Last Updated : 14 Jul, 2023 06:18 AM

1  

Published : 14 Jul 2023 06:18 AM
Last Updated : 14 Jul 2023 06:18 AM

இலங்கை இனப் பிரச்சினை:13ஆவது திருத்தம் தான் தீர்வா?

புலம்பெயர் நாட்டில் குறிப்பிடத்தக்க அரசியல் அமைப்பாகச் செயல்பட்டுவரும் பிரித்தானியத் தமிழர் பேரவை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அண்மையில்ஒரு நிகழ்வுக்கு அழைத்திருந்தது.

அதில் உரையாற்றிய அண்ணாமலை, “13ஆவது அரசமைப்புத் திருத்தத்தை மீள நடைமுறைப்படுத்துவதே இலங்கைத் தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வாக அமையும்” என்று பேசியது விவாதங்களைத் தொடங்கிவைத்திருக்கிறது. இதற்கு முன்னர் ஈழத்துக்கு வந்தபோதும், பல்வேறு தருணங்களில் ஈழம் குறித்து கருத்துரைத்தபோதும், 13ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அண்ணாமலை கூறியிருந்தார்.

இந்தியாவில் ஆளுங்கட்சியாக உள்ள ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பவர், இந்தத் திருத்தத்தை இன்னமும் வலியுறுத்திக்கொண்டிருப்பது ஏன் என்பது புரியாத புதிர். அதைவிடவும் புரியாத விஷயம், இந்தத் திருத்தம் என்ன நிலையில் இருக்கிறது என்ற புரிதல் இந்திய அரசியல் தலைவர்களிடம் இல்லாதது ஏன் என்பதுதான்!

நீண்டகால எதிர்பார்ப்பு: ஈழத்துக்கும் இந்தியாவுக்கும் பன்னெடுங்காலப் பண்பாட்டுப் பொருளாதார உறவு இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கும் ஈழத்து மக்களுக்கும் இடையில் மட்டுமல்ல, ஈழ–தமிழக அரசுகளும் சிங்கள-இந்திய அரசுகளும்கூட நெடுங்காலத் தொடர்பைக் கொண்டுள்ளன. இந்தச் சூழலில்தான் சுதந்திர சிலோன் நாட்டில் ஈழத் தமிழர்கள் ஒடுக்கப்பட்ட வேளையிலும், அது 1970களில் லங்கா என்கிற பெரும்பான்மையினவாத நாடாகக் கட்டமைக்கப்பட்ட வேளையிலும், ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டினதும் இந்தியாவினதும் ஆதரவுச் செயல்பாடுகளை எதிர்பார்த்தனர்.

இப்படியொரு சூழலில், இலங்கை அரசோடு இணைந்து வாழ முடியாது என்றும் அதன் முழுமையான கட்டமைப்பே, ஈழத் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அழிப்பதுதான் என்றும் உணர்ந்த வேளையில், தனி நாட்டுக்கான போராட்டம் ஈழத்தில் முகிழ்த்தது. இலங்கை அரசு 1956இல் தனி சிங்களச் சட்டம் கொண்டுவந்த வேளையில், அப்போதிருந்த சிங்களத் தலைவர்கள், ‘ஈழத் தமிழர்கள் பிரிந்து செல்லாமல் இருக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு சமஷ்டி (கூட்டாட்சி) தீர்வை முன்வைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்கள். போராளிகள் தனிநாடு கோரிய வேளையில், சமஷ்டி குறித்த யோசனை இரண்டாவது தேர்வாக இருந்தது.

13ஆவது திருத்தத்தின் நிலை: இலங்கை - இந்திய ஒப்பந்தம் 1987இல் கையெழுத்தானது. அன்றைய இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்திக்கும் அன்றைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் வழியாக, 13ஆவதுதிருத்தச் சட்டம் இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்டது.

1987 முதல் இன்றுவரை இலங்கை அரசைப் பொறுத்தவரையில் 13ஆவதுதிருத்தச் சட்டம் நடைமுறையில்தான் இருக்கிறது. இலங்கையின் ஒன்பது மாகாணங்களையும் ஒன்பது ஆளுநர்கள் ஆட்சி செய்கிறார்கள். ஒற்றை ஆட்சியைப் பிரதான அரசமைப்பாகக் கொண்ட இலங்கையில், 13ஆவதுதிருத்தத்தின் நிலை இப்படித்தான் இருக்க முடியும்.

இதனால்தான் அன்றைக்கு ஈழத் தமிழர்கள் 13ஆவது திருத்தத்தை எதிர்த்தார்கள். ‘13ஆவது திருத்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்றிருக்க வேண்டும், அவர்கள் அதை நிராகரித்தது அரசியல் சாதுரியமற்ற முடிவு’ என்று சிலர் விமர்சிப்பது உண்டு. ஆனால், 2009இல் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை யுத்தம் முடிவடைந்து, இன்றைக்கு 15 ஆண்டுகள் ஆகும் நிலையில், 13ஆவது திருத்தம் என்னநிலையில் இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இலங்கை அரசு என்ன செய்தது? - விடுதலைப் புலிகள் ஈழ நிலத்தின் பல பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த வேளையில், 2006இல் சமாதான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் போரைத் தொடங்கிய இலங்கை அரசு, 2008இல் போரை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர், மாகாண சபைத் தேர்தலை நடத்தி, கிழக்கு மாகாண ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், வடக்கிலும் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று கூறிய இலங்கை அரசு, 2009இல் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோதும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகே, 2013இல் அந்தத் தேர்தலை நடத்தியது.

2018இல் வட மாகாண சபை ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், இன்றைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை. இலங்கை அரசின் தேவைகளுக்கும், ஈழத் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கும்தான் இங்கே மாகாண சபை என்ற கட்டமைப்பு பயன்படுத்தப்படுகிறது. அதேவேளை, மாகாண சபைக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் மத்திய அரசினால் அதிகாரங்கள் கையாளப்படும்நிலையில், வெறும் கருத்துகளை முன்வைக்கும் இடமாக மட்டுமே கடந்த காலத்தில் மாகாண சபை இருந்தது.

எதிர்பார்ப்பும் நிதர்சனமும்: காவல் துறை, காணி (நிலம் சார்ந்த) அதிகாரத்தைக் கையளித்தால் 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. அதனையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போன்றவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், எந்த அதிகாரமும் இங்கே வழங்கப்படாத நிலையில் காணி, காவல் துறை அதிகாரத்தை ஒருபோதும் வழங்க மாட்டோம் என்று இலங்கை அரசும், சிங்கள இனவாதிகளும் கூறிக்கொண்டிருக்கையில், எப்படி 13ஆவது திருத்தத்தில் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்?

தவிர, கடந்த காலத்தில் 13ஆவது திருத்தம் நடைமுறையில் இருந்த வேளையில்தான், ஈழத் தமிழ் மக்கள்மீது பாரிய இனப் படுகொலை மேற்கொள்ளப்பட்டது. இன்றைக்கும் இந்தத் திருத்தம் நடைமுறையில் உள்ள காலகட்டத்தில்தான் ஈழத்தில் நிலங்களும் கோயில்களும் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

இதற்கு முன்பு நடைபெற்ற எல்லாமும் தொடர்கிறது என்பதைக் காட்டிலும் இன்னமும் அதிகமாக நிகழ்கிறது என்கிறபோது, 13ஆவது திருத்தம் ஈழத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் அளிக்கவில்லை என்பதுதானே உண்மை. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி இணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாணங்கள் 2006இல் நீதிமன்ற வழக்கு ஒன்றின்வழியாகப் பிரிக்கப்பட்டதைப் போன்றும், காணி, காவல் துறை அதிகாரம் வழங்கப்படாமை போன்றும்தான் 13ஆவதுதிருத்தத்தில் உள்ள அம்சங்கள் மீறவும் நடைமுறைக்குக் கொண்டுவரப்படாமலும் இருக்கின்றன என்பதே உண்மை நிலை.

இதனால் கடந்த காலத்தில் நடைபெற்ற தேர்தல்கள் வழியாகவும் மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டங்களின் வழியாகவும் வடக்கு-கிழக்கில் சுயநிர்ணய உரிமை கொண்ட சமஷ்டி ஆட்சி நிறுவப்பட வேண்டும்என்பதை ஈழ மக்கள் வலியுறுத்திவந்தனர். தனிச்சிங்களச் சட்டம் என்ற மொழி வெறுப்பு, இனப் படுகொலைச்செயல்கள், நில ஆக்கிரமிப்புகள், வேலைவாய்ப்பு மறுப்பு,சம உரிமை மறுப்பு எனப் பல்வேறு காரணங்களால்தனிநாடு கோரிய போராட்டத்தைக் கையில் எடுத்து மாபெரும்இனப் படுகொலையைச் சந்தித்த நிலையில், அதற்கானநீதியின் வழியாக ஈழத் தமிழர்கள் பன்னாட்டுச்சமூகத்தால் தனிநாடு அங்கீகரிக்கப்பட வேண்டும்என்ற நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கான முழுச் சூழலை இலங்கை அரசே உருவாக்கி இருக்கிறது. தனிநாடும் இல்லை, சமஷ்டியும் இல்லை, 13ஆவது திருத்தமும் இல்லை என்றால் ஈழத் தமிழர்கள் மீண்டும் தனிநாட்டு முடிவுக்குச் செல்ல வேண்டியதாகிவிடுகிறது. தனிநாடு கேட்டுப் போராடினாலும் இனவழிப்பு, போராடாமல் விட்டாலும் எந்தத் தீர்வும் இன்றி இனவழிப்பு என்றால் ஈழத் தமிழர்கள் வேறு எந்தத் தீர்வுக்குத்தான் செல்ல முடியும்? உண்மையில், இந்தியா 13ஆவது திருத்தத்தைத் தாண்டி ஈழத் தமிழர்களுக்கான தீர்வு பற்றிச் சிந்திப்பதுதான் அர்த்தமுள்ள செயலாய் இருக்கும். இச்சட்டம் நடைமுறையில் உள்ள சமயத்தில்தான் மன்னாருக்கு சீனத் தூதர் வந்து, ‘இங்கிருந்து இந்தியா எத்தனை கிலோமீட்டர்?’ என்று கேட்டார். ஆகவே, 13ஆவது திருத்தம் ஈழத் தமிழர்களுக்கும் பயன்தராது. இந்தியாவுக்கும் பாதுகாப்பு தராது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x