Last Updated : 27 Jul, 2014 12:00 AM

 

Published : 27 Jul 2014 12:00 AM
Last Updated : 27 Jul 2014 12:00 AM

மதுரையில் மறந்ததே குடந்தையில் நடந்தது

கும்பகோணம் கொலைத்தீ வழக்கில் இன்னும் 2 நாட்களில் தீர்ப்பு சொல்லப்படவிருக்கிறது. ஜூலை 16, 2004-ல் கும்பகோணத்தில் 94 இளம் உயிர்கள் பலியான துயரத்தை விபத்து என்றோ, காலம்காலமாக நடப்பதுதானே என்றோ நமக்கு நாமே ஆறுதல் அடைய முடியாது.

இது போன்ற சம்பவங்கள் கிட்டத்தட்ட ஒரு நிகழ்தகவின் அடிப்படையில் நிகழ்பவை. வெடிக்கும் தருணத்துக்காகக் காத்திருக்கும் வெடிகுண்டுகள் போன்றவை. சம்பவம் நடந்தபின் உடனடிக் காரணங்களென்று ஏதேதோ சொல்லப் பட்டாலும், எங்கேயோ எப்போதோ செய்யப்பட்ட விதிமீறல் கள், முறைகேடுகள் போன்றவை அடிப்படைக் காரணங்களாக இருப்பதை நாம் கண்டுகொள்ளலாம். அப்போது, விபத்து என்ற பெயரை மாற்றி படுகொலை என்ற பெயரை அந்தச் சம்பவத்துக்கு நாம் வழங்கியே ஆக வேண்டும். இவையெல்லாம் யாருக்கோ நிகழ் பவை என்ற பொதுமக்களின் அலட்சிய மும் இந்த நிகழ்தகவில் முக்கியப் பங்கு வகிக் கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.

கும்பகோணம் கொலைத் தீ சம்பவத்துக்கு 40 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் பள்ளிக்கூடம் இடிந்துவிழுந்து 36 குழந்தைகள் பலியானார்கள். நாம் அதிலிருந்து பாடம் கற்கவில்லை. அப்புறம், கும்பகோணம் கொலைத் தீ, அதற்குப் பிறகு நிகழ்ந்த பள்ளி வாகன விபத்துக்கள் என்று தொடரும் சம்பவங்கள் நாம் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையும், கற்கத் தயாராக இல்லை என்பதையுமே காட்டுகின்றன. தற்போது நீதிமன்றம் சொல்லவிருக்கும் தீர்ப்பாவது நமக்குச் சரியான பாடத்தைக் கற்றுத்தருமா என்று பார்க்க வேண்டும்.

காட் ஒப்பந்தத்தின் விளைவு

1991-ல் ‘காட்’ ஒப்பந்தத்தில் அன்றைய பிரதமர் நரசிம்மராவ் கையெழுத்திட்டார். அதை, அப்படியே ஏற்றுக்கொண்டார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. அந்த ஒப்பந்தம் ‘அரசானது, கல்வி, மருத்துவம் போன்ற செலவுகளை ஏற்க வேண்டியதில்லை; செலவுகளைக் குறைத்து வருவாயைப் பெருக்க வசதியாக இவற்றைத் தனியார் வசம் ஒப்படைத்துவிடலாம்' என்றும், ‘தரமான கல்வியும் மருத்துச் சேவையும் வேண்டும் என்று கோரும் மக்கள் அதற்கான செலவைச் செய்வதில் தவறில்லை' என்றும் சொல்கிறது.

இந்த காட் ஒப்பந்தத்தில் மத்திய, மாநில அரசுகள் தயக்கமின்றிக் கையெழுத்திட்டன. கல்வியைப் பொறுத்த வரை, இன்று வரை மத்திய, மாநில அரசுகள் எதுவும் எந்த விதப் பொறுப்பையும் ஏற்கத் தயாராக இல்லை என்பதுதான் உண்மை. இதில் எந்த அரசும் விதிவிலக்கல்ல.

தனியார் வசமான கல்வி

அனைவருக்கும் கல்வி தருவது அரசின் கடமை அல்ல என்று மத்திய, மாநில அரசுகள் கருதத் தொடங்கியதும், இருந்த மிச்சசொச்சக் கட்டுப்பாடுகளும், நிதி உதவியும் கைவிடப்பட்டன. அதுதான் சந்தர்ப்பம் என்று கல்வி வியாபாரிகள் களத்தில் இறங்கினார்கள்.

இதன் விளைவுதான் தற்போது தமிழ்நாட் டில் இருக்கும் 62,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள். இவற்றில், 20% பள்ளிகள் அங்கீகார மற்றவை. 65% பள்ளிகள் ஒரு ஏக்கருக்கும் குறைவான இடவசதி கொண்டவை. 20% பள்ளிகள் வெறும் 10,000 சதுர அடி பரப்புக்கும் குறைவானவை. 10% பள்ளிகள் வெறும் 1,000 சதுர அடி பரப்புக்கும் குறைவானவை. 25% பள்ளிகள் குடிசைகளில் இயங்குகின்றன. 60% பள்ளிகளில் முறையான கல்வித் தகுதி, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை.

மேற்கண்ட புள்ளிவிவரங்கள் அனைத்தும் 1990-ல் நியமிக்கப்பட்ட சிட்டிபாபு கமிஷன் 2003-ல் அரசுக்கு அளித்த அறிக்கையில் உள்ள தமிழ்நாட்டுப் பள்ளிகளின் நிலை.

இந்தப் பின்னணியில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியைப் பார்க்க வேண்டும். ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் பள்ளி 1950-ல் தொடங்கப்பட்டது. 1990-ல் நடுநிலைப் பள்ளியாகி, 2004-ல் உயர்நிலைப் பள்ளியானது. அங்கு மேலும் 3 பள்ளிகள் வேறு இயங்கி வந்தன. ஆக மொத்தம், 2 அரசு உதவி பெறும் பள்ளிகள். 2 அரசு அங்கீகாரமற்ற ஆங்கில வழி நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகள். ஜூலை 16, 2004 வரை ஸ்ரீகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளியாகத்தான் செயல்பட்டுவந்திருக்கிறது. பள்ளி நடத்துவதற்காக, அரசு நிதி உதவி விதிகள், அத்தியாயம் 8, விதி-52 வலியுறுத்தும் விதிமுறைகளில் ஒன்றைக் கூட ஸ்ரீகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளி கடைப்பிடிக்கவில்லை. பள்ளிக்கூடம் விதிமுறைகளைக் கடைப்பிடித்திருந்தாலோ, அதிகாரிகளும் அரசும் முறையாகக் கண்காணித்திருந்தாலோ, பெற்றோர்கள் உரிய விழிப்புணர்வுடன் இருந்திருந்தாலோ இந்தக் கொலைத்தீ சம்பவம் நிகழ்ந்திருக்குமா?

இப்போது சொல்லுங்கள் அது விபத்தா? நிர்வாகத்தின் படுகொலையா என்று?

- சி. கதிரவன், தொடர்புக்கு: kadhiravan.c@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x