Published : 27 Jul 2014 12:00 AM
Last Updated : 27 Jul 2014 12:00 AM
நீதிபதி அசோக் குமார் என்றைக்குமே புதிரான மனிதர். எப்போதுமே, அவரைச் சுற்றி சிக்கல்கள் வலம்வந்துள்ளன. கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்து அந்தோனிசாமி என்று ஞானஸ்நானம் பெற்ற அவர் பின்னர் ஆரிய சமாஜத்தில் சுத்திச் சடங்குசெய்து தன்னை இந்துவாக அறிவித்துக்கொண்டாலும், தனது குழந்தைகளுக்கு கிறிஸ்துவப் பெயர்களையே சூட்டி மகிழ்ந்தார். நெல்லை மாவட்ட நீதிமன்றங்களில் சிறந்த வழக்கறிஞர் என்று பெயர்பெற்ற அவர் சிறப்பான பண்புகளைப் பெற்றிருந்தார். 1983-ல், மதுபான உரிமம் ஊழல் தொடர்பாக எம்ஜிஆர் அரசுக்கெதிராக மத்திய அரசு அமைத்த விசாரணை கமிஷனில், எம்ஜிஆருக்காக மேனாள் சட்ட அமைச்சர் அசோக் சென்னுக்கு உதவியாக ஆஜரானார். நெல்லை மாவட்டத்துக்கே உரித்தான முறையில் அண்ணாச்சி என்று தன்னைவிட இளையோர்களால் அழைக்கப்பட்ட அவர் தேர்தல் களத்தில் திடீரென்று குதித்தார். 1977 மற்றும் 1980 சட்டமன்றத் தேர்தல்களில் ஜனதா கட்சி சார்பாகப் போட்டியிட்டுத் தோற்ற பின்னரே அவரது பார்வை நீதித்துறை பக்கம் திரும்பியது.
1987-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஐவர் நடத்திய நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட நீதிபதியாகப் பதவியில் அமர்த்தப்பட்டார். அன்றிலிருந்து அவரைச் சுற்றிப் படர்ந்தன சிக்கல்கள் பல. சில ஆண்டு களுக்குள்ளேயே வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும், பல வகையான பணப் பரிமாற்றங்கள்பற்றி உயர் நீதிமன்றத்திற்கு முன்தகவல் அளிக்கவில்லை என்றும் அவர்மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழுவின் உள்விசாரணையில் அவரே தனது வழக்கை நடத்திக்கொண்டார். சாட்டப்பட்ட குற்றங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லையென்று நீதிபதிகள் தமது அறிக்கையை சமர்ப்பித்ததால் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.
மாவட்ட நீதிபதியாக 13 ஆண்டுகள் இருந்த அவர் முதுநிலைப்படி உயர் நீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்பு இருந்தது. 2001-ல் தலைமை நீதிபதி எம்.கே.ஜெயின் அப்போதிருந்த காலியிடங்களை நிரப்ப 9 வழக்கறிஞர்களின் பெயரை உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்குப் பரிந்துரை செய்திருந்தார். அப்போது மாவட்ட நீதிபதிகள் எவரது பெயரும் அப்பட்டியலில் இல்லாததுகுறித்து அவர்கள் வருத்தப்பட்டனர். பரிந்துரைக்கப்பட்ட வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருந்தால், அசோக் குமாருக்கு உயர் நீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்பு குறைந்திருக்கும். ஏனெனில், அப்போதே அவரது வயது 54. அந்தச் சமயத்தில் இருந்த பாஜக அரசுக்கு அருண் ஜேட்லிதான் சட்ட அமைச்சர். தமிழகத்திலிருந்து கொடுத்த அழுத்தத்தில் 9 வழக்கறிஞர்களின் பெயர்கள் அடங்கிய நீதிபதிகள் நியமனப் பட்டியல் மறுபடியும் திருப்பி அனுப்பப்பட்டது. மூன்றில் ஒரு பங்கு பதவிகளுக்கு மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை அனுப்ப சட்ட அமைச்சகம் உத்தரவிட்டது. பட்டியல் திருப்பி அனுப்பப்பட்டதால்தான் அசோக் குமாருக்கு உயர் நீதிமன்றம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அன்றைய பாஜக அரசுதான் அதற்கு உதவியது.
தசையால் ஆனதா, களிமண்ணால் ஆனதா?
சென்னை உரிமையியல் வழக்கு மன்றங்களின் தலைமை நீதிபதியாக அசோக் குமார் பதவிவகித்தபோதுதான் திமுக தலைவர் கருணாநிதி கைதுசெய்யப்பட்டு, நாடெங்கிலும் அந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு கடும் கண்டனங்களும் எழுந்தன. மத்திய அரசும் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு நிலையைப் பரிசீலிக்க பார்வையாளர் ஒருவரை அனுப்பியது. நீதிமன்றக் காவலுக்குக் கொண்டுவரப்பட்ட திமுக தலைவரின் கைதுபற்றிப் பல சந்தேகங்களை நீதிமன்ற விசாரணையில் எழுப்பிய நீதிபதி அசோக் குமார் அரசு வழக்கறிஞரைப் பார்த்து ‘உங்கள் அரசின் இதயம் தசை யால் ஆனதா, களிமண்ணால் ஆனதா?’ என்றெழுப்பிய கேள்வி ஊடகங்களில் பரவலாக ஒளிபரப்பப்பட்டது. மூத்த அரசியல்வாதி ஒருவரைச் சட்ட நடைமுறைப்படி கைது செய்யாததுபற்றி அந்த வழக்கின் விசாரணை அதிகாரியைக் கேள்வி கேட்டதும் பரபரப்பைக் கிளப்பியது. பின்னர்
மு.க. ஸ்டாலின் மீதான மேம்பால ஊழல் வழக்கில் (2002) குற்றத்துக்கான முகாந்திரமில்லை என்று தனது உத்தரவில் குறிப்பிட்டதை மேல்முறையீட்டில் உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்ததோடு, ‘குற்றவியல் நடுவர் மன்றங்கள், அரசியல் விளையாட்டு மைதானங்களல்ல’ என்றும் குறிப்பிட்டது. இச்சம்பவம் நடந்த சில வாரங்களுக்குள் பணிக்காலம் முடியும் முன்னரே கிருஷ்ணகிரி மாவட்ட நீதிபதியாக அசோக் குமார் பணிமாற்றம் செய்யப்பட்டார்.
மாவட்ட நீதிபதியான அசோக் குமாரின் பெயர் உயர் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்கப்படப்போவதாகச் செய்தி வந்தவுடனயே மேலும் ஒரு சோதனை அவருக்குக் காத்திருந்தது. ஜியாவுதீன் என்ற வழக்கறிஞர் பொதுநல வழக்கொன்றைத் தாக்கல்செய்தார். மாவட்ட நீதிபதியானபோது அசோக் குமார் கொடுத்த சாதிச் சான்றிதழ் போலியானதென்றும், பிறப்பிலிருந்தே கிறிஸ்துவரான அவருக்குப் பட்டியலின சாதிச் சான்றிதழ் பெற உரிமையில்லை என்றும், அவரை மாவட்ட நீதிபதியாகப் பணியில் அமர்த்தியது தவறு என்றும் வாதாடப்பட்டது. தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி தலைமையில் அமைந்த அமர்வு அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது (2002).
தடைகளெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நீங்கிய பின் 3.4.2003 அன்று அசோக் குமாரும், மற்ற 7 நீதிபதிகளும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். அரசமைப்புச் சட்டத்தின்படி அரசு ஊழியர் கள்போல் தகுதிகாண் பருவத்தில் வைத்து நிரந்தரப்படுத்தும் முறை நீதிபதிகளுக்குக் கிடையாது. கடந்த சில ஆண்டுகளில் கூடுதல் நீதிபதிகளை, தகுதிகாண் பருவத்தில் இருக்கும் அரசு ஊழியர்கள்போல் நடத்திவரும் போக்கு அதிகரித்திருக்கிறது. அதேபோல், பணிக்காலத்தின்போது அவர்கள் முறைகேடாக நடந்தால் அரசமைப்புச் சட்டப்படி அவர்களைப் பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்காமல் அவர்களுடைய கூடுதல் நீதிபதி பணிக்காலத்தை மறுபடியும் நீட்டிக்காமல் செய்துவிடுவதன் மூலம் அவர்களைப் பணியிலிருந்து அகற்றுவதும் அதிகமாகிவிட்டன. கூடுதல் நீதிபதிகளை வேறு மாநிலங் களில் உள்ள நீதிமன்றங்களுக்குப் பணிமாற்றம் செய்யும் தவறான நடவடிக்கைகளும் பெருகிவிட்டன. கூடுதல் நீதிபதியாக ஒருவர் சுதந்திரமாகச் செயல்படுவதை இந்த அணுகுமுறை தவிர்க்கிறது. கூடுதல் நீதிபதிகள் தலைமை நீதிபதி யிடமும், கொலிஜிய நீதிபதிகளிடமும் அதீதப்பணிவும், பரிவும் காட்டிக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலைகளும் அதிகரித்துள்ளன. நிரந்தர நீதிபதியாக நான் நியமிக்கப்பட்டதை யொட்டி நடைபெற்ற தேநீர் விருந் தொன்றில் மூத்த நீதிபதியொருவர் வேடிக்கையாக இவ்வாறு குறிப்பிட்டார்: “கொட்டடியிலிருந்து மேலுமொரு ஆடு தப்பித்துவிட்டது”.
நீண்ட நாள் நீதிபதி!
நீதிபதி அசோக் குமாரின் இரண்டாண்டுகள் பணிக் காலம் முடிவுக்கு வந்தபோது விசித்திரமாக 1.4.2005 முதல் அவருக்கும், அவருடன் இருந்த மற்ற 7 பேருக்கும் நான்கு மாதப் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அந்தப் பணிக் காலம் முடிந்த பின் (27.7.2005) ஏழு நீதிபதிகள் நிரந்தர நீதிபதி களாக்கப்பட்டனர். முதுநிலைப் பட்டியலில் அசோக் குமாரின் பெயர் மேலே இருந்தாலும் அவருக்கு மீண்டும் ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அந்தப் பணிக் காலம் 3.8.2006 அன்று முடிவுக்கு வந்தும் மறுபடியும் ஆறுமாத காலம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. 3.2.2007 அன்று அவர் நிரந்தர நீதிபதியாக நியமனம்செய்யப்பட்டு ஆந்திர உயர் நீதிமன்றத்துக்கு ஊர்மாற்றம் செய்யப்பட்டார். இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர் 9.7.2009 அன்று அவர் ஓய்வு பெற்றார்.
அவரது பணிக் காலத்தை நீட்டி அவருக்குப் பதவி நிரந்தரம் அளிக்கும் முயற்சியை எதிர்த்து முன்னாள் சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷண், ஒரு பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றத்திலேயே தொடர்ந்தார். அவரது பதவி நீட்டிப்புக்கு கொலிஜியம் எதிர்ப்பு தெரிவித்த பிறகும் தலைமை நீதிபதி பதவி நீட்டி, நிரந்தரம்செய்தது தவறென்று வாதாடப்பட்டது. காலம்கடந்து வழக்கு போடப்பட்டதாலும், முதல் நியமன உத்தரவை எதிர்த்து வழக்கு போடப்படாததாலும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது (2008). நீதிபதி அசோக் குமார் சொற்ப காலமே பதவி வகிக்கப்போவதாலும், அவர் ஆந்திரத்துக்கு ஊர்மாற்றம் செய்யப்பட்டதாலும் வழக்கைத் தள்ளுபடிசெய்வதாக நீதிபதிகள் கூறினர். பல வழக்குகளைத் தனது பதவிக் காலத்தில் சந்தித்து, அதில் வெற்றியும் பெற்ற ஒருவராக இந்தியாவிலேயே நீதிபதி அசோக் குமார் மட்டும்தான் இருப்பார்.
3.8.2005-ல் ஒரு வருடம், 3.8.2006-ல் ஆறு மாத நீடிப்பு, 3.2.2007-ல் பணிநிரந்தர உத்தரவு இவை மூன்றுமே இன்றைக்கு சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. நீதிபதி மார்கண்டேய கட்ஜு அசோக் குமாருக்கு பதவி நீட்டிப்பு அளித்த மூன்று தலைமை நீதிபதிகளையும் குற்றம்சாட்டியதோடு, அன்றைக்கு ஐக்கிய முன்னணி அரசின் முக்கிய அங்கமான திமுகவின் அரசியல் அழுத்தத்தால்தான் பிரதமர் மன்மோகன் சிங் இத்தகைய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டார் என்றும் குறைகூறினார்.
கட்ஜுவுக்கு எதிரான கருத்துகள்
திமுக தலைவர், கட்ஜுவை முரண்பாடுகளின் மொத்த உருவம் என்று கூறியதோடு, இந்தப் பிரச்சினையை இவ் வளவு நாள் கழித்து எழுப்பியதில் கட்ஜுவுக்கு உள்நோக்கம் இருக்கிறது என்றும் கூறினார். ஓய்வு பெற்ற மூன்று தலைமை நீதிபதிகளில் இருவர் (லஹோதி, பாலகிருஷ்ணன்) தங்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
கட்ஜுவுக்கு எதிராக மூன்று கருத்துகள் தெரிவிக்கப் படுகின்றன. காலம் கடந்து இந்தப் பிரச்சினைகளைக் கிளப்பு கிறார்; பத்தாண்டு காலத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக, இந்திய பத்திரிகை கவுன்சில் தலைவராக, பதவிகளுக்கு ஆபத்து வராத வகையில் பதவியும் அனுபவித்துக்கொண்டு குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்; அசோக் குமார் பதவி நிரந்தரமானபோது உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அவர்தான் இருந்தார் இவைதான் அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள்.
சுதந்திரப் போராட்ட தலைவர் நேதாஜியின் மறைவு குறித்து 70 ஆண்டுகளாகியும் உண்மை கண்டுபிடிக்கப்படாததும் அதற்காக இன்றுவரை மத்திய அரசு மூன்று விசாரணை கமிஷன்களை நியமித்ததும் நினைவுக்கு வருகின்றன. தீவிரமான குற்றச்சாட்டுகளை என்றைக்காவது விசாரிக்கா விட்டால் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு எதிர்காலத்தில் குந்தகம் ஏற்படுவதோடு, நீதிபதிகள் நியமன விஷயத்தில் சீர்திருத்தங்கள் பற்றிப் பேசவும் முடியாது. கட்ஜு கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையா என்பதைத்தான் பார்க்க வேண்டும். சம்பவங்கள் நடந்த காலத்தில் மத்திய சட்ட அமைச்சராக இருந்த பரத்வாஜ் அரசியல் அழுத்தத்தைப் பற்றி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அசோக் குமார் நியமனத்துக்கு, அந்தக் காலகட்டத்தில் உச்ச நீதிமன்ற கொலிஜிய நீதிபதியாக இருந்த ரூமா பால், கொலிஜியத்தின் முழு எதிர்ப்பு இருந்ததைக் குறிப்பிட்ட தோடு நீதிபதிகள் நியமனத்திலுள்ள ரகசியம் பேணும் முறையையும் கண்டித்துள்ளார். வேறொரு வழக்கில் நியமனக் கோப்புகளைப் பரிசீலனை செய்த நீதிபதி பி.கே. மிஸ்ரா (கோவா மனித உரிமை ஆணையத்தின் இந்நாள் தலைவர்) கட்ஜு தெரிவித்த கருத்துகளைத்தான் கோப்பில் பார்க்க நேர்ந்தது என்று தெரிவித்துள்ளார். மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய இரு நீதிபதிகள் தங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கூறிய உண்மைகளை யாராலும் மறுக்க முடியாது.
எந்தக் காரணத்துக்காக கட்ஜு இந்தக் குற்றச்சாட்டுகளைத் தற்போது எழுப்புகிறார் என்பதையும், அசோக் குமார் நியமனத்துக்கு அவர் ஒப்புதல் அளித்தார் என்பதையும் கருத்தில் கொள்ளத் தேவையில்லை. ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்ற அடிப்படையில், விசாரணை ஆணையம் அமைத்து கட்ஜு எழுப்பிய குற்றச்சாட்டுகளை விசாரித்து, அதன் அறிக்கையைப் பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதுடன் குற்றச்சாட்டுகள் உண்மையெனில், நீதிபதிகள் நியமன விஷயத்தில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி, புதிய நியமன முறையை உருவாக்குவதே சிறப்பான வழி.
- கே. சந்துரு, ம ுன்னாள் நீதிபதி, உயர் நீதிமன்றம்-சென்னை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT