Published : 14 Sep 2023 07:52 AM
Last Updated : 14 Sep 2023 07:52 AM
2023 ஆகஸ்ட் 19. சனிக்கிழமை, விடுமுறை நாள். அன்று காலை ஓர் அசாதாரண மான அமர்வை டெல்லி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் நடத்தினர்.
கருக்கலைப்பு குறித்து மருத்துவ அவசரம் கருதி, பெண் ஒருவர் குஜராத்தில் உயர் நீதிமன்றத்தை ஆகஸ்ட் 7 அன்று நாடினார். வழக்கின் மேல் விசாரணையை ஆகஸ்ட் 23க்கு நீதிமன்றம் மாற்றியிருந்தது. இந்த வழக்கின் முறையீட்டில் ஆகஸ்ட் 19 அன்று விசாரணையைத் தொடங்கிய உச்ச நீதிமன்றம், 48 மணி நேரத்தில் தீர்ப்பை வழங்கியது.
காவிரி குறித்த வழக்கு ஒன்று உக்கிரமான சூழலில் இப்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் இப்போதைய தலையாய பிரச்சினை உணவு குறித்தது. குறுவை சாகுபடி 5.28 லட்சம் ஏக்கரில் நடைபெற்று, அதில் சரிபாதி பயிர்கள் காய்ந்து கருகிவருகின்றன. கடைமடை விவசாயம் நின்றது. கோடிக்கணக்கானோரின் உணவுப் பிரச்சி னையும் கால்நடைகளின் வயிற்றுப் பிரச்சினையும் இதில் அடங்கும்.
இது ஒன்றும் புதிய வழக்கு அல்ல. 2007இல் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை, 2018இல் அதன் மீதான மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் சில மாற்றங்கள் செய்து இறுதிசெய்தது. இப்பிரச்சினையில் காவிரி மேலாண்மை ஆணைய விசாரணையில், 11.08.2023 அன்று கர்நாடக மாநில அதிகாரிகள் பகிரங்கமாக மிரட்டுவதாகத் தமிழ்நாட்டு அதிகாரிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். சுதந்திர இந்தியாவில் அரசு அதிகாரிகளே செய்த முதல் வெளிநடப்பு இது.
இச்சூழலில், 25.08.2023 அன்று காவிரி வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. 01.09.2023 அன்று வழக்கு விசாரணைப் பட்டியலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. வெவ்வேறு காரணங்களால் வழக்கின் விசாரணை 21.09.2023க்கு மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் சின்னமோ, கட்டிட இடமாற்றமோ வழக்கின் மையம் அல்ல. நெற்பயிர்களைக் காப்பாற்றும் பன்முகத் தேவை யுள்ள தண்ணீர் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் ஏற்படும் காலதாமதமும் அதில் அரசின் அழுத்தமும் காவிரிப் படுகைக்கு அதிர்ச்சி தருகிறது.
தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய சட்டபூர்வ வாழ்வாதார உரிமையை மறுத்து, கர்நாடகம் கோதாவில் நிற்கிறது. காவிரி வழக்கு நடுவர் மன்றத்தில் 17 ஆண்டுகள் நடைபெற்றது. உச்ச நீதிமன்றமும் அதை இறுதிப்படுத்தியது. வழக்கின் தீர்ப்பில் பயிரின் வயது, நாற்றங்கால் காலம், பூப்பிடிக்கும் காலம், முதிர்ச்சி, பால்பிடிக்கும் காலம் ஆகியவை குறித்து விரிவான தேடல் இருந்தது. பற்றாக்குறை கால நீர்ப் பங்கீடு, தீர்ப்பின் அத்தியாயம் 9இல் பகரப்பட்டுள்ளது.
கர்நாடகத்தின் தொடர் பிடிவாதம்: குடகில் பிறப்பெடுத்த காவிரி தமிழ்நாட்டில் கடலில் கலக்கும்வரை பல பேரழிவுகளை ஏற்படுத்தியது. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல் பெருக்கெடுத்த காவிரி வெள்ளத்தை, அதன் ஊழிப் பேரழிவை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்நாடு தாங்கிவந்துள்ளது. கர்நாடகத்துக்கு அத்தகைய வரலாற்றுப் பார்வை இல்லை.
அ. வறட்சி இப்போது செப்டம்பரில் மிகுந்திருக்கலாம். ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடகத்திடம் போதிய தண்ணீர் இருந்தது. அங்கு இருக்கும் 4 அணைகளில், 93.535 டிஎம்சி என 82% நீர் இருப்பு இருந்தது. (மொத்தக் கொள்ளளவு 114.571 டிஎம்சி). ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 11 வரை தரப்பட வேண்டிய 53.77 டிஎம்சி தண்ணீரில், கர்நாடகம் 37.97 டிஎம்சியை வேண்டுமென்றே பற்றாக்குறை வைத்தது.
ஆ. 10.08.2023 அன்று நடைபெற்ற காவிரி ஒழுங்குமுறைக் கூட்டத்தில், விநாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் 15 நாள்களுக்குத் தருவதற்குக் கர்நாடகம் இசைந்தது. ஏகமனதான இந்த முடிவில், அடுத்த நாளே கர்நாடகம் பின்வாங்கியது. 11.08.2023 அன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், விநாடிக்கு 8,000 கனஅடி, அதுவும் 10 நாள் மட்டும்தான் தர முடியும் என மாற்றிப் பேசியது.
இ. கர்நாடக அணைகளில் விநாடிக்கு 10,000 கனஅடி திறக்கப்பட்டதாகக் கர்நாடகம் கூறியது. பிலிகுண்டுலுவுக்கு வந்துசேர்ந்ததோ 3,500 கனஅடிதான். கர்நாடக அணைகளில் 16 நாள்களில் 13 டிஎம்சி திறக்கப்பட்டதாகக் கர்நாடகம் கூறியது. பிலிகுண்டுலுவுக்கு வந்ததோ 7 டிஎம்சி மட்டுமே.
ஈ. தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வழங்குவது 12.09.2023க்குப் பிறகு சாத்தியம் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் கூறிவிட்டு, 25.08.2023 அன்றே கிருஷ்ணராஜ சாகர் அணையை கர்நாடகம் மூடியது.
1923இல் காவிரி நீர் சார்ந்த பாதிப்பு காரணமாக மைசூர் சமஸ்தானம் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று தஞ்சாவூர் ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பினார். இப்போதும் சாகுபடி இழப்பீடு ரூ.1,045 கோடியும் மற்ற பாதிப்புகளுக்கு ரூ.1,434 கோடியும் கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டும் என்கிற வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
தேவை மத்திய அரசு தலையீடு: காவிரிப் பிரச்சினை முற்றுவதற்கு காவிரி மேலாண்மை ஆணையம் காரணமாக இருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 01.06.2018 அன்று ஆணையம் உருவாக்கப்பட்டது. இதுவரையிலான காலத்தில் ஒரு சொட்டுத் தண்ணீரைத் தாமாக அது தமிழ்நாட்டுக்குப் பெற்றுத் தந்ததில்லை. ஆணையத்தின் வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பவி, உச்ச நீதிமன்ற விசாரணையில் வாய்தா கேட்கிறார். காவிரி ஒழுங்காற்றுக் குழுவோ தத்தித் தத்தி நடக்கிறது. இந்த அமைப்புகள் செயல்படாவிடில், அவை காகிதத்தில் மட்டுமே இருக்கும் அமைப்புகளாகச் சுருங்கும் என்று காவிரி நடுவர் மன்றம் குறிப்பிட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் காகிதப் புலியாகவும் காவிரி ஒழுங்காற்றுக் குழு காகிதப் படகாகவும் மாறிவிட்டன. காவிரியில் மொத்தம் உள்ள 8 அணைகளில், ஒவ்வொன்றிலும் எவ்வளவுநீர் இருப்பு இருக்கிறது என்கிற எந்தக் கணக்கும் கண்காணிப்பும் இவற்றிடம் இல்லாமல் தடுமாறுவதை உச்ச நீதிமன்றத்தில் பார்க்கிறோம்.
40 நாடுகளைத் திரட்டி, ஜி20 உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்தும் மத்திய அரசு, உள்நாட்டு நதிநீர்ப் பிரச்சினை சார்ந்து ஒரு வார்த்தையும்சொல்வதில்லை. கூட்டாட்சி அமைப்பைப் பாதுகாப்பதற்கும் நீதித் துறை தீர்ப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கும் குறைந்தபட்சம் தன்னாட்சி உரிமை பெற்ற காவிரி மேலாண்மை ஆணையமாகவாவது மத்திய அரசு இயங்க வேண்டும்.
தமிழ்நாட்டு அரசின் செயல்பாடு: ஒருபுறம் கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி பிரதமரையும் சந்திக்கத் தேதி கேட்கும்போது, மறுபுறம் தமிழ்நாட்டு அரசிடம் அத்தகைய பிரக்ஞையே இல்லை. குறுவை சாகுபடிக்குச் சிறப்புத் தொகுப்புத் திட்ட உதவி வழங்குவதோடு சரி. பயிர்க் காப்பீடுகூட இல்லை. உரிய காலத்தில் நீதிமன்ற முறையீடுகள் இல்லை. மேகேதாட்டு அணை குறித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாகவே தலையிட்டு கர்நாடகத்துக்குத் தடை விதித்தது. அந்தத் தடையை டெல்லி பசுமைத் தீர்ப்பாயம் நீக்கியது. தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க, வட மண்டல பசுமைத் தீர்ப்பாயத்துக்கு உரிமை இல்லை என செல்வராஜ்குமார் (மீனவர் நலச் சங்கம்)வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கூறியது. மேலும், சீரழியும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் எந்த முடிவையும் எடுக்கலாம், சுயமாகவே தலையிடலாம் என்று 77 பக்கத் தீர்ப்பு ஒன்றை மகாராஷ்டிர திடக்கழிவு வழக்கில் உச்ச நீதிமன்றம் பகர்ந்தது. அதன் அடிப்படையில், பசுமைத் தீர்ப்பாயத்தை தமிழ்நாடு அரசு மீண்டும் அணுக முடியும்.
எருதின் மேல் பட்ட காயங்களின் ரணம்போலவே வரலாறு நெடுகிலும் காவிரியும் காயங்களோடே பாய்ந்துவருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT