Published : 10 Jul 2014 12:00 AM
Last Updated : 10 Jul 2014 12:00 AM
வினையடி என்பது ஒரு வினைச் சொல்லின் அடிப்படை வடிவம். ‘ஓடினான்’ என்ற வினைச் சொல்லை ஓடு+இன்+ஆன் என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். இதில் ‘ஓடு’ என்பதுதான் வினையடி, ‘இன்’ என்பது இறந்த கால இடைநிலை, ‘ஆன்’ என்பது ஆண்பால் படர்க்கை விகுதி. ஆக, ‘பேசினாள், சிரித்தான், கொடுத்தார், அழைப்பார், கடிக்கும்’ போன்ற சொற்களைக் கொடுத்து இவற்றின் வினையடிகளைக் கேட்டால் முறையே, ‘பேசு, சிரி, கொடு, அழை, கடி’ என்று சரியாகச் சொல்லிவிடுவோம்.
சற்றே மாறுபட்ட வினைகள் இருக்கின்றன: ‘வந்தான், வாருங்கள், வருவார், தந்தார், தாருங்கள்’ போன்ற வினைகள். இலக்கணம் தெரியாவிட்டாலும் இவற்றின் வினையடிகளையும் நாம் ஓரளவுக்குக் கண்டுபிடித்துவிட முடியும்: வா, தா.
இன்னும் சில சொற்கள் - அதிக அளவில் பயன்படுத்தப்படும் சொற்கள் அவை - இருக்கின்றன. அவற்றின் வினையடிகள் என்ன என்பதைப் பலராலும் எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. அந்த அளவுக்கு வினையடிகளிலிருந்து அவை வேறுபட்டிருக்கும். இந்தச் சொற்றொடர்களைப் பாருங்கள்: ‘தேங்காய் விற்றேன், பிட்டுத் தந்தேன், பாடம் கற்க, நூல் நூற்றார், மனம் ஒத்து, கோத்துத் தா, அண்ணாந்து குடி’. இவற்றில் அடிக்கோடிடப்பட்டிருக்கும் வினைச்சொற்களின் வினையடிகளைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். சிரமமாக இருக்கிறதல்லவா! அந்தச் சொற்களின் வினையடிகள்:
விற்றேன் = வில், பிட்டு = பிள், கற்க = கல், நூற்றார் = நூல், ஒத்து – ஒ, கோத்து – கோ, அண்ணாந்து = அண்ணா. தற்காலத் தமிழில் யாரும் இந்த வினையடிகளை ஏவலுக்குப் பயன்படுத்துவதில்லை. ‘கடையில் பொருட்களை நன்றாக வில்’ என்று யாரும் கட்டளையிட மாட்டார்கள். ‘இளமையில் கல்’ என்று முன்பு பயன்படுத்தியதுண்டு. ஆனால், தற்போது, இந்தப் பொருளில் ஏவல் வடிவத்துக்கு ‘படி’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதே அதிகம். ‘விற்றேன்’ என்ற சொல்லை ஒருவர் அகராதியில் தேட வேண்டுமென்றால் ‘வில்’ என்ற சொல்லில்தான் பார்க்க வேண்டும். ஆசிரியர்கள் இது போன்ற சொற்களை மாணவர்களுக்குத் தெளிவாக எடுத்துச்சொல்லி, மொழி தரும் இது போன்ற வியப்புகளை இயல்பாக எதிர்கொள்ள அவர்களுக்கு உதவ வேண்டும்.
மறந்துபோன சொல்: ‘நாம் அவன் இவன் உவன்’ என்று ஆரம்பிக்கும் நம்மாழ்வாரின் பாசுரத்தைப் படித்திருக்கிறீர்களா? அவன் சரி, இவன் சரி, அது என்ன உவன்? அவனுக்கும் இவனுக்கும் இடைப்பட்ட சொல்தான் உவன். தொலைவிலும் இல்லாமல், பக்கத்திலும் இல்லாமல் இடைப்பட்ட தொலைவில் இருப்பவனைக் குறிப்பிட முன்பு பயன்படுத்திய சொல் இது. ஈழத் தமிழில் இந்தச் சொல் இன்னும் புழக்கத்தில் இருக்கிறது. இதே போன்றுதான் உவள், உவர், உது ஆகிய சொற்களும்.
சொல் தேடல்: இரண்டு வாரங்களுக்கு முன்பு, சிலுவட் (Silhouette) என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்னவென்று கேட்டிருந்தோம். சொற்கள் வந்து குவிந்தன. வாசகர்கள் அனுப்பிய பட்டியல் இது:
தே. சேஷாத்திரி - நிழல் படிமம்; மணிவேலுப்பிள்ளை - திண்ணிழலுரு, புறவுரு, திண்புறவுரு; கோ. மன்றவாணன் - நிழற்சாயல், நிழற்படிமம், நிழல்வடிவம், நிழலுரு, கருவடிவம், கருஞ்சாயல், நிழல்தோற்றம், புறவுரு, மங்குருவம்; பாலசுந்தரம் – நிழல் உருவம்.
இவற்றுள் நிழல் உருவம், நிழலுரு என்ற சொற்கள் மிகவும் பொருத்த மானவை எனத் தோன்றுகிறது. வாசகர்கள் குறிப்பிடாத இன்னொரு சொல்: வெளிக்கோட்டுரு. நிழலுரு, வெளிக்கோட்டுரு ஆகிய இரண்டு சொற்களை நாம் இறுதிசெய்துகொள்ளலாம்.
இந்த வாரக் கேள்வி: சிம் கார்டு (SIM card) என்பதைத் தமிழில் எப்படிக் குறிப்பிடலாம்?
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT