Last Updated : 30 Aug, 2023 06:16 AM

1  

Published : 30 Aug 2023 06:16 AM
Last Updated : 30 Aug 2023 06:16 AM

சாதியக் கரங்களிலிருந்து மாணவர்களை மீட்டெடுக்க…

திருத்தணியை அடுத்த மத்தூர் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி கதவின்மேல் மனிதக் கழிவு பூசியதாக 2 மாணவர் கைதாகியிருக்கிறார். “யார் தவறு செய்தாலும் என் மீதே பழிபோடுகிறார்கள். என்னைக் கண்டாலே ஆசிரியர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் மலம் பூசினேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதுக்கோட்டை அருகே அரசுப் பள்ளியில் மாணவியின் குடிநீர் பாட்டிலில் இரண்டு மாணவர்கள் சிறுநீர் கலந்த அவலம் நிகழ்ந்திருக்கிறது. நாங்குநேரியில் நிகழ்ந்த சாதிவெறிச் சம்பவம் நம் மனதைவிட்டு அகலும் முன்பாகவே, அடுத்தடுத்து அதைப் போல் நடந்த சம்பவங்கள் இவை.

மாணவர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வது, ஆசிரியர்களை அடிக்கப் பாய்வது, வகுப்பறையில், பொதுவெளியில் கட்டுப்பாடில்லாமல் நடந்துகொள்வது என்பதோடு, சாதிய உணர்வும் மாணவர்கள் மத்தியில் தலைதூக்கியிருப்பதைக் காண முடிகிறது.

பதறவைத்த சம்பவங்கள்: சென்னை சட்டக் கல்லூரியில் 2008இல் தலித் மாணவர்களுக்கும் மற்றொரு பிரிவு மாணவர்களுக்கும் ஏற்பட்ட பயங்கர மோதல் சம்பவத்தைத் தொலைக்காட்சியில் பார்த்துப் பதறினோம். கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். கையில் சாதிக்கயிறு கட்டிக்கொள்வதில் ஏற்பட்ட தகராறுதான் இதன் பின்னணி.

அடுத்த சில நாள்களிலேயே கடலூர் மாவட்டம்வெள்ளக்கரை அருகே உள்ள பெரியகாட்டுப் பாளையத்தில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவரின் சாதியைப் பற்றித் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி, இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.

வெளிநபர்கள் உள்ளே புகுந்து அரசுப் பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் எட்டு மாணவர்கள் காயமடைந்தனர். திண்டிவனம் அருகே இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவனை, சக மாணவர்கள் இழிவுபடுத்தியதால் அந்தச் சிறுவன் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தான். கோபமடைந்த மாணவர்கள் அவனைத் தீயில் தள்ளிவிட்டனர்.

பொறுப்பு யாருக்கு? - சாதித் தலைவர்கள் பிறந்தநாள், சாதி மாநாடுகளில் வெறித்தனமாகக் கோஷமிட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தப்படுவதைக் காண்கிறோம். இந்தச் செயல்களால் தங்கள் பிள்ளைகளின் கல்வி தடைபடும் என்று பெற்றோர்கள் கவலைப்படுகிறார்களா என்பது தெரியவில்லை.

1990களில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை ஒட்டி சில மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளைவிட்டு நீக்கப்பட்டு, எதிர்காலத்தைத் தொலைத்ததை மறந்துவிடக் கூடாது. மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பது பெற்றோரின் கடமை என்றாலும், ஆசிரியர்களுக்கு இதில் மிகுந்த பொறுப்பு உள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட பாலக்கரை அரசு தொடக்கப் பள்ளியில், பட்டியல் சாதி மாணவர்களைக் கழிப்பறையைச் சுத்தம் செய்ய வற்புறுத்திய தலைமையாசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுக் கைதானார். 2019 இல் கோவை மாவட்டம், கரட்டுமேடு பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் பட்டியல் சாதி மாணவர்களைச் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதோடு, கழிப்பறையைச் சுத்தம் செய்யக் கட்டாயப்படுத்தியது செய்தியானது.

திருவள்ளூர் மாவட்டம், தத்தை மஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர், பழங்குடியின மாணவர்களை வகுப்பறையில் தனியாக அமரவைப்பது, கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அனுமதிக்காதது எனச் சாதிய வெறியுடன் நடந்துகொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பள்ளி ஒன்றில், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவருக்கான தேர்தலின்போது, அப்பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியர் மாணவர் ஒருவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “நமது பள்ளியில் உனது சாதியைச் சேர்ந்தவர்களும், எனது சாதியைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் உள்ளனர்.

எனவே, பட்டியல் சாதியினர் பள்ளி சென்றுவிடக் கூடாது. உங்கள் ஊர் ஆள்களைப் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவருக்கான தேர்தலில் கலந்துகொள்ளச் சொல்” எனப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த ஆசிரியரிடம், “எல்லோரும் சமம்தானே டீச்சர்” என்று மாணவர் கூறியது, ‘சரியான பதிலடி’ எனச் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

கல்லூரியிலும் இது தொடர்கிறது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியராக இருந்தவர், மாணவர் ஒருவரிடம் அவருடன் படிக்கும் சக மாணவர்களின் சாதிப் பெயரைக் கேட்கும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அப்பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஆசிரியர்களின் அவஸ்தை: இது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டால், “பள்ளிகளில் மாணவர்கள் சாதி சார்ந்த அடையாளங்களைப் பயன்படுத்துவது தொடர்கதையாகிவிட்டது. கேட்டால், சாமிக் கயிறு என ஏதாவது காரணம் சொல்லிவிடுவார்கள். வீட்டிலிருந்து பெற்றோரைக் கூட்டிவந்து பிரச்சினை செய்வார்கள். ஒருசில பெற்றோர் நாம் சொல்வதைப் புரிந்துகொள்வார்கள்.

பிள்ளைகளையும் கண்டிப்பார்கள். பலர் நாம் சொல்வதைக் கேட்காமல், ஆசிரியரின் சமூகப் பின்னணி குறித்துப் பேசி பிரச்சினை செய்வார்கள். அதோடு, தங்கள் சாதி சார்ந்த அமைப்புகள், அரசியல் கட்சிகளில் உள்ளவர்களுடன் பள்ளிக்கு வந்து சத்தம் போடுவார்கள். அதனால்தான், ‘எப்படியாவது போகட்டும்’ எனப் பேசாமல் இருந்துவிடுகிறோம்” என்றார்.

என்ன செய்யலாம்? - “நாங்குநேரி சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம்கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர் உள்ளிட்டோரை மிரட்டும் மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அரசு பக்கபலமாக நிற்க வேண்டும். காரணம் சாதி, அரசியல் செல்வாக்குப் பின்புலம் உள்ள மாணவர்கள்தான் இப்படி வருவார்கள்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் (2005இல்) தேசிய அறிவு ஆணையம் (National Knowledge Commission) அமைக்கப்பட்டது. மாணவர்களை எப்போதும் விழிப்புடன் வைப்பது, சாதிய, பாலினப் பாகுபாடுகள் நடக்காமல் தடுப்பது தொடர்பான பரிந்துரைகளை இந்த ஆணையம் முன்வைத்தது.

2014இல் இந்த ஆணையம் கலைக்கப்பட்டது. இன்றைய நிலையில், இந்த ஆணையம் அளித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. மேலும், சாதி வேறுபாடுகளைக் களைவதற்கான பள்ளிக் கல்விச் சட்டம் ஒன்றையும் தமிழக அரசு நிறைவேற்றலாம்.

சாதிய வன்முறையில் ஈடுபடுபவர்களை உடனடியாகப் பள்ளியில் இருந்து வெளியேற்றலாம். அவர்களுக்கு வேறு எந்தப் பள்ளிகளிலும் இடம் தரக் கூடாது என ஒரு பிரிவைக் கொண்டுவரலாம். இது பெற்றோர்களுக்குப் பாடமாக அமையும். இத்தகைய சம்பவங்கள் நடைபெறும்போது மட்டும் குற்றமிழைத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பது போதுமானது அல்ல. அவர்களுக்குச் சாதியப் பாகுபாடு, மாணவர்களின் மத்தியில் எப்படிச் சமத்துவமாக நடந்துகொள்வது போன்றவை குறித்துப் பயிற்சியும் ஆலோசனைகளையும் அரசு அளிக்க வேண்டும். ஆசிரியர்களை அவர்களின் சாதி ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் அல்லாமல் மாற்றுப் பகுதிகளில் பணிநியமனம் செய்யலாம்.

சமூக நல்லிணக்கத்துக்கான நிகழ்வுகள் கிராமங்கள், நகரங்களில் உள்ள பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும். சமூக நல்லிணக்கத்துக்கான மையமாகப் பள்ளிகள் திகழ வேண்டும். அதற்கான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாகும். மாணவர்கள்தான் தேசத்தின் எதிர்கால வளம். அவர்களைப் பண்படுத்த வேண்டியது அனைவரின் கடமை. எப்போது தொடங்கப்போகிறோம்?

- தொடர்புக்கு: thirugeetha@gmail.com

To Read in English: How to retrieve students from the clutches of casteism

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x