Last Updated : 14 Jan, 2018 08:42 AM

 

Published : 14 Jan 2018 08:42 AM
Last Updated : 14 Jan 2018 08:42 AM

வரவேற்பறைப் பண்பாடாக மாறுகிறதா பொங்கல்?

ருவச் சுழற்சியோடு மிகவும் நெருக்கமானது பொங்கல். ஆனாலும், அறுவடைப் பருவ ஆதாய மகிழ்ச்சியாக இதைச் சுருக்கிவிடக் கூடாது. பூமியைப் புரிந்துகொண்ட வகையை நம் பண்பாடு பொங்கல் என்ற விரிந்த வாக்கியமாக எழுதியுள்ளது. பாத்திரங்களின் பெயர் மாறினாலும் கதை பழையதுதான் என்பதைப் போல், அந்த வாக்கியத்தின் இலக்கணம் மாறாது. உங்கள் வீட்டுப் பொங்கல் வெண்கலத்திலா மண் கலத்திலா விறகு அடுப்பா வேறு அடுப்பா என்று மேற்பரப்பு விசாரணை மட்டுமே சாத்தியம். இந்த மேற்பரப்பு வேறுபாடுகளும் சுவாரசியமானவைதான்.

‘நெடுநல்வாடை’யில் ஒரு சங்க இலக்கியப் பாடல். அதில் வரும் ஒரு தொடர் ‘பொங்கல் வெண்மழை’. அதற்குப் பொருள் ‘வெண்மேகங்கள்’. மழைக் காலக் கருமேகங்கள் பயணித்துக் கழிந்த பாதையிலேயே வான் நிறைத்துப் பொங்கும் நுரையாக, இவற்றை மார்கழியில் பார்க்கலாம்.

நேர் வடக்கிலிருந்து வீசும் பனிக் காற்றைக் காவிரிப் படுகையில் நெடுவாடை என்பார்கள். அதற்கு முன்பு வட கிழக்கிலிருந்து வீசும் மழைக் காலக் காற்று குணவடை. குணவடை நின்று, நெடுவாடை வீசினால் மழையும் நின்றுவிடும். சங்கப் பாடலின் தலைவனுக்கும் தலைவிக்கும் இது எப்படி நல்வாடை ஆயிற்று என்ற இலக்கிய மரபு இப்போது புரிந்திருக்கும். நெடுவாடையிலிருந்து நகர்ந்துவிட்ட பொங்கல், இன்றைக்கு இன அடையாளத்தில் மையம் கொண்டுள்ளது.

பொங்கலும் புது அரிசியும்

மழை இருட்டிலிருந்து வெளிவாங்கிய வானத்துக்குள் வந்ததுபோல், பூமி புது வெளிச்சத்தை அள்ளிப் பூசிக்கொள்ளும். பூக்கக் காத்திருந்த பீர்க்கம்பூ, பச்சையில் பதித்த பளீர் மஞ்சளாகப் பூக்கும். கடைத்தெரு நிறக்க செங்கரும்பும் வாழையும் இஞ்சியும் மஞ்சளுமாக வந்து குவியும். இவற்றில் விலை பார்க்காமல் விவசாயிகள் வாங்கிச் செல்வது மாட்டுக்குக் கட்டும் நெட்டி மாலை.

சப்பாத்திக்கள்ளிப் பழச் சிவப்பு, வெளிர் மஞ்சள், மரகதப் பச்சை, அடர் நீலம் என்று நெட்டியைக் காசு காசாகச் சீவி வாழை நாரில் மாலை கட்டியிருக்கும். தும்பும் தலைக் கயிறும் கொம்புக் கயிறும் கழுத்துக் கயிறும் வண்ண நூல்கயிறுகளாக அன்றைக்கு வந்தன. மாட்டின் மேல் பிறந்த பாசத்தில் அதற்கு மணியும் வாரில் கோத்த சலங்கையும் வாங்கும் விவசாயிகள், நேர்த்தியான சாட்டைக் கம்பையும் சேர்த்தே வாங்குவார்கள். மாடுகளின் கொம்புக்குப் பிரியமாகப் பூசிய வண்ணங்கள் பின்னாளில் அரசியல் விஸ்தாரத்தில் கட்சிச் சாயங்களாக மாறின.

கிடைக்கும் இடங்களுக்கே வண்டிகட்டிச் சென்று மண்பானை வாங்கிய காலமும் இருந்தது. புதுப் பானையில் பொங்குவது அன்றைய வழக்கம். பிறகு, அடுத்தடுத்த பொங்கலுக்கும் ஆகுமென்று பித்தளை அல்லது வெண்கலப் பானைகள் வந்தன. பிறந்த வீட்டுத் தலைவரிசையில் (சீர்வரிசை) வெண்கலப் பானைகளும் சேர்த்தியாக இருந்தன. பொங்கலுக்குப் புது நெல்லின் வரவு, புது அரிசி என்பது எல்லாக் காலத்துக்கும் பொருந்தாது. எட்டாம் நம்பர் என்ற வெள்ளைச் சம்பா இருந்த காலத்தில் மட்டும் மார்கழியில் அறுவடை நடந்து புது அரிசி கிடைத்துக்கொண்டிருந்தது. காவிரிப் படுகையில் பொங்கல் கழித்துத்தான் சம்பா அறுவடை நடக்கும்.

சந்திரனுக்கும் வழிபாடு

வீட்டுக்கு முன்பு கோடு வெட்டியோ மேடை கட்டி அதில் அடுப்பை வைத்தோ அவரவர் வழக்கப்படி பொங்கலிடுவார்கள். மூன்று, நான்கு செங்கற்களை மண் சாந்தைக்கொண்டு கட்டாயமாகக் கட்டி, மெழுகிக் கோலமிட்டும் அடுப்புக் கட்டலாம். குயவர்கள் வீட்டில் மூன்று பழங்காலப் பானைகளைக் கவிழ்த்தும் அடுப்பாக்கிக்கொள்வார்கள்.

அக்கிரஹாரங்களில் எப்போதும் புழங்கும் அடுக்களை அடுப்பில்தான் பொங்கல். வீட்டு முற்றத்தில் தேர்க்கோலம் போட்டிருக்கும். செங்காவி கொண்டு அதற்கு ஓரம் தீட்டி, தேருக்குள் சூரியனும் சந்திரனும் சித்திரக் கோலமாக வரையப்பட்டிருக்கும். வெற்றிலை - பாக்கு, பழம், கரும்போடு சூரியனுக்குப் படையலிடுவார்கள். பச்சரிசியும் வெல்லமும் ஒரு கிண்ணத்தில் இருக்கும். ‘பசுங்காய் நெல், பச்சரிசி, கருப்புக்கட்டி, கரும்பு, அவல் எல்லாம் மறையவர் மந்திரம் சொல்லத் தருவேன் என்று மாறனுக்கு நேர்ந்துகொள்வதாக’ ஆண்டாளின் நாச்சியார் திருமொழி சொல்கிறது. தைத் திங்களில் தொடங்கிய ஆராதனை, பங்குனி வரை நீண்டு, அதற்கு அடுத்துவரும் வசந்தத்தை அழைப்பதாகச் செல்கிறது பாடல். பசுங்காய் நெல்லைப் பாளை என்போம். இப்போதும் திருவிழாக்களில் சாமிக்கு முன்பாகத் தென்னம்பாளையை வகுந்து வைப்பது வழக்கமாக இருக்கிறது.

எரிச்ச குழம்பு

கோலமிழைத்த முற்றத்தில் பரப்பிய பச்சரிசித் தவிட்டின் மேல் அடுப்புகளை மேற்குப் பார்த்து வைத்து, பொங்கலிடும் பெண்கள் கிழக்குமுகமாக நின்றுகொள்வார்கள். பானைகளில் அரிசி களைந்த நீரும் பாலும் ஊற்றி அது பொங்கி வழியும்போது, எல்லாரும் சேர்ந்து ‘பொங்கலோ பொங்கல்’ என்று ஓசை நயத்தோடு உரத்துக் கூறுவார்கள். தட்டு, தாம்பாளங்களைத் தட்டும் ஓசையும் சேர்ந்து மகிழ்ச்சி கரைகொள்ளா ஆரவாரமாகத் திரண்டுகொள்ளும். களைந்து வைத்த அரிசியைப் பொங்கிவரும் நுரை அடங்கப் பானையில் இடுவார்கள்.

சூரியனுக்கான படையல் பொங்கல் மட்டுமல்ல. சேம்பை, சேனை, பிடிகருணை, பெருவள்ளி, சர்க்கரைவள்ளி, மொச்சை, காராமணி, பறங்கி, அவரை, வாழை என்று அந்தப் பருவத்தின் விளைச்சலைப் பயத்தம்பருப்போடும் பொரிமாவுப் பொடியோடும் சேர்த்துச் சமைக்கும் எரிச்ச குழம்பும் பொங்கலன்று ஒரு விசேஷமே. இதைத் தாளிப்பதில்லை. செட்டிநாட்டில் இது பலகாய்க் குழம்பு. மற்ற இடங்களில் கூட்டுக்கறி. முற்றத்தில் பொங்கல் கூறி அடுப்புக்கு முன் மூன்று, ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் படையலிடுவதும் ஒரு வழக்கம். படையலை முறத்தில் வைத்து தம்பதியராக அதைக் கொண்டுபோய் வழக்கமாக வீட்டில் கும்பிடும் சாமிக்கு முன் வைப்பார்கள்.

பட்டி பெருக வேண்டும்

பொங்கலிடும்போது, முறத்தில் நெல்லையோ பச்சரிசியையோ பரப்பி, அதன்மேல் இரண்டு கைவிளக்குகளை நெய் விளக்காக ஏற்றி வைப்பது சில சமூகத்தினர் வழக்கம். நிறை விளக்காகவும் வைத்துக்கொள்வதுண்டு. ஒன்று ஆண் விளக்கு, மற்றது பெண். நன்னிலம்-கண்டிரமாணிக்கத்தில் மூன்று விளக்குகள் வைப்பதாகச் சொன்னார்கள். திரியை உடைத்து நூலாக்கி மையத்தில் முடிந்து ஒரு பாதியை ஜடையாகப் பின்னி மறு பாதியைத் திரித்துக் கொள்வார்கள்.

விளக்குக்குக் கண்போல இரு பக்கமும் மையால் பொட்டு வைத்திருக்கும். முறத்துக்கு அருகே ஒரு அம்மிக் குழவி. மாட்டுக்குப் பொங்கல் கூறி, கோயிலுக்குச் சென்று தேங்காய் உடைத்துத் திரும்பிய பின் முறத்தையும் குழவியையும் நீர் நிறைந்த சொம்பு ஒன்றையும் வானத்துக்குக் காட்டுவதுபோல் தூக்கி இறக்கியபடியே ‘பட்டி பெருக வேண்டும், பால் பானை பொங்க வேண்டும்’ என்று பாடுவார்கள். ‘தெரிந்தவரை சொல்கிறேன்’ என்று சொல்லி, குடவாசல் - கருப்பூரில் இந்த வரியை மட்டும் எனக்கு ஒரு பெண்மணி கூறினார்.

ஒன்றுகலந்த பண்டிகை

திருவாரூருக்கு அருகே கிழக்கில் கன்னடியர்களும் மேற்கே செளராஷ்டிரர்களும் பல நூறு குடும்பங்கள் உண்டு. பெரும்பான்மையினரின் பண்பாட்டோடு ஒரு இசைவாக மட்டுமே அல்லாமல், தங்கள் வழக்கமாகவும் இவர்கள் பொங்கல் கொண்டாடுவார்கள். குடும்ப வழக்கப்படி செளராஷ்டிரர்கள் இரண்டு, மூன்று, ஐந்து பானைகளில் பொங்கல் வைப்பதுண்டு. இரண்டுக்கு மேலிருந்தால் ஒன்று பருப்புப் பொங்கலாக இருக்கும். முற்றத்தில் சூரியனுக்குக் கற்பூரம் காட்டி அதைக் கொண்டு பொங்கல் அடுப்பைப் பற்றவைப்பார்கள்.

வரவேற்பறைப் பண்பாடு

மூன்று நாள் பண்டிகை, நகரங்களில் முதல் நாளான பெரும் பொங்கலாக மட்டும் நிலைத்துள்ளது. இன்றைய மாற்றங்கள் அழித்தும் அழியாத பொங்கலின் தொன்மச் சாயலின் காரணமாகவே மேலை நாட்டாருக்கும் இதில் ஈர்ப்பு அதிகமாக இருக்கிறது. பல பண்பாட்டுக் கூறுகள் வரவேற்பு அறையை அலங்கரிக்கும் தொன்மக் கலைகளை ஒத்த நிலைக்கு வந்துவிட்டன. தூரத்துப் பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் பொங்கலைக் காணும்போது, அவர்களுக்கு என்ன கிளர்ச்சிவருமோ, இனி அதுவேதான் நமது மகிழ்ச்சியின் தன்மையாகிவிடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது!

- தங்க.ஜெயராமன், பேராசிரியர்,

தொடர்புக்கு: profjayaraman@gmail.com

‘தி இந்து’ பொங்கல் மலர்-2018-ல் இடம்பெற்றிருக்கும் கட்டுரையின் சுருக்கமான வடிவம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x