Published : 20 Nov 2017 09:38 AM
Last Updated : 20 Nov 2017 09:38 AM
இ
ந்திரா காந்தி குடும்பத்தோடு நீண்ட காலம் தொடர்புள்ளவர் சாம் பித்ரோடா; பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் தொலைத்தகவல் தொடர்பு புரட்சிக்கு வித்திட்டவர்; சொந்த மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற தன்னால் இயன்ற வகையில் உதவிக்கொண்டிருக்கிறார். குஜராத் மாநில வளர்ச்சி என்பது மாயை என்கிறார். அவரது பேட்டி:
குஜராத்தில் காங்கிரஸ் வெற்றிக்காக முக்கியப் பங்காற்ற முடிவு செய்துவிட்டீர்கள்?
சொந்த மாநிலத்துக்கு ஆற்ற வேண்டிய கடமையைச் செய்கிறேன்; எனக்குச் சொல்லப்பட்ட வேலைகளைச் செய்கிறேன். வெவ்வேறு சமூகக் குழுக்களைச் சந்தித்து அவர்களுடைய கருத்துகள், குறைகளைக் கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்பினார்; அதனால்தான் வடோதரா, ஜாம்நகர், ராஜ்கோட், சூரத் ஆகிய நகரங்களில் வெவ்வேறு தரப்பினரைச் சந்தித்தோம். அவர்கள் அலைக்கழிக்கப்படும் விதம், வருவாய் இல்லாததால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதுகாப்பற்ற நிலை, வருமானத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து கேட்டோம். மகளிரை மையமாகக் கொண்ட திட்டங்களுக்கு மாநிலம் செலவிடுவதில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. சுகாதாரம், மகளிர் நலன், குழந்தைகள் முன்னேற்றங்களுக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படாமல் வெட்டப்படுகிறது.
மக்களை நேரடியாகச் சந்தித்தபோது நீங்கள் அறிந்த முக்கியப் பிரச்சினைகள் என்னென்ன?
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அதிர்ச்சியே அடைந்தோம். அமைப்புசாராத துறையை அரசு முழுதாகப் புறக்கணித்துவிட்டது. விளிம்புநிலை மக்களுடைய நலனுக்காக ஒரு திட்டமும், அரசின் கவனிப்பும் கிடையவே கிடையாது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்பவர்கள் குறிவைக்கப்படுவார்கள். 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்னால் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட நிலங்களை, தொழில் வளர்ச்சிக்குத் தேவை என்று பறித்துக்கொண்டுவிடுகிறார்கள். இதையெல்லாம் நாங்கள் தேர்தல் அறிக்கையிலும் சேர்க்கவிருக்கிறோம்.
‘குஜராத் பாணி வளர்ச்சி’ என்று பாஜக நாடு முழுக்கப் பிரச்சாரம் செய்து வருவதை நீங்கள் எப்படி தகர்க்கப் போகிறீர்கள்?
வளர்ச்சியைக் கீழிருந்து மேலே பார்க்க வேண்டும். கீழ் நிலையில் உள்ள மக்களின் அனுபவங்கள் வாயிலாகப் பார்க்கும்போதுதான் வளர்ச்சி பற்றிய உண்மையான வடிவம் புலப்படும். காந்திய வழியிலான வளர்ச்சியும் அதுதான். அது குஜராத்தாக இருந்தாலும் வேறு மாநிலமாக இருந்தாலும் காங்கிரஸ் அப்படித்தான் அணுகும். குஜராத் எல்லா துறைகளிலும் வளர்ச்சி பெற்றுவிட்டதாகக் கூறுவதே மோசடி, அதில் அர்த்தம் ஏதுமில்லை.
பல பொருளாதார அறிஞர்கள், நிபுணர்கள் குஜராத் பாணியைப் பாராட்டியிருக்கிறார்கள், அதன் தொழில்துறை வளர்ச்சி, அதிக முதலீடு ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளார்களே?
வளர்ச்சி இரு வழிகளில் கிடைக்கும். இரண்டு பெரிய தொழிற்சாலைகளை அரசே அமைக்கலாம், ஐந்து பெரிய தொழிற்சாலைகளுக்கு அரசு உதவிகளைச் செய்யலாம்; உங்களுடைய உதவி காரணமாக ஐந்து பெரிய கோடீஸ்வரர்களை உருவாக்கலாம். அது பெரிய வளர்ச்சியாகத் தெரியும். நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) முக்கியம் இல்லை, மக்கள்தான் முக்கியம். ஜிடிபி, ஜிஎன்பி வளர்ச்சியைப் பார்த்து ஏமாந்துவிடாதீர்கள். ஏராளமான மக்களுக்குப் பயன்படாமல் செல்வம் குவிந்து ஒரு லாபமும் இல்லை. சில பெருங்கோடீஸ்வரர்களும், பல கோடீஸ்வரர்களும் உருவானதைத்தவிர குஜராத் பாணி வளர்ச்சி என்பது என்ன என்று கூறுங்கள் பார்க்கலாம்; கோடிக்கணக்கான மக்கள் ஏழையானபோது பல பணக்காரர்கள் உருவானதுதான் மிச்சம். இந்த மாதிரியிலான வளர்ச்சியா நமக்கு வேண்டும்?
உலகம் முழுவதுமே 2,000 பெரும் பணக்காரர்கள்தான் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள்; அந்த மாதிரியான முதலாளித்துவத்தையா நீங்கள் விரும்புகிறீர்கள்? முதலாளித்துவம் என்றால் எல்லோருக்கும் பலன் கிடைப்பதாக இருக்க வேண்டும். ஒரு சிலர் கைகளில் மட்டும் பணம் குவியும் முதலாளித்துவம் தேவையா அல்லது எல்லோரிடமும் பணம் சேரும் முதலாளித்துவம் தேவையா?
கடந்த 70 ஆண்டுகளாக இந்த நாட்டின் முன்னேற்றத்துக்கு எதுவுமே செய்யப்படவில்லை என்று கூறுகிறார்களே?
பிரதமர்தான் திரும்பத் திரும்ப அப்படிக் கூறுகிறார்; கொஞ்ச காலத்துக்கு உங்களுடைய பொய்கள் விற்பனையாகும், உங்களுடைய மக்கள் தொடர்பு நிபுணர்களால் அதை வெற்றிகரமாகச் சந்தைப்படுத்த முடியும். இந்த நாட்டுக்காக உழைத்த எங்களைப் போன்றவர்களை இப்படிப் பேசி அவமதிக்காதீர்கள்; உலகத்திலேயே மிகப் பெரிய பால் பண்ணையை உருவாக்கிய டாக்டர் குரியனை அவமரியாதை செய்யாதீர்கள். செயற்கைக் கோள்களைத் தயாரிக்கும் விஞ்ஞானிகளை அவமதிக்காதீர்கள்; உலக அளவில் நிபுணர்களாகப் பெயர் பெற்றுள்ள பலரை உருவாக்கிய இந்திய ஐஐடிகளை அவமதிக்காதீர்கள். தாழ்மையுணர்ச்சியால் பாதிக்கப்படுகிறவர்கள்தான், தங்களுக்குப் பிறகுதான் நாடு வளர ஆரம்பித்தது என்று பேசுவார்கள்.
இந்தப் பொய்களையெல்லாம் உங்கள் கட்சி ஏன் அப்போதைக்கப்போது மறுத்துப் பேசவில்லை?
யாராவது எதையாவது சொன்னால் உடனுக்குடன் அதையெல்லாம் மறுப்பது அவசியம் என்று நான் நினைக்கவில்லை. இப்போது மக்களுக்கே அவர்களுடைய பேச்சும் மக்கள் தொடர்பு உத்திகளும் சலிக்க ஆரம்பித்துவிட்டன. மகாத்மா காந்தி எப்போதாவது மக்கள் தொடர்பு முகமையைத் தனக்காக வைத்துக் கொண்டிருந்தாரா? தன்னை மக்கள் விரும்ப வேண்டும் என்பதற்காக யாரையாவது வேலைக்கு அமர்த்திக்கொண்டாரா? உங்களுக்குத் திறமை இல்லாவிட்டால்தான், நிபுணர்களின் உதவி தேவைப்படும்.
காங்கிரஸும் தேர்தல் உத்திகளை வகுக்கவும் பிரச்சாரங்களை நடத்தவும் ஆலோசகர்களை அமர்த்திக் கொண்டிருக்கிறதே?
அதில் உண்மையில்லை. நாங்கள் ராகுல் காந்தியை இப்படி விளம்பரப்படுத்தி, மக்களிடம் ஆதரவு திரட்டவில்லை. மக்களின் நல்வாழ்வுக்காகக் கவலைப்படுகிற ராகுலை உள்ளது உள்ளபடியே மக்கள் முன்னால் கொண்டுபோய் நிறுத்துகிறோம். ஏராளமான கோமாளிகள் சேர்ந்து அவரைப் ‘பப்பு’ என்று கேலியாகக் கூறுகின்றனர். அவர் ‘பப்பு’ (சிறு குழந்தை) அல்ல. அவர் நன்றாகப் படித்திருக்கிறார், ஆழ்ந்த அக்கறையுடன் மக்கள் நலனில் ஆர்வம் காட்டுகிறார், தியானத்தில் ஈடுபடுகிறார், சிந்திக்கிறார், சில வேளைகளில் அதிகமாகவே சிந்திக்கிறார். நிறையப் படிக்கிறார், நல்ல படிப்பாளி.
சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தபோது இஸ்லாமிய அறிஞருடன் 90 நிமிஷங்கள் பேசிக்கொண்டிருந்தார் ராகுல். சீனா, வட கொரியா விவகாரங்களில் நிபுணருடன் 90 நிமிஷங்கள் பேசிக்கொண்டிருந்தார். சிறு வயது முதலே ராகுலைப் பார்த்துக் கொண்டிருப்பதால் நான் ராகுலுக்குச் சாதகமாகவே கூட கூறலாம். அமெரிக்காவில் அவர் யாரையெல்லாம் சந்தித்தாரோ அவர்கள் அனைவருமே அவரை விரும்பினர். வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ், ராய்ட்டர்ஸ் ஆகிய பத்திரிகை, செய்தி நிறுவனங்களின் முழு ஆசிரியர் குழுவையும் சந்தித்து அவர்களுடன் விவாதித்தார், அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார். பலதரப்பட்ட விவகாரங்களையும் பேசினார்.
தமிழில்: ஜூரி
© தி இந்து ஆங்கிலம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT