Published : 30 Oct 2023 05:49 AM
Last Updated : 30 Oct 2023 05:49 AM
பொதுவாகப் பாலஸ்தீனர்கள் ஏழைகள். இப்படிச் சொல்வது ஒருவேளை சரியாகப் புரியாமல் போகலாம். ஆனால் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
மத்தியக் கிழக்கு நாடுகளில் வசிக்கும் மக்கள் அனைவரும், வசதியான வாழ்க்கையை வாழ்வதாக ஒரு பொதுபிம்பம் உள்ளது. போரால் சீரழிந்தாலும் இராக், சிரியா போன்ற தேசங்களில் எண்ணெய் வளம் உண்டு. லெபனானில் பெரிதாக எண்ணெய் இல்லாவிட்டாலும் இயற்கை எரிவாயு வளம்உண்டு. இயற்கையாக அப்படி எதுவுமில்லாத ஒரே நிலப்பரப்பு, பாலஸ்தீனம். அதிலும் முக்கால்வாசி நிலப்பரப்பை இஸ்ரேல் அபகரித்துக் கொண்டு போய்விட்ட பின்பு இன்றுவரை அவர்கள் போராடிக் கொண்டிருப்பதெல்லாம் இருப்பிடத்துக்காக மட்டும்தான். நீடித்த, தொடர்ச்சியான நூற்றாண்டு கால யுத்தத்தினால் எந்தத் தொழிலும் அங்கே இல்லாமல் போய்விட்டது. பாலை நிலம் என்பதால் விவசாயத்துக்கும் வாய்ப்பில்லை. இதற்குமேல் விவரிக்க வேண்டாம் அல்லவா?
ஆனால், இன்னொன்றையும் இதில் சேர்த்துச் சொல்ல வேண்டும். பாலஸ்தீன மக்கள் ஏழைகள் என்பதில் ஐயமில்லை. அவர்களுள் காஸா பகுதியில் வசிப்பவர்கள் இன்னமும் ஏழைகள். புவியியல் ரீதியில் மேற்குக் கரையும் காஸாவும் தனித்தனித் துண்டுகளாக இருப்பது, இரண்டுக்கும் நடுவே இஸ்ரேல் இருப்பது, பாலஸ்தீனத்து அரசியல் மொத்தமும் மேற்குக் கரையில் இருந்து நடப்பது, பாலஸ்தீனம் என்றாலே மேற்குக் கரைதான் என்று பொதுவில் வேரூன்றிவிட்ட கருத்தாக்கம் எனப் பல காரணிகளின் பின்புலத்தில் வைத்து இதனைப் பார்க்க வேண்டும்.
இஸ்லாமிய காங்கிரஸாக ஹமாஸ்செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் காஸா மக்களின் பசி போக்குவதே அவர்களுக்கு முதல் பணியாக இருந்தது. அண்டை நாட்டுப் பணக்கார முஸ்லிம்களிடம் கையேந்தி வசூல்செய்து காஸாவில் வசிக்கும் ஏழை எளியோருக்கு உணவிடுவார்கள். பள்ளிகள் நடத்துவதற்கு, இடிந்த மசூதிகளைச் செப்பனிடுவதற்கு, போரினால் நாசமான சாலைகளைத் திரும்பப் போடுவதற்கு என அவர்களுக்கு எப்போதும் நிறையப் பணத்தேவை இருந்தது.
அம்மாதிரியான சூழலில்தான் இஸ்லாமிய காங்கிரஸின் மதச் செயல்பாடு களுக்கு இஸ்ரேல் உதவும் என்று அறிவித்தார்கள். காஸா பகுதி கவர்னர் மூலமாக அனுப்பப்பட்ட நிதியை அவர்கள் மிகத் திறமையாகக் கையாண்டார்கள். ஹமாஸின் பிற்கால நிர்வாக கட்டமைப்புக்கெல்லாம் முன்னோடி என்று சொல்லத்தக்க வகையில் அன்றைக்கு அவர்கள் நடத்திய ஒரு ரேஷன் சிஸ்டம், இன்று வரை காஸா மக்களால் போற்றப்படுகிற ஒன்று.
சமையல் பொருட்கள்தாம். ஆனால்,விலை கிடையாது. அளந்து அளந்துதான் கொடுப்பார்கள். ஆனால்,இன்று பொருள் கிடைக்கவில்லை; எனவே பசிஎன்று யாரும் சொல்லிவிட முடியாது. பதுக்கல், கள்ள மார்க்கெட்,புழுத்துப் போன பொருள் என்ற பேச்சுக்கெல்லாம் அறவே இடமில்லை. கவர்னர் நிதி வரும் போதெல்லாம் அதை அப்படியே மளிகை பொருள் சப்ளையர்களுக்கு அனுப்பச் சொல்லி விடுவார்கள். காஸாவுக்குப் பொருட்கள்தாம் வந்து சேரும்.வந்து இறங்கும் கணத்திலேயே மக்களுக்கு அது தெரிவிக்கப்பட்டு, அடுத்த சில மணி நேரங்களில் அத்தனையும் சுத்தமாக விநியோகிக்கப்பட்டுவிடும். இந்தப் பணி தடையற்று நடைபெற தனியொரு பிரிவே வைத்திருந்தார்கள்.
காஸாவில் வசித்த மக்களால் உண்மையில் இதனை நம்பவே முடியவில்லை. அவர்களுடைய வியப்பு என்னவென்றால், பிஎல்ஓ.வும்தான் மக்களுக்காக கஷ்டப்படுகிறது. யாசிர்அர்ஃபாத் தொண்டை தண்ணீர் வற்றவற்றக் கத்துகிறார். உலகத் தலைவர்களுக்கெல்லாம் அறைகூவல் விடுக்கிறார். வண்டி வண்டியாக அனுதாபம்வந்து இறங்குகிறதே தவிர, மக்களின் துயர் துடைக்க யாரும் உதவி செய்வதில்லை. அவ்வப்போது அண்டை நாடுகள் செய்கிற உதவியெல்லாம் அமைச்சர்களின் ஊழல் குளங்களில் மூழ்கிப்போய் விடுகின்றன. ஒப்பீட்டளவில் மேற்குக் கரை மக்களினும் நாம் பசியற்று இருக்கிறோம் என்றால் அதற்கு இஸ்லாமிய காங்கிரஸ்தான் காரணம் என்று அவர்கள் கையெடுத்து வணங்கினார்கள்.
ஹமாஸுக்கு அடிப்படையில் இஸ்ரேலின் உதவியைப் பெறுவதில் விருப்பம் இருக்கவில்லை. இதனாலெல்லாம் இஸ்ரேலுக்கு எதிரான தங்கள் மனநிலையில் மாற்றம் வர வாய்ப்பில்லை என்பதில் தெளிவாக இருந்தார்கள். தம்மிடமிருந்துதானே அபகரித்துக் கொண்டார்கள்? அதில் கொஞ்சம் திரும்பி வருகிறதென்றால் ஏன் மறுக்க வேண்டும் என்ற எண்ணம் காரணம்.
இஸ்ரேலிடம் இருந்துதான் கிடைத்தது என்றாலும், கிடைத்த நிதியைப் பொருட்களாக மாற்றி மக்களுக்கே வழங்கியதால் காஸா மக்களின் முழுநம்பிக்கை ஹமாஸுக்குக் கிடைத்தது. வருகிற வெளிநாட்டு உதவிகளில் கணிசமான பகுதியைப் பதுக்கி வைத்து ஊழல் செய்ததால் மேற்குக் கரை அரசியல்வாதிகளின் பெயர் கெட்டுப் போனது. யாசிர் அர்ஃபாத்தின் அமைதி முயற்சிகள் எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் அவரது இயக்கத்தின்பால் நம்பிக்கை குறையத் தொடங்க அதுவே காரணமாயிற்று.
(தொடரும்)
முந்தைய அத்தியாயம்: கணை ஏவு காலம் 18 | ஹமாஸ் மீது நம்பிக்கை வைத்த இஸ்ரேல் @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT