Published : 18 Dec 2017 10:25 AM
Last Updated : 18 Dec 2017 10:25 AM

விவசாயிகளின் கொந்தளிப்பைப் புறந்தள்ள முடியுமா?

க்கி புயலால் கடலோடிகளின் வாழ்வு மட்டுமல்ல, விவசாயிகளின் வாழ்வாதாரமும் நிலைகுலைந்திருக்கிறது. 95 ஹெக்டேர் நிலப்பரப்பில் 2,916 விவசாயிகளுக்குச் சொந்தமான 16,633 தென்னை மரங்களும், 316.53 ஹெக்டேர் நிலப்பரப்பளவில் 764 விவசாயிகளுக்கான நெற்பயிர்களும் சேதமடைந்துள்ளன. தோட்டக்கலைத் துறைப் பயிர்களான வாழை 1693.16 ஹெக்டேர், மரவள்ளி 127.90 ஹெக்டேர், ரப்பர் 1363.53 ஹெக்டேர் என மொத்தம் 16,259 விவசாயிகளின் 3310.13 ஹெக்டேர் என்று தோட்டக்கலைப் பயிர்களும் சேதமாகியிருக்கின்றன என்று தமிழக அரசே தெரிவித்திருக்கிறது. கணக்கெடுப்புப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துவிடவில்லை என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.

தற்போது மீனவர்களைத் தொடர்ந்து போராட வீதிக்கு வந்துள்ளனர் விவசாயிகள். புயலில் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்குக் கேரளத்தைப் போல் பாரபட்சமற்ற இழப்பீடு கேட்டு குமரியில் கடந்த வியாழன் அன்று விவசாயிகள் முழு அடைப்பு அறிவித்தனர். திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் முழு அடைப்பு வெற்றிபெற்றுள்ளது. இதில் 30-க்கும் அதிகமான பேருந்துகள் கல்வீச்சில் சேதமடைந்திருக்கின்றன. போராட்ட வடிவத்தில் சில முரண்கள் இருந்தாலும் விவசாயிகள் முன்வைக்கும் நியாயத்தைப் புறந்தள்ள முடியாது.

குமரியின் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒன்றான ரப்பர் சாகுபடியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மிக முக்கியமானது.

மாவட்டம் முழுவதும் நான்கு லட்சத்துக்கும் அதிகமான ரப்பர் மரங்கள் விழுந்திருக்கின்றன. “33%க்கும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட ரப்பர் மரங்களுக்குத் தற்போது ஹெக்டேருக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் நலனைக் கருத்தில்கொண்டு, ரப்பர் சாகுபடிக்கு ‘சிறப்பு வாழ்வாதாரத் தொகுப்பு உதவித் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ரப்பர் பயிரிட விரும்பும் விவசாயிகள், ஊடுபயிராக வாழை அல்லது அன்னாசி சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ஆகும் முழு செலவான ₹50 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்” என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

ரப்பர் தோட்டங்களில் தேனீ வளர்ப்புக்கு ஹெக்டேருக்கு ஆகும் ரூ.32 ஆயிரம் மதிப்பிலான 20 தேனீ பெட்டிகளுடன் கூடிய தேனீ குடும்பங்கள் வழங்கப்படும் என்று சொல்லும் அரசு, இதன்படி, புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும் கூறுகிறது.

அதாவது, ஊடுபயிர் சாகுபடி செய்தால்தான் அந்த ரூ.1 லட்சமே கிடைக்கும். ஒரு ஹெக்டேர் என்பது கிட்டத்தட்ட இரண்டரை ஏக்கர். ஒரு ஹெக்டேருக்கு 500 ரப்பர் மரங்கள் நட பரிந்துரைக்கிறது இந்திய ரப்பர் வாரியம். விவசாயிகள் 550 முதல் 600 வரை அவரவர் விருப்பம்போல் நடுகின்றனர். ஒரு ஹெக்டேரில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு அதிகபட்சமாக 2000 கிலோ ரப்பர் சீட் உற்பத்திசெய்யலாம். இவை ஒரு கிலோ குறைந்தபட்சம் 100 ரூபாய் என்றால்கூட, ஒரு ஆண்டில் ஒரு ஹெக்டேரில் ரப்பர் விவசாயி சம்பாதிப்பது ரூ. 2 லட்சம்தான். தொழிலாளர் ஊதியம், இடுபொருள் செலவு போக ரூ.1 லட்சம் மிஞ்சும். அரசுதான் ரூ.1 லட்சம் வழங்குகிறதே என்று கேட்கலாம்.

ஒக்கி புயலில் முறிந்துபோன ரப்பர் மரங்களுக்குப் பதில் புதிய ரப்பர் கன்றுகள் நடப்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம். சரி, நாளையே ரப்பர் பால் வந்துவிடுமா? ரப்பர் மரங்களிலிருந்து ரப்பர் பால் வருவதற்கு ஏழு ஆண்டுகள் ஆகும். அப்படியெனில், ஒரு ஹெக்டேரில் ரப்பர் சாகுபடி செய்த விவசாயி இழந்து நிற்பது ரூ.14 லட்சம் அல்லவா?

ரப்பர் தொழிலாளர்களின் கணக்குக்கு வருவோம். குமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ரப்பர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அடர்ந்த ரப்பர் தோட்டங்களில் பால் வடிப்பு செய்து, பிழைப்பு நடத்திவந்தவர்கள்.

இனி வரும் ஏழு ஆண்டுகளில் இவர்கள் வாழ்வும் ஜீவமரணப் போராட்டம்தான். இதற்கெல்லாம் சேர்த்தே வீதியில் நின்று போராடுகிறார்கள் விவசாயிகள். இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துகொண்டு அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும். இது விவசாயிகளின் வாழ்க்கைப் பிரச்சினை என்பதை இனியாவது உணர்ந்துகொள்ள வேண்டும்!

- என்.சுவாமிநாதன்,

தொடர்புக்கு:

swaminathan.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x