Published : 17 Dec 2017 10:14 AM
Last Updated : 17 Dec 2017 10:14 AM
நி
தித் தீர்வு மற்றும் வைப்புநிதிக் காப்பீட்டு மசோதா 2017 என்ற சட்ட வரைவை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு. இந்த மசோதா சட்ட வடிவம் பெற்றால், வங்கியில் மக்கள் டெபாசிட் செய்த பணத்துக்குப் பாதுகாப்பு கிடையாது; டெபாசிட் செய்தவர்களின் பணம் மூழ்கிவிடும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
திருமணம், கல்வி, வாழ்க்கைத் தேவைகள் என எதிர்காலத்துக்காகச் சேமித்து வைத்த பணத்தை முதலீடு செய்யப் பல வழிகள் உண்டு. பங்குச்சந்தை, பரஸ்பர நிதியம், பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யும்போது சந்தை நிலவரத்துக்கு ஏற்ப லாபமும் கிடைக்கலாம், நஷ்டமும் ஆகலாம். எனவே, சிக்கலுக்கு ஆளாக விரும்பாதவர்கள் டெபாசிட்செய்வது பெரும்பாலும் வங்கிகளில்தான். ஏனென்றால், இந்திய வங்கிப் பரிவர்த்தனையில் 82% பொதுத்துறை வங்கிகளில்தான் நடக்கிறது. எனவே, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஏதேனும் சிக்கல் வந்தாலும் அரசு கை கொடுக்கும் என மக்கள் நம்புகிறார்கள். ஆனால், வங்கிகளில் வாராக்கடன் மதிப்பு இப்போது பத்து லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது என்ற நிலையில், புதிய சட்டம் குறித்து மக்கள் அச்சம் கொள்வது இயற்கைதான்.
பழைய விதி
ஒரு வங்கி திடீரென நிதிச் சிக்கலுக்கு ஆளானால் என்ன செய்வது என்று 60 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டது மத்திய அரசு. அதற்காக, 1961-ல் டெபாசிட் காப்பீட்டுச் சட்டத்தை இயற்றியது. இதன்படி, ரூ.1 லட்சம் வரையிலான டெபாசிட்டை வட்டியுடன் திருப்பித் தருவதற்கான காப்பீடு வசதி, வங்கிக்குக் கிடைத்தது. இதற்காக, ரிசர்வ் வங்கியின் கீழ் டெபாசிட் காப்பீட்டு வாரியத்துக்கு இந்தியப் பொதுத்துறை வங்கிகள் பிரிமியம் தொகையாக ரூ.3,000 கோடி செலுத்துகின்றன. ஆயினும், இத்தனை ஆண்டுகளில் வங்கி மூழ்கிய சம்பவம் ஏதும் நிகழவில்லை. ஆக, ஒரு வங்கியில் எத்தனை லட்சம் ரூபாய் டெபாசிட் செய்திருந்தாலும், அந்த வங்கி கடனில் மூழ்குமானால், ஒரு லட்சம் மட்டுமே கிடைக்கும் என்ற விதி இன்று புதிதாக வந்ததல்ல, 1961 முதலாகவே இருக்கிறது.
மத்திய அரசு புதிதாக அறிமுகம் செய்திருக்கும் மசோதா, ரிசர்வ் வங்கிக்குக் கீழ் இயங்குகிற டெபாசிட் காப்பீட்டு வாரியம் என்ற அமைப்புக்குப் பதிலாக, தீர்வு வாரியம் என்ற வேறொரு அமைப்பை உருவாக்குகிறது. இந்த வாரியம் வங்கிகளோடு காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தைகள் ஆகியவற்றையும் உள்ளடக்கும்.
வங்கிகளை நெறிப்படுத்த ரிசர்வ் வங்கி இருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்களை நெறிப்படுத்த காப்பீட்டு நெறிப்படுத்து ஆணையம் (ஐஆர்டிஏ) இருக்கிறது. பங்குச்சந்தை விவகாரங்களைக் கவனிக்க செபி இருக்கிறது. இந்த மூன்று கண்காணிப்பு அமைப்புகளும் ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவை செய்துவந்த ஒரு பணியைச் செய்ய இன்னொரு அமைப்பு உருவாக்கப்படுவது தேவையற்றது. ஆனால், ஜி-20 கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக இருப்பதால், அவ்வமைப்பு ஆலோசனை கூறியுள்ளபடி, தீர்வு வாரியத்தை உருவாக்கும் முயற்சியில் அரசு இறங்கியிருக்கிறது.
புதிய மசோதாவின்படி, தீர்வு வாரியமோ அல்லது ரிசர்வ் வங்கி, ஐஆர்டிஏ, செபி போன்ற நெறிப்படுத்து நிறுவனங்களோ வாராக்கடன் சிக்கலுக்கு உள்ளாகும் நிறுவனங்களை அவற்றின் நிலைமையைப் பொறுத்து தரப்படுத்தும். நிறுவனத்தின் முதலீடு, சொத்துகள், பொறுப்புக் கடன்கள், நிர்வாகத் திறன் ஆகியவற்றைப் பொறுத்து, குறைந்த ஆபத்து, மிதமான ஆபத்து, தீவிர ஆபத்து என வகைப்படுத்தும். அதிக ஆபத்து, தீவிர ஆபத்து நிலையில் இருக்கும் நிறுவனங்கள் என்றால், தீர்வு வாரியம் அதனைச் சரி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். சரிசெய்யும் நடவடிக்கையாக, அந்த நிறுவனம் முதலீடு திரட்டக் கூடாது, டெபாசிட் வாங்கக் கூடாது, வர்த்தகத்தை விரிவுபடுத்தக் கூடாது என்று கட்டுப்படுத்தலாம்.
எல்லை கடந்த அதிகாரம்
ஒரு நிறுவனம் தீவிர ஆபத்தில் இருப்பதாக வகைப்படுத்தப்பட்ட தேதியிலிருந்து அதன் நிர்வாகத்தைத் தீர்வு வாரியம் தன் கையில் எடுத்துக்கொள்ளும். பிறகு, கடன் சிக்கலைத் தீர்க்கும் முயற்சிகளாக அந்த நிறுவனத்தின் சொத்துகள் / பொறுப்புக் கடன்களை வேறொரு நிறுவனத்துக்கு மாற்றலாம்; வேறொரு நிறுவனத்துடன் இணைக்கலாம்; இந்த நிறுவனத்தை நிர்வகிக்கப் புதிதாக ஒரு நிறுவனத்தை உருவாக்கலாம்; கடனிலிருந்து மீட்டெடுக்கலாம். நிறுவனத்துக்குப் பணம் கொடுத்தவர்களுக்குத் திருப்பித் தர நிறுவனத்தையே கலைக்கலாம். தீர்வு வாரியத்துக்கு ஓராண்டு கால அவகாசம் உண்டு. தேவைப்பட்டால், மேலும் ஓராண்டு நீட்டிப்பும் கிடைக்கும்.
இந்நடவடிக்கை எடுக்கப்படும் காலங்களில், தீர்வு வாரியத்தின் நடவடிக்கைகள் குறித்து எந்த நீதிமன்றத்திலும் கேள்வி கேட்க முடியாது. இரண்டு ஆண்டுகளுக்குள் சரிசெய்யாவிட்டால், தீர்வு வாரியத்தின்மீது எந்த நடவடிக்கையும் கிடையாது. அது மட்டுமல்ல, தனது செயல்பாடுகளுக்கான கட்டணத்தையும் கடன்பட்ட நிறுவனத்திடமிருந்தே தீர்வு வாரியம் வசூலித்துக்கொள்ளும். ஒரு நிறுவனத்தின் கடன் நிலையை வகைப்படுத்தும் முடிவை எதிர்த்து அந்த நிறுவனம் மேல்முறையீடு செய்வதற்கும் எந்த வழியும் இல்லை.
நிறுவனத்தைக் கலைப்பது என்று முடிவானால், இருக்கிற பணத்தைத் திருப்பித் தருவதில் அந்த நிறுவனத்துடன் தொடர்புடையவர்களில் யாருக்கு முன்னுரிமை கொடுப்பது என்பதைக் குறித்தும் ஒரு பட்டியல் இச்சட்டத்தில் உண்டு. இதன்படி, காப்பீடு செய்யப்பட்ட டெபாசிட்களுக்கு முன்னுரிமை தரப்படும். தீர்வு வாரியக் கட்டணம் இரண்டாவது இடம்பெறும். காப்பீடு செய்யப்படாத டெபாசிட்களுக்கு ஐந்தாவது இடம்தான்! 1961 முதல் நடைமுறையில் உள்ள வைப்புத்தொகை காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள ரூ.1 லட்சம் என்ற வரம்பு இந்த மசோதாவால் நீக்கப்பட்டதா, ஒரு லட்சத்துக்கும் அதிகமான டெபாசிட்களுக்கு இது உத்தரவாதம் அளிக்கிறதா என்று பார்த்தால், அப்படி ஏதும் இல்லை.
அச்சத்தின் பின்னணி
முன்னர் ரிசர்வ் வங்கியின் கீழ் வைப்புநிதி காப்பீட்டு நிறுவனம் இருந்தது. இப்போது அந்தப் பணியைத் தீர்வு வாரியம் எடுத்துக்கொண்டு, வங்கிகளுக்குக் ‘குறிப்பிட்ட வரம்புக்குள்’ளேயே காப்பீடு வழங்கும். அதாவது, வங்கி கடனில் மூழ்குமானால், டெபாசிட் செய்தவரர்ுக்கு ‘குறிப்பிட்ட’ தொகை கிடைக்கும். முந்தைய சட்டத்தின்படி ரூ.1 லட்சம் என்பது உச்சவரம்பு. இந்தச் சட்ட மசோதாவில் ‘ஒரு லட்சம்’ என்றும் குறிப்பிடப்படவில்லை, முழுத் தொகை என்றும் தரப்படவில்லை. திருப்பித் தரப்படுகிற ‘ஒரு லட்சம்’ அல்லது ‘குறிப்பிட்ட’ தொகைக்கு மேலான டெபாசிட் தொகைக்கு நிகராக வங்கியின் பங்குகளாக மாற்றித்தர சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. இது சட்டமான பிறகு, ஒருவேளை வங்கி மூழ்குமானால், டெபாசிட் செய்தவர்களுக்கு முழுத் தொகையும் கிடைக்கும் என்ற உத்தரவாதம் சட்ட வரைவில் இல்லை. இதுதான் மக்கள் மத்தியில் அச்சத்தைக் கிளப்பிவிட்டது.
ஊடகங்களில் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்ட பிறகே, இந்த மசோதாவைப் பற்றி மத்திய அரசு வாயைத் திறந்தது. மசோதா இன்னும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனையில்தான் இருக்கிறது, இன்னும் நிறைய திருத்தங்கள் செய்யப்பட இருக்கிறது என்றெல்லாம் நிதியமைச்சர் கூறியிருக்கிறார். புதிய சட்டம், டெபாசிட் செய்பவர்களுக்கு நன்மை செய்வதாகவே இருக்கும், பொதுத்துறை வங்கிகளின்பால் அரசின் உத்தரவாதம் தொடரும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
ரிசர்வ் வங்கி, ஐஆர்டிஏ, செபி ஆகிய மூன்று அமைப்புகள் இருக்கும்போது, புதிய தீர்வு வாரியத்துக்கு அவசியமே இல்லை. வாராக்கடன் பிரச்சினைக்குத் தீர்வு கண்டாலே வங்கிகளின் பிரச்சினைகளுக்குப் பெருமளவில் தீர்வு கண்டுவிட முடியும். ஏற்கெனவே இருக்கிற நெறிப்படுத்தும் அமைப்புகளுக்கு இன்னும் சுதந்திரமாகச் செயல்படும் அதிகாரத்தைக் கொடுத்தாலே போதுமானது. ஆக, வங்கியில் டெபாசிட் செய்த பணத்துக்கு எந்த ஆபத்தும் இப்போதைக்கு இல்லை. ஆனால், அவசியமற்ற புதிய அமைப்பை உருவாக்குவதற்கான இந்த மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்போது, எதிர்க்கட்சிகள் கவனமாக இருக்க வேண்டும். ஊடகங்களும் விழிப்பாக இருக்க வேண்டும்!
- ஆர்.ஷாஜஹான், எழுத்தாளர்
தொடர்புக்கு: shahjahanr@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT