Published : 16 Jan 2018 04:14 PM
Last Updated : 16 Jan 2018 04:14 PM
தொன்னூறுகளின் பிற்பாதியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். அதற்கு முன்பிருந்தே எங்கள் வீட்டின் தினசரி காலை விருந்தாளியாக ‘தினமணி’ வந்து சேரும். ‘தினமணி’ ஆசிரியராக இராம.திரு. சம்பந்தம் பொறுப்பேற்றவுடன் அந்த செய்தித்தாள் வாசகர்களுடன் இன்னும் நெருக்கமடைந்தது. அதற்கு முக்கியக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் ஞாநி.
‘தினமணி’ இணைப்பிதழ்களுக்குப் பொறுப்பாக தன் நண்பர் ஞாநியை சம்பந்தம் அழைத்துவந்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெகுஜன இதழ் பணிக்கு ஞாநி திரும்பியிருந்தார். தான் பொறுப்பு வகித்த தினமணி கதிரில் பல்வேறு மாற்றங்களை ஞாநி மேற்கொண்டார். அரசியல், சமூகப் பிரச்சினைகள் பற்றிய மாற்றுப் பார்வை – மாற்றுச் சிந்தனை, நாடறிந்த சிந்தனையாளர்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியது அதில் முக்கியமானது.
அத்துடன் ‘மனிதன் பதில்கள்‘ பகுதியில் பல முக்கியமான விஷயங்களை மிகச் சுருக்கமாக கவனப்படுத்திக்கொண்டிருந்தார். அதுவரை மற்ற இதழ்களில் வெளியான ‘கேள்வி-பதில்’ பகுதிகள் பொழுதுபோக்கு, அறிவியல் போன்ற அம்சங்களை மட்டுமே நோக்கமாகக்கொண்டிருந்தன.
பிரபல நிறுவனங்கள் தீபாவளி மலர் கொண்டுவரும் சம்பிரதாயம் தமிழ் இதழியலில் நீண்டகாலமாக இருந்துவருகிறது. இந்தப் பின்னணியில் ஞாநி ஆசிரியர் பொறுப்பில் ‘தினமணி’ முதல் முறையாக ‘பொங்கல் மலரை’ வெளியிட்டது. 20 ஆண்டுகளுக்கு முன் வெளியான அந்த மலரில் பேசப்பட்டிருந்த கலை, இலக்கிய, சமூகம் சார்ந்த பல்வேறு கட்டுரைகள் தமிழ் இதழியல் தரத்தை பல மடங்கு உயர்த்தின. விளம்பர வருவாய்க்கான மலர்களுக்கு பதிலாக ‘மகளிர் மலர்’, ‘மருத்துவ மலர்’ என மக்கள் பயன்பாட்டுக்கான, சிந்தனைப் போக்கை மாற்றுவதற்கான களமாக சிறப்பு மலர்களையும் இணைப்பிதழ்களையும் ஞாநி மாற்றினார்.
இன்றைக்கு கவனம் பெற்றுள்ள மாற்றுச் சிந்தனை சார்ந்த பார்வை, சமூக அக்கறை சார்ந்த இதழியல், சிறப்பு மலர்கள் போன்றவை வெகுஜன இதழியலில் பரவலானதற்கு அவர் ஓட்டிய முன்னத்தி ஏரும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது. நாம் முக்கியமாகக் கருதும் விஷயங்கள், பார்வையை வெகுஜன ஊடகத்தில் முன்வைக்கவும் எழுதவும் முடியும் என்பதற்கு அவர் எடுத்துக்காட்டாக இருந்தார். என்னைப் போன்று சிலருக்கு அச்சு ஊடகத் துறையில் ஈடுபட வேண்டும் என்கிற ஆர்வம் தீவிரமடைவதற்கு ஞாநி முக்கியக் காரணங்களில் ஒருவராகத் திகழ்ந்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT