Published : 13 Oct 2023 06:13 AM
Last Updated : 13 Oct 2023 06:13 AM
அடுப்பில் கொதிக்கும் பால்போல காவிரிப் பிரச்சினை கர்நாடகத்தில் எப்போதும் கொந்தளிக்கிறது. கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பருவமழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு இப்போது கோருவதோ, பற்றாக் குறைக் காலப் பகிர்வை மட்டுமே.
29.09.2023 நிலவரப்படி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்த தண்ணீரின் அளவு 68.55% (கடந்த ஆண்டு இதே நேரம் 97.08%), கபினியில் தண்ணீர் அளவு 68% (கடந்த ஆண்டு இதே நேரம் 95.74%), மேட்டூரிலோ தண்ணீரின் அளவு 11.78% (கடந்த ஆண்டு இதே நேரம் 95.66%). உள்ளங்கை அளவு தண்ணீர் இருந்தாலும், அதையும் விகிதாச்சாரமாகப் பகிர்ந்துகொள்ளவே காவிரி நடுவர் மன்றமும் உச்ச நீதிமன்றமும் கூறின.
ஆற்றங்கரைப் போர்கள்: ஆற்றங்கரைப் போர்கள் முந்தைய நூற்றாண்டுகளில் நடந்தது உண்டு. தெள்ளாற்றங்கரையில் பொ.ஆ.(கி.பி.) 3ஆம் நூற்றாண்டில் பாண்டியன் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லவனுக்கும் பல்லவ நந்திவர்மனுக்கும் போர் மூண்டது. இதே இடத்தில் 2ஆம் கோப்பெருஞ்சிங்கனும், 3ஆம் ராஜராஜனும் சமர் புரிந்தனர். பொ.ஆ. 1246-1279களில் அகிலாற்றங்கரையில் வேறு இரு மன்னர்கள் மோதினர்...
அவையெல்லாம் முடிந்துபோன கதைகள். தமிழகம் கர்நாடகத்தைச் சகோதரராக நடத்திய சான்றுகள் உண்டு. கர்நாடகத்தில் கண்டறியப்பட்ட மாலூருபட்டின கல்வெட்டுத் தகவல்படி, முதலாம் ராஜேந்திரன் அங்கு ஏரியே வெட்டியுள்ளான். பொ.ஆ. 907இல் முதலாம் பராந்தகன் கேரள இளவரசியை (வயநாடு) மணம் புரிந்தான்.
பிறகு ஏன் வன்மம்? - இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் கர்நாடகத்திடம் 100 டிஎம்சி தண்ணீர் இருந்தது. தமிழக அரசு கோரிக்கைவிடுத்தபடி விநாடிக்கு 24,000கன அடி நீரைத் தந்திருக்கலாம். தர மனமில்லை. மாண்டியா, பெங்களூரு, மாநிலம் முழுவதும் என மூன்று முறை முழு கடை அடைப்புகளை கர்நாடகம் நடத்தியது.
காவிரி, தமிழகத்தில் 26 மாவட்டங்களின் குருதி நாளமாகும். கர்நாடகத்திலோ பெங்களூரு, மைசூரு, மாண்டியா, ராம்நகர், கோலார் ஆகிய ஐந்து மாவட்டங்கள்தான் காவிரியைச் சார்ந்தவை.
தமிழகத்துக்குத் தர வேண்டிய 177.25 டிஎம்சியில் 37.7 டிஎம்சிதான் கர்நாடகம் தந்துள்ளது. 99 டிஎம்சி பாக்கி வைத்திருப்பதாகக் கர்நாடக முதல்வர் சித்தராமையாவே ஒப்புதல் தருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகத்திடம் தமிழகத்துக்குத் தர வேண்டிய பகிர்வுக்கு உத்தரவு போட்டது.
எனினும், “தமிழகத்துக்கு கிருஷ்ணராஜ சாகர் மூலம் தண்ணீர் தரவில்லை. காவிரிப் படுகையில் பெய்த மழை காரணமாகவே அவர்களுக்குத் தண்ணீர் போகிறது” என்று கர்நாடகத்தின் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுகிறார். நீதிமன்றத் தீர்ப்புகளை இவர்கள் மீறினர் என நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தமிழகம் தாக்கல் செய்யாமல் விட்டுவிட்டது.
காவிரி மேலாண்மை ஆணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இயங்கவில்லை. பல விருப்பு வெறுப்புகள் அதனிடம் உண்டு. செப்டம்பர் 12இல் விநாடிக்கு 5,000 கன அடி என 15 நாள்கள் கர்நாடகம் தமிழகத்துக்குத் தண்ணீர் தர உத்தரவிட்டது. அது முடியும் தறுவாயில் 26.09.2023இல் காவிரி மேலாண்மை வாரியம் மற்றொரு உத்தரவைப் பிறப்பித்தது. செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 15 வரை விநாடிக்கு 3,000கன அடி தரச்சொன்னது.
அது என்ன அக்டோபர் 15? அன்று தென் மேற்குப் பருவ மழைக்காலம் அடையாளபூர்வமாக முடிந்து, வட கிழக்கு மழைப்பருவம் தொடங்குகிறது. தென்மேற்குப் பருவம் முடிந்ததும் ஒதுங்கிக் கொள்ள மேலாண்மை ஆணையம் எத்தனிக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையம் துடிப்போடு இயங்கினால் பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
சில புள்ளிவிவரங்கள்: வேளாண்மையில் தமிழக அரசு ஆரம்பத்தில் சில சாதனைகளைப் புரிந்தது. தமிழகத்தின் நிகரப் பயிரிடும் பரப்பளவை 75%-ஆக முன்னேற்றப்போவதாக முதல்வர் கூறினார்.
2021-2022இல் குறுவை, சம்பா, தாளடி என சாகுபடி பரப்பு 18.24 லட்சம் ஏக்கர் ஆகும். மகசூல் 39.71 லட்சம் டன் நெல். 2022-2023இல் குறுவை, சம்பா, தாளடி 18.71 லட்சம் ஏக்கர். இவற்றின் மகசூல் 41.45 லட்சம் டன் நெல். இவை சாதனைகளே. ஆயினும் 2023இல் தமிழக உழவர்கள் பெரும் துயர்களில் உழன்றுவருகின்றனர். குறுவை சாகுபடி 5.35 லட்சம் ஏக்கராகும். இதில் 3.55 லட்சம் ஏக்கர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்குத் தமிழக அரசு பயிர் காப்பீடு செய்யவில்லை.
காப்பீடு செய்ய முன்வந்த மத்திய அரசிடம் வேண்டாம் என்று மறுத்துவிட்டது. முந்தைய 2022-2023 சம்பா சாகுபடியில் பயிர்க் காப்பீடு செய்திருந்தாலும் உழவர்களுக்குக் கிடைத்தது மிகச் சொற்பமே. நடப்பு சம்பாவைப் பொறுத்து 26.09.2023வரை செய்யப்பட்டுள்ள சாகுபடி 1.77 லட்சம் ஏக்கர்தான். சென்ற ஆண்டு இதே காலத்தில் 3.31 லட்சம் ஏக்கர் சாகுபடி நடந்திருந்தது. இக்காலத்தில் சாகுபடிக்கான உத்தரவாதத்தைத் தமிழக அரசு வழங்கவில்லை.
கர்நாடக அரசின் வியூகங்கள்: * கர்நாடக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டங்கள், * அவர் தலைமையில் அனைத்துக் கட்சிக்குழு மத்திய நீர்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தைச் சந்தித்தது, * தமிழகக் குழு மத்திய நீர்சக்தித் துறை அமைச்சரைச் சந்திக்க முயன்றபோது, கர்நாடகத் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரிலே சென்று அவரைப் பார்த்துவிட்டார், * சட்டபூர்வ ஆலோசனைக்காகக் கர்நாடக முதல்வர் தலைமையில் அவ்வப்போது அம்மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் அட்வகேட் ஜெனரல், சட்ட வல்லுநர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை பெறுதல், * கர்நாடக ஆளும் கட்சி காங்கிரஸ் என்றாலும் எதிர்க்கட்சியான பாஜகவின் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியைக் கர்நாடக முதலமைச்சர் சென்று சந்தித்தது, * கர்நாடகத்தில் 195 தாலுக்காக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டவை என அறிவித்து, மத்தியக் குழுவை அழைத்துச் சென்று 10 மாவட்டங்களைப் பார்வையிட வைத்துள்ளது, * வறட்சி நிவாரண உதவிக்கு மத்திய அரசிடம் முதல் கட்டமாக ரூ.4,860 கோடி உதவி கேட்டுள்ளது.
தண்ணீரைப் பெற தமிழகம் செய்துள்ளவை: * ஜூன்-ஜூலை மாத தண்ணீர் பாக்கிக்காக ஆகஸ்ட் மத்தியில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. * தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு டெல்லி சென்று அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்தது. * தமிழக முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதியது. இவற்றைத் தவிர, இரு மாநில சட்டமன்றங்களும் மாறிமாறிப் பல தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளன.
காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்புகளைக் காவிரி மேலாண்மை ஆணையம் நிறைவேற்ற, தமிழக அரசு ஒரு வழக்கைத் தாக்கல்செய்ய வேண்டும். மத்திய அரசு தன்னிடம் மத்திய நீர்வளத் துறையை வைத்திருந்தும் மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் தாவா சட்டத்தை வைத்திருந்தும் அரசமைப்புச் சட்டப்படி கூட்டாட்சி நடத்த வகைபெற்றிருந்தும், தீர்வுகாண முயலவில்லை. உணவு தானியங்களின் கருப்பையான காவிரியோ பட்டினியில் தவித்துக்கொண்டிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT