Published : 14 Jul 2014 11:25 AM
Last Updated : 14 Jul 2014 11:25 AM
உக்ரைனில் நடக்கும் சம்பவங்கள் எல்லோர் மனதிலும் வேதனையை ஏற்படுத்துகின்றன. எதிர்காலம் என்னாகுமோ என்ற கவலையும் ஏற்படுகிறது. வெகு விரைவிலேயே உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமான மோதல்கள் நின்று சமாதானம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. எனினும் உள்நாட்டுச் சண்டைகளைப் பொறுத்தவரை அண்ணன், தம்பிகளுக்குள்ளே ஏற்படும் மோதல் ஆறாத புண்களை ஏற்படுத்திவிடுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வது என்ற முடிவை உக்ரைனின் தற்காலிகத் தலைமை முடிவுசெய்திருக்கிறது. அதற்கு முன்னால் உக்ரைன் தன்னை ஒரு தனிச் சமூகமாகவும் நாடாகவும் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இப்போதுள்ள நெருக்கடியைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு உக்ரைன் ஆட்சியாளர் களுக்கே இருக்கிறது. ஆனால், அதற்குண்டான சட்டபூர்வ அங்கீகாரமும் திறமையும் அவர்களுக்கு இல்லை. உக்ரைன் மக்களுடைய நம்பிக்கையைக்கூட அவர்கள் முழுமையாகப் பெற்றிருக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தத்தால் என்ன பயன்? உக்ரைனின் அரசியல் எதிர்காலத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம்தான் இனி பொறுப்பு. இதை ஐரோப்பிய நாடுகள் பலவும் விரும்பவில்லை.
உக்ரைனின் பிரச்சினை இப்போது எல்லையைத் தாண்டிவிட்டது. உக்ரைனின் எல்லா பகுதிகளும் பற்றி எரிகின்றன. விமானம், டேங்குகள், பீரங்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் தாக்குதல் நடப்பதால் சேதமும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதைத் தீர்க்க சர்வதேச அளவில் உயர்நிலை மாநாடு கூட்டப்பட வேண்டும். உக்ரைன், ரஷ்யா, ஐரோப்பாவின் முன்னணி நாடுகள் ஆகியவற்றுடன் அமெரிக்காவும் இதில் பங்கேற்க வேண்டும்.
உக்ரைனை நாம் அனைவரும் எப்படிக் காப்பாற்றுவது என்பதுதான் விவாதப் பொருளாக இருக்க வேண்டும். எதிர்காலம் என்ன என்பது கேள்விக்குறியாக இருக்கும் இந்த நேரத்தில், உக்ரைனுக்குச் சரியான வழிகாட்டுவது அவசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT