Published : 13 Dec 2017 10:04 AM
Last Updated : 13 Dec 2017 10:04 AM
உ
த்தர பிரதேச சட்ட மன்றத் தேர்தலில், பாஜகவின் வரலாறு காணாத 325/403 வெற்றிக்குப் பின் காங்கிரஸை நோக்கி ஏராளமான விமர்சனக் கணைகள் பாய்ந்துகொண்டிருந்த நாட்கள். சரியாக ஓராண்டுக்கு முன்பு, அதே காலகட்டத்தில் எழுதிய கட்டுரையை நினைவூட்டியது ஃபேஸ்புக்: ‘நீங்கள் இருக்க வேண்டிய இடம் டெல்லி அல்ல ராகுல்!’
132 ஆண்டு பாரம்பரியம் மிக்க நாட்டின் மூத்த கட்சிக்கு அதன் வரலாற்றில் பலவீனமான, சவால் மிக்க தருணம் ஒன்றில் தலைவராகப் பொறுப்பேற்கிறார் ராகுல் காந்தி. மக்களிடமிருந்து அவருக்குச் சொல்ல தலையாய செய்தி ஒன்று இருக்குமானால், அது இதுவாகவே இருக்கும்: மேலிருந்து கீழே, டெல்லியிலிருந்து இந்தியாவைப் பார்க்கும் பார்வையை காங்கிரஸ் மாற்றிக்கொள்ள வேண்டும்!
தன்னுடைய 34-வது பிறந்த நாளுக்குச் சில நாட்களுக்கு முன்பு, 2004-ல் ராகுல் அரசியலுக்குள் நுழைக்கப்பட்டதற்குப் பிந்தைய இந்த 13 ஆண்டுகளாக அவருடைய செயல்பாடுகளைக் கவனித்துவருகிறேன். மாறிவரும் புதிய யுகத்துக்கேற்ப காங்கிரஸையும் இந்தியாவையும் மாற்றியமைக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கிருப்பதைப் பல தருணங்களில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். முக்கியமான ஒன்றைக் குறிப்பிட வேண்டும் என்றால், நேரு தொடங்கி ராஜீவ் வரை பெரிதாகக் கவனம் கொடுக்காத ஒரு விஷயம் காங்கிரஸுக்குள் உள்ள உயர் சாதி ஆதிக்கம். ஆச்சரியமூட்டும் வகையில், இந்தியாவில் சமூக மாற்றமானது கீழ்நிலைச் சமூகங்களுக்கான பிரதிநிதித்துவத்தில், அது வழியிலான அதிகாரப்பரவலாக்கலில் இருக்கிறது என்ற புரிதல் ராகுலிடம் இருக்கிறது.
2007-ல் பொதுச்செயலாளரானதும், இளைஞர் காங்கிரஸைக் கையில் எடுத்தவர் அதன் நிர்வாகிகள் தேர்தலை வெளிப்படையானதாக மாற்றியமைத்தார். சமூகத்திலும் பொருளாதாரத்திலும் கீழ்த்தட்டுகளிலிருந்து ஆளுமைகளைப் பொறுக்கியெடுத்தார். துடிப்பும் ஆளுமையும் மிக்க ஒரு புதிய கூட்டத்தைக் கட்சியால் ஈர்க்க முடிந்திருக்கிறது. 2014 தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களைக் கட்சியினரே தொகுதி அளவில் தேர்ந்தெடுக்கும் முறையை அவர் முன்மொழிந்தார். பரீட்சார்த்த முறையில் சிறு அளவில் முயற்சிக்கப்பட்டு, தோல்வியடைந்த காரியம் இதுவென்றாலும் முக்கியமான முயற்சி. அடுத்து, 2015-ல் கட்சியில் உயர் சாதியினரின் ஆதிக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், கட்சிப் பதவிகளில் 50% இடங்களை பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினச் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்க காங்கிரஸ் தீர்மானித்தது ராகுல் முன்னெடுத்த முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று.
ஆக, ராகுலிடம் நாம் நம்பிக்கை வைக்கலாம்; அவருக்கு ஒரு வாய்ப்பளிக்கலாம். ஆனால், வரலாறு திரும்ப திரும்ப வாய்ப்புகளை வழங்காது என்பதை ராகுல் உணர வேண்டும். ஏனென்றால், இந்த 13 ஆண்டுகளில் அப்படிப் பல வாய்ப்புகளை அவர் வீணடித்திருக்கிறார்.
சம்பாரணும் மந்தசவுரும்!
சம்பாரண் இயக்கத்தின் நூற்றாண்டு இந்த ஏப்ரலில் நிறைந்தது. காங்கிரஸை மாபெரும் மக்கள் இயக்கமாக உருமாற்றிய, இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்த, இந்தியாவில் காந்தி மேற்கொண்ட முதல் சத்தியாகிரகப் போராட்டம் சம்பாரண் இயக்கம். காங்கிரஸின் பழைய நினைவலைகளை மக்களிடம் தட்டி எழுப்ப கட்சிக்குக் கிடைத்த ஒரு மகத்தான தருணம் இந்த நூற்றாண்டு. காங்கிரஸும் ராகுலும் வீணடித்தார்கள்.
ராகுலுக்கே அவர் வாழ்க்கையில் ஒரு சம்பாரண் தருணத்தை உருவாக்கவல்ல இரு வாய்ப்புகள் அமைந்தன.
1917-ல் காந்தியை பிஹார் நோக்கி இழுத்த விவசாயி ராஜ்குமார் சுக்லாவைப் போல, 2017-ல் ராகுலை தமிழ்நாடு நோக்கி இழுத்தார் விவசாயி அய்யாக்கண்ணு. ராஜ்குமார் சுக்லாவின் அழைப்பை ஏற்று பிஹார் சென்ற காந்தி, சம்பாரண் விவசாயிகளின் துயர நிலையைப் பார்த்த பின் அவர்களுடனேயே தங்கும் முடிவுக்கு வந்தார். விவசாயிகள் பிரச்சினை முடிவுக்கு வரும் வரை கிட்டத்தட்ட ஓராண்டு காலத்தை சம்பாரணுக்காகச் செலவிட்டார். எத்தனை ஆண்டுகள் சிறை செல்லவும் தயாராக இருந்தார். ஆங்கிலேய அரசைப் பணியவைத்தார். ராகுல் தமிழ்நாடு நோக்கி வரவில்லை என்றாலும், டெல்லியிலேயே விவசாயிகளோடு உட்கார்ந்திருக்க முடியும். ஓரிரு நாட்கள் அவர் ஜந்தர் மந்தரில் விவசாயிகளோடு தொடர்ந்து உட்கார்ந்திருந்தாலே அது தேசிய விவாதமாக மாறியிருக்கும். ராகுல் ஜந்தர்மந்தர் சென்றார். விவசாயிகளைச் சந்தித்தார். சில மணி நேரங்களில் திரும்பிவிட்டார்.
ராகுலுக்கான அடுத்த அழைப்பு மத்திய பிரதேசத்திலிருந்து வந்தது. அடுத்தடுத்து அடிகளை எதிர்கொண்ட விவசாயிகள் ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டக் குரல் எழுப்பிவந்தனர். பாஜக அரசுடனான பேச்சுவார்த்தை பலனளிக்காத சூழலில், தன்னெழுச்சியாகத் திரண்டார்கள். மந்த்சவுரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐந்து விவசாயிகள் உயிரிழந்தார்கள். ராகுல் அங்கு வந்து விவசாயிகளோடு உட்கார்ந்தால், சூழல் எப்படியானதாக மாறும் என்பதை காங்கிரஸைக் காட்டிலும் சிவராஜ் சிங் சௌகான் அரசு உணர்ந்திருந்தது. அதனாலேயே ராகுல் வருகைக்கு அது தடை போட்டது. தடைகளை மீறி மோட்டார் சைக்கிளில் ராகுல் சென்றார். விவசாயிகளைச் சந்தித்தார். சில மணி நேரங்களில் திரும்பிவிட்டார். அடுத்தடுத்த நாட்களில் மந்த்சவுர் கொந்தளித்துக்கொண்டிருந்தபோது தன்னுடைய பாட்டியைப் பார்க்கச் சென்ற ராகுல் இத்தாலியில் இருந்தார்.
அரசியல் நமக்கு சௌகரியமான நேரத்தில் களமிறங்கி ஆடும் விளையாட்டோ பகுதிநேரப் பணியோ அல்ல. நீங்கள் சரியான இடத்தில் இருக்க வேண்டும் என்றால், சரியான தருணத்தில் இருக்க வேண்டும்!
உள்ளுக்குள் முட்டும் பிரதான சவால்கள்
ராகுல் முன்னிற்கும் பெரிய சவால் முதலில் காங்கிரஸை அவர் எப்படிச் சீரமைக்கப்போகிறார் என்பது! மக்களவையில் காங்கிரஸின் எண்ணிக்கை வெறும் 44. நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி எனும் அந்தஸ்துகூட இன்று அதனிடம் இல்லை. நாட்டின் 29 மாநிலங்களில் 21-ல் இன்று காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. நாடு முழுக்கவுள்ள 4120 சட்ட மன்றத் தொகுதிகளில் 766 இடங்கள் மட்டுமே அதன் வசம் உள்ளன. இவற்றை எல்லாம் காட்டிலும் முக்கியமான பிரச்சினை சித்தாந்தரீதியாகவும் அமைப்புரீதியாகவும் கட்சியில் விழுந்திருக்கும் பெரும் ஓட்டை.
குஜராத்தில் 22 ஆண்டுகளாகத் தொடரும் பாஜக ஆட்சியின் மீதான அதிருப்தி வெளிப்படையாக மக்களிடம் தெரிகிறது என்று எல்லாப் பத்திரிகைகளும் கூறுகின்றன. அங்கு காங்கிரஸ்தான் மக்கள் முன் உள்ள அடுத்த ஒரே வாய்ப்பு. ராகுல் கடுமையாக உழைக்கிறார். ஆனால், பாஜக அதிருப்தி ஓட்டுகளை ஒருங்கிணைக்கக் கட்சிக்கு மாநில அளவில் வலுவான தலைவர்கள் வேண்டுமா, இல்லையா? ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பணியாற்றக் குழுக்கள் வேண்டுமா, இல்லையா?
இந்திராவிடம் தொடங்கி இன்றும் தொடரும், மாநிலத் தலைவர்களை விளையாட்டுக் காய்களைப் போலக் கையாளும் மரபு இன்றைக்குப் பெரும்பாலான மாநிலங்களில், மக்கள் செல்வாக்குள்ள தலைமை எனும் ஸ்தானத்தையே ஒழித்திருக்கிறது. மக்களிடமும் தொண்டர்களிடமும் செல்வதைக் காட்டிலும் டெல்லியில் தங்கள் செல்வாக்கை வளர்த்துக்கொள்வதே காங்கிரஸ் தலைவர்களின் அரசியல் போராட்டமாக உருமாறிவிட்டது. மாநிலங்களில் சுய அதிகாரம் மிக்க எத்தனை தலைவர்கள் காங்கிரஸில் இருக்கிறார்கள்?
காங்கிரஸில் அடுத்து பிரதமராகும் வாய்ப்புள்ளவர்கள் என்று பட்டியலிட்டால், அதில் முதல் ஐந்து இடங்களுக்குள் ப.சிதம்பரம், சசி தரூரின் பெயர்கள் வந்துவிடும். ஆனால், சிவகங்கையைத் தாண்டி சிதம்பரத்தாலும் திருவனந்தபுரத்தைத் தாண்டி சசி தரூராலும் எத்தனை தொகுதிகளைக் கட்சிக்குப் பெற்றுத்தர முடியும்? கட்சியின் தேசிய முகங்களாக அறியப்படுபவர்களில் எத்தனை பேர் மக்கள் தலைவர்கள்?
அமைப்புரீதியாக காங்கிரஸை வளர்த்தெடுக்க வேண்டும் என்றால், மக்கள் தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும். கட்சிக்கு இள ரத்தம் பாய்ச்ச வேண்டும். 75 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒதுங்கி நிற்கச் சொல்லும் முடிவைத் துணிந்து எடுக்க வேண்டும்!
காங்கிரஸாக இருக்கிறதா காங்கிரஸ்?
நாம் ஒரு கேள்வி கேட்டுக்கொள்வோம். சங்கர் சிங் வகேலா காங்கிரஸிலிருந்து விலகாமல் அங்கேயே இருந்து, குஜராத் சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் வென்று வகேலா முதல்வரும் ஆகியிருந்தால், உண்மையான வெற்றி இன்றைக்கு காங்கிரஸுக்கா பாஜகவுக்கா? முழு ஆர்எஸ்எஸ்காரர் வகேலா. பாஜகவிலிருந்து விலகி 1997-ல் காங்கிரஸில் அவர் சேர்ந்ததில் தொடங்கி கடந்த 20 வருஷங்களாக குஜராத் வாக்காளர்களுக்கு காங்கிரஸ் கொடுத்த ஒரே வாய்ப்பு, பாஜகவின் ஆர்எஸ்எஸ்காரர் மோடியா, காங்கிரஸைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ்காரர் வகேலாவா என்பதுதான்!
மஹாராஷ்டிரத்தில் காங்கிரஸின் முன்னணி முகங்களில் ஒன்றான சஞ்சய் நிரூபம் யார்? முன்னாள் சிவசேனைக்காரர். சிவசேனையின் சித்தாந்த ஊதுகுழலான ‘சாம்னா’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர்.
தமிழ்நாட்டில் காங்கிரஸின் தலைவர் திருநாவுக்கரசர் யார்? முன்னாள் அதிமுககாரர். திராவிட அரசியல் பாரம்பரியத்தில் வந்தவர். இதற்கு முன் பாஜகவில் இருந்தவர்.
சித்தாந்தரீதியாக இதையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வது? காங்கிரஸ் வெறும் ஓட்டரசியலுக்கான கட்சி அல்ல. முழுமையாக அதை அப்படிக் குறுக்கிவிட முடியாது. தேர்தல் அரசியலைத் தாண்டி ராகுல் சிந்திக்க வேண்டும்.
குஜராத் தேர்தல் பயணத்தில் ராகுல் கோயில் கோயிலாக ஏறுவது அவரது தனிப்பட்ட ஆர்வத்துடனோ, அவர் அரசியல் பாணியுடனோ சம்பந்தப்பட்டது என்றால், பிரச்சினை இல்லை. மாறாக, பாஜக உருவாக்கும் நிர்ப்பந்தத்தின் தொடர்ச்சி என்றால், சித்தாந்தரீதியாக காங்கிரஸ் அடைந்திருக்கும் வீழ்ச்சியின் விளைவு அல்லவா இது? “ராகுல் பூணூல் அணிந்திருக்கிறார்” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரை எது சொல்லவைக்கிறது?
பாஜக எழுப்பும் கேள்விகளுக்கு சாதுரியமாகப் பதில் அளித்துக்கொண்டிருப்பதாக காங்கிரஸும் ராகுலும் கருதலாம். ஆனால், காங்கிரஸும் ராகுலும் இன்று பேசிக்கொண்டிருக்கும் மொழியே பாஜகவினுடையது – அது காங்கிரஸின் சித்தாந்தப் பின்னடைவிலிருந்து விளைவது என்பதை உணர வேண்டும்.
காங்கிரஸின் புதிய முன்மொழிவு என்ன?
சுதந்திர இந்தியாவில் காங்கிரஸுக்கு என்று ஒரு கனவு இருக்கிறதா? பன்மைத்துவம் மிக்க இந்தியாதான் காங்கிரஸின் ஒரே கனவு என்று வைத்துக்கொண்டால், அந்தப் பன்மைத்துவத்தை உண்மையாகவே காங்கிரஸ் வளர்த்தெடுத்திருக்கிறதா? இன்றைக்கு பாசிஸ ஆட்சியை நோக்கி நாட்டை மோடி நகர்த்துவதற்கான சட்டரீதியிலான பெரும்பான்மை முன்னேற்பாடுகள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்தவை என்பதை மறந்துவிடக் கூடாது. முழுமையான குடியரசுத்தன்மையைக் கொண்ட ஒரு அரசியலமைப்பை நாம் பெறவில்லை. இந்த 70 ஆண்டுகளில் நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்திருக்கிறோம். யார் பிரதான காரணம்?
இன்றைக்கு பாஜகவையும் மோடியையும் எதிர்ப்பவர்கள் இந்த அரசை அதன் மதவாதப் போக்குக்காக மட்டும் எதிர்க்கவில்லை; ‘ஒரே நாடு – ஒரே மொழி’, ‘ஒரே நாடு – ஒரே கலாச்சாரம்’, ‘ஒரே நாடு – ஒரே கட்சி’, ‘ஒரே நாடு – ஒரே அரசு’ என்று அது மௌனமாகச் செயல்படுத்திவரும் ஒற்றைக் கலாச்சாரத்துக்கான ஒவ்வொரு விஷயத்தையும் எதிர்க்கிறார்கள். மாநில உரிமைகளைப் பேசுபவர்கள் எதிர்க்கிறார்கள், மொழியுரிமையைப் பேசுபவர்கள் எதிர்க்கிறார்கள், கல்வியுரிமையைப் பேசுபவர்கள் எதிர்க்கிறார்கள், அனைவருக்குமான வளர்ச்சியைப் பேசுபவர்கள் எதிர்க்கிறார்கள். இது ஒவ்வொன்றிலும் பாஜகவின் நிலைப்பாட்டிலிருந்து எந்தெந்த வகைகளில் காங்கிரஸின் நிலைப்பாடு மாறுபட்டது?
பாஜக மீதான அதிருப்தி மட்டும் காங்கிரஸை நோக்கி மக்களை ஈர்த்துவிடாது. பாஜக எந்தத் திசையில் செல்கிறதோ அதற்கு மாறான திசையில் செல்வதே காங்கிரஸின் செயல்திட்டமாக இருக்க முடியும். இந்தியக் கிராமங்கள் கொந்தளிப்பில் இருக்கின்றன. சமூகங்கள் இடையேயுள்ள பாரதூரமான வேறுபாட்டைக் குறைப்பதற்கான சமூகநீதிச் செயல்திட்டம் வேண்டும். விவசாயத்தை வீழ்ச்சியிலிருந்து தடுத்து நிறுத்தவும் கோடிக்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை ஆண்டுதோறும் உருவாக்கவுமான சூழலோடு இயைந்த மாற்றுப் பொருளாதாரக் கொள்கை நமக்கு வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மையப்படுத்தப்பட்ட அதிகாரப் போக்கை முடிவுக்குக் கொண்டுவர மாநிலங்களுக்கான உரிமைப் பகிர்விலிருந்து அதிகாரப் பரவலாக்கத்தைத் தொடங்க வேண்டும். ஜெய்ராம் ரமேஷ் சொன்னதுபோல, “சுல்தான்களின் காலம் முடிந்துவிட்டது.’’ இன்னும் சுல்தான்களாகவே நடந்துகொண்டால் எப்படி?
காங்கிரஸுக்குப் புதிய கனவும் புதிய மொழியும் வேண்டும். முதலில் டெல்லியை விட்டு ராகுல் நகர வேண்டும். காங்கிரஸ் எல்லோருக்குமான கட்சியாக வேண்டும் என்றால், ராகுல் எல்லா மாநிலங்களுக்கும் உரியவராக, மாநிலங்களில் பயணிக்கும் ஒரு பயணியாக மாற வேண்டும்!
- சமஸ்,
தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT