Published : 14 Dec 2017 10:16 AM
Last Updated : 14 Dec 2017 10:16 AM
“பி
ரிஞ்சுபோன மூத்த மகன்கிட்ட பேசி, அவன வீட்டுக்குக் கூட்டிட்டு வரணும். நம்ம குடும்பம் சந்தோசமா இருக்கணும். கர்த்தருகிட்ட நித்தமும் நான் அதைத்தான் வேண்டி நிக்கேன்னு அவரு கடைசியா சொல்லிட்டுப் போனது இன்னும் காதுல கேட்குது” என்று குரல் கம்மிப்போய் சொல்கிறார் ஒக்கி புயலில் சிக்கி, கடலில் மூழ்கிய எரோமியாஸின் மனைவி ஜெனோபா. தனது மூன்றாவது மகன் சுஜினின் கண் முன்னாலேயே கடலில் மூழ்கி இறந்திருக்கிறார் எரோமியாஸ்.
கன்னியாகுமரி மாவட்டம், ராமன் துறையில் உள்ள அவரது வீட்டில் இன்னும் சோகம் அகலவில்லை. எரோமியாஸ், சுஜின் உட்பட 9 பேர் கடந்த 22-ம் தேதி தேங்காய்பட்டினத்திலிருந்து விசைப்படகில் கடலுக்குச் சென்றனர். 250 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, டிசம்பர் 1 அதிகாலை 3 மணி அளவில் கடலில் புயல் தாக்கியிருக்கிறது. பல மீட்டர்கள் உயரத்துக்கு எழும்பிய அலை, படகைப் புரட்டிப்போட்டிருக்கிறது. அதில் தவறிக் கடலில் விழுந்திருக்கிறார் எரோமியாஸ்.
“ ‘எங்க அப்பா போகு... எங்க அப்பா போகு’ன்னு என் மகன் கதறியிருக்கான். மிச்சம் இருந்த எட்டுப் பேருமா சேர்ந்து அவரைத் தூக்க முயற்சி பண்ணிருக்காங்க. ஆனா தொடர்ந்து வீசுன காத்தும், பெஞ்ச மழையும் அதுக்கு வாய்ப்பே தரல. கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் போராடி, காலையில ஆறரை மணிக்கு என் புருசன் பிணத்தைத்தான் மீட்டாங்க. என் அப்பா போயிட்டுன்னு தண்ணிக்குள்ள சாட(குதிக்க) நின்னுருக்கான் என் மகன் சுஜின். கூட போனவுகதான் அவனைப் புடுச்சு நிறுத்திக் கூட்டிவந்தாங்க. இனி அவன் கடலுக்குப் போகும்போதும் இந்த நினைப்புதானே வரும்?” என்று கேட்கிறார் ஜெனோபா.
“எனக்கு ரத்த அழுத்தம் இருக்கு. அப்பப்போ மயங்கிச் சரிஞ்சுடுவேன். அதனால வீட்டுல தனியா இருக்காதேன்னு பக்கத்துல இனயத்துல இருக்குற என் தங்கச்சி வினோ வீட்டுல விட்டுட் டுப் போனார் என் வீட்டுக்காரர். என்னைத் தனியா விட்டுட்டுப் போய்ட்டாரே. கடலுல பிடிக்குற மீனை வெச்சுக் கொண்டுவர்றதுக்கு எடுத்துட்டுப்போன ஐஸ்ல, என் வீட்டுக்காரர் உடம்பை வெச்சுக் கொண்டுவந்தாங்க. என் பிள்ளை கண்ணு முன்னாடியே அத்தனையும் நடந்துருக்கு. இந்த சர்க்காரு புயல் வருதுன்னு கடலோர காவல் படையை அனுப்பி மீன் பிடிக்கவங்களைக் கரைக்கு அனுப்பிருக்கணும்தானே?” எனும் அவரது கேள்வி மனதை அறுக்கிறது. தொடர்ந்து வீசிய புயல் காரணமாக, மூன்று நாட்கள் கழித்துத்தான் எரோமியாஸின் உடலைக் கரைக்குக் கொண்டுவர முடிந்திருக்கிறது. “அதுவரைக்கும் காத்து போன போக்குல படகு போயிருக்கு. என் வீட்டுக்காரர் சடலத்தோடவே இருந்துருக்காங்க மத்தவங்க.
ஏதோ ஒரு மாநிலத்துல ஆம்புலன்ஸ் கிடைக்காம, பொண்டாட்டி சடலத்தைப் புருசன் தூக்கிட்டுப் போனதா டிவில பார்த்திருக்கேன்.அதைவிடப் பயங்கரம் இல்லையா இது?” என்று குமுறுகிறார் ஜெனோபா. 37 வருட கடல் அனுபவம் கொண்ட எரோமியாஸின் அத்தியாயம் முடிந்துவிட்டது.
“என் வீட்டுக்காரர் உடம்பை அடக்கிட்டோம். அவரு நிறைவா இருந்து பழக்கப்பட்ட இந்த வீடு இப்போ வெறிச்சோடிக் கிடக்கு. எப்பவும் அதையே நினைச்சுகிட்டு இருக்குற இந்த மனசை நான் என்ன பண்ணுவேன்?” என்று கேட்கிறார் ஜெனோபா. அரசின் காதில் விழுமா இந்தக் கதறல்?
- என்.சுவாமிநாதன்,
தொடர்புக்கு:
swaminathan.n@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT