Published : 30 Jan 2018 11:12 AM
Last Updated : 30 Jan 2018 11:12 AM
கா
ந்தி, அம்பேத்கர் இருவரும் சாதியமைப்பை வெவ்வேறு வகைகளில் அணுகியவர்கள். சில இடங்களில் நெருக்க மாகவும் - விலகியும் நின்று எதிரொலித்து இருக்கிறார்கள். ஒருவகையில் இச்சமூகத்தின் பொதுப் பிரச்சினையான சாதி - தீண்டாமை இருவராலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அடிப்படையில் நமக்கு மிக ஆதாரமான பகுதி இதுதான்.
1916-லேயே காந்தி தீண்டாமைப் பிரச்சினையை இந்திய அரசியலின் மைய விவாதத்துக்குக் கொண்டுவர முயன்றார். ‘‘தீண்டாமை பாவகரமான செயல். அதைப் பின்பற்றுகிற நீங்கள் எல்லாம் இந்து மதத்தின் ஜெனரல் டயர்கள்’’ என்றார். ‘சாதியமைப்பு இந்து மதத்தை அழிவிலிருந்து காப்பாற்றிவருகிறது’ என்பது அவரது தொடக்ககால நம்பிக்கைகளில் ஒன்றாக இருந்தாலும், தீண்டாமையைத் திட்டவட்டமாக எதிர்த்தார். அம்பேத்கருக்குப் பிந்தைய அரசியல், காந்தியை மேலும் மேலும் சாதிக்கு எதிராகத் திருப்பியது.
‘சாதி என்பது அடக்குமுறையின் மற்றொரு பெயர். அது ஒருவரைத் தனக்கு விதிக்கப்பட்ட வட்டத்தை விட்டு வெளியே வர அனுமதிப்பதில்லை’ என்று காந்தி எழுதியபோது, முன்னதாக சாதி மீது அவர் கொண்டிருந்த நேர்மறையான பார்வையெல்லாம் பெரிய அளவில் மாறிவிட்டிருப்பதை உணர முடிகிறது. “எல்லா சாதியினரும் சமமாக அமர்ந்து உண்ணுவது, சாதி மறுப்புத் திருமணத்தின் மீதான கட்டுப்பாடு மற்றும் குறுக்கீடு இந்து மதத்தின் ஒரு பகுதியாக இல்லை. ஆனால், இந்த இரண்டு தடைகளும் இந்து மதத்தின் வளர்ச்சியைப் பலவீனப்படுத்துகிறது” என்றார். இதன் தொடர்ச்சியாக, எல்லா சாதியினரும் சேர்ந்து உண்ணுதல் - சாதி மறுப்புத் திருமணம் என்கிற தீண்டாமை ஒழிப்பின் உச்சத்தை நோக்கி நகர்ந்தார்.
1933 - 1934 காலகட்டத்தில் அவர் மேற்கொண்ட சுற்றுப் பயணம் மிக முக்கியமானது. சொந்த சாதிக்குள் திருமணம் செய்துகொள்ளும் அகமண முறையைக் கடுமையாக விமர்சித்தார். தீண்டாமைக்கு எதிராக அவர் எடுத்துவைத்த அடிகள் பலத்த எதிர்ப்பை உருவாக்கின. இந்து மகா சபையினர் அவர் சென்ற இடங்களில் எல்லாம் கறுப்புக் கொடி காட்டினார்கள். புணேவில் சிலர் அவர் மீது மலத்தை வீசினார்கள்.
1937-ல் சேவாகிராம் இல்லத்தில் தலித்துகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்கிற முடிவு சனாதனிகள் விரும்பாதது. அன்றைக்கு காந்தியைச் சந்தித்த வல்லபபாய் படேல் ‘‘தீண்டாமையிலிருந்து விடுபட்டு, படிப்படியாக சாதி மறுப்புத் திருமணத்தை நோக்கி நகருகிறீர்கள்போலத் தெரிகிறதே’’ எனச் சிரித்துக்கொண்டே கேட்டார். அதற்கு காந்தி, ‘‘பாமர மக்களுக்கு வேண்டுமானால் தீண்டாமையிலிருந்து விடுபடுவது போதுமானதாக இருக்கலாம். ஆனால், உங்களைப் போன்றோருக்கு அவர்களைத் தொடுவது மட்டுமே போதுமானதல்ல. அதையும் தாண்டி அவர்களோடு சேர்ந்து உண்ணுவதிலும், திருமணம் வைத்துக்கொள்வதிலும் வெகுஜன இந்துக்களுக்கு இருக்கிற தடைகளைத் தகர்ப்பதாக இருக்க வேண்டும்’’ எனப் பதிலளித்தார்.
பாப்லோ நெரூடா சொல்வதைப் போல வாழ்க்கையை வாழ்க்கையிலிருந்தே திட்டமிடுவதும் மாற்றத்துக்கான குறியீடுதான். ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். 1940 மார்ச் இறுதியில் ராதாமதாப் என்கிற பிராமண இளைஞர், இந்து மதச் சடங்குகளின்படி ஆயிரம் பேர் சூழ ஒரு தலித் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். “நான் அதில் உறுதியாக இருந்தேன். எங்கள் சாதியினர் கடுமையாகத் திட்டினார்கள். ஆச்சாரம் கெட்டு, தெய்வ குத்தம் ஆகிவிடும் என எச்சரித்தார்கள். பிராமணர் உள்ளிட்ட உயர் சாதி மக்களோடு தலித்துகள் சமமாக அமர்ந்து மணமகளின் தந்தையிடம் தாம்பூலம் வாங்கியதை நினைத்துப் பார்க்கிறேன்’’ என ராதாமதாப் தனது அனுபவத்தை காந்தியிடம் பகிர்ந்துகொண்டார்.
ராதாமதாப்பின் திருமணம் அவருக்கு இன்னும் உத்வேகத்தைக் கொடுத்தது. அந்தச் சமயத்தில் இரண்டு சாதி மறுப்புத் திருமணங்களைப் பகிரங்கமாக ஆதரித்தார். டாக்டர் சௌந்தரம் (பிராமணர்) - ஜி.ராமச்சந்திரனுக்கும் (சூத்திரர்), கோவா காங்கிரஸ் தலைவர் டாக்டர். ஏ.ஜி. டெண்டுல்கர் (உயர் சாதி இந்து) - இந்துமதி (தலித் ) தம்பதிக்கும் நடந்த காதல் திருமணம் அது. “சாதி மறுப்புத் திருமணங்களுக்கு மட்டுமே என்னுடைய ஆசிர்வாதம் உண்டு” என்றார். அவரது மரணத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் (1946) சாதி மறுப்புத் திருமணங்களில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார். இனி, சேவாகிராம் ஆசிரமத்தில் நடைபெறும் எந்தத் திருமணமாக இருந்தாலும் அதில் ஆணோ அல்லது பெண்ணோ நிச்சயம் ஒரு தலித்தாக இருக்க வேண்டும் எனத் தீர்க்கமாக அறிவித்தார். அதிலும் ஆண் தலித்தாக இருப்பது கூடுதல் முன்னுரிமைக்குரியது என்றார்.
சாதிக்கு எதிரான செயல்திட்டங்களிலேயே மிக முக்கியமானது இதுதான். சாதி மறுப்புத் திருமணம். எல்லா விமர்சனத்தையும் தாண்டி, தீண்டாமைக்கு எதிராக ஆத்மசுத்தியுடன் போராடியவர் காந்தி. புரட்சிகர சிந்தனை கொண்டவர்கள் காந்தியைப் புறக்கணிப்பதற்கும், வட்டார - தேசியவாதிகள் அம்பேத்கரை வெறுப்பதற்கும் இடமளிக்கிற காலச்சூழலை மாற்றியாக வேண்டும். நாம் நேசிக்கிற மாபெரும் தலைவர்களை நன்றியுடன் நினைவுகூர்கின்ற செயல் அது. எழுபதாண்டு கால நினைவில் அவரவருக்கு ஏற்ற காந்திகளில் காதலர்களின் சாதி மறுப்புக்கும் ஒரு காந்தி மிச்சம் இருக்கட்டும்.
- அன்புசெல்வம், ‘சாதி இன்று: அறிக்கை’யின்
நூலாசிரியர்களில் ஒருவர்.
தொடர்புக்கு : anbuselvam6@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT