Published : 02 Nov 2017 09:24 AM
Last Updated : 02 Nov 2017 09:24 AM

பருவ மழையைச் சேமிக்கத் தவறுகிறதா தமிழக அரசு?

டந்த நடவுப் பருவத்தில் 150 ஆண்டுகளாக இல்லாத கொடிய வறட்சியை எதிர்கொண்டார்கள் தமிழக விவசாயிகள். கால்நடைகள்கூடத் தண்ணீர் இல்லாமல் இறந்துபோயின. ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. வட கிழக்குப் பருவ மழை தொடங்கிவிட்டது. தமிழகத்துக்கு வழக்கமாகக் கிடைக்கக் கூடிய சராசரியான அளவான 400 - 450 மில்லி மீட்டர் வரையிலான பருவ மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கிடைக்கும் அந்த மழை நீரைத் தேக்கி வைத்துக்கொள்ளத் தகுந்த ஏற்பாடு கள் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதுதான் முக்கியமான கேள்வி!

தமிழகத்துக்கு ஜனவரி முதல் மே மாதம் வரை 179 மில்லி மீட்டர் உபரி மழை பெய்யும். ஜூன் முதல் செப்டம்பர் வரை தென் மேற்குப் பருவ மழை 307 மில்லி மீட்டர் பெய்யும். அக்டோபர் இரண்டாம் வாரம் முதல் ஜனவரி இரண்டாம் வாரம் வரை வட கிழக்குப் பருவ மழை 439 மில்லி மீட்டர் பெய்யும். பருவ நிலை மாற்றத்தைத் தொடர்ந்து, வழக்கமான இந்த மழையின் அளவு சற்றே மாறலாம். ஆனால், கடந்த பருவத்தில் தமிழகத்துக்கான பருவ மழைகள் கைவிட்டதால் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. நூற்றுக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் வெடித்தன. இன்னமும்கூடப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

குடிமராமத்துத் திட்டம்

இந்த நிலையில்தான் கடந்த மார்ச் மாதம், தமிழக ஏரிகளின் முழுக் கொள்ளளவை மீட்கும் வகையில் குடிமராமத்துத் திட்டத்தைத் தொடங்கியது தமிழக அரசு. இதற்காக ரூ. 331 கோடியை ஒதுக்கி, திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஈரோடு 55, தருமபுரி 14, அரிய லூர் 41, கோவை 48, கடலூர் 60 ஏரிகள் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து 2,065 ஏரிகள் தேர்வுசெய்யப்பட்டன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணிமங்கலம் ஏரியைத் தூர்வாரித் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

ஆனால், திட்டம் பெரும்பாலும் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டதால், பல்வேறு ஏரிகளில் கிணறுகள் போல ஏரிகளில் பள்ளம் தோண்டி மண் எடுத்து விற்பனை செய்யப்பட்டது. பல ஏரிகளில் தூர் வாராமலே கணக்குக் காட்டினார்கள். இதுகுறித்து விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், தமிழகத்தில் பெரும்பாலான ஏரிகளில் இந்தத் திட்டத் தின் மூலம் முழுக் கொள்ளவை மீட்க முடியவில்லை. உதாரணத்துக்கு, பெரம்பலூர் மாவட்டம் வடக்கலூர் அகரம் பஞ்சாயத்தில் ஏரியைத் தூர் வாராமலேயே தூர் வாரியதாகக் கணக்குக் காட்டியிருக்கிறார்கள். இது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

மேற்கண்ட ஏரி ஓர் உதாரணம் மட்டுமே என்கிறார் பொதுப் பணித் துறை அதிகாரி ஒருவர். “தமிழகம் முழுவதுமே ஏரிகளில் வேலை பார்த்ததாகக் கணக்கு மட்டுமே காட்டியிருக்கிறார்கள். குடிமராமத்துத் திட்ட அரசாணையின் படி, ஏரிக்கான நீர்ப் பாசனச் சங்கமோ, 1975 சங்கங்களின் பதிவுச் சட்டப்படி விவசாயிகள் குழுவோ இல்லாத சூழலில், ஏரிப் பாசன விவசாயிகள் அனைவரையும் கூட்டி, அவர்களிடம் விவாதித்துத் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்ய வேண்டும். ஏரி மராமத்துப் பணிகளை விவசாயிகள் மூலமாகவே செய்ய வேண்டும். இதற்காக, திட்ட மதிப்பீட்டில் விவசாயிகள் 10%-ஐ உழைப்பாகவோ பணமாகவோ கொடுக்கலாம்.

ஆனால், பெரும்பாலான ஊர்களின் ஏரிகளில் இப்படி ஒரு திட்டம் நடப்பது விவசாயிகளுக்கே தெரியப்படுத்துவதில்லை. உள்ளூரில் ஆளும்கட்சி தொடர்புடைய சில விவசாயிகளிடம் கையெழுத்து பெற்றும் போலியாகப் பலரது கையெழுத்துகளைப் போட்டும் திட்டம் நிறைவேற்றப்பட்டதாகக் கணக்கு எழுதியிருக்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி நீர்வள, நிலவளத் திட்டத்தின் கீழ் 2016-17-ம் ஆண்டு இதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடி மற்றும் 2017-18-ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ. 331.68 கோடி என மொத்தம் 431.68 கோடி நிதி ஒதுக்கீடு செலவு செய்யப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது.

ஆனால், வேலைகள் மட்டும் எதுவும் நடக்கவில்லை. பல இடங்களில் சுமார் 10 மீட்டர் வரை கிணறு போலப் பள்ளங்கள் தோண்டி மண்ணை விற்றுவிட்டார்கள். இந்தப் பள்ளங்களில் தண்ணீர் நிரம்பினாலும் அவை வாய்க்காலுக்குச் செல்ல வாய்ப்பு இல்லாததால் பாசனத்துக்குப் பயன்படாது” என்கிறார் அவர்.

நீரைத் தேக்கி வைக்க முடியாத நிலை

சமீபத்தில் தமிழக முதல்வர் தொடங்கிவைத்த மணிமங்கலம் ஏரியையே எடுத்துக்கொள்வோம். இந்த ஏரியுடன் 57 ஏரிகள் சங்கிலித்தொடர் ஏரிகளாக அமைந்துள்ளன. அவற்றின் உண்மையான கொள்ளளவு 225 மில்லியன் கன அடியாகும். இன்றைய நிலவரப்படி மேற்கண்ட 225 மில்லியன் கன அடியில் 100 மில்லியன் கன அடி நீரைக்கூடத் தேக்கி வைக்க முடியாத நிலையில்தான் ஏரிகள் இருக்கின்றன.

தற்போது பாலாற்றில் வெள்ளம் வந்துகொண்டிருக்கிறது. பாலாறு மூலம் தண்ணீர் பெறும் ஏரிகள் என வாணியம்பாடியில் ஒன்பது ஏரிகளில் ஐந்தும், ஆம்பூரில் 10 ஏரிகளில் இரண்டும், காட்பாடியில் 54 ஏரிகளில் 23-ம், வேலூரில் 16 ஏரிகளில் 3-ம், வாலாஜாவில் 93 ஏரிகளில் 16 மட்டுமே ஓரளவு கொள்ளளவை எட்டியுள்ளன. இது அரசு சொல்லும் கணக்கு என்பதால் எந்தளவுக்கு உண்மை என்றும் சொல்ல இயலாது.

தமிழகத்தில் 39,202 ஏரிகள் இருக்கின்றன. இவற்றின் மொத்த நீர் கொள்ளளவு சுமார் 390 டி.எம்.சி. தமிழகத்தின் மொத்த அணைக்கட்டுகளின் நீர் கொள்ளள வான 243 டி.எம்.சி-யைவிட இது அதிகம். தற்போது குடி மராமத்துத் திட்டத்துக்காகத் தேர்வுசெய்யப்பட்ட ஏரிகள் உட்பட மேற்கண்ட மொத்த ஏரிகளும் அவற்றின் முழுக் கொள்ளளவில் 40% மட்டுமே கொண்டிருக்கின்றன. இதன் மூலம் தமிழகம் முழுவதும் வரும் வட கிழக்குப் பருவ மழைப் பொழிவின் மூலம் கிடைக்கும் தண்ணீரில் சுமார் 250 டி.எம்.சி-யைத் தேக்கி வைக்க முடியாமல் போய்விடும்.

பணமும் பணிகளும் என்ன ஆயின?

குடிமராமத்துத் திட்டம் என்றில்லை, ஏரிகளை மேம்படுத்த பிரதம மந்திரி வேளாண்மை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழும் தமிழக அரசு ஏராளமான நிதியைப் பெற்றுள்ளது. மேற்கண்ட திட்டத்தில் 2015 - 2020 ஆண்டு வரை ஐந்தாண்டுகளுக்கு ரூ.50,000 கோடி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 2015-16 நிதியாண்டில் ஆயக்கட்டுப் பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மைப் பணிகளுக்காக ரூ.201.587 கோடியும், ஒருங்கிணைந்த நீர் மேம்பாட்டுத் திட்டத்துக்காக ரூ.750 கோடி என்று பெரிய தொகை அது. இவ்வளவு பணமும் திட்டப் பணிகளும் என்ன ஆனது என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது!

உலக அளவிலான பருவ நிலை மாற்றங்களால் சமீபத்திய ஆண்டுகளாகப் பருவ மழைகள் தப்புவது வழக்கமாக உள்ளது. தமிழகத்தில் இனி ஒவ்வொரு ஆண்டுமே பருவ மழைகள் பொழியும் என்று எதிர்பார்க்க முடியாது. பெரு வெள்ளம் வரலாம் அல்லது கடும் வறட்சி ஏற்படலாம். சராசரியாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பருவ மழை பெய்யும் என்கின்றன ஆய்வுகள். இதோ இப்போது தொடங்கியிருக்கும் வட கிழக்குப் பருவ மழையைவிட்டால் அடுத்த தென் மேற்குப் பருவ மழை கிடைக்கும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. இப்போது இந்தத் தண்ணீரையும் கடலுக்குச் செல்லவிட்டு, அடுத்தடுத்த மாதங்களில் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

- டி.எல்.சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x