Last Updated : 30 Jul, 2014 09:59 AM

 

Published : 30 Jul 2014 09:59 AM
Last Updated : 30 Jul 2014 09:59 AM

வெல்லும்சொல் இன்மை அறிந்து...

சமீபத்தில் வெளிவந்த இருவேறு செய்திகளின் தலைப்புகள் என்னைத் துணுக்குறச் செய்தன. திம்பம் வனப் பகுதியில் நள்ளிரவில் லாரியை நிறுத்தி, இயற்கை உபாதையைக் கழிக்கப் புதருக்குள் இறங்கிய ஓட்டுநரை சிறுத்தை கொன்றுவிட்டிருக்கிறது. ‘ஓட்டுநரை வேட்டையாடிய சிறுத்தை' என்று செய்தி வெளியானது. மற்றொரு செய்தியின் தலைப்பு ‘அரிய வகை மண்ணுளிப் பாம்பு பிடிபட்டது'.

‘நடுக்காட்டில் எதன்பொருட்டும் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.’ ‘வாகனங்களின் ஜன்னல்களை இறுக்கமாக மூடியபடி பயணிக்கவும்’ போன்ற எச்சரிக்கைகள், வனப் பகுதியை ஊடறுத்துச் செல்லும் வாகனங்களுக்கு மீண்டும்மீண்டும் சொல்லப்படுகின்றன. அவற்றைச் சட்டை செய்யாது இதுபோன்ற விபரீதங்களுக்கு நாமே காரணமாகிறோம். பிறகு, சிறுத்தை ஓட்டுநருக்காகக் காத்திருந்து அவரை வேட்டையாடியது போன்ற சித்திரத்தை நாம் உருவாக்கிவிடுகிறோம்.

உயிரினங்களில் அரிய வகை என ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. அழியும் வகைதான் இருக்கிறது. மிகையான சித்தரிப்புகளால், தகவல்களால் அழிந்த வகையும் உண்டு. மண்ணுளிப் பாம்புகள் ஏனைய பாம்புகளைப் போலவே மிகமிக சாதாரணமாகக் கண்ணில் படக்கூடிய ஒன்றுதான் என்பது பலருக்கும் தெரியவில்லை.

திருச்செந்தூருக்கு அருகேயுள்ள பரமன்குறிச்சி கிராமத்தில் புகழ்மிக்க ஆலமரம் ஒன்று இருந்தது. அதுவே, அவ்வூரின் பேருந்து நிறுத்தமும்கூட. ஏராளமான பழந்தின்னி வௌவால்களின் புகலிடமாக அம்மரம் இருந்தது. வௌவால்கள் அடைவது ஊருக்கு நல்லதல்ல என்றும் வௌவால்கள் தரித்திரத்தின் குறியீடு என்றும் சில உள்ளூர்வாசிகள் வலியுறுத்தியதால், அம்மரம் தரிக்கப்பட்டது. வாழ்விடம் அழிக்கப்பட்டதால் திகைத்துப்போன வௌவால்கள், அருகேயுள்ள சாத்தான்குளத்தில் உள்ள ஒரு கோயில் அரச மரத்துக்குக் குடிபெயர்ந்தன. அமானுஷ்யத்தின் குறியீடாக நம்பப்படும் வௌவால், ஊர்க் கோயிலில் அடைவது நல்ல சகுனம் அல்ல என்று அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

வௌவால்களை விரட்ட வெடிகள் வீசப்பட்டன. காதைப் பிளக்கும் வாத்தியங்கள் முழங்கப்பட்டன. வௌவால்களைப் பிடித்து உண்ணும் நரிக்குறவர்கள் அழைத்துவரப்பட்டனர். அங்கும் வாழ்வுரிமை இழந்து, கள்ளத்தோணியில் வந்து, கச்சத்தீவில் கைவிடப்பட்டு நிற்கும் ஈழத் தமிழர்களைப் போல திசையறியாமல் திகைத்து நிற்கின்றன இந்த வௌவால்கள்.

நாஞ்சில் நாட்டு வயல்களில் குச்சிக் கிழங்குச் சாகுபடியின்போது சாரைப் பாம்பின் குட்டிகளை / முட்டைகளைச் சேகரித்து வயல்வெளிகளில் விடும் வழக்கம் இருந்தது. கரையான் புற்றுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட சாரைப் பாம்பின் குட்டிகளை இதற்கென விற்கும் வழக்கம்கூட நாகர்கோவில் பக்கம் இருந்ததாக ஒருமுறை ஜெயமோகன் நேர்ப் பேச்சில் குறிப்பிட்டார். குச்சிக் கிழங்குகளை வேரோடு சூறையாடும் எலிகளை உண்டு விவசாயிகளுக்கு உதவும் என்பதால் இந்த ஏற்பாடு. விஷமற்ற சாரைப் பாம்புகள் இயல்பில் குழந்தையைப் போன்றது. வீட்டில் பதுங்கியிருக்கும் சாரைப் பாம்பை குடும்ப உறுப்பினரைப் போலக் கருதிய காலம் ஒன்றிருந்தது. இன்று பொது சனங்களின் கண்களில் பட்ட ஒரு சாரைப் பாம்பும் உயிர் பிழைக்க ஏலாது.

பாம்புகள் கொடிய நச்சு உடையன; பழிவாங்கும் இயல்புடையன; ஒரு பாம்பைக் கொன்றுவிட்டால், அதன் இணையைத் தேடி அழித்தாக வேண்டும் போன்ற மூடக் கருத்தாக்கங்கள் தமிழ்ச் சூழலில் திரைப்படங்கள் வாயிலாக மீண்டும்மீண்டும் முன்வைக்கப்பட்டன. தமிழில் ‘நீயா?' திரைப்படம், இந்த முட்டாள்தனத்தை வெற்றிகரமாக ஆரம்பித்துவைத்தது. உண்மையில், முக்கால்வாசி பாம்புகளுக்கு நச்சு கிடையாது என்றுதான் அறிவியல் சொல்கிறது.

சூழலியல் சார்ந்த எந்த பிரக்ஞையும் இல்லாத அசட்டு மனிதர்களின் கைங்கரியத்தால் சக உயிரிகள் தங்கள் வாழ்வாதாரத்தை, வாழ்விடத்தை, வாழ்வுரிமையை இழந்து நிற்பதுதான் வேதனை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x