Published : 15 Dec 2017 10:54 AM
Last Updated : 15 Dec 2017 10:54 AM

நமக்கும் நல்ல மீன்கள் வேண்டுமல்லவா?

மீ

னவர்கள் மாயம் வெறுமனே அவர்களுடைய பிரச்சினை என்பதாகவே நம்மில் பலர் கருதுகிறோம். பொதுவெளியும் அப்படித்தான் புரிந்துகொள்கிறது என்பதற்கு உதாரணம், என் உறவுக்காரப் பாட்டி. தெங்கம்புதூர் மீன் சந்தைக்குப் போய்வந்தவர், “அன்னிக்கு புயலு வந்துச்சுல்ல... கடலுக்குப் போன பாதிப் பேரு திரும்பியே வரலியாம். நல்ல மீனே இல்ல. எங்கியோ.. என்னிக்கோ புடிச்ச ஐஸ்ல வெச்ச மீனா இருக்கு. வேற வழியில்ல. பேத்தி பிள்ளைவுண்டாயிருக்கா. கொஞ்சம் மீனும் கொடுக்கணுமே.. நிவர்த்தியில்லாமத்தான் (விருப்பமில்லாமல்) வாங்குனேன்!” என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பிரச்சினை நல்ல மீன் கிடைக்காதது மட்டுமே.. மீனவர்கள் கரை திரும்பாதது அல்ல!

அரசின் கவனத்தை ஈர்க்க ரயில் மறியல் செய்து, கவர்னரின் ரயில் பயணத்தையே கார் பயணமாக மாற்றும் அளவுக்கு மீனவர்கள் போராட வேண்டியிருக்கிறது. “மீனவர் பிரச்சினை பற்றிய நம் பார்வை மாற வேண்டும். மீனவர்கள் மாயம் என்பது கரைப் பகுதி மக்களுக்கு வெறுமனே செய்தி அல்ல! இந்தியப் பொருளாதாரத்தின் மீதான தாக்கத்தை ஏற்படுத்தும் அம்சம்” என்கிறார் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவர் ஜஸ்டின் ஆண்டனி.

“கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 46 மீனவக் கிராமங்கள் உள்ளன. அரசு புள்ளிவிவரங்களின்படி, குமரி மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலில் 32 ஆயிரம் பேர் நேரடியாக, 16 ஆயிரம் பேர் மறைமுகமாக என மொத்தம் 48 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. சராசரியாக, ஒரு குடும்பத்துக்கு 4 பேர் எனக் கணக்கிட்டால்கூட இரண்டு லட்சம் பேரைக் கடல் தொழில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு விசைப்படகில் 10-லிருந்து 15 பேர் வரையிலும் செல்வார்கள். இதற்குத் தேவையான எரிபொருள் வாங்குவது தொடங்கி, தண்ணீர், அரிசி, காய்கறிகள், மீன்பிடி உபகரணங்கள், கரைக்கு வந்ததும் மீனை இறக்கிவைக்கும் பணி என மீன்பிடி சார் தொழில் கரைப் பகுதி மக்களையும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது” என்கிறார் அவர்.

இன்னொரு கணக்கும் இருக்கிறது. குமரி மாவட்டத்திலிருந்து ஆண்டு ஒன்றுக்கு 46,000 டன் முதல் 47,000 டன் வரை மீன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியா முழுக் கச் சேர்த்து மீன்பிடித் தொழில் மூலம், அரசுக்கு அந்நியச் செலாவணியாக ஆண்டு ஒன்றுக்கு ₹ 50 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. இதில் குறிப்பிட்ட சதவிகித வருமானம் குமரியிலிருந்து வருகிறது.

அடுத்து அரசியல் கணக்கு. குமரியில் மட்டும் லட்சத்துக்கும் அதிகமான மீனவர் வாக்குகள் உள்ளன. குளச்சல், கிள்ளியூர் தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவர்கள் மீனவர்களே. இருந்தும் பிரதான கட்சிகள் எதுவும், மீனவர்களை வேட்பாளர்களாகக்கூட முன்னிறுத்துவது இல்லை. மத்தியில் வேளாண் துறையின் கீழ் ஒட்டிக்கொண்டிருக்கும் மீன் துறை, தனித்து இயங்கும் வகையில் தனி அமைச்சகம் தேவை என்ற குரலும் ஓங்கி ஒலிக்கிறது.

ஆக, மீனவர் பிரச்சினை வெறுமனே மீனவர்களின் பிரச்சினை மட்டுமல்ல. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது, ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலுக்கு வலு சேர்த்தவர்கள் அவர்கள். அவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்க வேண்டியது நம் கடமை. அவ்வளவு ஏன்? என் உறவுக்காரப் பாட்டியைப் போலவே, நமக்கும் வாய்க்கு ருசியாகச் சாப்பிட நல்ல மீன்கள் முக்கியம் அல்லவா? அதற்காகவேனும் அனைவரும் பிரார்த்திப்போம்!

- என்.சுவாமிநாதன்,

தொடர்புக்கு:

swaminathan.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x