Last Updated : 22 Dec, 2017 10:33 AM

 

Published : 22 Dec 2017 10:33 AM
Last Updated : 22 Dec 2017 10:33 AM

ஆளுநரின் ஆய்வும் அரசியல் சிந்தனையும்!

ரசின் வளர்ச்சிப் பணிகளை அந்தந்த மாவட்டங்களுக்கே சென்று ஆய்வுசெய்து அதிகாரிகளுடன் விவாதிக்கிறார் தமிழக ஆளுநர். ஆய்வு பற்றிய விமர்சனமும் ஆளுநர் மாளிகையிலிருந்து வரும் மறுமொழியும் புதிதல்ல. இவற்றுக்கு அப்பால் எல்லோருமே அக்கறை காட்ட வேண்டிய அரசியல் சிந்தனை என்பது உண்டு.

இந்த விவாதம் அடிப்படை அரசியல் சிந்தனையை மருந்துக்குக்கூடத் தொட்டுக்கொள்ளாமல், அரசியல் சட்டம் என்ற தளத்திலேயே சென்றுகொண்டிருக்கிறது. விவாதத்தின் போக்கு இப்படி இருப்பதால் விமர்சனத்துக்குப் பதில் சொல்வதும் ஆளுநர் மாளிகைக்கு எளிதாகிவிடுகிறது.

மற்றொரு உரைகல்

அரசியல் சட்டம், மாநில சுயாட்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமை என்று வழக்கமாக ஓடித் தேய்ந்த உரிமை வட்டத்துக்குள்ளேயே சுற்றுகிறது விமர்சனம். இல்லாத உரிமையை ஒருவர் வரித்துக்கொள்கிறார், மற்றவருக்கு இருப்பது பறிபோகிறது என்பவைதான் விமர்சனத்தின் தொடக்கமும் முடிவும். ஆளுநருக்கு இந்த அதிகாரம் ஏது என்று நீங்கள் கேட்பதற்கு முன்பே அரசியல் சாசனப்படி அவர்தானே அரசு நிர்வாகத்துக்குத் தலைவர் என்ற விளக்கம் காத்திருக்கிறது. தன் கட்டுரையில் இது வெற்று விவாதம் என்று மேனாள் நீதிபதி சந்துரு சொன்னது முற்றிலும் சரியே. அரசியல் சாசனத்தையும் உள்ளடக்கிய அடிப்படை அரசியல் சிந்தனை என்ற பரந்தவெளி ஒன்று உண்டு. விமர்சனம் தனக்கு ஒரே ஆதாரமாகப் பற்றிக்கொண்டிருக்கும் அரசியல் சாசனம், இந்தப் பரந்தவெளியை முழுதாகக் காட்டாது. அரசியல் சிந்தனை என்ற கல்லில் ஆளுநரின் ஆய்வை உரைத்துப்பார்க்க வேண்டும். குறைந்தது மூன்று வழியிலாவது அடிப்படை அரசியல் சிந்தனையோடு அவர் ஆய்வு பொருந்தாது.

அரசு நிர்வாகம் செய்யும் அமைச்சரவை சட்ட மன்றத்துக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டது. அதன் வழியாகவே மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டது. அதிகாரிகள் அனைவருமே துறை அமைச்சர்கள் வழியாகச் சட்ட மன்றத்துக்குப் பதில் சொல்லும் பொறுப்புள்ளவர்கள். அரசு நடவடிக்கை எதுவானாலும், அது அமைச்சர்களின் ஆய்வானாலும், இவ்வாறே சட்ட மன்றம் அதனைப் பரிசீலிக்க முடியும்.

ஆளுநர் ஒரு ஆய்வுசெய்வது சட்ட மன்றத்தின் பரிசீலனைக்கு உட்படுமா? அந்த ஆய்வின் முடிவு என்ன என்று சட்ட மன்றம் கேட்க, அல்லது தகவலுக்காகக்கூடத் தெரிந்துகொள்ள அதற்கு அதிகாரம் உள்ளதா? அதற்குப் பதில் சொல்ல ஆளுநர் கடமைப்பட்டவரா? ஆளுநர் சட்ட மன்றத்தின் ஒரு அங்கம் என்றாலும், அதற்குக் கட்டுப்பட்டவரல்ல. சட்ட மன்றமோ ஜனநாயகக் கட்டமைப்பின் அடிப்படை நிறுவனம். ஆளுநர் உட்பட, அனைவருமே அதனை வலுப்படுத்தும் அரசியல் பொறுப்பு உள்ளவர்கள். அரசு நிர்வாகத்துக்கு ஆளுநர்தான் தலைவர் என்று ஒரு வாதத்துக்கு ஏற்றுக்கொள்வோம். அப்போது அரசு நிர்வாகம் சட்ட மன்றத்துக்குக் கட்டுப்பட்டதல்ல என்பதையும் ஏற்க வேண்டிவரும். ஆளுநரின் ஆய்வு, சட்டமன்றத்தை வலுப்படுத்துமா, இதுதான் இந்திய அரசியல் சிந்தனையா என்று இப்போது சொல்லுங்கள். அவர் அரசியல் சாசனப்படிதான் நடந்துகொள்கிறாரா என்ற கேள்வியை நாம் ஒதுக்கிவிடலாம்.

அண்ணாவும் அணிவகுப்பும்

அரசு நிர்வாகத்துக்கு மட்டும் முதலமைச்சர் தலைவரல்ல. நாடு என்ற அரசியல் சமூகத்தின் தலைமையும் அவரிடம்தான். இரண்டு தலைமையும் ஒன்றுக்கு ஒன்று உரமாகப் பற்றிக்கொண்டு, முதல்வர் என்ற உருவில் ஒட்டுத் தெரியாமல் இசைந்திருக்கும். அரசியல் சமுதாயமாகத் தன்னை உணரும் சமுதாயத்துக்கு இந்த இசைவு முகம் போன்றது. சீன ஆக்கிரமிப்பின்போது, பாகிஸ்தானுடன் வந்த போரின்போது, புயல், வெள்ளம் போன்ற பேரிடர்களின்போது இந்த இசைவின் செல்வாக்கு எப்படி கைகொடுத்தது என்று எல்லோரும் அறிந்ததுதான். ஒரு ஆளுநர் தனது ஆய்வின் வழியாக மக்களிடையே நன்கு அறிமுகமாகக்கூடும். ஆனால், இது நிர்வாகத் தலைமையை சமூகத் தலைமையோடு ஒட்டவிடாமல் ஒரு இசைகேட்டை உருவாக்கும். மக்களின் முயற்சிகளைத் தூண்டி ஒருமுகப்படுத்த வேண்டிய நெருக்கடி வரும்போது, இந்த இசைகேட்டின் விளைவு தெரியும். ஒரு நிர்வாகத்துக்கு இரண்டு தலைமையா என்று சட்டத் தளத்தில் ஒலிக்கும் கேள்வியல்ல இது. அரசியல் சிந்தனைத் தளத்தில் ஒலிப்பது. எவ்வளவு பிரபலமானாலும் மக்கள் தங்களின் அரசியல் சமூகத் தலைவராக ஆளுநரை அடையாளம் காண மாட்டார்கள்.

நான் மாணவனாக இருந்தபோது பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கு அப்போதைய ஆளுநரும், முதலமைச்சர் அண்ணாவும் வந்திருந்தார்கள். ஆளுநர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுப் பார்வையிட்டுச் சென்றுகொண்டிருந்தார். பிரமிக்க வைக்கும் அணிவகுப்பு ஒழுங்கை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தோம். சற்றுத் தொலைவில் முதலமைச்சர் அண்ணா வந்து இறங்கி, தன் வேட்டியைச் சரிசெய்துகொண்டிருந்தார். மாணவர்கள் ஓடிவந்து அண்ணாவைச் சூழ்ந்துகொண்டார்கள். அணிவகுப்பு என்ன ஆனது என்றே தெரியவில்லை. ஆளுநரைப் பார்த்துக்கொண்டிருந்த எங்கள் பிரமிப்பு விரல் சொடுக்கு நேரத்தில் மறைந்துவிட்டது. ஒரு அரசியல் சமுதாயத்தின் தலைமையும், அரசு நிர்வாகத்தின் அடையாளரீதியிலான தலைமையும் ஒன்றல்ல என்பது அரசியல் சிந்தனையாளர்களுக்குத் தெரியும்.

உரிமைக்கு மேற்பட்ட ஒன்று

மக்கள் வரிசையில் காத்திருந்து ஆளுநரிடம் மனு கொடுக்கிறார்கள் என்பது மகிழவேண்டிய செய்தியல்ல. நாட்டின் விடுதலைக்கு முன்பு தங்கள் குறைகளை மக்கள் அதிகாரிகளிடம் சொல்லவேண்டியிருந்தது. சுதந்திரத்துக்குச் சற்று முன்பிருந்தேகூட மக்கள் பிரதிநிதிகள் ஓரளவுக்கு அரசாட்சியில் பங்கேற்றார்கள். அப்போதும், நிறை மக்களாட்சியைக் கொண்டுவந்த சுதந்திரத்துக்குப் பின்னரும், மக்கள் தங்கள் பிரதிநிதிகளை நோக்கி முழுவதுமாகத் திரும்பினார்கள் என்று சொல்ல முடியாது. கோரிக்கைகளுக்கும் குறைகளுக்கும் தங்கள் பிரதிநிதிகளை நோக்கி மக்களைத் திருப்புவது அவர்களை மக்களாட்சியில் பங்கேற்கச்செய்யும் வழி. அப்போதைய தலைவர்களுக்கு இதுவே பெரும் அரசியல் பொறுப்பு.

முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் ஒருமுறை, “இப்போது அமைச்சர்கள் செல்லும் இடங்களில் மக்கள் கோரிக்கை மனுக்களைக் கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார். அப்படி மகிழ்வதற்கு என்ன இருக்கிறது என்று கேட்டேன். “தங்கள் பிரதிநிதிகள் மூலம் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று நம்புகிறார்கள் அல்லவா, அது பெரிய மாற்றம்” என்றார்.

இந்தச் சிந்தனை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமைபற்றியதல்ல. ஜனநாயக அமைப்புகளான மக்கள் பிரதிநிதிகள், கட்சிகள், தேர்தல், சட்ட மன்றம், அரசு ஆகிய ஜனநாயகக் கூறுகளோடு மக்களை ஒன்றவைப்பதைப் பற்றியது. சுதந்திரத்துக்குப் பின்பும் முயற்சிசெய்து இந்த ஒன்றிப்பைச் சாதிக்கவேண்டியிருந்தது என்றால், இக்காலத்தில் நம்ப மாட்டீர்கள். ஆளுநர் தன்னை நோக்கி மக்களை ஈர்த்துக் கொள்வது இந்த ஒன்றிப்பைத் தளரச்செய்யுமா அல்லது வலுப்படுத்துமா?

நான் குறிப்பிட்ட மூன்றும் அடிப்படை அரசியல் சிந்தனையைச் சார்ந்தவை. ஆளுநரின் ஆய்வுபற்றிய விமர்சனம் இவற்றைப் பேசுவதில்லை. எதனை விமர்சிக்கிறோமோ அதைப் பற்றியதாக மட்டுமா நமது விமர்சனம் அமைகிறது? விமர்சிக்கின்ற நம்மைப் பற்றியும் அதுவேதான் விமர்சனம். எல்லோருமே அடிப்படை அரசியல் சிந்தனையை மறந்திருக்கிறோம்!

- தங்க.ஜெயராமன்,

பேராசிரியர்,

தொடர்புக்கு: profjayaraman@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x