Last Updated : 24 Jul, 2023 06:18 AM

 

Published : 24 Jul 2023 06:18 AM
Last Updated : 24 Jul 2023 06:18 AM

எப்படி இருக்கும் ‘இந்தியா’வின் எதிர்காலம்?

இந்திய அரசியல் களம் புதிய காட்சிகளுக்குத் தயாராகிறது. ஒருபுறம் ‘இந்தியா’ (Indian National Developmental Inclusive Alliance), மறுபுறம் என்டிஏ (தேசிய ஜனநாயகக் கூட்டணி) எனப் பெரும் படைகள் மோதவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தல் மிகுந்த கவனம் ஈர்க்கிறது. பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு, பாஜகவின் நகர்வுகளுக்கு எதிர்வினையாகத்தான் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் இருந்துவந்தன.

முதல் முறையாக, எதிர்க்கட்சிகளின் வியூகத்துக்கு எதிர்வினையாக பாஜக வெளிப்படையாகச் செயல்படத் தொடங்கியிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்ற நாளில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிக் கூட்டத்தை பாஜக ஒருங்கிணைத்ததே இதற்கு உதாரணம். ஒருவகையில், இதை பாஜகவின் பலவீனமாகப் பார்க்க முடியும் என்றாலும், எதிர்க்கட்சிகளின் வியூகத்தை முறியடிக்க அக்கட்சி முழுமூச்சாகத் தயாராகிறது என்றும் கொள்ள முடியும்.

மோடி யுகம்: 1998இல் காங்கிரஸுக்கு எதிராக பாஜக தலைமையில் உருவான என்டிஏ கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது; வாஜ்பாய் பிரதமராகப் பொறுப்பேற்றார். எனினும், கூட்டணியில் ஏற்பட்ட சிக்கல்களால் 13 மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது. 1999இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற இந்தக் கூட்டணியால், 2004 தேர்தலில் வென்று ஆட்சியைத் தக்கவைக்க முடியவில்லை. 2009இல் அத்வானியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திப் போட்டியிட்ட அக்கூட்டணிக்குத் தோல்விதான் கிடைத்தது.

தீவிர இந்துத்துவம், வளர்ச்சி ஆகிய இரண்டு அம்சங்களுக்காகப் பேசப்பட்ட மோடி, 2014 தேர்தலில் முன்னிறுத்தப்பட்டார். அடிமட்ட மக்கள் வரை சென்றடையும் வகையிலான பேச்சாற்றல் கொண்ட மோடிக்கு அப்போது முதல் வெற்றிமுகம் தொடர்ந்தது. எனினும், சூழல் வேகமாக மாறிவருகிறது.

பழைய கணக்குகள்: 2019 தேர்தலில் பாஜகவுக்கு 37% வாக்குகள் கிடைத்தன. இன்றைக்கு எந்தக் கூட்டணியிலும் சேராமல் ஒதுங்கியிருக்கும் பிஜு ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, பிஆர்எஸ், தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்றவற்றைத் தவிர்த்து, பல பிரதான கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் நிலையில், அவற்றின் மொத்த வாக்கு சதவீதம் மிக முக்கியமான காரணியாக 2024 தேர்தலில் அமையும். 2019 மக்களவைத் தேர்தலில், என்டிஏ 353 இடங்களைக் கைப்பற்றியிருந்தது (மொத்த வாக்குகள் 42%).

‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகள் அந்தத் தேர்தலில் மொத்தமாக வென்ற இடங்கள் 134 தான். ஆனால், மொத்த வாக்குகள் 35%. எனவே, இந்தக் கூட்டணியின் நகர்வுகளைக் கண்டு பாஜக பதற்றம் அடைந்திருப்பதில் ஆச்சரியமில்லை. அதேநேரம், மொத்த வாக்கு சதவீதத்துக்கும் தொகுதிவாரியான வெற்றிக்கும் வித்தியாசம் உண்டு. அதை அந்தந்தத் தேர்தல் களத்தின் வெவ்வேறு காரணிகள்தான் தீர்மானிக்கின்றன.

கூட்டணியின் முக்கியத்துவம்: 2014க்குப் பின்னர் பாஜகவுக்குக் கிடைத்த வெற்றிகளுக்கு மோடியின் முகம் முக்கியக் காரணியாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சிகள் - தேசியக் கட்சிகளும் பலம்வாய்ந்த மாநிலக் கட்சிகளும் - ஒன்றிணைந்திருக்கும் இந்தத் தருணத்தில், மோடியின் பெயர் மட்டுமே செல்லுபடியாகிவிடாது. பாஜக இதை நன்றாகவே உணர்ந்திருப்பதால், இதுவரை பெரிதாகக் கண்டுகொள்ளப்படாத கூட்டணிக் கட்சிகள் இப்போது முக்கியத்துவம் பெறுகின்றன.

என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் 38 கட்சிகளில், 24 கட்சிகளுக்கு மக்களவையில் உறுப்பினர்களே இல்லை; ‘இந்தியா’ கூட்டணியிலும் 10 கட்சிகள் மக்களவை உறுப்பினர்கள் இல்லாதவை. எனினும், வெற்றி வாய்ப்பு நழுவுவதைத் தவிர்க்க எல்லா பக்கமும் அணை போட வேண்டிய அவசியம் இரண்டு தரப்புக்கும் உருவாகியிருக்கிறது.

2004 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னரே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உருவானது; 2009 தேர்தலில் அந்த வெற்றி தொடர்ந்தது. எனினும், காங்கிரஸைப் பொறுத்தவரை தேசிய அளவில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் இத்தனைத் தீவிரம் காட்டுவது இதுவே முதல் முறை. பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் எனும் முனைப்பில் பிரதமர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகவும் தயார் எனக் காங்கிரஸ் சொல்வது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

காத்திருக்கும் சவால்கள்: ‘இந்தியா’ கூட்டணிக்குத் தலைமை வகிப்பது யார், ஒருவேளை வெற்றி பெற்றால் பிரதமர் யார் எனும் கேள்விகள் எழத் தொடங்கியிருக்கின்றன. பாஜக இதைப் பிரதானமான விமர்சனமாக முன்வைக்கிறது. பெங்களூரு கூட்டத்தில் முக்கியத்துவம் கிடைக்காததால் நிதீஷ் குமார் அதிருப்தியடைந்ததாகச் செய்திகளைப் பரப்புவதில் பாஜக ஈடுபடுகிறது. அதேபோல, மேற்கு வங்கம், கேரளம் போன்ற மாநிலங்களில் இதுவரை நிலவிவந்த அரசியல் சமன்பாடுகளை அவ்வளவு எளிதில் கலைத்து, புதிய களத்தை உருவாக்கிவிட முடியாது.

மாநில அரசியல் களம் என்ற அளவில் காங்கிரஸ் கட்சிக்கும் திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கும் இடையிலான முரண்கள், தேசிய அளவில் எப்படிச் சரிசெய்யப்படும் என்பது முக்கியமான கேள்வி. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அம்மாநிலக் காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரிக்கும் எப்போதும் ஆகாது. உள்ளாட்சித் தேர்தல் வன்முறை தொடர்பாக இரண்டு கட்சிகளுக்கும் இடையே கடும் கருத்து முரண்கள் ஏற்பட்டது மிகச் சமீபத்திய அம்சம். பஞ்சாபில் காங்கிரஸைப் படுதோல்வி அடையச் செய்து ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினர் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இதனால் அம்மாநிலக் காங்கிரஸார் அதிருப்தியில் ஆழ்ந்திருக்கின்றனர். பாஜக மிகச் சாதுரியமாக இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. இவற்றைச் சமாளிப்பது ‘இந்தியா’ கூட்டணி எதிர்கொள்ளும் இன்னொரு சவால். அதேபோல், இந்த ஆண்டு தேர்தலை எதிர்கொண்டிருக்கும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்களுக்கு மத்தியில் நிலவும் பூசல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்படுவது அவசியம்.

தொகுதிப் பங்கீடு எந்த அளவுக்குத் திறம்படத் திட்டமிடப்படுகிறது என்பதைப் பொறுத்துதான் இக்கூட்டணியின் வெற்றிக் கணக்கு உறுதியாகும். இவ்விஷயத்தில் வழக்கமான கூட்டணியிலேயே பல பிரச்சினைகளைக் கட்சிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இதுவரை அரசியல் களத்தில் எதிரிகளாகப் பாவித்துவந்த கட்சிகள், இப்போது கூட்டணி அமைத்துக் களம் காணும்போது, அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் பகைமை நீடித்தால், தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்படும். கூட்டணி சார்பில் பாஜகவுக்கு எதிராக அல்லது என்டிஏ கூட்டணிக் கட்சிக்கு எதிராகப் பொது வேட்பாளரை நிறுத்தும்போது இந்தச் சிக்கல் பெரிய அளவில் எழலாம்.

பயணங்கள் முடிவதில்லை: ராகுல் காந்தி மேற்கொண்ட ‘ஒற்றுமை இந்தியா’ (பாரத் ஜோடோ) நடைப்பயணத்தின் மூலம் காங்கிரஸுக்குக் குறிப்பிட்ட அளவுக்கு வலிமை சேர்ந்திருப்பது மறுக்க முடியாததுதான். ஆனால், இதுபோல் பல நடைப்பயணங்கள், சுற்றுப்பயணங்களைக் காங்கிரஸ் தலைவர்களும், ‘இந்தியா’ கூட்டணியின் பிற தலைவர்களும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரத்யேகப் பிரச்சினைகளைப் பிரதானமாக முன்வைத்துப் பிரச்சாரம் செய்யும் மோடியின் பாணியை எதிர்கொள்வது அத்தனை எளிதல்ல.

மணிப்பூரில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகக் கலவரம் நடைபெற்றுவரும் நிலையில், இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்ட சம்பவத்திலேயே எதிர்க்கட்சிகள் எவ்வளவு குரல் கொடுத்தாலும், அதை மிக எளிதாகக் கையாளும் மோடியின் பாணி அசாதாரணமானது.

நாடாளுமன்றத்துக்கு வெளியே அந்தச் சம்பவம் பற்றிப் பேசிய மோடி, விரைவில் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களையும் மணிப்பூர் பட்டியலில் சேர்த்துவிட்டது தனி சாமர்த்தியம். மதச்சார்பற்ற ஜனதா தளம், அகாலி தளம் போன்ற கட்சிகள் மீண்டும் பாஜகவை நெருங்க ஆரம்பித்திருக்கின்றன. ஆக, முன்பைவிட அதிக எச்சரிக்கை உணர்வுடன் எதிர்க்கட்சிகள் இருந்தாலும் பாஜகவின் காய்நகர்த்தல்களை வெல்ல இன்னும் கூடுதலான ராஜதந்திரம் அவசியம். அதைப் பொறுத்துதான் ‘இந்தியா’வின் எதிர்காலம் அமையும்!

- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

To Read in English: What will INDIA’s future be like?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x