Published : 15 Dec 2017 10:53 AM
Last Updated : 15 Dec 2017 10:53 AM
அ
ந்த இடத்துக்குச் சென்றுவந்த மூன்று நாட்கள் என்னால் தூங்க முடியவில்லை. ‘இப்படியும் வலி இருக்குமா, இப்படியும் வாழ்க்கை இருக்குமா?’ என்ற கேள்விகள் துரத்திக்கொண்டே இருந்தன. இடம்: ஈரோடு, கங்காபுரத்தில் உள்ள இமயம் காப்பகம். இனி மேல் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்களுக்கான காப்பகம். புற்றுநோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், கல்லீரல் செயலிழந்தவர்கள் என்று இங்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொருவரின் கதையும் ஒவ்வொரு மாதிரி. ஆனால், அவர்கள் அனுபவிக்கும் வலி.. அது ஒன்றே.. மரண வலி!
“வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவங்களுக்குக் கன்னத்தின் ஒரு பக்கம் ஓட்டை ஆகிடும். மறு பக்கம் வழியா சாப்பிடக் கொடுக்கணும். அப்ப ஏதாச்சும் ஒரு துணுக்கு அந்தப் பக்கம் போய்ப் பட்டுட்டாலும், கதறிடுவாங்க. மார்பகப் புற்றுநோய் வந்தவங்களுக்கு நெஞ்சுப் பகுதி குழியா போயிடும். அதைத் தினமும் சுத்தம் செய்யணும். ஒரு நாள் சுத்தம் செய்யலைன்னாலும் புழு வந்துடும். ரத்தப் புற்றுநோய் வந்தவங்களால் வலியைத் தாங்கிக்கவே முடியாது. பயங்கரமா சத்தம் போடுவாங்க. நாங்க அதிகம் கேட்குற வார்த்தைகளே ‘அம்மா, வலி தாங்க முடியலைம்மா. ஐயா, எப்படியாச்சும் டாக்டர்கிட்ட சொல்லி ஊசி போட்டுக் கொன்னுடச் சொல்லுங்களேன்!’கிறதுதான். இதுக்கெல்லாம் எதாவது தீர்வு வரணும் சார்!”
முருகன் - பூங்கொடி தம்பதி இதைச் சொன்னபோது அவர்களுடைய கண்களில் வெளிப்பட்ட துயரம் வாழ்நாளைக்கும் மறக்க முடியாது. இப்படியான காப்பகங்களைப் பராமரிப்பதும், நோயாளிகளுக்கான பணிவிடைகளை மேற்கொள்வதும் சாமானியமான வேலை அல்ல. உச்சபட்ச சகிப்புத்தன்மையையும் கருணையையும் கோரும் வேலை இது. முருகன் - பூங்கொடி தம்பதி காட்டும் அக்கறையை நோயாளிகள் நம்மிடம் பேசுகையில் உணர முடிகிறது. “சொந்தபந்தம் எல்லாம் கை விட்டுடுச்சு சார். யார் பெத்த பிள்ளைகளோ எங்க கஷ்டத்தை எல்லாம் சுமக்குதுங்க!” என்கிறார் அந்தப் பெரியவர். வயிற்றைத் துணியால் மூடியிருக்கும் அவருக்கு வயிற்றையே திறந்த அளவுக்குப் பெரும் காயம்!
“சொந்தக்காரங்க உடன் தங்கியிருந்து, கவனிச்சுக்குற வசதியோடதான் இந்தக் காப்பகம் இருக்கு. ஆனா, பலருக்கும் சங்கடம். நேத்து இறந்துபோன முத்தையாவுக்கு உணவுக்குழாயில புற்றுநோய். அவரால தண்ணிகூடக் குடிக்க முடியாது. டிரிப் மூலம் குளுகோஸ் மட்டும்தான் போட முடியும். வீட்டுல சின்னக் குழந்தைகளை வெச்சுட்டுப் பாத்துக்க முடியலேன்னு, இங்க கொண்டுவந்து விட்டுட்டுப் போய்ட்டாங்க. 25 நாள் காப்பாத்தினோம். சமீபத்துல அவர் தவறிட்டார். உடலை வீட்டுக்கு எடுத்துட்டுப் போக வேன் வாடகை கொடுக்கக்கூட ஆள் இல்லை. டாக்டர்கிட்ட சொன்னேன். ‘நம்மளே கொண்டுபோய்ச் சேத்துடலாம்’னு சொன்னார். நாங்களே முன்னாடி நின்னு எல்லாத்தையும் செஞ்சோம்.
சிலர் கூடவே தங்கவும் செய்வாங்க. ஆனா, இதுக்கான பணிவிடை சாதாரணமானது இல்லை. ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு முறையில கவனிக்கணும். எங்களுக்கு டாக்டர் எல்லாத்தையும் கத்துக் கொடுத்திருக்கார். எப்படிச் சாப்பாடு கொடுக்கணும், எப்படி மருந்து கொடுக்கணும், எப்படிச் சுத்தம் செஞ்சுவுடணும், எப்படி ஊசி போடணும்னு எல்லாத்தையும் கத்துக்கொடுத்துருக்கார். ரொம்ப முக்கியமானது, ஏற்கெனவே வலியில துடிச்சுட்டு இருக்கவங்ககிட்ட கூடுதலா நாம வேற வலியை உண்டாக்கிடக் கூடாதுங்கிறது. எங்களைக் காட்டிலும் சின்னச் சின்ன விஷயங்கள்லகூட அக்கறை எடுத்துக்கிறவர் எங்க டாக்டர். நீங்க அவருகிட்ட பேசணும்!”
முருகன் - பூங்கொடி தம்பதி சுட்டிக்காட்டும் டாக்டர், அபுல்ஹசன்.
“பள்ளி, கல்லூரி நாட்கள்லேர்ந்தே பொதுவேலைன்னா ஓடிப்போய் முதல் ஆளா நிக்குற பழக்கம் உண்டு. முதல் முதலா ரத்த தானம் கொடுத்தப்போ எல்லா உதவிகளைக் காட்டிலும், சமூகத்தோட பார்வையிலேர்ந்து ஒதுக்கமா இருக்குற இடத்துல செய்யுற உதவி முக்கியம்கிறது புரிஞ்சுது. நல்லாப் படிக்கணும், சம்பாதிக்கணும்கிறதை எல்லாம் தாண்டி, வேற ஒரு உலகம் இருக்குன்னு எனக்கு உணர்த்தினது கல்லூரி நாட்கள்ல அன்னை தெரசாவோட நிகழ்ந்த சந்திப்பு. கல்கத்தால அவங்களோட காப்பகத்தையும் அங்கிருந்த நோயாளிகளையும் பார்த்தப்போ மனசு குலைஞ்சுபோயிடுச்சு. நாம ஒரு ஆளா உருவானதும், வேலை செய்ய வேண்டிய இடம் இதுதான்னு தோணிடுச்சு.
2006-ல ‘இமயம் காப்பக’த்தைத் தொடங்கினோம். அன்னிக்குக் குடியரசுத் தலைவரா இருந்த அப்துல் கலாம்தான் திறந்துவெச்சார். இந்தப் பதினோரு வருஷத்துல ஆயிரத்துக்கும் மேற்பட்டவங்க இங்கே தங்கியிருந்திருக்காங்க. அவங்கள்ல 900 பேருக்கு மேல இங்கேயே இறந்து, எல்லாக் காரியங்களும் செஞ்சிருக்கோம். என்னோட நண்பர்கள் சுகுமார், ராஜா; அப்புறம் நிறைய மருத்துவ நண்பர்கள், ‘சக்தி மசாலா’ மாதிரியான தொழில் நிறுவனங்கள். இவங்க எல்லோர் உதவியோடும்தான் இது இயங்குது.
பொதுவா, கைவிடப்படுற நோயாளிகள்னா அதுல புற்றுநோயாளிகள்தான் இங்கே அதிகம். வயசு பேதம்லாம் இல்லை. சுந்தரம்மாள்னு ஒரு பாட்டி. சேலத்தைச் சேர்ந்தவங்க. 68 வயசு. மார்பகப் புற்றுநோயாளி. நந்தினிங்கிற பாப்பா. 13 வயசு. திருச்செங்கோட்டைச் சேர்ந்தவங்க. முதுகுத் தண்டுவடப் புற்றுநோயாளி. வலின்னு பார்த்தீங்கன்னா, ரெண்டு பேர் அனுபவிச்சுதும் ஒரே வலி, துயரம்தான்!
ஏழை - பணக்காரர், சின்னவர் - பெரியவர் இப்படியெல்லாம் பார்த்து நோய் வர்றதில்லை. ஆனா, சாதாரணக் குடும்பங்கள்ல பாதிக்கப்படுறவங்களுக்கு இதை எதிர்கொள்றது அவ்வளவு சுலபமா இல்லை. நோயாளிக்கும் கஷ்டம், கூட இருக்கவங்களுக்கும் கஷ்டம். அப்படின்னா யார் உதவ முடியும்? அரசாங்கம் இந்த விஷயத்துல கூடுதல் கவனம் எடுத்துக்கணும். அதேபோல, பொதுச் சமூகத்துல உதவணும்கிற எண்ணம் உள்ளவங்களும் கொஞ்சம் இந்த மாதிரி விஷயங்களை நோக்கி கவனத்தைத் திருப்பணும். ஆனா, நம்ம சமூகத்துல அது ரொம்ப குறைவா இருக்கு.
இவங்க யாரும் தொற்றுநோயாளிங்க இல்லை. முருகன் - பூங்கொடி தம்பதியை எடுத்துக்கிட்டீங்கன்னா, அவங்களோட மூணு பிள்ளைகளும் இதே கட்டிடத்துல உள்ள வீட்டுலதான் வளர்றாங்க. ஆனா, நோயாளிகளோட சொந்தக்காரங்க சில பேரு, உள்ளே கூட வராம, வாசல்லயே நின்னு விசாரிச்சுட்டுப் போய்டுவாங்க. ரொம்ப வருத்தமா இருக்கும். அடிப்படையாவே நமக்கு சக மனுஷன் மேல கரிசனம் குறைஞ்சுட்டு வருதோன்னு தோணும்.
நம்மோட கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட வலி இவங்க அனுபவிக்கிறது. ‘ஊசி போட்டுக் கொன்னுடுங்க’ன்னு கெஞ்சுறாங்கன்னா, அந்த வலி எவ்வளவு கொடுமையா இருக்கும்னு பாருங்க. ஒரு சாதாரண வலி மாத்திரை அல்லது ஊசி அவங்களுக்குச் சில மணி நேரமாச்சும் நிம்மதியான ஒரு தூக்கத்தைக் கொடுக்கும். அந்த வசதியைக்கூட நாம ஏற்படுத்திக்கொடுக்குறதில்லை. அதைக் காட்டிலும் மோசம், இப்படியான மருந்து இருக்குங்கிறதே பலருக்குத் தெரியாதுங்கிறது. இது எவ்வளோ பெரிய கொடுமை!
நாம நல்லா இருக்கோம், நமக்கு எல்லாம் நல்லதா நடக்குதுங்கிறதாலயே இந்த உலகம் மொத்தமும் நல்லா இருக்குதுன்னு ஆயிடாது. இன்னிக்கு அவங்க படுற கஷ்டம் நம்முடையதா இருந்தா என்னவாகும்கிற கரிசனம் வேணும். மேலை நாடுகளைப் பத்தி எல்லா விஷயங்களையும் பேசுற நாம ‘மரண வலித் தணிப்புச் சிகிச்சை’ (palliative care) தொடர்பாகவும் யோசிக்கணும். இந்த விஷயத்துல நம்ம அரசாங்கமும் சமூகமும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம்!”
அபுல்ஹசன் பேசப் பேச குற்றவுணர்வே அதிகரிக்கிறது. மரணம்தான் முடிவு என்றாகிவிட்டவர்களுக்கு மரணத்துக்கு முந்தைய சொற்ப நாட்களில்கூட நம்மால் உதவ முடியவில்லை என்றால், நாம் எங்கே இருக்கிறோம்? இந்த நாட்டில் ஏன் வளர்ச்சி என்பது பணத்தோடு மட்டுமே பொருத்திப் பேசப்படுகிறது? இரவுகள் தூங்க முடியாமல் கழிகின்றன!
- எஸ்.கோவிந்தராஜ்,
தொடர்புக்கு: govindaraj.s@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT