Published : 30 Jun 2023 08:06 AM
Last Updated : 30 Jun 2023 08:06 AM
இருபதாம் நூற்றாண்டின் மத்தியில், சென்னையில் நிலவிய போக்குவரத்து நெரிசலால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானவர்களில் ஒருவர், புதுமைப்பித்தன். ‘சாடி மோதித் தள்ளிக்கொண்டு நடமாடும் ஜனக் கூட்ட’த்துடன், ஓடி ஓய்ந்த ‘டிராம்’ உள்ளிட்ட வாகனங்களால் ஏற்பட்ட நெருக்கடி குறித்துப் பல இடங்களில் வெதும்பும் அவர், ‘மகாமசானம்’ (1941) கதையில், விரக்தியின் உச்சத்துக்கே சென்றுவிடுகிறார்: ‘சாயந்தரமாகிவிட்டால், நாகரிகம் என்பது இடித்துக்கொண்டும் இடிபட்டுக்கொண்டும் போக வேண்டிய ரஸ்தா என்பதைக் காட்டும்படியாகப் பட்டணம் மாறிவிடுகிறது. அதிலும் தேகத்தின் நரம்பு முடிச்சுப் போல, நாலைந்து பெரிய ரஸ்தாக்களும், டிராம் போகும் ரஸ்தாக்களும் சந்திக்கும் இடமாகிவிட்டாலோ தொந்தரவு சகிக்கவே முடியாது.’
மக்கள்தொகையும் போக்குவரத்தும்: 1941இல், 7.77 லட்சமாக இருந்த சென்னையின் மக்கள்தொகை, பத்தே ஆண்டுகளில் (1951), சுமார் 14 லட்சத்தைத் தொட்டது. வாகனங்களின் எண்ணிக்கையிலும் இது எதிரொலித்தது. ‘இவ்வளவு மனிதர்களும் வாகனங்களும் எங்குதான் செல்கிறார்கள்? என்னதான் செய்கிறார்கள்? நிறையத்தான் செய்ய வேண்டும். இன்றைய நாட்டு வாழ்க்கையின் சமநிலையும் முன்னேற்றமும் இந்தப் போக்குவரத்து நிகழும் விதத்தில்தான் கட்டுண்டிருக்கின்றன’ என சென்னையின் போக்குவரத்தைக் கண்டு அசோகமித்திரன் வியக்கிறார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த, 1949 காலகட்டத்தில் மவுண்ட் ரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை என இரண்டு இடங்களில் மேம்பாலங்கள் கட்டுவதற்குச் சென்னை மாநகராட்சி முன்மொழிந்தது. ஆனால், அது செயல்வடிவம் பெறவில்லை. அதன் பிறகு 1965இல், மவுண்ட் ரோட்டில் கதீட்ரல் சாலையும் நுங்கம்பாக்கம் சாலையும் சந்திக்கும் ‘ஜெமினி சர்க்கி’ளில் மேம்பாலம் ஒன்று மீண்டும் முன்மொழியப்பட்டது.
மேம்பாலத்தின் தேவை: 1971இல் சென்னையின் மக்கள்தொகை 24 லட்சத்தைக் கடந்தது; மக்கள்தொகைப் பெருக்கத்தின் நேரடி விளைவுகளுள் ஒன்றாகவாகனங்களின் எண்ணிக்கையும் சரமாரியாக உயர்ந்துவந்ததால் சாலைப் போக்குவரத்தில் நெருக்கடி கூடியது. அண்ணாவின் பெயரால் அழைக்கப்படத் தொடங்கிய, சென்னையின் முதன்மை அடையாளமும் முதன்மைச் சாலையுமான மவுண்ட் ரோடு, வாகனங்களால் நிரம்பத் தொடங்கியது.
அண்ணா சாலையின் மையப் பகுதியான நுங்கம்பாக்கத்தில், அண்ணா சாலை - நுங்கம்பாக்கம் சாலை (உத்தமர் காந்தி சாலை) - (கதீட்ரல் சாலை) ராதாகிருஷ்ணன் சாலை - ஜி.என்.செட்டி சாலை ஆகியவை சந்திக்கும் புள்ளியான ஜெமினி சர்க்கிளை, 1970இல் நாளொன்றில் 12,000 வாகனங்கள் கடந்துசென்றதாகப் புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது. ‘பீக் ஹவர்’ நேரத்தில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது மிகப் பெரிய சவாலாக உருவெடுத்தது. இந்தப் பின்னணியில்தான், அண்ணா சாலை ஜெமினி சந்திப்பில், ரூ.66 லட்சம் மதிப்பீட்டிலான மேம்பாலம் ஒன்று, மாநில நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்படும் என 1969இல் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
முதல் மேம்பாலம்: அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.கருணாநிதி அடிக்கல் நாட்ட, 1971 செப்டம்பர் 1 அன்று மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 1,500 டன் எஃகு (Steel), 3,500 டன் சிமென்ட் கொண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம், தரம் பிரிப்பான் (Grade separator) என்கிற அமைப்பில், தென் கிழக்கு ஆசியாவில் அமைந்த முதல் சாலை மேம்பாலம் ஆகும். மும்பையில் கெம்ஸ் கார்னர், மரைன் டிரைவ் ஆகிய இடங்களில் அமைந்த மேம்பாலங்களைத் தொடர்ந்து இந்தியாவின் மூன்றாவது மேம்பாலமாக உருப்பெற்ற இது, கட்டப்பட்ட காலத்தில், இந்தியாவில் மிக நீளமான மேம்பாலமாகவும் விளங்கியது. சாலையின் மேற்பரப்பு வழுக்காமல் இருப்பதற்காக Insulation mastic என்கிற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட முதல் மேம்பாலம் தென்னிந்தியாவில் இதுதான். குறுக்கிடா மாற்றுப்பாதை அமைப்பு (Cloverleaf interchange) மூலம், அனைத்துச் சந்திப்புகளிலிருந்து வரும் வாகனங்கள் தடையின்றி முன்னேற இந்த மேம்பாலம் வழிசெய்கிறது.
சென்னை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாகவும் பிற்காலத்தில் மாறவிருந்த இந்த மேம்பாலத்தின் உருவாக்கத்தைக் கிட்டத்தட்ட ஒரு கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்துடன் தொடக்கம் முதல் இறுதிவரை தன்னுடைய ‘ஆகாயத் தாமரை’ நாவலில் அசோகமித்திரன் பதிவுசெய்துள்ளார். மேம்பாலம் உருவாகிக்கொண்டிருந்த விதம் பற்றித் தனக்கே உரிய நடையில் அவர் இப்படி எழுதுகிறார்: ‘ஜெமினி மேம்பாலக் கட்டிட வேலை ஜரூராக நடந்துகொண்டிருந்தது. அவ்விடத்தில் சாலையைப் பாதிக்குமேல் பெரும் பள்ளங்களும் பெரிய சிமெண்ட் காங்கிரீட் உத்தரங்களும் நூற்றுக்கணக்கான கட்டிடப் பணியாட்களும் அடைத்துக் கொண்டிருந்தார்கள். மீதமிருந்த சிறு இடத்தைப் போலீசார் அடைத்துக் கொண்டிருந்தார்கள். காரோட்டுபவர்கள், பேருந்து ஓட்டுபவர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள், நடந்து செல்பவர்கள் எல்லாரும் போலீசாரின் கவனத்தைச் சரிசமமாகப் பெற்றார்கள். அந்த ஒரு பர்லாங்கு தூரத்தை ஒரு மாதிரித் தாண்டிய பிறகு அப்பாடா என்று பெருமூச்சு விட்டார்கள்.’
இந்த மேம்பாலம் 21 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது!
அண்ணா மேம்பாலம்: ‘சென்னை மாநகருக்குப் புதிய எழிலூட்டும் வகையிலும், போக்குவரத்து வசதிக்கான வாய்ப்பைப் பெருக்கும் வகையிலும், நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும்’ உருவான இந்த மேம்பாலத்தை 1973 ஜூலை 1 அன்று முதலமைச்சர் மு.கருணாநிதி திறந்துவைத்தார்; அதற்கு ‘அண்ணா மேம்பாலம்’ எனப் பெயர்சூட்டிய அவர், ‘அண்ணா அவர்களுடைய பெயரை வைத்த பிறகு, அதை ஏன் வைக்க வேண்டும் என்று கேள்வி கேட்கிற யாரும் தமிழகத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை’ என்று பேசினார்.
அண்ணா உட்கார்ந்து புத்தகம் வாசிப்பதைப் போன்ற சிலையுடன் மேம்பாலத்தின் தொடக்க நாள் அடிக்கல் ஒன்று மேம்பாலத்தின் தூண்கள் ஒன்றில் நிறுவப்பட்டது. பெரியாரின் மறைவுக்குப் பிறகு, 1974இல் அவரது பிறந்தநாளின்போது மேம்பாலப் பரப்புக்குள் அவரது சிலையை நிறுவ அதிமுக விரும்பியது. இதற்கு அனுமதியளித்ததற்காக முதலமைச்சர் கருணாநிதிக்கு, அக்கட்சியின் பொதுச் செயலாளரான எம்.ஜி.ராமச்சந்திரன் நன்றி தெரிவித்திருந்தார்.
சென்னையில் குதிரைப் பந்தயம் தடைசெய்யப்பட்டதை நினைவுகூரும் விதமாக, குதிரையை அடக்கும் வீரனின் சிலைகள் மேம்பாலத்தின் மையத்துக்குக் கீழே வட்டச் சுற்றுவட்டத்தின் இரண்டு பக்கங்களிலும் 1974இல் நிறுவப்பட்டன. அன்று பிரபலமாக விளங்கிய ‘ஜெமினி ஸ்டுடியோ’வின் (1976இல் மூடப்பட்டது) பெயரால், அந்தச் சந்திப்பு ‘ஜெமினி சர்க்கிள்’ என வழங்கப்பட்டது. அந்த இடத்தில் எழுந்த இந்த மேம்பாலமும், அதன் கட்டுமானக் காலம் தொடங்கி - இன்றுவரை - ‘ஜெமினி பிரிட்ஜ்’ என்று பரவலாக வழங்கப்படுகிறது.
ஐம்பது ஆண்டுகள்: ‘மேம்பாலங்களின் நகரம்’ என சென்னை அழைக்கப்படுகிறது; அதற்கு விதை இந்த அண்ணா மேம்பாலம்தான். 50 ஆண்டுகளைக் கடந்து கட்டுறுதி குலையாமல் நிற்கும் இந்த மேம்பாலச் சந்திப்பைஇன்று 3 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் நாள்தோறும் கடந்துசெல்வதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 50ஆம் ஆண்டினைச் சிறப்பிக்கும் வகையில், ரூ.8.85 கோடி மதிப்பீட்டில் தற்போது நடைபெற்றுவரும் சீரமைப்புப் பணிகள், விரைவில் நிறைவடைந்து மேம்பாலம் புதுப் பொலிவு பெறவிருக்கிறது.
‘... ஜெமினி மேம்பாலமும் கட்டி முடித்தாயிற்று. நீங்கள் அவசியம் சென்னைக்கு விஜயம் செய்து, ஒருமுறை ஊரை நன்கு சுற்றிப் பார்க்க வேண்டும்’ என ‘ஆகாயத் தாமரை’ நாவலின் முடிவில் அசோகமித்திரன் அழைப்பு விடுப்பார். நானும் அவ்வாறே அழைக்கிறேன் - புதுப் பொலிவுபெறும் ‘அண்ணா மேம்பால’த்தை நீங்கள் ஒருமுறை வந்து பார்க்கத்தான் வேண்டும்!
ஜூலை 1: அண்ணா மேம்பாலம் திறக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு
To Read in English: Anna flyover, half-a-century old and yet still young
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT