Published : 13 Nov 2017 09:25 AM
Last Updated : 13 Nov 2017 09:25 AM
ந
வ. 10 அன்று கூடிய ஜிஎஸ்டி கவுன்சில், 178 பொருட்களுக்கான வரி விகிதங்களை 28%-லிருந்து 18% ஆகக் குறைத்திருக்கிறது. கவுன்சிலின் இந்த முடிவைப் பற்றி, குஜராத் சட்ட மன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ‘மக்கள் அரசுக்குக் கொடுத்த அழுத்தம் வேலைசெய்துள்ளது’ என்று கூறியிருக்கிறார்.
குஜராத் தேர்தலையொட்டி, ராகுல் மூன்று நாட்களுக்கு ‘நவ்சர்ஜன்’ யாத்திரை யைத் தொடங்கியிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக, கடந்த சனிக்கிழமையன்று, குஜராத்தின் வட பகுதி மாவட்டங்களில் உள்ள கிராமங்களிலும் நகரங்களிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். குஜராத்தின் வட பகுதி மாவட்டங்களுக்கான சட்ட மன்றத் தேர்தல் டிசம்பர் 14 அன்று இரண்டாவது கட்டமாக நடைபெற உள்ளது.
அங்கு நடந்த கூட்டங்களில் ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவைப் பற்றி விளாசித் தள்ளியிருக்கிறார். “ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மீண்டும் ஒருமுறை குறைக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இப்போதும்கூட அதைப் பற்றிய குழப்பங்கள் தீரவில்லை. வெவ்வேறு அடுக்குகளில் அமைந்த இந்த வரியமைப்பு வணிகத்துக்கு எதிரான, மக்களுக்கு எதிரான உள்ளார்ந்த நோக்கம் கொண்டது” எனக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
“இந்தியாவுக்கு ‘கப்பர் சிங்’ (‘ஷோலே’ படத்தின் வில்லன் பாத்திரம்) பாணி வரியமைப்பு தேவையில்லை. நாம் விரும்புவது உண்மையான சரக்கு மற்றும் சேவை வரி. காங்கிரஸ் கட்சி, மக்களுடன் சேர்ந்து போராடி, 28% வரி விதிக்கப்பட்ட பொருட்களை வெளியே கொண்டுவந்திருக்கிறது. அடுத்து, அதிகபட்சம் 18% வரிவிகிதம் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று போராட இருக்கிறோம். பாஜக நிச்சயமாக அதைச் செய்யாது, காங்கிரஸ் கண்டிப்பாக வரி விகிதங்களைக் குறைக்கும்” என்றும் ராகுல் கூறியிருக்கிறார்.
ராகுல் தனது பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன்பு, காந்திநகரில் உள்ள பிரபல மான அக்ஷர்தாம் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். கடந்த நவ.2-ல் இந்தக் கோயிலின் வெள்ளிவிழா கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘நவ்சர்ஜன்’ யாத்திரையின்போது நடந்த ஒவ்வொரு கூட்டத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அதிகபட்சமான ஜிஎஸ்டி வரி விகிதங்கள், பண மதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் அரசின் பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து விமர்சித்துவருகிறார். குறிப்பாக, கடந்த சனிக்கிழமையன்று நடந்த கூட்டங்களில் அரசின் மீதான குற்றச்சாட்டுகளை வலியுறுத்திப் பேசினார்.
ஆண்டுதோறும் இரண்டு கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் வாக்குறுதியை அவர் நினைவுபடுத்தினார். கூடவே, மோடியின் ஆட்சியில் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளும்கூடக் காணாமல்போய்க் கொண்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார்.
“மோடியும் பாஜகவும் கணக்கில் வராத பணம் திரும்பவும் வரப்போகிறது என்றார்கள். அவர்கள் சொன்ன மாதிரி ஒன்றும் நடக்கவில்லை, வேலைவாய்ப்பு பெருகும் என்றார்கள், ஒன்றும் நடக்கவில்லை.
ஆண்டுதோறும் இரண்டு கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று உறுதியளித்தீர்களே மோடி, எங்கே அந்த வேலைவாய்ப்புகள்?” என்று சாபர்காந்தா மாவட்டத்தின் இடர் நகரில் பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களிடம் பேசியபோது கேள்விகளை அடுக்கினார் ராகுல்.
மருத்துவத் துறையில் தனியார்மயம் அதிகரித்துவருவதையும், கல்விக்கான செலவு கள் ஏழை எளியவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குக் கட்டுப்படியாகாத நிலையைப் பற்றியும் அவரது பிரச்சாரத்தில் தொடர்ந்து பேசிவருகிறார்.
தமிழில்: புவி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT