Published : 07 Aug 2023 06:51 PM
Last Updated : 07 Aug 2023 06:51 PM

‘பொது சிவில் சட்டம்’ சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல: ஃபாத்திமா அலி

பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்றும், இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் இந்திய பெண்களின் வாழ்வு பாதுகாக்கப்படும் என்றும் கூறுகிறார் முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச் அமைப்பின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் ஜனாபா. ஃபாத்திமா அலி. இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்கு அவர் அளித்த கட்டுரை இது:

இந்தியா என்றைக்குமே உலகுக்கு ஒரு வியப்பு. ஒரே மதம், ஒரே மொழி என மக்கள் வாழும் நாட்டில் கூட பலவிதமான பிரச்சினைகள் உள்ள சூழலில், மொழியால், மதத்தால், இனத்தால், உணவால், சீதோஷ்ண நிலையால் வேறுபட்டாலும் இந்தியர் என்ற உணர்வால் மக்கள் ஒற்றுமையாக வாழும் நாடு இந்தியா. இதுதான் உலகை வியப்பின் உச்சத்துக்கு கொண்டு செல்கிறது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் நிலவிய கசப்பான சூழலில் பெரும்பான்மை இஸ்லாமியர்கள் ‘இந்தியா எங்கள் தாய்நாடு; இஸ்லாம் எங்கள் வழிபாடு’ என தாய்திருநாட்டில் வசித்து வருகிறார்கள்.

1937-ஆம் ஆண்டு முஸ்லிம் தனிச் சட்டம் அமலுக்கு வந்தது. 1939-ல் ஷரியத்தை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய திருமணச் சட்டம் இயற்றப்பட்டது. இந்திய சுதந்திரத்துக்குப் பின் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. என்றாலும், அதில் பல்வேறு விஷயங்களுக்குத் தீர்வு காணப்படவில்லை. முடிவுகள் எடுக்க முடியாமல் எதிர்காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற வகையில் விடப்பட்ட பல சட்டங்களில் ஒன்றுதான் ‘பொது சிவில் சட்டம்’.

1946-ல் சட்ட நிர்ணய சபையில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர், தனி மதங்களுக்கான சட்டமாக இல்லாமல் பொதுவான சட்டம் வேண்டும் என்று வாதாடினார். மதச்சார்பற்ற இந்தியா என்று வரும்போது மதத்துக்கான சட்டங்களால் மக்கள் பிரிக்கப்படக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். ஆனால், ஜவஹர்லால் நேரு தலைமையில் சிலர், பொது சிவில் சட்டம் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று போர்க்கொடி தூக்கினர். இதன் காரணமாக, இறுதியில் இந்திய அரசியல் சட்டத்தின் பகுதி 4-ல் இடம்பெற்றுள்ள நெறிமுறைக் கோட்பாடுகளில் பிரிவு 44-ல் "இந்திய எல்லைக்குட்பட்ட எல்லா இடங்களிலும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர அரசு முயற்சி செய்யும்" என்று அம்பேத்கர் எழுதினார்.

திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், வாரிசு, சொத்துரிமை போன்ற சிவில் விவகாரங்களுக்கு அவரவர் மதம் சார்ந்த தனி சட்டங்கள் இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஷரியத் முறைப்படி இஸ்லாமியர்களும், சீக்கிய முறைப்படி சீக்கியர்களும், இந்துக்களுக்கான சட்டத்தை இந்துக்களும் பின்பற்றலாம். ஆனால், பல்வேறு காலகட்டங்களில் பொது சிவில் சட்டத்தின் தேவை பேசுபொருள் ஆனது. இந்திய இறையாண்மைப்படி உரிமை, நீதி மற்றும் சட்டம் ஆகியவை அனைத்து மக்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டும்; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது பொது சிவில் சட்டத்தின் மூலம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பது பொது மக்களின் கருத்தாக இருக்கிறது.

பல்வேறு வழக்குகளில், ஏன் இன்னும் பொது சிவில் சட்டத்தை அரசு கொண்டு வராமல் இருக்கிறது என்று நீதி அரசர்களே கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். போர்ச்சுகீசியர் வசம் இருந்த கோவா மாநிலத்தில் சுதந்திரத்துக்குப் பின் இன்றுவரை பொது சிவில் சட்டம் அமலில் உள்ளது. இத்தனை ஆண்டுகளாக சிறுபான்மை கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கக் கூடிய கோவாவில் பொது சிவில் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும்போது, நாடு முழுவதும் ஏன் அமல்படுத்தக்கூடாது?

பொது சிவில் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு எதிரானது என்ற வாதத்தை முன்வைத்து சிலர் இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள். உண்மையில் இந்த வாதம் தவறானது. நீதிமன்றத்துக்கு வந்த மூன்று முக்கிய வழக்குகளை நாம் ஆய்வு செய்தாலே பொது சிவில் சட்டம் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பது தெரிந்துவிடும். முதல் வழக்கு 1985-ல் நடந்த ஷா பானு வழக்கு. இரண்டாவது வழக்கு 1995-ல் நடந்த மீனா மாத்தூர் வழக்கு. மூன்றாவது வழக்கு 2016-ல் நடந்த சாயரா பானு வழக்கு. இந்த மூன்று வழக்குகளின்போதும், பொது சிவில் சட்டம் ஏன் கொண்டுவரப்படவில்லை என்று மத்திய அரசை நோக்கி உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. இவ்வாறு கேள்வி எழுப்ப காரணம் என்ன?

ஆறு குழந்தைகளுக்குத் தாயான ஷா பானுவை, அவருக்கு 75 வயது இருக்கும்போது, அவரது கணவர் முத்தலாக் முறைப்படி விவாகரத்து செய்துவிடுகிறார். இது குறித்து ஜமாத்தில் ஷா பானு முறையிடுகிறார். ஆனால், அங்கு அவருக்கு நீதி கிடைக்காததால், தனக்கு ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். சிபிஆர் பிரிவு 125-ன் படி ஷா பானுவுக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது. ஆனால், பல்வேறு தரப்பில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக இந்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்குப் பொருந்தாது என ராஜீவ் காந்தி அரசு சட்டத்திருத்தம் செய்கிறது. இதனால், ஷா பானுவுக்கு நீதி மறுக்கப்பட்டது. பொது சிவில் சட்டத்தின் அவசியத்தை இஸ்லாமியர்கள், குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் உணர்ந்த வழக்குதான் இந்த ஷாபானு வழக்கு.

இரண்டாவது வழக்கில், இந்து பெண்ணான மீனா மாத்தூர், ஜிதேந்திரா மாத்தூர் என்பவரை மணந்து 3 குழந்தைகளுக்குத் தாயாகிறார். இந்நிலையில், இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக ஜிதேந்திரா மாத்தூர், இஸ்லாம் மதத்துக்கு மாறுகிறார். அந்த இரண்டாவது பெண் ஓர் இந்து. அவரையும் மதம் மாற்றுகிறார். முதல் திருமணம் சட்டப்படி விவாகரத்து ஆகாத நிலையில், மதம் மாறி ஜிதேந்திரா மாத்தூர் இரண்டாவது திருமணம் செய்தது சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி மீனா மாத்தூர் வழக்கு தொடுக்கிறார்.

மூன்றாவது வழக்கில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாயரா பானு, திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆன நிலையில், அவரது கணவர் உடனடி முத்தலாக் முறைப்படி விவாகரத்து செய்துவிடுகிறார். அவ்வாறு விவகாரத்து செய்வது செல்லாது என அறிவிக்கக் கோரி சாயிரா பானு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். பின்னர் இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது. முத்தலாக் சட்டப்படியானதா சட்டவிரோதமானதா என்பதை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பளித்தது. அதில், முத்தலாக் சட்டவிரோதமானது என 3 நீதிபதிகளும், அதற்கு மாறாக 2 நீதிபதிகளும் தீர்ப்பளித்தனர். மேலும், இவ்விஷயத்தில் அரசுதான் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதை அடுத்துத்தான் முத்தலாக் தடைச் சட்டத்தை மோடி அரசு நிறைவேற்றியது.முத்தலாக் தடைச் சட்டம் கொண்டு வந்தபோது அதனை இஸ்லாமிய சமூகம் எதிர்த்தது. ஆனால், இஸ்லாமிய பெண்கள் அதனை வரவேற்றார்கள். இஸ்லாமிய ஆண்களில்கூட கணவனாக ஆதரிக்காதவர்கள், தகப்பனாக ஆதரித்தார்கள். அதைப் போலத்தான் பொது சிவில் சட்டத்துக்கும் சமூகத்தின் ஆதரவு இருக்கிறது. இஸ்லாமிய பெண்களுக்கு மட்டுமல்ல; இந்து மற்றும் மாற்று மத பெண்களுக்கும் ஆபத்தான விஷயமாக இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின் இரண்டாவது திருமணம் இருந்து வருகின்றது. இந்து ஆண்களும் இரண்டாவது திருமணத்துக்காக மதம் மாறி முதல் மனைவி மக்களை தவிக்க விட்டுச் செல்கின்றனர். இப்படி இஸ்லாமிய பெண்கள், இந்துப் பெண்கள் என்று அனைவரையும் பாதிப்புக்கு உள்ளாக்கும் இஸ்லாமிய இரண்டாவது திருமண அங்கீகாரம் ரத்து செய்யப்பட பொது சிவில் சட்டம் அத்தியாவசியம்.

முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது, முஸ்லிம் அல்லாத கணவன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டால், அச்செயலை குற்றமாக கருதி இந்திய தண்டனைச் சட்டம் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கிறது. அதே செயலை ஓர் இஸ்லாமிய ஆண் செய்தால் இந்திய தண்டனைச் சட்டம் குற்றமாகக் கருதுவதில்லை. சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க, இரண்டாம் திருமணம் செய்து கொள்ள நினைக்கும் இஸ்லாமியர் அல்லாத ஓர் ஆண் அல்லது பெண், இஸ்லாம் சமயத்தில் சேர்ந்து பின் இரண்டாம் திருமணம் செய்து கொள்வதை தடுத்து நிறுத்திட இந்திய தண்டனைச் சட்டத்தில் இடமில்லை. முஸ்லிம் திருமண முறிவு மற்றும் ஜீவனாம்சத்தைப் பொறுத்தவரை, இஸ்லாம் தனிநபர் சட்டமான ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ளதால் இஸ்லாமியப் பெண்களுக்கு, பிற சமய பெண்கள் அளவுக்கு சமூக பொருளாதார அளவில் பாதுகாப்பு கிடைப்பதில்லை.

மதச்சார்பற்ற இந்தியாவில் பொது சிவில் சட்டம் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தனிமனித உரிமை காப்பாற்றப்பட வேண்டுமானால் பொது சிவில் சட்டம் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்படி வந்தால் சிவில் கிரிமினல் இரண்டிலும் பொதுவான நீதி வழங்கப்படும். மார்க்கத்தில் மத கோட்பாடுகளில் அரசு அநாவசியமாக நுழைகிறது என்று கூக்குரல் இடுபவர்கள் மத கோட்பாட்டின்படி கிரிமினல் சட்டத்தை பின்பற்றத் தயாரா என்றால் பயந்து பின்வாங்கி விடுவார்கள். உடனடி முத்தலாக் என்ற இஸ்லாமிய ஷரியத்தில் இல்லாத ஒன்றை தடை செய்ததன் மூலம் இஸ்லாமிய பெண்களின் வாழ்வை, அவர்களது குடும்பத்தை பாதுகாத்த மத்திய அரசு, இப்பொழுது இந்திய பெண்களின் வாழ்வை பொது சிவில் சட்டத்தின் மூலமாக பாதுகாக்க முனைவது பாராட்டத்தக்கது.

பெண்களுக்கு சொத்துரிமை முதன்முதலில் வழங்கியது இஸ்லாம் மார்க்கம். ஆனால், நடைமுறையில் இஸ்லாமிய பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் சொத்துரிமை பெற போராட வேண்டிய சூழல் உள்ளது. அவர்கள் நீதி கேட்டு நீதிமன்றத்தை நாடும்போது இந்தியர்கள் என்ற முறையில் அனைவருக்குமான சட்டத்தில் நீதி பெற பொது சிவில் சட்டம் அவசியமாகிறது.

> முந்தைய அத்தியாயம்: பொது சிவில் சட்டம் அவசியமா? - மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் எழுப்பும் கேள்வி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x