Published : 23 Nov 2017 10:49 AM
Last Updated : 23 Nov 2017 10:49 AM
சா
ர்லஸ் மேன்சன். 1960-களில் அமெரிக்காவை அலறவைத்த ஒரு பெயர். ‘மேன்சன் ஃபேமிலி’ எனும் பெயரில் அறியப்பட்ட அவரது குழுவினர் நடத்திய படுகொலைகள் குலைநடுங்க வைப்பவை. பல கொடூரக் குற்றவாளிகள் போலவே அவரது வாழ்க்கையின் தொடக்கமும் சிக்கல்கள் நிறைந்தது. திருமணமாகாத பெண்ணுக்குப் பிறந்த மேன்சன், சின்னச் சின்னக் குற்றங்களைச் செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் அடைக்கப்பட்டவர். குற்றவுணர்வற்ற குற்றவாளியாகவே வளர்ந்தார். ‘பீட்டில்ஸ்’ ரசிகர். சிறையில் இருந்தபோது கொஞ்சம் கிட்டாரும் கற்றுக்கொண்டார். ஒருகட்டத்தில் இயேசுவின் அவதாரம் என்று தன்னை முன்னிறுத்திக்கொண்ட மேன்சனால் அமெரிக்காவின் உயர் நடுத்தர வர்க்கப் பெண்கள் கவரப்பட்டனர். அவர் என்ன சொன்னாலும் கேட்கும் அளவுக்கு!
போதை மருந்து, கட்டற்ற பாலியல் உறவு என்று ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்துக்கொண்ட மேன்சனும் அவரது குழுவினரும் ஹிப்பி கலாச்சாரத்தில் திளைத்தனர். விஷயம் அத்துடன் நிற்கவில்லை. வெள்ளை இனத்தவர்களுக்கும் கறுப்பினத்தவர்களுக்கும் இடையில் ஒரு இனப் போர் உருவாகும் என்று கற்பிதம் செய்துகொண்டார் மேன்சன். ‘பீட்டில்’ஸின் ‘ஹெல்ட்டர் ஸ்கெல்ட்டர்’ பாடலின் மூலம் அவர் உருவாக்கிக்கொண்ட கருத்தாக்கம் அது. வெள்ளை இனத்தவர்களைக் கொலை செய்து பழியைக் கறுப்பின மக்கள் மீது போட முடிவெடுத்தார். அதையே தன் குழுவினருக்கும் மூளைச்சலவை செய்தார்.
1969 ஆகஸ்ட் 9. இரவு நேரம். புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ரோமன் போலன்ஸ்கியின் மனைவியும் நடிகையுமான ஷெரோன் டேட் உள்ளிட்ட ஐந்து பேர், கலிபோர்னியா வின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள போலன்ஸ்கி வீட்டில் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். சுவரில் ‘பன்றி’ என்று எழுதப்பட்டிருந்தது. இதைச் செய்தது யார் என்று போலீஸுக்குப் புரியவில்லை. இதற்கிடையே வேறொரு வழக்கில் மேன்சன் உள்ளிட் டோர் கைதாகியிருந்தனர். தொடர்ச்சியான விசாரணைக்குப் பின்னர் மேன்சன் குழுவைச் சேர்ந்த மூன்று பெண்கள்தான் கொலையாளிகள் என்று தெரியவந்தது. மேன்சனின் உத்தரவுப்படி, சூசன் அட்கின்ஸ், லிண்டா கசாபியான், பேட்ரிஷியா க்ரென்விங்கெல் ஆகிய பெண்களை அழைத்துச் சென்றார் மேன்சனின் குழுவைச் சேர்ந்த டெக்ஸ் வாட்சன். அவரது ‘மேற்பார்வை’யுடன் கொலைகள் அரங்கேறின. ஆனால், அந்தக் கொலைகளில் திருப்தியடையாத மேன்சன், ‘எப்படிக் கொலை செய்வது?’ என்று காட்டுவதற்காக, அடுத்த நாள் இரவு தானே ஆறு பேரை அழைத்துச் சென்று தன் விருப் பப்படி இருவரைக் கொலைசெய்ய வைத்தார். இப்படி மொத்தம் ஒன்பது பேரைக் கொடூரமாகக் கொன்றது இந்தக் கும்பல். மேன்சன் சிறையில் இருந்தாலும், அவரது குழுவைச் சேர்ந்தவர்கள் குறிப்பாகப் பெண்கள் கொலை வெறியுடன்தான் அலைந்தார்கள். 1975-ல் அப்போதைய அதிபர் ஜெரால்டு ஃபோர்டைச் சுட்டுக்கொல்ல லைனெட் ஸ்க்யூக்கி ஃப்ரோம் எனும் மேன்சன் சிஷ்யை முயற்சிசெய்தது பரபரப்பான செய்தியானது.
மேன்சனுக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், தனது 83-வது வயதில் நவம்பர் 19-ல் கலிபோர்னியா சிறையிலேயே மனிதர் இயற்கையான முறையில் மரணமடைந்தார். உடலை யாரிடம் ஒப்படைப்பது, எரிப்பதா புதைப்பதா என்று போலீஸார் குழம்பி நிற்கிறார்கள். நெருங்கிய உறவினர்கள் யாரேனும் முன்வந்தால் ஒப்படைப்பார்கள். இல்லாவிட்டால் காவல் துறையினரே அவரை ‘நல்லடக்கம்’ செய்ய வேண்டியதுதான். இயக்குநர் குவெண்டின் டாரன்டினோவின் அடுத்த படம் சார்லஸ் மேன்சன் பற்றியதாக இருக்கும் என்று சில மாதங்களுக்கு அனுமானமாகப் பேசப்பட்டது. இப்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேன்சன் பாத்திரத்துக்கு லியனார்டோ டி காப்ரியோ, டாம் க்ரூஸ், பிராட் பிட் என்று முக்கிய நடிகர்களின் பெயர்கள் அடிபடுகின்றன!
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT