Published : 18 Jul 2023 06:18 AM
Last Updated : 18 Jul 2023 06:18 AM

‘அண்ணா’ எங்கே செல்கிறார்?

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, நாட்டிலேயே முதல் முறையாகச் சென்னை மாகாணத்தில் நூலகங்களுக்கு எனத் தனிச் சட்டம் ஒன்று 1948இல் இயற்றப்பட்டது. ‘நூலகத் தந்தை’ எஸ்.ஆர்.ரங்கநாதன், சென்னை நூலகச் சங்கம் ஆகியோரின் ஆராய்ச்சி-செயல்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இச்சட்டம், ‘மெட்ராஸ் பொது நூலகச் சட்டம்’ (தற்போது ‘தமிழ்நாடு பொது நூலகச் சட்டம்’) என அழைக்கப்பட்டது.

இச்சட்டத்தின்கீழ், சென்னை கன்னிமாரா பொது நூலகம் ‘மாநிலத்தின் மத்திய நூலகம்’ என்ற பெயரில் முதன்மை நூலகமாக மேம்படுத்தப்பட்டது. 1951இல், முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின்கீழ் ஒன்பது மாவட்ட நூலகங்கள் இத்துடன் இணைக்கப்பட்டன.

நூலகத்துக்கு முக்கியத்துவம்: இந்தக் காலகட்டத்தில் (1948), ‘வீட்டுக்கு ஒரு புத்தக சாலை’ என்கிற தலைப்பில், வானொலியில் ஆற்றிய உரையில் அண்ணா இப்படிப் பேசினார்: “வீட்டிற்கோர் புத்தகச் சாலை நிச்சயமாக வேண்டும். வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் அலங்காரப் பொருள்களுக்கும், போகபோக்கியப் பொருள்களுக்கும் தரப்படும் நிலைமாறி, புத்தகச் சாலைக்கும் அந்த இடம் தரப்பட வேண்டும். உணவு, உடை, அடிப்படைத் தேவை - அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும், ஒவ்வொரு வீட்டிலும் முதல் இடம் புத்தகச் சாலைக்குத் தரப்பட வேண்டும்.”

அண்ணாவின் ‘தம்பி’ மு.கருணாநிதி, திமுக ஐந்தாவது முறையாக ஆட்சியமைத்த 2006-11 காலகட்டத்தில், அண்ணாவின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் நூலகம் ஒன்றை 2010இல் எழுப்பினார். ‘அண்ணா நூற்றாண்டு நூலகம்’ என்று பெயரிடப்பட்ட அது, ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகமாக உருப்பெற்றது. தரைத் தளம் உள்பட மொத்தம் ஒன்பது தளங்களில், மொத்தம் 3.8 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த நூலகத்தில் சுமார் 12 லட்சம் நூல்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாட்டின் அறிவு இயக்கத்தில் மிகப் பெரிய முன்னகர்வாக இந்த நூலகம் கருதப்பட்ட நிலையில், அடுத்துவந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, நூலகத்தைக் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போவதாக அறிவித்தார்; திருமண வரவேற்பு நிகழ்ச்சிகூட ஒன்று நடந்தது. ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைக்குத் தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரிடமிருந்தும் மிகப் பெரிய எதிர்ப்பு எழுந்தது.

இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நூலகத்தின் நிலையை ஆராய்வதற்காக, வழக்கறிஞர்கள் பி.டி.ஆஷா, எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், ‘அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும்’ என உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அதனைக் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்ற முயற்சித்த ஜெயலலிதா அரசின் உத்தரவையும் ரத்து செய்தது (24.08.2015).

எனினும், ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் நூலகத்தின் செயல்பாட்டில் சுணக்கம் நிலவிவந்தது. இந்தப் பின்னணியில்தான், 2021இல் திமுக மீண்டும் ஆட்சிக்குவந்தது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், அண்ணா நூலகத்தைப் புனரமைக்க உத்தரவிட்டார். ரூ.32 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட நூலகத்தில், ‘சென்னை இலக்கியத் திருவிழா’ போன்ற பல்வேறு அறிவுசார் நிகழ்வுகள் நூலகப் பயன்பாட்டினை அர்த்தப்படுத்திவருகின்றன. குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளும் தொடர்ச்சியாக சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுவருகின்றன.

கவனம் பெற வேண்டிய ‘அண்ணா’: இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களில் ஒன்றாக, மதுரையில் ‘கலைஞர் நூற்றாண்டு நூலக’த்தைக் கருணாநிதியின் மகனும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஜூலை 15 அன்று திறந்துவைத்துள்ளார். அண்ணாவுக்குத் தம்பி கருணாநிதியைப் போல், அண்ணா நூலகத்தின் தம்பியாகக் கலைஞர் நூலகம் உருவெடுத்திருக்கிறது. சுமார் 2.13 லட்சம் சதுர அடி பரப்பளவில், தரைத் தளத்துடன் ஆறு தளங்களைக் கொண்டு ரூ.120.75 கோடி மதிப்பீட்டில் இந்நூலகம் கட்டப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் அறிவுச் செயல்பாட்டில், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் உருவாக்கம் மிக முக்கியமான முன்னெடுப்பாக அமைந்திருக்கிறது. இந்த வேளையில், அதன் முன்னோடியான அண்ணா நூலகத்தின் பயன்பாடு இன்னும் முழுமையாக எட்டப்படவில்லையே என்பது, இந்நூலகத்தைத் தொடர்ந்து பயன்படுத்திவருபவர்கள் மட்டுமல்லாது, பயன்படுத்த விரும்புகிறவர்களின் ஆதங்கமாகவும் தொடர்கிறது. எனவே, நூலகத்தை அணுகுவது தொடங்கி அதன் பயன்பாடுகள் வரை நிலவும் குறைபாடுகள் சிலவற்றைக் கவனப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

வருகையும் உணவும்: முதலில், போக்குவரத்து. அண்ணா நூலகத்தைப் பொதுப் போக்குவரத்து மூலம் சென்றடைவது மிகப் பெரிய பிரச்சினையாக நிலவுகிறது. நூலகம் அமைந்திருக்கும் கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலை வழித்தடத்தில் 5C, 21G என்கிற இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மின்சார ரயிலைப் பொறுத்தவரை கிண்டி (மின்சார ரயில்), கோட்டூர்புரம் (பறக்கும் ரயில்) நிலையங்களிலிருந்து நூலகத்தை அடைய முயல்வது, நூலகத்துக்குச் செல்லும் எண்ணத்தையே கைவிடச் செய்துவிடும்.

“இந்த நூலகத்திற்குத் தொலைவிலிருந்து வருகின்றவர்கள், பேருந்துகளிலே வருகின்றவர்களுக்குக்கூட - இந்த நூலகத்திற்கு என்று குறிப்பிட்ட பேருந்துகளிலே வந்தால் அந்தக் கட்டணத்தைக்கூட ஓரளவு குறைத்து அதை அமல்படுத்தலாமா என்ற கருத்தும் இருக்கிறது,” என நூலகத்தைத் திறந்துவைத்துப் பேசியிருந்தார் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி. அவரது யோசனையைத் தற்போதைய அரசு பரிசீலிக்க வேண்டும்.

இரண்டாவது, உணவு. அண்ணா நூலகத்துக்கு வார நாள்களில் (நாளொன்றில்) 1,000, வார இறுதி நாள்களில் 1,500-க்கும் மேல் என்கிற எண்ணிக்கையில் வாசகர்கள் வந்துசெல்கின்றனர். இத்தனை பேருக்குமான உணவுத் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையிலான உணவகம் ஒன்று, நூலக வளாகத்துக்குள் இல்லாதது மிகப் பெரிய குறையாக நிலவுகிறது. தரைத் தளத்தில் தற்போது இயங்கிவரும் ஆவின் பாலகம், தாகம் தணிக்கிறதே தவிர பசிக்கு உணவளிப்பதில்லை.

உடனடிக் கவனம் தேவை: பெரும் எண்ணிக்கையிலான போட்டித் தேர்வு மாணவர்கள் அண்ணா நூலகத்தைப் பயன்படுத்திவருகின்றனர்; இதில் பார்வைத் திறன் குறைபாடுடைய மாணவர்களும் அடக்கம் (அவர்களுக்கான தனிப் பிரிவு ஒன்று செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது).

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி நூலகத்துக்கு வந்துசெல்வது தொடங்கி, மதிய உணவுக்குக் கடைகளைத் தேடி அலைவது வரையிலான இடர்ப்பாடுகளை அவர்கள் அன்றாடம் எதிர்கொண்டுவருகின்றனர். இந்தப் பிரச்சினைகள் மாணவர்களுக்கு மட்டுமின்றி, நூலகத்தைப் பயன்படுத்திவரும் பெரும்பாலானோருக்கும் சங்கடத்தையும் அயர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன.

இவை தவிர, பல்வேறு குறைபாடுகள் நூலகத்தில் நிலவுகின்றன. சமீபத்திய புனரமைப்பு நடவடிக்கைகள்கூட உள்கட்டமைப்பு சார்ந்தவையே; நூலகச் சேவை தொடர்பானவை அல்ல. நூலகம் தொடங்கப்பட்டதற்குப் பிறகு, 2015-16 காலகட்டத்தில்தான் நூல்கள் மீண்டும் கொள்முதல் செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வளவுப் பெரிய நூலகத்தில் வாசகர் வழிகாட்டிக் கையேடு என்கிற ஒன்று இல்லாதது மிகப் பெரிய பின்னடைவாகத் தொடர்கிறது.

ஆய்வு மாணவர்கள் நூலகத்திலேயே தங்கி ஆராய்ச்சி செய்வதற்கு வழிசெய்யும் ஆராய்ச்சியாளர் விடுதியை, இதுவரை ஒருவர்கூட பயன்படுத்தியிருக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, நூலகத்தின் 99 பணியிடங்களில் தற்போது 46 இடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பிரச்சினைகள் உடனடிக் கவனம் கோருபவை; தொலைநோக்குத் தீர்வுகளை வேண்டுபவை.

‘நேரடி நூல் வாசிப்பு மட்டுமின்றி, பல்வேறு தொழில்நுட்பங்களின் வாயிலாகக் கற்று உலகத் தரத்திற்கேற்ப தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களையும், இளைய தலைமுறையினரையும் உயர்ந்து நிற்கச் செய்யும்’ எனக் கலைஞர் நூற்றாண்டு நூலகம் குறித்து ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். கலைஞர் நூலகம் எப்படிச் செயல்படவிருக்கிறது என்பது, அண்ணா நூலகத்தில் தற்போது நிலவும் குறைபாடுகளைச் சீர்செய்வதிலும் அடங்கியிருக்கிறது!

- தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in

To Read in English: Whither goes ‘Anna?’

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x