Published : 29 Nov 2017 09:19 AM
Last Updated : 29 Nov 2017 09:19 AM
உணவின் ருசிக்கு அடிப்படையானவற்றில் உப்பும் ஒன்று. சோடியம் குளோரைடு எனும் ரசாயனப் பெயருடன் நம் வீட்டுச் சமையல் அறையில் நிரந்தர இடம்பிடித்திருக்கும் உப்பு நல்லதா.. கெட்டதா எனும் விவாதம் தொடர்ந்து நடந்துவருகிறது.
உப்பு என்றாலே அது நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில் மட்டும் பயன்படுத்தப் படுகிறது என்றே புரிந்துகொள்கிறோம். முறுக்கு, தட்டை, ‘சிப்ஸ்’ போன்ற நொறுக்குத் தீனிகள் தொடங்கி சோடா, மென்பானங்கள், பிஸ்கட் - ரொட்டி வரை பல தின்பண்டங்களிலும் உப்பைச் சேர்க்கிறார்கள்.
உப்பு அதிகமுள்ள உணவு செரிக்காது, மலத்தைக் கட்டிவிடும். உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட பண்டங்களால் தாகம் அதிகரிக்கும். அதனால் தண்ணீரை அதிகம் குடிப்போம். அந்த நீர் ஆவி யாகிவிடாமல் உப்பு காக்கும். அதனால், இதயத்துக் குச் செல்லும் ரத்தத்தில் நீரின் அளவு அதிகரித்து இதயத்தின் பணிச் சுமையை அதிகரிக்கும். ரத்தத் தில் அதிகமாகிவிட்ட உப்பைப் பிரிக்கும் வேலை யைச் சிறுநீரகம் மேற்கொள்ளும். தொடர்ந்து உப்புப் பண்டங்களை அதிகம் சாப்பிட்டால் அதில் சிறிதளவு சிறுநீரகக் கல்லாகும்.
சிறுநீரகமும் நாள்படப் பழுதடையும். இறுதியில்தான் உப்பு பிரிக்கப் பட முடியாமல் ரத்தத்தில் யூரியா அதிகரிக்கும். அப்போது கை, கால், முகம், வயிறு வீங்கும். உடல் இப்படி ‘உப்பு’வதால் இதை உப்பு வியாதி என்று அழைக்கிறார்கள். உப்பினால் ஒவ்வாமை, கொப்புளங்கள், மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல் போன்றவை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
அதே சமயம், உப்பு முழுக்க முழுக்க வில்லனா என்றால் இல்லவே இல்லை. உணவின் சுவையை நிர்ணயிப்பதுடன் எளிதில் செரிமானிக்கவும் உதவுகிறது. பசியைத் தூண்டுகிறது. பல பண்டங்களைக் கெடாமல் பாதுகாப்பதுடன், குணப்படுத்தும் மருந்தாகவும் செயல்படுகிறது. நம்முடைய வியர்வை, கண்ணீர், சிறுநீர் மூன்றிலும் உப்பு இருக்கிறது. உப்பு உடலில் ஏற்படும் வலிகளை நீக்கும் நிவாரணியாகவும் செயல்படும். தோலில் ஏற்படும் கொப்புளங்கள், கட்டிகளுக்கும், உலர்ந்த தோலாக இருந்தாலும் எண்ணெய் வடியும் தோலாக இருந்தாலும் வெந்நீரில் உப்பு சேர்த்துக் குளித்தால் நிவாரணம் கிடைக்கும்.
தொண்டையில் சளி கட்டி பேச முடியா மல் போகும்போது, உப்பு நீரில் வாய் கொப்பளிப்போம். மூக்கிலும் சைனஸ் குழாய்களிலும் அடைப்பு ஏற்பட்டு தலைவலியும் ஒவ்வாமையும் ஏற்படும்போது, உப்பு நீர் விட்டு கண், மூக்கைச் சுத்தப்படுத்துவது, வேது பிடிப்பதும் உண்டு. முன்பெல்லாம் வெந்நீரில் சிறிதளவு உப்பைப் போட்டு அந்தத் தண்ணீரில்தான் குளிப்பார்கள். கண் நீர்ச்சத்து இன்றி உலர்ந்துவிட்டால் போட்டுக் கொள்ளும் களிம்பிலும் உப்பு சேர்க்கப்படுகிறது. சரியான அளவில் உப்பு சேர்த்துக்கொண்டால் உப்பு நம் நண்பன்தான்; அளவில்லாமல் பயன்படுத்தி அதை வில்லனாக்குவது நாம்தான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT