Published : 14 Dec 2017 10:11 AM
Last Updated : 14 Dec 2017 10:11 AM

கலப்படம் எனும் பயங்கரம் அரசு கண்டுகொள்வது எப்போது?

ணவுப்பொருட்களில் கலப்படம் தொடர்பான செய்திகளை எவ்வித அதிர்வும் இல்லாமல் கடந்துவிடுகிறோம். உடல்நலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் கொண்ட கலப்படப் பொருட்கள் தொடர்பான விவாதத்தை உருவாக்குவதும், எந்தெந்த வகையில் கலப்படங்கள் நடக்கின்றன என்பதை அவசியம் அறிந்துகொள்வதும் காலத்தின் தேவை.

நாம் குடிக்கும் பால் மாட்டின் தாய்மடியிலிருந்து அப்படியே வருவது என்று நினைத்தால் அந்த எண்ணத்தை முற்றிலுமாக மாற்றிக்கொள்ளுங்கள் என்று என் நண்பர் நீண்ட காலமாகக் கூறிவருகிறார். பால் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர் அவர். நான் நம்பவில்லை. அதிக பால் கறப்புக்காக மாடுகளுக்கு ஊசிப்போடுவது, கலப்புத் தீவனம் அளிப்பது போன்ற விஷயங்கள் சொல்லப்பட்டபோதும் நான் நம்பியது இல்லை. ஆனால், ஒரு அமைச்சரே அப்படிக் குற்றஞ்சாட்டியபோது அதிர்ந்துபோனேன்.

பாலின் கெட்டித்தன்மைக்காகவும் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காகவும் வெண்மைத் தன்மைக்காகவும் தனியார் பால் நிறுவனத் தயாரிப்புகளில் வேதிப் பொருட்கள் கலக்கப்படுவதாக தமிழகப் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சில மாதங்களுக்கு முன்னர் குற்றம்சாட்டியது நினைவிருக்கும். இதைத் தொடர்ந்து, ஆதாரம் இல்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்குத் தடைவிதிக்கக் கோரியும், ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியார் பால் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இதையடுத்து, தனியார் பால் நிறுவனங்கள் தொடர்பாகப் பேச அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் தடை விதித்தது. குறிப்பிட்ட ஒரு நிறுவனம் சார்ந்து அப்படியான பேச்சு நியாயமற்றதாக இருக்கலாம். ஆனால், நாம் குடிக்கும் பால் – அது எந்த நிறுவனம் அளிப்பதாக இருந்தாலும் சரி, எவ்விதக் கலப்புமின்றிதான் வருகிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பா இல்லையா?

தமிழகத்தில் பாலில், யூரியா, சீன பவுடர், மைதா மாவு கலப்படம் செய்யப்படுவதைத் தமிழகப் பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் எஸ்.இளங்கோ ஒருமுறை விரிவாகவே தன் பேட்டியில் தெரிவித்தார். “பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். அதற்கேற்றபடி சட்டத்தில் திருத்தங்களை மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும்” என்று உச்ச நீதிமன்றமே சொன்னது நினைவிருக்கக் கூடும்!

பால் மட்டுமல்ல; பல்வேறு உணவுப் பொருட்களில் இப்போதெல்லாம் கலப்படம் வெளிப்படையாகவே நடப்பதைப் பலர் மூலமாகவும் கேட்க முடிகிறது. சமையல் எண்ணெயில் எப்படி அப்பட்டமான கலப்படம் ஆகிவிட்டது என்பதை என்னுடைய மளிகைக்கடை நண்பர் சமீபத்தில் விளக்கினார். “பனையெண்ணெய்தான் இன்றைக்கு நமக்குப் பல கடைகளில் கிடைக்கும் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய்.

எல்லாம் அந்தந்த எண்ணெய்களின் மணத்தையும் நிறத்தையும் கொடுக்கும் எசன்ஸும் அந்தந்த எண்ணெய்களின் கலப்பையும் கொண்டது.” நான் நம்ப மறுத்தபோது அவர் ஒரு கேள்வி கேட்டார். “ஒரு கிலோ எள்ளின் விலை ரூ.170. குறைந்தது இரண்டு கிலோ எள்ளை அரைத்தால் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் கிடைக்கும். ஆனால், ஊரில் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் இங்கு ஒரு கிலோ எள்ளின் விலையை ஒட்டியும் கிடைக்கிறதே எப்படிச் சாத்தியம்?”

எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

கால் கிலோ கறியுடன் சேர்த்து, ஒரு கிலோ கோழி பிரியாணியை ரூ.100 விற்கும் ரகசியத்தை இன்னொரு நண்பர் உடைத்துவிட்டார். “நாமக்கல்லிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான பிராய்லர் கறிக்கோழிகள் லாரி, வேன்கள் வழியாக ஊர்களை அடைகின்றன அல்லவா? ஒவ்வொரு லாரியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோழிகள் செத்து விழும். அதேபோல கறிக்கோழிக் கடைகளிலும் சில கோழிகள் செத்துவிழும் அல்லது பார்க்கவே சங்கடமான வகையில் நிற்கும். அவற்றுக்கு என்று ஒரு சந்தை உண்டு!”

இவற்றில் எதையெல்லாம் நம்புவது, எதையெல்லாம் நம்பாமல் விடுவது என்று தெரியவில்லை. ஒரு சாமானியனுக்கு இவற்றை உறுதிசெய்வதோ, அப்படியே நிராகரிப்பதோ சாத்தியமே அற்றது. ஆனால், அரசாங்கம் என்று ஒன்று நம்மிடம் இருக்கிறதே அதற்கு என்ன வேலை? இதற்கென்றே உள்ள துறைகள் என்ன செய்கின்றன? அன்றாடம் உட்கொள்ளும் உணவுப்பொருட்களில் என்ன இருக்கிறது என்பதைக்கூடத் தெளிவாக அறிந்துகொள்ள முடியாத வெளிப்படையற்றதன்மை நிலவுவது எவ்வளவு வேதனைக்குரிய விஷயம்!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பொது சுகாதாரத்தைப் பேணுவதற்கென்று, ஏகப்பட்ட கோடிகள் பட்ஜெட் மூலம் அரசு ஒப்புதல் பெறப்பட்டு, பல்வேறு திட்டங்கள் மூலம் செயல்படுத்தப் படுவதாகக் கணக்கெழுதப்படுகிறது. ஆனால், தண்ணீரைக்கூட நம்பிக் குடிக்க முடியவில்லை என்றால், வெட்கக்கேடு இல்லையா?

பொது சுகாதாரத்தைப் பேணுவதற்காக, ஆயிரக்கணக்கான கோடிகளை பட்ஜெட்டில் ஒதுக்கிவிட்டோம் என்று, ஆளும் வர்க்கத்தினர் மார்தட்டினால் மட்டும், பொதுச் சுகாதாரம் பேணப்பட்டு விடாது. அதைப் பேணுவதற்குரிய கட்டுப்பாடுகளை வகுத்து, உரிய அதிகாரிகளைக் கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனுக்குமான உணவுக்கும் உறுதியளிக்க வேண்டியது ஒரு அரசின் கடமை. அந்தக் கடமையிலிருந்து அரசு விலகக் கூடாது!

புதுமடம் ஜாபர் அலி,

தொடர்புக்கு:

shacommunication@ymail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x