Last Updated : 09 Jul, 2014 09:00 AM

 

Published : 09 Jul 2014 09:00 AM
Last Updated : 09 Jul 2014 09:00 AM

கழுத்தில் தொங்க விடப்பட்ட அல்பட்ராஸ்

நம் வாழ்வின் அங்கமாக இருந்த பறவைகளை இன்று வாழ்வின் விளிம்புக்குத் தள்ளிவிட்டிருக்கிறோம்

இலக்கியப் படைப்புகளில், குறிப்பாக கவிதை இலக்கியத்தில் பறவைகள் சுதந்திரத்தின், மகிழ்ச்சியின், இசையின் குறியீடாக இருந்துவந்திருக்கின்றன. ‘காக்கைச் சிறகினிலே’ நந்தலாலாவின் கரிய நிறத்தைக் கண்ட கவிஞரும், ‘பறவையைக் கண்டு’ விமானம் படைத்த மனிதனைப் பாடிய கவிஞரும் தமிழுக்குப் பெருமை சேர்ப்பவர்கள். கைபேசி இல்லாத நாட்களில், காதலியைப் பிரிந்து மிகத் தொலைவிலிருந்த காதலன் ‘செங்கால்’ நாரை மூலமாகச் செய்தியை அனுப்பிய பழைய தமிழ்க் கவிதையும் நம் நெஞ்சை நெகிழச் செய்யும். இப்படியாக, பறவைகள் நம் வாழ்க்கையோடும் கலை இலக்கியங் களோடும் பிரிக்க முடியாதவையாக இருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், தற்போது மனிதர்கள் இருக்கும் இடங்களிலிருந்து (காகம், மாடப்புறா போன்ற ஒருசில பறவைகளைத் தவிர) பெரும்பாலான பறவைகள் துரத்தப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் நினைக்கும்போது, அல்பட்ராஸ் என்ற பறவை நினைவுக்கு வருகிறது.

மிகப் பெரிய பறவைகளில் ஒன்றாகக் கருதப்படும் அல்பட்ராஸ் ஒரு கடற்பறவை. பொதுவாக, இது பூமியின் தென்திசைக் கடல் பிரதேசங்களிலும், பசிபிக் கடல் பிரதேசங்களிலும் காணப்படுகிறது. இந்தக் கடல்களில் வெகு தூரம் பயணம் செய்யும் கப்பல் களின் மாலுமிகளிடையே பிரபலமாக இருக்கும் இந்தப் பறவை, தொடர்ந்து பல ஆயிரம் கிலோ மீட்டர் வரை பறந்துசெல்லும் ஆற்றல் கொண்டது. மிகப் பெரிய இறக்கைகளைக் கொண்டது; முழுவதுமாக விரித்த நிலையில் அதன் இறக்கைகளின் வீச்சு பதினோரு அடி நீளம் வரை இருக்கும். மேலும், வெகுதூரம் வரை இறக்கைகளை அடித்துக்கொள்ளாமலேயே, இறக்கை

கள் விரிந்த நிலையிலேயே பறக்கும் அல்பட்ராஸைப் பார்க்க ஒரு விமானத்தைப் போல இருக்கும். ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட மேற்கத்திய இலக்கியங்களில் ஒரு முக்கிய இடத்தைப் பெறும் இந்தப் பறவை, ‘குற்றமும் தண்டனையும்’ என்ற கருத்தாக்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.

புராதன மாலுமியும் அல்பட்ராஸும்

‘ஒருவர் கழுத்தில் தொங்க விடப்பட்ட அல்பட்ராஸ்’ என்று ஆங்கிலத்தில் ஒரு மரபுத்தொடர் இருக் கிறது. ‘ஒருவரின் வெற்றிக்குத் தடையாக இருக்கும் பெருங்குற்றத்தின் சுமை’ என்ற பொருளில் இது பயன்படுத்தப்படுகிறது. 1798-ம் ஆண்டு வெளிவந்த, சாமுவெல் டெய்லர் கோலரிட்ஜின் ‘புராதன மாலுமி’ என்ற பிரபலமான நெடுங்கவிதையிலிருந்து உருவானதுதான் இந்த மரபுத் தொடர். திருமண நிகழ்ச்சிக்குப் போய்க் கொண்டிருக்கும் விருந்தாளி ஒருவரிடம் புராதன மாலுமி ஒருவர் சொல்லும் கதைதான் இந்தக் கவிதை.

தென்திசைக் கடல் பிரதேசத்தில் சென்ற ஒரு பாய்மரக் கப்பல், புயலில் சிக்கி, அண்டார்க்டிகா வரை அடித்துச் செல்லப்படுகிறது. அப்போது வானில் பறந்துசென்ற ஒரு அல்பட்ராஸ் பறவை, வழி தெரியாமல் தவித்த மாலுமிகளுக்குச் சரியான வழியைக் காட்டி அவர்களைக் காப்பாற்றுகிறது. மாலுமிகளில் ஒருவன் அந்தப் பறவையைத் தன்னுடைய துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுகிறான். தங்களைக் காப்பாற்றிய பறவையைச் சுட்டுக்கொன்றதற்காக அவனுடைய சக மாலுமிகள் அவன் மேல் கோபம் கொள்கிறார்கள்; வானிலை சீரடைந்தவுடன் அதை மறந்து அவனை மன்னித்தும் விடுகிறார்கள். ஆனால், கோபத்தில் இருந்த அமானுஷ்ய ஆவிகள், கொந்தளித்துச் சீறும் கடல் பகுதியை நோக்கிக் கப்பலைத் திருப்பிவிடுகின்றன. மீண்டும் எல்லா மாலுமிகளும் சேர்ந்து, இறந்த அல்பட்ராஸை அதைச் சுட்டவன் கழுத்திலேயே, அவனுக்குத் தண்டனையாகத் தொங்க விடுகிறார்கள்.

மறுபடியும் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் கப்பலைக் காப்பாற்ற இன்னொரு கப்பல் வருகிறது. ஆனால், உண்மையில் இம்முறை அது ஆவிகள் ஓட்டிவரும் கப்பல். அதில் ‘சாவு’ என்கிற ஆணும், ‘சாவில் வாழ்வு’ என்கிற அழகிய பெண்ணும் இருக்கிறார்கள். மாலுமிகள் உயிரைப் பணயம் வைத்து அவர்களுடன் தாயக்கட்டையை உருட்டி விளையாடுகிறார்கள். புராதன மாலுமியைத் தவிர, மற்ற எல்லோரும் ஒருவர் பின் ஒருவராகத் தோற்றுப்போய் இறக்கிறார்கள். அப்போது கப்பலுக்குள் திடீரென்று வந்துவிட்டிருந்த பல விஷப் பாம்புகளை, தன் இயல்புக்கு மாறாகப் போற்றிப் பாராட்டுகிறான் புராதன மாலுமி. ஏதோ சாபம் நீங்கிவிட்டதைப் போல, அல்பட்ராஸ் அவனுடைய கழுத்திலிருந்து கீழே விழுகிறது. இறந்த மாலுமிகள் உயிர்பெற்று எழ, கப்பல் நகர்கிறது.

உண்மையில், இறந்த உடல்களுக்குள் தேவதூதர்கள் புகுந்துகொள்ள, அமானுஷ்ய ஆவி ஒன்றுதான் கப்பலை ஓட்டிச்செல்கிறது என்பதை அறிந்த மாலுமி மூர்ச்சையடைந்து விழுகிறான். “இவன் அல்பட்ராஸைக் கொன்றவன்; அதற்கு இவன் இன்னும்கூடப் பரிகாரங்கள் செய்ய வேண்டும்” என்று சில குரல்கள் அவனுடைய காதில் ஒலிக்கின்றன. கரையை நெருங்கும்போது, இறந்த மாலுமிகளைச் சுற்றி தேவதூதர்கள் நிற்க, இந்த மாலுமியைக் காப்பாற்ற ஒரு துறவி படகை ஓட்டியபடி வருகிறார். அவருடைய படகில் இவன் வரும்போது, கடலில் அவர்களுடைய கப்பல் வெடித்து மூழ்கிவிட, மற்ற எல்லா மாலுமிகளும் இறந்துவிடுகிறார்கள்.

உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்

துறவியுடன் செல்லும்போது தன் கதையைச் சொல்லும் மாலுமி, தன்னுடைய சாபம் என்ன என்பதையும் உணர்கிறான். ஊர்ஊராக அலைந்து, எதிர்ப்படுபவர்களிடம் இந்தக் கதையை அவன் சொன் னால்தான், அவனுக்கு ஏற்படும் தாங்க முடியாத நெஞ்சு வலியிலிருந்து தற்காலிக நிவாரணமாவது அவனுக்குக் கிடைக்கும். “கடவுளிடம் அன்பு செலுத்த சிறந்த வழி, எல்லா உயிரினங்களிடமும் அன்பாக இருப்பதுதான். ஏனென்றால், அவர் எல்லா உயிரினங்களையும் நேசிக்கிறார்” என்று தான் சந்தித்த விருந்தாளியிடம் புராதன மாலுமி சொல்கிறான். வீட்டுக்குத் திரும்பிப் போகும் அவர், அடுத்த நாள் காலையில் ‘இன்னும் வருத்தம் மிக்கவராக, இன்னும் ஞானோதயம் பெற்ற வராக’ விழித்துக்கொள்கிறார்.

அமானுஷ்யக் குறியீடுகளும் கற்பனை வளமும் மிக்க இந்த நீண்ட கவிதையில், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே கவிஞர் கோலிரிட்ஜ் உயிர்ச்சூழல் சமநிலையைப் பற்றி சுட்டிக்காட்டியிருக்கிறார். தர மான இலக்கியம் என்பதும் மனித வாழ்க்கையுடன் ஒன்றி இருப்பதுதானே? அழிந்துகொண்டிருக்கும் பறவை இனங்களைப் பற்றிப் படிக்கும்போது, இன்னொரு கேள்வியும் எழுகிறது: இலக்கியமும் கவிதையும் தேக்கமடைந்தால், பறவைகளும் அழிந்து விடுமோ? பிரெஞ்சுக் கவிஞர் போத்லரின் ‘அல்பட்ராஸ்’ கவிதையில், மாலுமிகள் அல்பட்ராஸைப் பிடித்து, கப்பல் மேல்தளத்தில் அதை நடக்கவிட்டுத் துன்புறுத்து கிறார்கள். வானத்தின் அரசன் வீழ்ச்சியுற்று, கோமாளியாக மாறுவதை, ‘கூச்சல்களுக்கிடையே தரையில் அகதியாகி’ விடும் கவிஞனுக்கு ஒப்பிடுகிறார் போத்லர்.

‘பிளாஸ்டிக் கழிவு’ (நவம்பர் 2011) என்ற பத்திரிகை யில் வந்த ஒரு செய்தி: ஐரோப்பாவில் 2005-ல் இறந்த அல்பட்ராஸ் பறவை ஒன்றின் வயிற்றில் பிளாஸ்டிக் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது;

1944-ல் கடலில் விழுந்து நொறுங்கிய விமானம் ஒன்றின் உதிரிப்பாகம்தான் அது என்று அதில் பொறிக்கப் பட்டிருந்த எண்களிலிருந்து தெரியவந்தது.

வெ. ஸ்ரீராம், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்பாளர், இருமுறை செவாலியெ விருதுபெற்றவர்- தொடர்புக்கு: ramcamus@hotmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x