குவதற்கான வழிமுறைகளைப் பற்றி சமூகவியல் அறிஞர்கள் பலரும் எழுதியிருக்கின்றனர். இன்றைக்கு அவர்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றி இயங்கினாலும் தடைகளை நீக்க முடியவில்லை. காரணம், தடைகள் வெகு நிதானத்தோடு உருவாக்கப்படுவனவாகவும் அதற்குச் சொல்லப்படும் நியாயங்கள் பெரும் பான்மைக் கருத்தியலாகவும் இருப்பதுதான்.

சமூக இயங்கியலில் தடையும் தடைக்கு எதிரானதிரட்சியும் அதன்வழியாக மாற்றங்கள் உருவாவதும் வழமையானதுதான் என்றாலும், இந்த ‘மாற்றங்கள்’ எளிதாக உருவாவதில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கல்வி, வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் வேண்டுமென்கிற குரல் அயோத்திதாசர் உள்ளிட்டவர்களால் அரசியல் மட்டங்களில் ஒலிக்கத் தொடங்கியிருந்தது.

அதற்கு முன்னால் அது வட்டார அளவில் குறுங்குழுவின் கருத்தியலாகவே இருந்துவந்தது. பெருமண்டல அரசியல் மட்டங்களில் அது ஒலிக்கத் தொடங்கிய பிறகுதான் பிரிட்டிஷ் அரசு அதில் உள்ள நியாயங்களைப் புரிந்துகொண்டது. அதன் விளைவாக நிர்வாக நடைமுறையில் மாறுதல் களைச் செய்ய நினைத்தது. அதற்காக அறிவியல் அடிப்படையிலான புள்ளிவிவரங்கள் தேவைப்பட்டதும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நோக்கி நகர்ந்தது.

ஒவ்வொரு நகர்விலும் தம்மைப் புதுப்பித்துக் கொண்டதோடு மட்டும் அல்லாமல் தகவமைத்துக் கொள்ளவும் செய்தது. உதாரணமாக, ஒவ்வொருமக்கள்தொகைக் கணக்கெடுப்புப் படிவத்திலும்,கேள்விகளின் எண்ணிக்கையை அதிகமாக்கிக்கொண்டே வந்த பிரிட்டிஷ் அரசு, தனிமனித வாழ்வின்உள்கூறுகளை அறிந்துகொள்ளுதல் வரை கேள்விகளை நுணுக்கமாக்கிக்கொண்டே வந்ததைச் சொல்ல முடியும். கேள்விகளின் நீக்கம், மாற்றம், சேர்ப்பு ஆகியவற்றுக்கான காரணங்களை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கைகளின் முன்னுரைகளில் காணலாம்.

புதுப்பிப்பு - தகவமைப்பு அணுகுமுறை: 1901ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அதிகாரிகளுள் ஒருவரான ரிஸ்லி, தான் எழுதிய ‘இந்திய இனவியல் குறித்த ஆய்வு’ (The study of ethnology in India) என்னும் கட்டுரையில் ‘பழங்குடியினருக்கான தேவைகள் குறித்த கேள்வி களையும் அதற்குப் பழங்குடியினரிடமிருந்து கிடைத்தபதில்களையும் விமர்சனரீதியாக அணுகியிருந்தால், அவர்களின் வாழ்வில் முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவந்திருக்க முடியும்’ என்பார்.

இந்தக் கூற்றை இன்றைய சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான தேவையோடும் பொருத்திப் பார்க்க வேண்டும். இப்படியான புரிதலோடு பிரிட்டிஷ் கணக்கெடுப்பு அதிகாரிகள் இருந்தமையால்தான், அவர்கள் ஒவ்வொருகணக்கெடுப்பின்போதும் புதுப்பிப்பையும் தகவமைப்பையும் செய்தார்கள். இந்த அணுகுமுறைதான் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் அரசு இந்தியர்களின் பண்பாட்டு உளவியலைப் புரிந்துகொள்வதற்குக் காரணமாக அமைந்தது.

அதன் அடிப்படையில், பிரிட்டிஷ் அரசு தனது நிர்வாக முறையில் கொண்டுவந்த மாற்றம், உள்நாட்டு அரசியலில் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டிருந்தவர்களுக்கு நியாயம் செய்வதாக இருந்தது. இது பிரிட்டிஷ் அரசின் காலத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மையப்படுத்தி நிகழ்ந்த மிக முக்கியமான வரலாற்று அதிசயம். அதன் தாக்கத்தை இன்று வரை சமூகம் அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

விடுதலைக்குப் பின் பிரதிநிதித்துவம்: நாடு விடுதலைபெறும்போது ‘பிரதிநிதித்துவம்’ என்பது முன்னெப்போதைக் காட்டிலும் வலுவான கருத்தியலாக மாறியிருந்தது. அதைத் தேசியக் கட்சிகளின் பிராந்தியத் தலைவர்களில் பலர் ஆதரித்துப் பரவலாக்கியிருந்தனர். சூழலையும் நியாயத்தையும் கருதி, அரசமைப்புச் சட்டத்தில் பிரதிநிதித்துவத்துக்கான தேவையையும் காரணத்தையும் அம்பேத்கர் தெளிவாகவரையறுத்தார். அது இன்றுவரை பிற்படுத்தப்பட்டோர் மேம்பாடு அடைவதற்கான வாய்ப்பாக இருந்து வருகிறது.

மக்கள்தொகையும் குறிப்பிட்ட வேலைக்கான தகுதி படைத்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்ட இன்றைய சூழலில், ஏற்கெனவே இருக்கும் அரசியல்பிரதிநிதித்துவமும் பணி வாய்ப்புக்கான இடஒதுக்கீடும்மாற்றியமைக்கப்பட வேண்டும். அதே வேளையில், யாருக்கு எவ்வளவு என்கிற அளவீடும் முக்கியம். அதற்குத்தான் சாதிவாரியான விவரங்கள் தேவைப்படுகின்றன.

பேராசிரியர் கெயில் ஓம்வெட், ‘பல நூறாண்டு வரலாற்றைக் கொண்ட சாதியப் பாகுபாட்டைப் போக்குவதற்குச் சாதிவாரிக் கணக்கெடுப்பு பயனுள்ள கருவிகளை வழங்கும்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது. ‘மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதி’ என்னும் தனது கட்டுரையில் சாதிவாரிக் கணக்கெடுப்பின் அவசியத்துக்கு அவர் சொன்ன காரணங்கள் இன்றளவும் அப்படியே இருக்கின்றன.

சமீபத்தில் பிஹாரில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புமக்கள்தொகையின் ஏற்ற இறக்கங்கள், அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தின் தற்போதைய போதாமை நிலை ஆகியவற்றை வெளிப்படுத்தியது. அதை வைத்துக்கொண்டு வாய்ப்புகளைப் பகிர்ந்தளிப்பதில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களைத் தேசிய அளவில் பலரும் பேசுபொருளாக்கி இருக்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் நவம்பர் 15 முதல் சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடங்கவிருப்பதாகத் தெரிகிறது. பின்தங்கிய சமூகங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கப்போவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. பிற மாநிலங்களிலும் இது எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணியிடங்களை நிரப்புதலும் சமூகநீதியும்: அரசின் அனைத்துத் துறைகளிலும் காலிப் பணியிடங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. உடனடியாக அவை நிரப்பப்படுவதில்லை. அதற்கு அரசுத் தரப்பிலிருந்து பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. 2023 பிப்ரவரியில் ஹரியாணா அரசு 2020க்குப் பிறகு உருவான காலிப் பணியிடங்களை முற்றிலுமாக அகற்றியது. இம்முடிவு அரசுப் பணிக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படியான உதாரணங்களைச் சொல்லலாம். ஆண்டுக்கணக்கில் பணியிடம் நிரப்பப்படாமல் இருப்பதால், மக்கள் தன்னிச்சையாகக் குறைந்த கூலிக்குத் தனியார் நிறுவனங்களை நாடவேண்டியிருக்கிறது. அங்கு இடஒதுக்கீடு இல்லை என்பதால், தகுதியோடு இருந்தாலும் படித்த முதல் தலைமுறையினரும் பட்டியல் சாதியினரும் எளியதாக நுழைய முடிவதில்லை.

பணி நிரந்தரத்துக்கு உத்தரவாதம் இல்லை என்பதால், பணிவாய்ப்பு பெற்றவர்களும்கூடச் சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இது சமூகத்தின் ஒருமித்த வளர்ச்சிக்கு ஒருபோதும் துணைபுரியாது. அதனால்தான் தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடும் பணிப்பாதுகாப்பும் வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துக்கொண்டிருக்கிறது.

மத்திய அரசுப் பணிகளிலும் லட்சக்கணக்கில் காலிப் பணியிடங்கள் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. இவற்றையெல்லாம் நிரப்புவது என்பது வெறுமனே பணிவாய்ப்பு வழங்குவது என்பதாக மட்டும் ஆகாது. அது சமூகநீதியோடு சம்பந்தப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவருக்குப் பணி வழங்குவதன் வழி, அவருக்கு மட்டுமல்ல அவர் சார்ந்த சமூகத்தின் முன்னேற்றத்திலும் அரசு பங்கெடுத்திருக்கிறது என்று பொருள். ஒரு சமூகத்தின் பொருளாதார மேம்பாடு பல வழிகளிலும் நிகழலாம் என்றாலும், அரசு தனது பங்களிப்பாகப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதன் வழியாகவும் ஒரு சமூகம் பொருளாதாரத் தன்னிறைவை அடைவதற்குத் துணைநிற்க முடியும்.

இன்றைக்கு மனிதவளம் கூடியிருக்கிறது. படித்தவர்கள் அதிகமாகி இருக்கிறார்கள். ஆனால் நிலையான வருமானமும் நிரந்தரப் பணியும் கொண்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இதைச் சரியாகப் புரிந்துகொள்ள ஒவ்வொரு தனிமனிதனின், குடும்பத்தின் தேவைகளையும் பெற்றுள்ள நிறைவுகளையும் தொகுத்துப் பகுக்க வேண்டும். அதன் அடிப்படையில் திட்டங்களை உருவாக்க வேண்டும். அதுதான் சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட ஒருமித்த வளர்ச்சியாகும்.

இதுவரை இருந்துவரும் சமூகநீதி குறித்த பார்வைகள், சட்டங்கள் நிலவுடைமை மனநிலையின் பிடியிலிருந்து மக்களை விடுவிப்பதற்குப் போதுமானவையாக இல்லை. காலத்துக்கேற்ற சமூகநீதி எது என்பதை மீள்பார்வை செய்யவும் அதன்வழி மக்கள் பாரபட்சமற்று மேம்பாடு அடையவும் சட்டதிட்டங்களை மறுவரையறை செய்ய வேண்டும். அதற்கான தரவுகளைச் சாதிவாரிக் கணக்கெடுப்பால் மட்டுமே தர முடியும்.

மக்கள்தொகையும் குறிப்பிட்ட வேலைக்கான தகுதி படைத்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்ட இன்றைய சூழலில், ஏற்கெனவே இருக்கும் அரசியல் பிரதிநிதித்துவமும் பணி வாய்ப்புக்கான இடஒதுக்கீடும் மாற்றியமைக்கப்பட வேண்டும்!

- தொடர்புக்கு: jeyaseelanphd@yahoo.in

To Read in English: Caste census and social justice in tune with times

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x