Published : 09 Jul 2014 10:13 AM
Last Updated : 09 Jul 2014 10:13 AM
ஊர்ப்புராணம் பாடும்போது, “எங்கள் ஊர்போல எந்த ஊரும் வராது” என்கிற பல்லவி நம்மூரில் சகஜமான ஒன்று. குமரிக்காரர்கள் அப்படிச் சொன்னால், அது சுயதம்பட்டம் அல்ல. ஐந்திணைகளில் வளம் மிக்க நான்கு திணைகளைத் தன்னகத்தே உள்ளடக்கிய மாவட்டம் குமரி மாவட்டம். குமரியிலிருந்து நீரோடி நோக்கிச் செல்லும் பாதையில் ஒரு தூறல் நாளில் பயணம் அமைந்தது பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். மலைப் பயணத்துக்கு இணையான அனுபவம். வண்டிக்கு வெளியே காணும் இடமெங்கும் பச்சை. இடையிடையே கடற்கரையோரக் கிராமங்கள்...
நீரோடி ஒரு சின்ன கிராமம். தமிழகத்தின் கடல் எல்லை முடியும் கிராமம் என்பதைத் தாண்டி நீரோடிக்கு இன்னொரு முக்கிய மான சிறப்பு இருக்கிறது. தூத்தூர் தீவின் ஒரு பகுதி இது. தாமிரபரணி, அனந்த விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய், நெய்யாறு, கடல் என்று நாற்புறமும் சூழப்பட்டிருக்கும் 10 கிராமங் களைத் தூத்தூர் தீவு என்று அழைக்கிறார்கள் உள்ளூர் மக்கள். நாற்புறமும் இப்படி நன்னீரும் கடல் நீரும் சேர்ந்த ஒரு பகுதியின் செழிப்பையும் வனப்பையும் விவரிக்கவும் வேண்டுமா என்ன? கையில் தூக்கும் உருவமாக இருந்தால் வாரி அணைத்து நாளெல் லாம் முத்தமிடலாம். அத்தனை அழகு!
இன்னும் ஜொலிக்கும் எம்ஜிஆர்
இறையுமண்துறை கிராமத்தில் தொடங்கி பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டன் துறை, நீரோடி, பருத்தியூர், பொழியூர் வரையிலான இந்த தூத்தூர் தீவுக்குள் பருத்தியூரும் பொழியூரும் மட்டும் கேரள எல்லைக்குள் சென்றுவிட்டன. மலையாள வாடை தமிழ் பேசுகிறார்கள். கேரள அரசு வலிய இவர்களுடைய தமிழ் அடையாளங்களை அழித்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், கல்யாண வீடுகளில் எம்ஜிஆர் பாட்டுகளும் விஜய் பாட்டுகளும்தான் ஓடுகின்றன. மீனவச் சமூகத்தின் மத்தியில் இன்னமும் எம்ஜிஆர் மறையவில்லை. கடல்புறத்தில் விஜய் நுழைந்ததன் பின்னணியிலும்கூட சமூக உளவியல் இருக்கிறது. காலங்காலமாக எல்லோராலும் புறக்கணிப்படும் வலியிலிருந்தும், தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக வெளிப்படுத்தும் நன்றி உணர்விலிருந்தும் வெளிப்படும் நேசம் இது.
ஆழ்கடல் சூரர்கள்
தூத்தூர் தீவுக்காரர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் அசகாய சூரர்கள். உள்ளூர் அளவில் அல்ல; இந்திய அளவிலும். கடல் தொழிலின் மிகப் பெரும் சாகசமான சுறா வேட்டையில் கில்லாடிகள். சுறா வேட்டைக்கு இவர்கள் பயன்படுத்தும் நெடுந்தூண்டில் (உள்ளூரில் இதை மட்டு என்கிறார்கள்) தமிழக மீனவர் அறிவின் உன்னதங்களில் ஒன்று. கடலோரக் கிராமங்களில் தூத்தூர் தீவுக்காரர்களின் சாகசங்கள் ஆயிரமாயிரம் கதைகளாக உலவுகின்றன.
இந்த தூத்தூர் தீவின் நீரோடியிலிருந்து தொடங்கும் தமிழகத்தின் கடல் எல்லை திருவள்ளூர், பழவேற்காட்டில் முடிகிறது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுகை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலுார், விழுப்புரம், காஞ்சி, சென்னை, திருவள்ளூர் ஆகிய 13 மாவட்டங்கள் கடலோரத்தில் இருக்கின்றன. இங்குள்ள 591 பாரம்பரிய மீனவ கிராமங்களில் இருக்கும் சுமார் 10 லட்சம் மீனவ மக்களைத்தான் நாம் ‘மீனவர்கள்' என்று அழைக்கிறோம்.
புரிதல் கோளாறு
கடல் பழங்குடிகளான மீனவ மக்களின் துயரங்களுக்கும் அவர்களுடைய வாழ்க்கை மீதான புறக்கணிப்புக்குமான முக்கிய மான காரணங்களில் ஒன்று, புரிதல் கோளாறு. உண்மையில் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் ஒரு மீனவர் கரையில் குறைந்தது 16 குடும்பங்களுக்கு வாழ்வளிக்கிறார். ஒரு மீனவர் செல்லும் மீன்பிடிப் படகு, வலை உள்ளிட்ட உபகரணங்கள் உற்பத்தியில் ஈடுபட்டிருப்பவர்கள் இந்தச் சங்கிலியின் தொடக்கக் கண்ணிகள் என்று வைத்துக்கொள்வோம். படகில் எடுத்துச்செல்லப்படும் ஐஸ் கட்டிகள், படகுக்கான டீசல், அவற்றைக் கடற்கரைக்குக் கொண்டுவந்து சேர்க்கும் லாரிகள் உள்ளிட்டவையெல்லாம் மையக் கண்ணிகள். கடலிலிருந்து மீனவர் கொண்டுவந்து சேர்க்கும் மீன்களுக்கு ஏலம் நடத்தும் தரகர்கள், ஏலம் எடுக்கும் மொத்த வியாபாரிகள் என்று பல கை மாறி நம் வீட்டுத் தட்டில் விழுந்து, நம் வாய்க்குள் போவதற்குள் குறைந்தது 16 குடும்பங்களுக்குச் சோறு போட்டுவிடுகிறது அந்த மீன்.
விரியும் கடல் தொழில்
இந்தியா உலக அளவில் மீன் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பஞ்சத்தாலும் வறட்சியாலும் அடிபட்டுக் கிடந்த நாட்டைத் தூக்கி நிறுத்த சுதந்திரத்துக்குப் பின் வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்த அரசு, வெறும் நெல்லாலும் கோதுமையாலும் மட்டும் மக்கள் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திவிட முடியாது என்பதை உணர்ந்தபோது, கடலைப் பார்த்தது. 1950-ல் 7.52 லட்சம் டன்னாக இருந்த இந்தியாவின் மீன் உற்பத்தி 1990-ல் 38.36 லட்சம் டன்னாக உயர்ந்தது. தாராளமய மாக்கலுக்குப் பின் இந்த உற்பத்தி வேகம் மேலும் அதிகரித்தது. 1990-2010-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மட்டும் இந்தியாவின் மீன் உற்பத்தி இரு மடங்கு அதிகரித்தது. 2012-ல் 90 லட்சம் டன்னாக இருந்த உற்பத்தி, கோடி டன் இலக்கை நோக்கி நகர்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் ஒரு சதவீதத்தைப் பங்களிக்கும் மீனளத் துறை, ஏற்றுமதித் துறைக்கான பங்களிப்பிலும் முன்னணி வகிக்கிறது (ஆண்டுக்கு ரூ. 21,000 கோடி).
இந்தியாவின் முன்னணி மீன் உற்பத்தி மாநிலங்களில் தமிழகமும் ஒன்று - குஜராத், கேரளம், மகாராஷ்டிரத்துக்கு அடுத்து நான்காவது இடத்தில் இருக்கிறது. நாட்டின் மொத்தக் கடற்கரையில் 13%-ஐப் பெற்றிருக்கும் தமிழகம் நாட்டின் மீன் உற்பத்தியிலும் அதற்கு இணையான பங்களிப்பைத் தருகிறது. ஆனால், நகரத்தில் ஒரு தெரு நாய்க்கு உள்ள பாதுகாப்புகூட கடலில் மீனவர்களுக்கு இல்லை; தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடித்துத் துரத்தப் படுவதும் சுடப்படுவதும், அவர்தம் உடைமைகள் சூறையாடப்படு வதும், படகுகள் கொள்ளையடிக்கப்படுவதும் சர்வ சாதாரணம். காரணம் என்ன?
(அலைகள் தழுவும்…)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT