Published : 03 Jul 2023 07:46 AM
Last Updated : 03 Jul 2023 07:46 AM
இந்தக் காலத்தில் இப்படியெல்லாம்கூடச் செய்வார்களா? நம்ப முடியவில்லையே என்றுதான் எல்லாரும் சொல்வார்கள். ஆம்! அப்படிப்பட்ட சம்பவம் ஆந்திர மாநிலம் சித்தூர் காவல் நிலையத்தில் நடந்துள்ளது.
பெண் ஒருவரைப் படுக்கவைத்து இரண்டு காவலர்கள் ஆளுக்கொரு காலைப் பிடித்து விரித்துக்கொள்ள, மற்றொரு காவலர் பெண்ணின் பிறப்புறுப்பில் மிளகாய்த் தூளைத் திணித்துச் சித்ரவதை செய்துள்ளனர். மற்றொரு பெண்ணை அவருடைய கைகளைப் பின் பக்கம் கட்டிவிட்டு, ராட்டினத்தில் கயிறு போட்டுத் தொங்கவிட்டுத் தண்ணீர் இறைப்பதைப் போல் மேலும் கீழும் இழுத்துப் பின்புறத்தில் பல நாள்கள் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். இன்னொரு பெண்ணைத் தனியறைக்கு இழுத்துச் சென்று, ஆடைகளைக் களைந்து வல்லுறவு செய்துள்ளார் காவலர் ஒருவர். பிடித்துச் செல்லப்பட்ட ஐந்து பெண்கள் மீதும் இத்தகைய கொடூரச் சித்ரவதைகளைக் காவலர்கள் நிகழ்த்தியுள்ளனர்.
ஆண்கள் மீதும் பல்வேறு கொடுமைகளை நிகழ்த்தியுள்ளனர் - எதற்காக? நகைத் திருட்டை ஒப்புக்கொள்ளச் சொல்லித்தான்! பாதிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் மிகவும் அமைதியாகவும் நிதானமாகவும் என்னிடம் இதைத் தெரிவித்தனர். என்னால்தான் கண்ணீரை அடக்கிக்கொள்ள முடியவில்லை.
ஏன் இந்தக் கொடூரம்? சித்தூர் மாவட்டம், பூத்தாலப்பட்டு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ஒரு வீட்டில், கடந்த ஜனவரி மாதம் நகை திருடுபோனதும், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம் புளியாண்டிப்பட்டி கூட்டுரோட்டில் வசிக்கும் சுவாமிக்கண்ணு ஐயப்பன் என்பவர்தான் அந்தத் திருட்டுக்குக் காரணம் என்பதும்தான் வழக்கு. ஒரு திருட்டுக் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வதற்காகக் காவலர்கள் இவ்வளவு கொடூரமாக நடந்துகொள்வார்களா என நினைக்கலாம். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குறவர் சாதியினர் என்பதுதான் இந்தக் கொடூரத்தின் பின்னணி. குறவர்கள் என்றாலே திருடர்கள்தான் என்ற கருத்துத் தளத்திலேயே காவல் துறை இப்போதும் செயல்படுகிறது என்பதற்கு மற்றொரு உதாரணம்தான் இந்தச் சம்பவம்.
பிரிட்டிஷ் அரசு 1871இல் குற்றப் பரம்பரைச் சட்டத்தை இயற்றியது. முத்துராமலிங்கம், ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்களின் தொடர் போராட்டத்தால் 1947இல், இடைக்கால காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டில் இச்சட்டம் நீக்கப்பட்டது; அச்சட்டம் தற்போது நடைமுறையில் இல்லை. ஆனால், முன்னாள் குற்றப் பரம்பரையினர் எனக் கூறி, எங்கு திருட்டு நடந்தாலும் குறவர் சாதியைச் சேர்ந்தவர்களைப் பிடித்துச் செல்வதைக் காவல் துறையினர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
காற்றில் பறக்கும் உத்தரவுகள்: நாட்டு விடுதலைக்குப் பிறகு, தனக்கென்று ஒரு அரசமைப்பு, இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம்ஆகியவற்றை இந்தியா உருவாக்கிக் கொண்டுள்ளது.பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்-1989 நடைமுறையில் இருக்கிறது. இந்தச் சட்டங்களுக்கானவிளக்கங்கள், நடைமுறைகள் என்று பல தீர்ப்புகளை உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் வழங்கியிருக்கின்றன. ‘டி.கே.பாசு எதிர் மத்திய அரசு’ வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்டால், எத்தகைய நடைமுறைகளைக் காவல் துறையினர் பின்பற்ற வேண்டும் என்று தெளிவான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது; எண்ணற்ற வழிகாட்டுதல்களையும், உத்தரவுகளையும் நீதிமன்றங்கள் வழங்கியிருக்கின்றன.
ஆனால், அந்த வழிகாட்டுதல்களில் ஒன்றைக்கூட ஆந்திர மாநிலக் காவல் துறையினர் பின்பற்றவில்லை. மனித உரிமைகள் குறித்தோ அவற்றைக் காப்பதற்கான ஆணையம் குறித்தோ கடுகளவும் கணக்கில் கொள்ளவில்லை. பெண்கள் 5, ஆண்கள் 3, சிறுவர்கள் 2 (5, 7 வயதில்) என மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜூன் 7-16 வரை சட்டவிரோதக் காவலில் பெங்களூருவில் தனியார் இடம் ஒன்றில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். புலனாய்வு செய்து கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, நகைக் கடைக்காரர்களை அழைத்துக்கொண்டு ஓசூர், ஊத்தங்கரை, பூத்தாலப்பட்டு எனப் பல்வேறு இடங்களுக்குச் சென்ற காவலர்கள், அவர்களிடம் ஏதாவது ஒரு நகைக்கடையைக் காட்டச் சொல்லி, அவர்களிடமிருந்து கைப்பற்றிக்கொள்வதாக நகைக் கடைக்காரர்களையும் துன்புறுத்தியுள்ளனர். பட்டுக்கோட்டையைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் ரோஜா ராஜசேகர், காவல் துறையினரால் மிரட்டப்பட்டு, அதன் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
காவல் துறையின் மீறல்கள்: ஒரு மாநிலக் காவல் துறையினர், வெளி மாநிலத்துக்குச் சென்று குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்றால், அந்த மாநிலக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்திருக்க வேண்டும். தமிழ்நாடு காவல் துறையிடம் எந்த வகையிலும் தகவல் தெரிவிக்காமல், குறவர் குடும்பத்தை அடித்து, இழுத்துச் சென்றுள்ளனர். பிடித்துச் சென்றவர்கள் குறித்து அவர்களது உறவினர் ஒருவர், ஜூன் 11 அன்று இணையம் வழியாகக் காவல் துறையிடம் புகார் அளித்தார். ‘புகார் அளிக்கும் அளவுக்குத் தைரியம் வந்துவிட்டதா?’ என சித்தூர் காவல் துறையினர் ஜூன் 12 இரவு மேலும் மூன்று பேரைப் பிடித்துச் சென்றுள்ளனர். மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகுதான், ‘மிஸ்ஸிங்’ என முதல் தகவல் அறிக்கை, ஜூன் 13 அன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பத்திரிகைச் செய்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுத் தீர்மானம், குறவர் சமூக மக்கள் அமைப்புகளின் தலையீடு, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை என எல்லாவற்றுக்கும் பிறகுதான், பிடித்துச் செல்லப்பட்டவர்களில் 8 பேரை ஜூன் 16 இரவு மத்தூர் காவல் நிலையத்தில் ஆந்திர மாநிலக் காவல் துறையினர் பிணையில் ஒப்படைத்தனர். அதன் பிறகே, தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றி பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் தெரிவித்தனர். ஜூன் 17 அன்று, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உள்நோயாளிகளாகச் சேர்க்கப்பட்டு ஜூன் 20 வரை இவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
நடவடிக்கையும் தீர்வும்: தற்போது, ஆந்திர மாநிலக் காவல் துறையினர் மீது தமிழ்நாடு காவல் துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது. சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது பாலியல் வல்லுறவுக் குற்றப் பிரிவுகள் உள்படப் பல்வேறு பிரிவுகளில் ஆந்திர மாநிலக் காவல் துறையும் வழக்குப் பதிவுசெய்திருக்கிறது.
எந்தத் துணிச்சலில் இத்தகைய நாலாந்தரமான விசாரணை முறைகளைக் காவல் துறையினர் கையிலெடுக்கின்றனர்? விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்களுக்கு எதிராக வல்லுறவு உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் காவலர்கள், சட்டம் தங்களை ஒன்றும் செய்யாது; வழக்குப் பதிவுசெய்யப்பட்டாலும் அதிலிருந்து தப்பிக்கும்தந்திரம் தங்களுக்குத் தெரியும் என்பதே அவர்களது எண்ணமாக இருக்கிறது. நீதிமன்ற நடைமுறைகள் வழக்கைப் பல்லாண்டுகளுக்கு இழுத்தடிக்கின்றன. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் சோர்வடைந்து, பொருளாதாரரீதியாகவும் நொடித்துப்போய் வழக்கை எதிர்கொள்ள முடியாமல், என்னவோ நடக்கட்டும் என்ற மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
எனவே, மக்களைப் பாதுகாக்க வேண்டிய, சட்டப்படி நடக்க வேண்டிய காவல் துறையினரே இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும்போது, அவர்கள் தப்பிக்க முடியாது; கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என்ற நிலையை அரசு உருவாக்க வேண்டும். இதன் மூலம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் நியாயமும் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அரசு ஏற்படுத்த வேண்டும். ஒரு சில காவலர்கள் தவறு இழைத்தாலும்கூட, அரசு நமக்குப் பாதுகாப்பாக இருக்கிறது என்கிற உணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதே அரசின் முதல் கடமையாக இருக்க வேண்டும்.
- பெ.சண்முகம்
மாநிலத் துணைத் தலைவர்
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்
தொடர்புக்கு: pstribal@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT