Published : 08 Dec 2017 09:32 AM
Last Updated : 08 Dec 2017 09:32 AM
‘ஒ
க்கி’ புயல் பாதிப்புகளைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சுற்றிக்கொண்டிருக்கும் மதுரையைச் சேர்ந்த தொலைக்காட்சிச் செய்தியாளர் ஒருவரைச் சந்தித்தேன். “இந்த ஐந்து நாள் பயண அனுபவத்தில் நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?” என்று கேட்டேன். “குமரி மாவட்டத்திலேயே கடுமை யான பாதிப்பு வடக்குப் பகுதிகளில்தான். ரப்பர் தோட்டங்கள் எல்லாம் மொத்தமாகச் சேதமடைந்துவிட்டன. மின்கம்பங்களெல்லாம் ஒடிந்து தொங்குகின்றன. 20 நாட்கள் ஆனாலும் மின்சாரம் வராது. ஆனால், எல்லோரும் நாகர்கோவிலைப் பார்த்துவிட்டுப் போய்விடுகிறாரக்ள்” என்றார் அவர்.
செய்தியாளர் பதில் எனக்கு அதிர்ச்சியூட்டவில்லை. நகரங்களுக்கும் சமவெளி மக்களுக்கும் கிடைக்கும் கவனம் கிராமப்புறங்களுக்கும் வன, கடல் பகுதி மக்களுக்குக் கிடைப்பதில்லை. 2015 இறுதியில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தின்போது சென்னை அளவுக்கு கடலூர் குறித்து யாரும் அக்கறை கொள்ளவில்லை. நாட்டில் எல்லோரும் சமமாகக் கருதப்படுவதில்லை என்பதே நடைமுறை எதார்த்தம். நெருக்கடிச் சூழல்களில் அரசும் ஊடகங்களும் இப்பகுதிகளை அணுகச் சிரமமான பகுதிகள் என்று புறக்கணித்துவிடுகின்றன.
கூட்டுத் தோல்வி
2004 தமிழ்நாடு சுனாமி மறுகட்டுமான காலத்தில் குஜராத் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இயக்குநர் திருப்புகழ், தமிழக அரசு அதிகாரிகளுக்கு ஒரு நல்வாய்ப்பை வழங்கினார். பேரிடர் மறுகட்டுமானத்தில் முகமைகளும், பாதிக்கப்பட்ட மக்களும் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதை நேரில் படித்தறியும் வாய்ப்பு. தமிழக அரசு அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. பேரிடர்களை எதிர்கொள்வதில் சமூக, பொருளாதாரப் பண்பாட்டுக் கூறுகளுக்கு முக்கியமான இடம் உண்டு. தமிழ்நாட்டில் எந்த முகமையும் சுனாமிப் பேரிடர்ச் சூழலைப் பண்பாட்டுப் புரிதலுடன் அணுகவில்லை. மக்கள் பங்கேற்புக்கான வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இயற்கைப் பேரிடர்களைக் கையாள்வது கூட்டுப் பொறுப்பு என்பதையும் பாதுகாப்புக் கலாச்சாரம் இன்னும் நம் சமூகங்களில் வேர்விடவில்லை என்பதையும் நாம் உணரவேயில்லை. முதலில் இது நமது கூட்டுத் தோல்வி என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
படிப்பினைகளை மறக்கிறோம்
விலங்குகளின் பலம், அபாயத்தை முன்னுணரும் திறன்தான். பாம்புகள் நிலநடுக்கத்துக்கு முன்னான சிறு அதிர்வுகளை 48 மணி நேரத்துக்கு முன்பே உணர்ந்து, புற்றுகளிலிருந்து வெளியேறிவிடுகின்றன. கடல் பாம்புகள் காற்றழுத்த வீழ்ச்சியை உணர்ந்து, கடலின் மேல்மட்டத்துக்கு வந்துவிடுகின்றன. மனித உடலின் நோய் எதிர்ப்பு என்பது கடந்த கால நோய்களின் பதிவுகளே. ஒரு நாட்டின் மிகப் பெரிய பலம் ராணுவம் அல்ல, வரலாற்று நினைவுகளே. குதிரை ஓடிய பிறகு லாயத்தைப் பூட்டுவதுதான் நமது பேரிடர் அணுகுமுறையாக உள்ளது. பேரிடர் தந்துசெல்லும் படிப்பினைகளைச் சமூகம் புறக்கணித்துவிடுகிறது.
1993 லாத்தூர் (மகாராஷ்டிரம்) நிலநடுக்கப் பேரிடர்ச் சூழலில் நேர்ந்த பிழைகளிலிருந்து கிடைத்த படிப்பினைகளை 2001 பூஜ் நிலநடுக்க மறுகட்டுமானத்தில் குஜராத் பயன்படுத்திக்கொண்டது. பூஜ் நகரத்தின் மறுகட்டுமானம் வெற்றிபெற்றதற்கு மக்களும் சேவை முகமைகளும் மாநில அரசும் மேற்கொண்ட கூட்டு முயற்சிதான் முக்கிய காரணம். இன்னொரு சுனாமியை எதிர்கொள்ள தமிழ்நாட்டுக் கடற்கரையும், இன்னொரு பெருவெள்ளப் பேரிடரை எதிர்கொள்ள சென்னை மாநகரமும் தயாராக இருக்கின்றனவா? தயார் நிலை என்பது மீட்பு ஒத்திகை மட்டுமல்ல, அடிப்படைக் கட்டுமான, தொழில்நுட்ப, தகவல் தொடர்பு அளவிலான தயார்நிலையும்கூட.
2009-ல் மகாராஷ்டிரக் கடற்கரையிலிருந்து ‘பியான்’ புயல் தாக்கியபோது, ஏறத்தாழ 300 தூத்தூர்ப் படகுகள் சிக்கிக்கொண்டன. தன் வாழ்க்கையின் ஒரே சொத் தான படகு கண் முன்னே சிதிலமாகி மூழ்குவதைக் கண்டு சித்தப்பிரமை பிடித்துப்போன தூத்தூர் இளைஞனின் முகம் என் நினைவிலிருந்து அகலவில்லை.
‘பியான்’ புயல் அனுபவங்களிலிருந்து நமது அரசுகள் எதையும் கற்றுக்கொண்டதாய்த் தெரியவில்லை. ‘ஒக்கி’ புயல் நேர்ந்தபோது பேரிடர் முன்னறிவிப்பு, தகவல் தொடர்பு, மீட்பு என்பதான மூன்று நிலைகளிலும் கடமை தவறிவிட்ட தமிழ்நாடு அரசு, கேரள, மகாராஷ்டிர, லட்சத்தீவு நிர்வாகங்களிடமிருந்து கிடைத்த தகவல்களையே வெளியிட்டது. பாதிக்கப்பட்ட கிராமங்களின் கொந்தளிப்பைத் தணிக்கும்படி இந்தத் தகவல்கள் வடிகட்டப்பட்டு வெளியிடப்பட்டன. ஆக்கபூர்வமான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தால் ‘ஒக்கி’ புயலில் மீனவர்கள் கொத்துக்கொத்தாய்ச் செத்துவிழும் அவல நிலை ஏற்பட்டிருக்காது.
முட்டுக்கட்டை
வேணாடு உள்ளிட்ட தென்திருவிதாங்கூர் முக்குவர்கள், விசை மீன்பிடிப் படகுகளின் வரவு நிகழ்ந்த 1960-களுக்கு முன்னரே பாரம்பரிய கடல் சாகச மீன்பிடி வல்லுநர்கள். கட்டுமரத்தில் பாய்விரித்து தொலைவுக் கடல்களுக்கு மூன்று நாள் தங்கல் பயணம் மேற்கொண்டு, தூண்டில் கயிறு ஓட்டி கலவா, கேரை, சுறா வேட்டை நிகழ்த்துபவர்கள். விசை இழுவை மடி அறிமுகமான குறுகிய காலத்துக்குள்ளே இவர்கள் மீண்டும் நெடுந்தூண்டில் நுட்ப மீன்பிடி முறைகளுக் குத் திரும்பி ஆழ்கடலுக்குப் போகத் தொடங்கினர். அவர்களது அறுவடைக்களம் போட்டிகளற்ற கடல். ஆனால், அடிப்படைப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இவர்கள் பெரிதாய் அக்கறைகொள்வதில்லை. வளம் வற்றிப்போன, நெருக்கடி மிகுந்த, 50 மீட்டர் ஆழத்துக்கு உட்பட்ட கரைக்கடலைத் தவிர்த்து, பேராழக் கடலுக்கே இவர்கள் போகின்றனர். 360 கிலோ மீட்டர் வரை நீளும் 20 லட்சம் சதுர கிலோமீட்டர் இந்தியப் பொருளாதாரக் கடற்பரப்பிலுள்ள மீன்வளம் நமக்கு உரிமைப்பட்டது. அதை அறுவடை செய்து கரைசேர்க்க ஏதுவாக தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, மானிய உதவிகளை ஆழ்கடல் மீனவர்களுக்கு வழங்கினால், இந்தியாவின் உணவுப் பொருளாதாரத்துக்கும் வேலைவாய்ப்புக்கும் உதவும். ‘நீ ஆழ்கடலுக்குப் போகாதே’ என்று அவர்களுக்கு முட்டுக்கட்டை போடுவது உகந்தது அல்ல.
தொழில்நுட்பத்தை மறுப்பதேன்!
கடலுக்குப் போவதும் போருக்குப் போவதும் ஒன்றுதான். இரண்டிலும் முன்னேற்பாடுகளும் தகவல் தொடர்பு வசதிகளும் மிக முக்கியமானவை. பேரிடர் முன்னறிவிப்பு, பாதுகாப்பு, மீட்புக்கூறுகளில் ஆழ்கடலில் கிடக்கும் படகுகளுடன் இருமுனைத் தகவல் தொடர்புகொள்வதில் சிக்கல் உள்ளன என்றாலும் சாத்தியமற்றது அல்ல. சிங்கள மீனவர்கள் 800 கடல் மைல் தொலைவிலிருந்தும் ஆர்டிஎம் சாட்டிலைட் தகவல் தொடர்புக் கருவி மூலம் சொந்த ஊரைத் தொடர்புகொள்ள முடிகிறது. ஆந்திர அரசு இதே கருவியை மீன்பிடிக் கப்பல்கள் பயன்படுத்த அனுமதிக்கிறது. தூத்தூர் மீனவர்களுக்குத் தமிழக அரசு இந்த வசதியை மறுப்பதில் நியாயமில்லை.
இடங்கணிப்பானை (ஜி.பி.எஸ்.) உட்படுத்திய தானியங்கி தகவல் கருவி (ஏ.ஐ.எஸ்.) ஒன்றைப் படகில் பொருத்திவிட்டால் தனது படகு எந்தக் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கிறது என்பதைத் தன் வீட்டிலிருந்தே ஒருவர் கண்காணிக்கலாம். இப்போதுள்ள விஎச்எப் ரேடியோ கருவியால் 20 கடல் மைல்களுக்கு மேல் தொடர்புகொள்ள முடியாது. உலக செயற்கைக் கோள் கண்காணிப்பு முறையில்தான் மேலைநாடுகளில் மீன்பிடி படகுகளைக் கண்காணிக்கிறார்கள்.
நம் வரலாற்றுத் தோல்விகள் தொழில்நுட்பங்களின் போதாமையால் நிகழ்வதில்லை, நம் அணுகுமுறைக் கோளாறுகளால் விளைவதே என்பதை அரசு இப்போதாவது உணர வேண்டும்.
- வறீதையா கான்ஸ்தந்தின், பேராசிரியர், எழுத்தாளர், தொடர்புக்கு: vareeth59@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT