Published : 12 Nov 2017 11:10 AM
Last Updated : 12 Nov 2017 11:10 AM
வ
டகிழக்குப் பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே அதன் பாதிப்பை உணர முடிந்தது. 2015-ல் ஏற்பட்ட வெள்ளம்போல் இந்த முறையும் நடந்துவிடுமோ என்று சென்னைவாசிகள் அஞ்சும் அளவுக்கு மழை பெய்தது. புவி வெப்பமடைவதால் வருங்காலத்தில் தமிழ் நாட்டில் மிகக் கடுமையான வறட்சியும், பெருவெள்ளமும் மாறி மாறி ஏற்படும் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. தமிழ்நாட்டைத் தொடர்ந்து தாக்கும் வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு இரண்டுமே மக்களுக்கு அளவிட முடியாத துயரத்தையும் பெரும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துகின்றன. கடலோர மாவட்டங்களிலும், சென்னை போன்ற மக்கள் நெருக்கம் நிறைந்த பெரு நகரங்களிலும் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கால் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரமும் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. வரும்காலங்களிலும் இவ்வாறான பாதிப்புகள் மேலும் அதிகரிக்கலாம். இதற்கு நிரந்தரத் தீர்வே இல்லையா?
மழைக் காலத்தில் ஒவ்வொரு துளி நீரையும் சேமித்து வறட்சிக் காலத்தில் அதை பயன்படுத்துவதுதான் ஒரே வழி. நாம் அறிந்த விஷயம்தான். இதற்கு ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் மழை நீரைச் சேமித்து வறட்சியைப் போக்கவும், வெள்ளத்தை நீக்கவும் பெரும்பங்கு வகிக்கின்றன. சமீப காலத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் வறட்சி மற்றும் வெள்ளப் பெருக்குக்குப் பரவலாக முன் வைக்கப்படும் குற்றச்சாட்டு, நீர்நிலைகளில் சரியான முறையில் தூர் வாரப்படவில்லை என்பதுதான்!
அணுகுமுறைதான் பிரச்சினை
நீர்நிலைகளைத் தூர் வாருவதற்காகக் கடந்த காலம் தொட்டு அரசு மற்றும் அரசுசாரா அமைப்புக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தே வருகின்றன. குறிப்பாக, 2007 முதல் 2014 வரை உலக வங்கியால் வழங்கப்பட்ட ரூ. 2,524 கோடி நிதியுதவியுடன் மாநிலத்தில் உள்ள பல நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டன. இதன் அடுத்த கட்டமாக, உலக வங்கியின் உதவியுடன் ரூ. 3,042 கோடி மதிப்பிலான குடிமராமத்து திட்டத்தைத் தமிழகத்தில் உள்ள 4,778 நீர்நீர்நிலைகளிலும், 477 நீர்தேக்கங்களிலும் வரும் 7 ஆண்டுகளுக்கு அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அரசு சார்ந்த நடவடிக்கை மட்டுமன்றி, திமுகவினர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசுசாரா அமைப்புகளும் தமிழகத்தின் பல இடங்களில் நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டுவருகின்றன. மேலும், மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஆங்காங்கே உள்ள நீர்நிலைகள் சீரமைக்கப்படுகின்றன. இத்தனைக்குப் பிறகும் வெள்ளத்தின் பாதிப்பு மேலும் கடுமையாகவே உள்ளதென்றால் நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் தற்போது பின்பற்றப்படும் அணுகுமுறையில்தான் பிரச்சினை என்பது தெளிவாகிறது.
நீர்நிலைகளில் படிந்துள்ள அளவுக்கதிகமான வண்டல் மண்ணே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம்; வண்டல் மண்ணை அகற்றி நீர்நிலைகளின் கரைகளை உயர்த்துவதன் மூலம் வெள்ளம் போன்ற பிரச்சினைகளைச் சரி செய்துவிடலாம் என்ற அணுகுமுறையே தற்போது நடைமுறையில் உள்ளது. மிகக் குறுகிய பார்வை கொண்ட அணுகுமுறை இது. இதைத் தவிர்த்து ஒரு பரந்த, தொலைநோக்கு கொண்ட மாற்றுத் திட்டம் அவசியம்.
பழைய பாடம்
ஒரு ஏரியை எடுத்துக்கொண்டால் அதன் செயல்பாடு இரண்டு மிக முக்கிய நிலப்பரப்புகளை உள்ளடக்கியது. ஒன்று, அதன் நீர்ப்பிடிப்புப் பகுதி. இது ஏரியின் மேற்பரப்பில் உள்ள பகுதி. இங்கிருந்துதான், ஏரிக்கான மழை நீர் வந்து சேர்கிறது. சில ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதி பல மைல்கள் பரந்து விரிந்திருக்கும். உதாரணமாக, சென்னையில் உள்ள சில பெரிய ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்புப் பகுதி பல மைல் தூரமுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைந்துள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீர்நிலைகளின் சங்கிலித் தொடர் அறுபடும்போது அது பெருமளவு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் என்பது கடந்தகாலம் நமக்குச் சொல்லும் பாடம்.
சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலமும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்த 32 ஏரிகளும் சங்கிலித் தொடர் இணைப்பைப் பெற்றிருந்தன. மழைக் காலத்தில் ஒவ்வொரு ஏரியும் நிரம்பியபின் அதன் உபரி நீர் அதற்கு கீழ்ப்பகுதியில் உள்ள அடுத்த ஏரிக்குச் செல்லும். மொத்தமுள்ள 32 ஏரிகளும் நிரம்பிய பிறகு அவற்றின் உபரி நீர் கடைசியாகப் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை நிரப்பும். அதிகப்படியான நீர்வரத்து இருக்கும்பட்சத்தில், அது ஏரியின் வடிகால் பகுதியில் உள்ள ஒக்கியம் மடுவு, பக்கிங்காம் கால்வாய் வழியாக வங்காள விரிகுடாவைச் சென்றடையும்.
இதெல்லாம் சுமார் 35 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை. ஆனால், இப்போது ஆக்கிரமிப்பு, அபரிமிதமான கழிவுகளைக் கொட்டுவது போன்ற காரணங்களால் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்த பெருவாரியான ஏரிகள் சங்கிலித் தொடரை இழந்தும், அழிந்தும்விட்டன. இப்போது ஒரு சாதாரண மழைக்கே பள்ளிக்கரணை பகுதி கடுமையாகப் பாதிக்கப்படுவதற்கு அதன் நீர்ப்பிடிப்புப் பகுதியைச் சரியாக பராமரிக்காததுதான் காரணம். தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் இதே நிலைதான்.
ஏரியின் மற்றொரு முக்கியமான பகுதி, வடிகால் பகுதி. ஏரியில் அளவுக்கதிகமாக நிரம்பும் உபரி நீரை வெளியேற்றுவதிலும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதிலும், உபரி நீரை மற்ற நீர்நிலைகளிலோ அல்லது கடலிலோ சீரான முறையில் கொண்டு சேர்ப்பதிலும் வடிகாலே முக்கியப் பங்கு வகிக்கிறது. சென்னையில் வெள்ளம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் வடிகால் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு போன்ற பிரச்சினைகள். ஆகவே, ஒரு நீர்நிலையின் பராமரிப்பு என்பது அதன் நான்கு பக்கக் கரைகளை மட்டும் உள்ளடக்கிய பகுதி மட்டுமல்ல. அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும் வடிகால் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
நீர்நிலைகளில் வண்டல் மண் படிவது என்பது அவற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்படும் மண் அரிப்பால் ஏற்படுவது. ஆக மண் அரிப்பைத் தடுக்காமல், வெறுமனே தூர்வாரிக்கொண்டிருந்தால் இதற்குத் தீர்வு கிடைக்காது. சொல்லப்போனால், மண் அரிப்பை முற்றிலுமாகத் தடுக்கும்பட்சத்தில், நீர்நிலைகளை அடிக்கடித் தூர்வார வேண்டிய அவசியமே ஏற்படாது.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மண் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. காடுகள் அழிப்பு, புல்வெளிகள் அழிப்பு, மண் அரிப்பை ஏற்படுத்தும் விவசாய முறைகள், மணல் அள்ளுதல், நில ஆக்கிரமிப்பு, நிலத்தைப் பயன்படுத்தும் முறை, திரவ மற்றும் திடக்கழிவுகளைக் கொட்டுதல் என்று நீர்ப்பிடிப்புப் பகுதியின் இயற்கையான தன்மையை குலைக்கும் அத்தனை நடவடிக்கைகளும் மண் அரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதேபோல், வடிகால் பகுதியில் ஆக்கிரமிப்புகள், கொட்டப்படும் திட, திரவக் கழிவுகள், சாக்கடை வசதியற்ற - அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள், வடிகால் ஆறு மற்றும் கால்வாய்களின் முகத்துவாரங்களில் ஏற்படும் அடைப்புகள் போன்றவையும் வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொரு நீர்நிலையின் நீர்ப்பிடிப்புப் பகுதியின் உண்மையான விஸ்தீரணம் கடந்த காலத்தில் என்னவாக இருந்தது, அது இப்போது எவ்வளவாகக் குறைந்துள்ளது, எந்தெந்தக் காரணங்களால் குறைந்துள்ளது, நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்த மற்ற நீர்நிலைகளின் தற்போதைய நிலை என்ன, நீர்வழித்தடங்களின் நிலை என்ன, என்னென்ன காரணிகள் மண் அரிப்பை ஏற்படுத்துகின்றன என்றெல்லாம் கண்டறிய வேண்டும். அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு மண் அரிப்பு ஏற்படுகிறது, எவ்வளவு கழிவு கொட்டப்படுகிறது, எங்கெங்கெல்லாம் நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள் மற்றும் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றலாம், ஆக்கிரமிப்பை அகற்ற இயலாதபட்சத்தில் எவ்வாறு மாற்று நீர்வழித்தடங்களை ஏற்படுத்தலாம் என்பது போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் நீர்ப்பிடிப்புப் பகுதியைக் காப்பதற்கான மாற்று வழிகளையும் பரிசீலிக்க வேண்டும். புதிய நீர்நிலைகளை உருவாக்க இயலுமா, இந்த பிரச்சினைகளைச் சரிசெய்வதற்கு என்னென்ன மாதிரி திட்டங்களைத் தீட்டலாம், குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் என்னென்ன என்பன போன்ற முக்கியமான தகவல்களைத் திரட்டி நடவடிக்கைகளை வகுக்க வேண்டும். இதே மாதிரியான நடவடிக்கைகளை வடிகால் பகுதிகளுக்கும் வகுக்க வேண்டும்!
மேலும், தற்போதய நீர்நிலை மேலாண்மைத் திட்டங்கள் பொதுப்பணித் துறையில் உள்ள பொறியாளர்களால் மட்டுமே வகுக்கப்படுகின்றன என்பதால், நீர்நிலைகளைத் தூர் வாருவதும் அதன் கரைகளை உயர்த்துவது போன்றவை மட்டுமே நீர்நிலை மேலாண்மை என்ற குறுகிய பார்வை கொண்ட அணுகுமுறையே கையாளப்படுகிறது. இந்தப் போக்கில் மாற்றம் வேண்டும். மாற்று அணுகுமுறையை வகுப்பதில் பொறியாளர்கள் மட்டுமன்றி, பொருளியல் வல்லுநர்கள், சமூகவியலாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நீரியல் ஆய்வாளர்கள், சட்ட வல்லுநர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள், பொதுமக்களின் பிரதிநிதிகள் போன்ற அனைத்துப் பிரிவினரையும் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்.
அதேபோல், நீர்நிலைகள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் வந்தாலும் நீர்ப்பிடிப்பு மற்றும் வடிகால் பகுதிகள் வனத் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் வருவாய்த் துறை போன்ற மற்ற துறைகளின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால், சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கை முக்கியம். நீர்நிலைகளை முழுமையாகப் பாதுகாத்து, வறட்சியையும் வெள்ளத்தையும் ஒருசேர வென்றெடுக்க வேண்டுமெனில், நீர்ப்பிடிப்புப் பகுதி, நீர்நிலை மற்றும் வடிகால் பகுதி ஆகிய மூன்று முக்கியப் பகுதிகளை இணைத்து நீண்டகால அடிப்படையில் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மைக்கு வித்திடும் தீர்க்கமான அணுகுமுறை அவசியம்!
-எல். வெங்கடாசலம், பேராசிரியர்
தொடர்புக்கு: venkatmids@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT