Published : 14 Nov 2017 10:35 AM
Last Updated : 14 Nov 2017 10:35 AM
தொ
ழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்குத் தொழிற்சங்க ஒருங்கிணைப்பின் காரணமாகக் குறைந்தபட்சப் பணிப் பாதுகாப்பு உண்டு. ஆனால் ஐடி துறையில் பணிபுரிபவர்களுக்கு ஊதியம் அதிகம் என்றாலும் பணிப் பாதுகாப்பு எப்போதும் கேள்விக்குறிதான். அவர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளை நிறுவனங்கள் அனுமதிப்பதே இல்லை. அரசும் அதுபற்றி அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. இந்நிலையில் கர்நாடக அரசு சமீபத்தில் எடுத்துள்ள முடிவு நம்பிக்கையளிக்கிறது.
பணி நேரம் அதிகரிப்பு, அறிவிக்கப்படாத வேலை நீக்கம் என்று தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் அனுபவித்துவரும் சோகங்கள் சொல்லி மாளாது. அவர்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கான தொழிலாளர் அமைப்பு தொடங்கப்பட்டாலும்கூட நிறுவனங்கள் அவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. முக்கியமாக, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் பணியாளர்கள், தொந்தரவு செய்பவர்களாகக் கருதப்பட்டு நிறுவனத்தின் கறுப்புப் பட்டியலில் இடம்பெறும் அபாயத்தையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு, அறிவிக்கப்படாத வேலை நீக்கத்தை எதிர்த்து சில பணியாளர்கள் நீதிமன்றங்களையும் நாடியிருக்கிறார்கள்.
இந்தச் சூழலில், ஐடி தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான தொழிற்சங்கத்தைக் கர்நாடக மாநிலத்தின் தொழிலாளர் ஆணையம் அங்கீகரித்திருப்பது மிக முக்கியமானது. கர்நாடக மாநிலத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவைகள் தேவைப்படுகிற தொழில்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் சங்கம் என்பது இந்தச் சங்கத்தின் பெயர் (சுருக்கமாக கே.ஐ.டி.யு). தற்போது 250 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பெங்களூரு, நாட்டிலேயே மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையமாக விளங்குகிறது. நாட்டிலுள்ள 40 லட்சம் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களில் 15 லட்சம் பேர் பெங்களூருவில் பணியாற்றுகிறார்கள்.
தற்போது அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுக்குப் பணிப் பாதுகாப்பு இருப்பதால், அவர்களால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகத்தை நோக்கி கேள்விகள் எழுப்ப முடியும். தங்களது சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பாதிக்கப்படும்போது அதைப் பற்றி நிர்வாகத்தோடு பேசமுடியும். இந்தியாவில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த சில மாதங்களில் தங்களது மொத்த பணியாளர்களில் நான்கில் ஒரு பங்கினரை, ஏறக்குறைய ஒன்றரை லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பியுள்ளன. எல்லாம் டிஜிட்டல் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தின் விளைவு.
வழக்கம்போல, கர்நாடகத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான கே.ஐ.டி.யு-வின் பின்னணியிலும் ‘தோழர்கள்’தான் இருக்கிறார்கள். சிஐடியு தொழிற்சங்கத்தின் உதவியுடனும் வழிகாட்டலுடனும்தான் கே.ஐ.டி.யு தொடங்கப்பட்டுள்ளது. பெங்களூருவுக்கு அடுத்த தகவல் தொழில்நுட்ப மையம் சென்னைதான். அங்குள்ள அத்தனை பிரச்சினைகளும் இங்கேயும் உண்டு. இங்கும் ஐடி பணியாளர்களுக்குத் தொழிற்சங்கம் தொடங்குவதற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐடி தொழிலாளர்கள் பிரிவு, 2015 முதல் தொடர்ந்து முயற்சித்துவருகிறது. அனுப்பும் விண்ணப்பங்களில் தவறுகளைத் திருத்தச் சொல்லி தமிழ்நாடு தொழிற்சங்கப் பதிவாளரும் திருப்பியனுப்பிக்கொண்டே இருக்கிறார் என்கிறார்கள். கர்நாடகத்தைப் பின்பற்றி ஐடி பணியாளர்கள் தொழிற்சங்கத்தைத் தமிழக அரசும் அங்கீகரிக்க வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT