Published : 12 Dec 2017 10:12 AM
Last Updated : 12 Dec 2017 10:12 AM
"நீங்க அஞ்சு பேரு சேர்ந்து கார்ல போறீங்க. அடர்ந்த காட்டுக்குள்ள உங்க காரு போகுது. திடீர்னு ஒரு விபத்து. உதவிக்கு யாருமே இல்ல. உங்க கூட வந்ததுல இரண்டு பேரு கொஞ்சம் கொஞ்சமா உயிரை விடுறாங்க. உயிரைக் கையில பிடிச்சுட்டு, அடுத்து என்ன நடக்கும்னு தெரியாம பரிதவிச்சா எப்படி இருக்கும்?” நடுக்கம் குறையாத குரலில் கேட்கிறார் ஈஸ்டர்பாய்.
குமரி மாவட்டத்தின் கடைக்கோடிக் கடலோரக் கிராமமான நீரோடியைச் சேர்ந்த ஈஸ்டர்பாய், சேவியர், முத்தப்பன், ஜான்சன், சவேரியார் ஆகிய ஐந்து பேரும் நவம்பர் 28 அன்று கேரள மாநிலம், கொல்லத்திலிருந்து தங்கல் வள்ளத்தில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றார்கள். ஒக்கி புயலின் கோரத் தாண்டவத்தில் ஜான்சனும் சவேரியாரும் கடலில் மூழ்க ஈஸ்டர்பாய், சேவியர், முத்தப்பன் மட்டும் கடும் முயற்சிக்குப் பின்னர் கரை திரும்பியிருக்கிறார்கள். சுழன்றடித்த புயலும் பிரம்மாண்டமான அலைகளும் புரட்டிப்போட்ட அந்த இரவின் கொடூரம் அவர்கள் நினைவிலிருந்து ஒருபோதும் அகலப்போவதில்லை. மரணத்தைத் தொட்டுவிட்டுத் திரும்பிய நடுக்கம் அந்த மூவரிடமிருந்து இன்னமும் விலகவில்லை.
தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஈஸ்டர்பாய் சொல்லும் ஒவ்வொன்றும் கண்ணீர்க் கதைகள். “கொல்லத்திலிருந்து 57 நாட்டிக்கல் தூரத்துக்குப் போனோம். 29-ம் தேதி இரவு கடுமையான சூறைக் காத்து வீசுச்சு. அப்போ அது புயல்ன்னு எங்களுக்குத் தெரியாது. எனக்கு 44 வயசு ஆகுது. கடல் தொழிலுக்குன்னு இறங்கி முழுசா 30 வருசம் ஆச்சு. என்னோட இத்தனை வருச அனுபவத்துல இப்படியொரு காத்தை நான் பாத்ததே இல்ல. இப்படி ஒரு புயல் வரும்ன்னு சர்க்கார் எங்களுக்குச் சொல்லல” என்கிறார் ஈஸ்டர்பாய்.
ஒருகட்டத்தில் அவர்கள் சென்ற வள்ளம் கவிழ்ந்தது. ஐந்து பேரும் கடலுக்குள் விழுந்திருக்கிறார்கள். தொடர்ந்து வள்ளத்தைப் பிடித்துக்கொண்டே மிதக்கத் தொடங்கினார்கள். “முழுசா ஒருநாள்கூட ஜான்சனால் தாக்குப்பிடிக்க முடியாம கடலுக்குள்ள முங்கிட்டாரு. அதுக்கு அப்புறம் அவர் திரும்பவேயில்லை. ஆனா நாங்க நாலு பேரும் வள்ளத்தைப் புடிச்சுகிட்டே கடலுக்குள் கிடந்தோம். ராத்திரியும், பகலுமா நாட்கள் ஓடுச்சு. யாரும் எங்க பாதையில் வரல. சாப்பாடு இல்ல. நேரம் ஆக ஆக உடம்புல வலு குறைய ஆரம்பிச்சுச்சு. மீனவனா பிறந்தா ஒரு நாளு இதெல்லாம் அனுபவிக்கணும்ன்னு தெரியும். ஆனா, அந்த நாளு வரும்போது நரகத்தை நேர்ல பாத்த மாதிரி இருக்கும்” என்கிறார்.
சுற்றி எங்கு பார்த்தாலும் கடல் தண்ணீர். ஆனால், குடிப்பதற்கு ஒரு தம்ளர் தண்ணீர் இல்லை. தொடர்ச்சியாக மழை வேறு. வள்ளத்தைப் பிடித்துக்கொண்டே கடலில் தத்தளித்தபடி அண்ணாந்து பார்த்தபடி மழைத் தண்ணீரைக் குடித்திருக்கிறார்கள் மூவரும். அந்தச் சமயங்களில் கைநழுவி மறுபடி தண்ணிக்குள்ள விழவும் வாய்ப்பு இருந்தது. கடுமையான ஜீவ மரணப் போராட்டம் அது!
“முழுசா மூணு நாளு கடந்த நிலையில, இதுக்கு மேல முடியாதுன்னு சைகை காட்டிட்டே, சவேரியாரும் தண்ணிக்குள்ள மூழ்கிட்டாரு. இந்த உலகத்துலயே கொடுமையானது எது தெரியுமா? சக மனுஷனைக் காப்பாத்த முடியாம, அவன் தண்ணிக்குள்ள முங்குறதை நேர்ல பார்க்குறதுதான். மனசு ரணமா வலிச்சுது. இருந்தும் பொண்டாட்டி, பிள்ளைகளை நினைச்சுகிட்டு அப்படியே கிடந்தோம்” என்று விசும்புகிறார் ஈஸ்டர்பாய். ஐந்து நாட்களுக்குப் பின்னர், கடலோரக் காவல் படையினரால் மூவரும் மீட்கப்பட்டார்கள்.
ஈஸ்டர்பாயின் மூத்த மகள் ரினிஷா பனிரெண்டாம் வகுப்பும், இளைய மகள் ரினீபா பத்தாம் வகுப்பும் படிக்கிறார்கள். முத்தப்பனுக்குத் திருமணம் முடிந்து ஆறு மாதங்களே ஆகின்றன. அவரது மனைவி அனீஷாவின் கண்ணீரும், பிரார்த்தனையும் வீண்போகவில்லை. தண்ணீருக்குள்ளேயே கிடந்ததில் சேவியர் உடலின் சில பாகங்கள் அழுகிவிட்டன. ஐந்து விரல்கள் அகற்றப்பட்டுள்ளன. அவரது நான்கு வயதே ஆன மகள் ஆனி ரியானாவும், இரண்டு வயது நிரம்பிய மகன் அட்ரியானோ சேவியரும் என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியாமல் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். மீனவர்கள் தரும் தகவலின்படி இன்னும் நூற்றுக்கணக்கானோர் கரை திரும்பவில்லை. கண்ணீருடன் காத்திருக்கிறது குமரி!
- என்.சுவாமிநாதன், தொடர்புக்கு:
swaminathan.n@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT