Last Updated : 21 Nov, 2017 09:55 AM

 

Published : 21 Nov 2017 09:55 AM
Last Updated : 21 Nov 2017 09:55 AM

விட்மன் எனும் பெருங்கவியைத் தமிழுக்கு பாரதி அறிமுகப்படுத்திய நூற்றாண்டு!

மெரிக்க தேசியப் பெருங்கவி, உலகளாவிய புதுக்கவிதையின் முன்னோடி வால்ட் விட்மனை முதன்முதலில் தமிழில் அறிமுகப்படுத்தியவர் பாரதி. இந்த அறிமுகம் தமிழுக்கு விட்மனை நெருக்கமாக்கியதோடு, புதுக்கவிதை முயற்சிகளுக்கும் உந்துசக்தியாக அமைந்தது. இது நிகழ்ந்து நேற்றுடன் நூறு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன.

உலகக் கவிஞர்களான ஷெல்லி, பைரன், கீட்ஸ் முதலியவர்களைப் பற்றி எழுதிய பாரதி, பெல்ஜியக் கவிஞரான எமில் வெர்ஹேரன், பெண்பால் கவிஞரான மிஸ்ரீஸ், ஜப்பானியக் கவிஞர் உயோநே நோகுச்சி முதலியோரைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். அந்த வரிசையில் வால்ட் விட்மனை அவர் அறிமுகப்படுத்தியது மறுமலர்ச்சித் தமிழ் இலக்கிய வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது.

ஆசிரியப்பா, வெண்பா, விருத்தம், சிந்து முதலிய மரபான தமிழின் யாப்பு வடிவங்களைப் பயன்படுத்திக் கவிதைகள் படைத்த பாரதி, ‘காட்சி’ என்னும் படைப்பால் யாப்பு மரபை மீறிய வசன கவிதை, புதுக்கவிதை முயற்சிகளுக்குத் தமிழில் வித்திட்டார். இந்தப் புதிய முயற்சியின் பின்புலத்தில் விட்மனின் செல்வாக்கு தெளிவாகக் காட்சி தருகிறது. ‘சானெட்’ வடிவத்தைத் தமிழில் சோதனைசெய்து பார்த்த பாரதி, ஜப்பானிய யாப்பு வடிவமான ஹைக்கூவை அறிமுகப்படுத்திய பாரதி, யாப்பு மரபை மீறிய புதுக்கவிதையையும் தமிழில் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார்.

அமெரிக்காவில் தோன்றிய தலைசிறந்த கவிஞர் வால்ட் விட்மன் (1819 - 1892). உலகம் முழுதும் புதிய போக்கில் கவிதை படைக்கத் தொடங்கிய கவிஞர் களுக்கு ஆதர்சமாக விளங்கியவர். விட்மனின் உலகளாவிய செல்வாக்கைப் பற்றி ச.கைலாசபதி எழுதியிருக்கிறார். பாரதி விட்மனை அறிமுகப் படுத்தியதையும், பாரதியிடத்தில் காணப்படும் விட்மனின் செல்வாக்கையும், இருவரின் வாழ்விலும் காணப்படும் ஒத்த இயல்புகளையும் அவர் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

‘காட்சி’யின் ஞானச் சிதறல்கள்

பாரதியின் வசன கவிதைகளான ‘காட்சி’ என்னும் படைப்பு தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு மாபெரும் தொடக்கம்; மகத்தான புரட்சி. ‘காட்சி’க்குப் பாரதி ‘வசன கவிதை’ எனப் பெயரிடவில்லை. அரசாங்கப் பதிப்பில்தான் ‘வசன கவிதை’ என்று தலைப்பிடப்பெற்றது என்றாலும், அதற்கு முன்பே அது வசன கவிதை, புதுக்கவிதை என ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா. முதலிய மறுமலர்ச்சி இலக்கிய, நவீன இலக்கிய முன்னோடிகளால் உணர்ந்து கொண்டாடப்பட்டுவிட்டது; பின்பற்றப்பட்டுவிட்டது.

‘இவ்வுலகம் இனியது.

இதிலுள்ள வான் இனிமையுடைத்து.

காற்றும் இனிது.

தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.’

எனத் தொடங்கும் இப்படைப்பில் எண்ணற்ற ஞானச்சிதறல்கள்; மொழி ஆளுமையின் உச்சங்கள். விஞ்ஞானம் வரை தொடும் விசாலம். ‘சாதல் இனிது’, ‘அவள் தேன், சித்த வண்டு அவளை விரும்புகின்றது’ என்றெல்லாம் மின்னலடிக்கும் மொழியின் வனப்பும் சிந்தனை வனப்பும் மிடைந்த படைப்பே பாரதியின் ‘காட்சி’. ஒருசாண் கயிறு இரண்டை ஆண் கயிறாகவும் பெண் கயிறாகவும் ஆக்கி அவற்றுக்கு கந்தன், வள்ளியம்மை என்று பெயரிட்டுப் பேசுவதெல்லாம் படைப்பின் தனியழகு.

நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக.

நமது நெஞ்சிலே மின்னல் விசிறிப் பாய்க.

நமது வலக்கையிலே மின்னல் தோன்றுக.

நமது பாட்டு மின்னலுடைத்தாகுக.

நமது வாக்கு மின்போல் அடித்திடுக.’

என மின்னலைப் போற்றும் இம் முன்னோடிப் படைப்பும் தமிழிலக்கிய வானிலே நிரந்தர மின்ன லாய் நிலைத்துவிட்டது. புதுக்கவிதை என்னும் பெருமரபுக்கு அடித்தளமிட்டுவிட்டது. ‘எழுத்து’ மரபு, ‘வானம்பாடி’ மரபுகளைத் தாண்டிப் புதுக்கவிதை இயக்கம் இன்று பெருவெள்ளமாகப் பிரவகித்து விட்டது.

புதுக்கவிதை இயக்கம்

‘மணிக்கொடி’, ‘எழுத்து’ இதழ்களின் வாயிலாகப் புதுக்கவிதை இயக்கத்தைத் தொடங்கி வைத்த ந.பிச்சமூர்த்தி, ‘இப்புதுக்கவிதை முயற்சிக்கு யாப்பு மரபே கண்டிராத வகையில் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் எழுதிய ‘புல்லின் இதழ்கள்’ என்ற கவிதைத் தொகுப்புத்தான் வித்திட்டது. அதைப் படித்தபோது கவிதையின் ஊற்றுக்கண் எனக்குத் தெரிந்தது. பின்னர் பாரதியின் ‘வசன கவிதை’யைப் படிக்க நேர்ந்தது. என் கருத்து வலுவடைந்தது. இவற்றின் விளைவாக என் உணர்ச்சிப் போக்கில் இக்கவிதைகளை எழுதி அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியிட்டேன்.’ என்று ‘காட்டு வாத்து’ எனும் தனது புதுக்கவிதை நூலின் முன்னுரையில் (1962) எழுதியிருந்தார். பாரதியின் வசன கவிதை முயற்சிக்கும், ந.பிச்சமூர்த்தியின் புதுக்கவிதை முயற்சிகளுக்கும் மூல ஊற்றுக்கண்ணாக விட்மனின் படைப்பு விளங்குகிறது. ந.பிச்சமூர்த்தியை அடுத்து ‘மணிக்கொடி’யில் புதுக்கவிதைகளைப் படைத்த கு.ப. ராஜகோபாலனும் பாரதியின் ‘காட்சி’யில் விட்மனையும் தான் கண்டதாய்க் கூறியிருகிறார்.

விட்மனின் செல்வாக்கில் பல கவிதைகளையும் வசன கவிதைகளையும் படைத்த பாரதி, தானறிந்த விட்மனைத் தமிழுலகம் அறிதல் வேண்டும் எனக் கருதி 20.11.1917 -ல் சுதேசமித்திரன் இதழில் ‘நகரம்’ கட்டுரையை எழுதினார்.

அதில், ‘வால்ட் வ்ஹிட்மான் என்பவர் ஸமீப காலத்தில் வாழ்ந்த அமெரிகா (யூனைடெட் ஸ்டேட்ஸ்) தேசத்துக் கவி. இவருடைய பாட்டில் ஒரு புதுமை என்னவென்றால், அது வசன நடைபோலேதான் இருக்கும்.... வால்ட் வ்ஹிட்மான் கவிதையைப் பொருளிற் காட்ட வேண்டுமே யல்லாது சொல்லடுக்கில் காட்டுவது பிரயோஜனம் இல்லையென்று கருதி ஆழ்ந்த ஓசை மாத்திரம் உடையதாய் மற்றப்படி வசனமாகவே எழுதிவிட்டார். இவரை ஐரோப்பியர் காளிதாஸன், கம்பன், ஷேக்ஸ்பியர், மில்டன், தாந்தே, கெத்தே முதலிய மஹாகவி களுக்கு ஸமான பதவியுடையவராக மதிக்கிறார்கள் என்று வசனத்தில் கவிதை படைத்த விட்மன் உலக மகாகவிகளின் வரிசையில் மதிக்கப்படுபவர் என்று தமிழுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தினார்.

கவிதையின் வடிவத்தில் மட்டுமல்ல; பொருளிலும் விட்மன் நிகழ்த்திய புரட்சியை, அப்புரட்சியால் பெற்ற இடத்தை, ‘குடியாட்சி (ஜனாதிகாரம்) என்ற கொள்கைக்கு மந்திர ரிஷிகளில் ஒருவராக இந்த வால்ட் வ்ஹிட்மானை ஐரோப்பிய ஜாதியார் நினைக்கிறார்கள்.

எல்லா மனிதரும், ஆணும் பெண்ணும், குழந்தைகளும் எல்லாரும் ஸமானம் என்ற ஸத்யத்தைப் பறையடித்த மஹான்களில் இவர் தலைமையானவர்.’ என்று அழுத்தமாக எடுத்துரைத்திருந்தார்.

மேலும், விட்மன் கற்பனை செய்த ஒரு நகரத்தை, அங்கே அடிமையில்லா, ஆண்டையில்லாச் சமத்துவம் நிலவுவதை, பெண்கள் ஆண்களுக்கு நிகரான இடத்தைப் பெறுவதை விளக்கிக் காட்டி, ‘எல்லாருக்கும் விடுதலையும் ஸமத்துவமும் உள்ளதாகிய நகரம் கண்முன்னே தோன்றுவதை விரும்பாத மனிதனும் உண்டா?’ எனக் கேட்டு, விட்மன் கவிதைகளின் வடிவப் புரட்சியைக் கருத்துப் புரட்சியைத் தமிழ் மண்ணுக்கு முன்மொழிந்தார்.

பேரிடம் பெற்ற புதுக்கவிதை

பாரதி தொடங்கிவைத்த அறிமுகம் பல பரிமாணங்களைக் கண்டிருக்கிறது. எண்ணற்ற கவிஞர்களிடம் எழுத்தாளர்களிடம் ஆய்வாளர்களிடம் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. விட்மனின் ‘புல்லின் இதழ்க’ளின் பெரும் பகுதியைச் ச.து.சு.யோகி ‘மனிதனைப் பாடுவேன்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்ப்பு நூலாக்கியிருக்கிறார். விட்மனும் பாரதியும் குறித்த ஒப்பாய்வு நூலைப் பேராசிரியர் வை.சச்சிதானந்தன் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார் (விட்மன் அண்டு பாரதி: எ கம்பேரட்டிவ் ஸ்டடி (1978)).

தமிழில் பாரதி தொடங்கி வைத்த புதுக்கவிதை வடிவம் நிலைபெற்று விட்டது; ஒப்பற்ற பேரிடத்தைப் பெற்றுவிட்டது. மகத்தான புதுக்கவிதை இயக்கத்துக்கு நூற்றாண்டுக்கு முன் கால்கோளிட்ட நாளாக விட்மனைக் குறித்துப் பாரதி முதன்முதலாக அறிமுகப்படுத்திய நாள் வரலாற்றில் ஒளிவீசுகிறது.

- ய.மணிகண்டன்,

பேராசிரியர் - தலைவர்,

தமிழ் மொழித் துறை,

சென்னைப் பல்கலைக்கழகம்.

தொடர்புக்கு: v.y.manikandan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x